13 சகஜமாய் ஹாசினி
13 சகஜமாய் ஹாசினி
ஆவி பிடித்ததற்குப் பிறகு கட்டிலை விட்டு கீழே இறங்கினாள் ஹாசினி. அதை எடுத்து செல்ல அவள் ஒருவரைக் கூப்பிட முனைந்தாள். அவள் அதை செய்வதற்கு முன், அதை எடுத்து கீழே வைத்தேன்.
"தேங்க்ஸ்." என்றாள்.
"மை பிளஷர்."
தனது தனி அறைக்கு அவள் செல்ல, நான் கூறியதை கேட்டு நின்றாள்.
"உன் முகத்தைக் கழுவாத. ஏசி, இல்ல பேனுக்கு அடியில் கொஞ்ச நேரத்துக்குப் போகாத."
அவள் ஆச்சரியமாய் புருவம் உயர்த்தினாள்.
"ஆவி பிடிச்சதால உன் ஸ்கின்ல இருக்கிற போர்ஸ் ஓபன் ஆகியிருக்கும். அது ஈஸியா தண்ணியை அப்சர்வ் பண்ணும். அது சைடு எஃபெக்டை ஏற்படுத்தும்."
தயக்கத்துடன் நின்றாள்.
"உன்னோட ஃபேவரைட் ப்ரோக்ராமைப் பாரு. கிளைமேட் கூலா தான் இருக்கு. இங்க உனக்கு பேனோ ஏசியோ தேவையில்ல." என்று யோசனை கூறினேன்.
அவள் கடிகாரத்தைப் பார்த்தாள். அவளது பிரியமான நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது.
"நான் முகத்தைத் துடைக்கக் கூடக் கூடாதா?" கேள்வி எழுப்பினாள்.
"தாராளமா..." என்று ஒரு துண்டை அவனிடம் கொடுத்தேன்.
"தேங்க்ஸ்," சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.
வழக்கம்போல், அவளுக்குப் பிடித்த சமையல் நிகழ்ச்சியைப் பார்த்தாள். அது ஒரு போட்டி நிகழ்ச்சி. அவளுடைய பிரியமான செஃப் அதற்கு நடுவராக இருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அவர் மிகக் கடுமையாய் நடந்து கொண்டது எனக்கு என்னவோ போல் இருந்தது.
"அவரு கொஞ்சம் கூட பொலைட்டா இருக்க மாட்டாரா?" என்றேன்.
என் பக்கம் திரும்பிய ஹாசினி
"செஃப் எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்க. அவர்களுக்கு டிசிப்ளின் ரொம்ப முக்கியம்." என்றாள்.
"ஓஹோ... இந்த ப்ரோக்ராம்ல கலந்துகிற எல்லாரும் குவாலிஃபைடு செஃப்பா?"
"இல்ல. யாருமே குவாலிஃபைடு செஃப்பா இருக்கக் கூடாது. அதுதான் ரூல்."
"ஓ..."
மீண்டும் அவள் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
"பெரும்பாலும், யாரெல்லாம் சமையல் புரோகிராம் பாக்குறாங்களோ, அவங்களுக்குச் சமைக்க தெரியுறதில்ல." என்று அவளைக் கிண்டல் செய்தேன். அவள் என்னை ஒரு சமதள பார்வை பார்த்தாள்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, தன் அறையை நோக்கிச் சென்ற அவள், நின்று என்னைத் திரும்பிப் பார்த்து,
"இப்போ நான் ஏசியில தூங்கலாமா?" என்றாள்.
ஆம் என்று தலையசைத்தேன். அவள் தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டு கொண்டாள். நான் பெருமூச்சு விட்டேன்.
மறுநாள்
வழக்கம்போல் நான் அலுவலகம் செல்ல தயாரானேன் ஹாசினியும் எங்கோ செல்வதற்குத் தயாரானாள். அவளுடைய பெற்றோரையும் அண்ணனையும் காணச் செல்கிறாள் என்று எண்ணினேன். அவள் என்னிடம் வந்தாள்.
"நான் வெளியில போறேன்." என்றாள்.
"நான் உன்னை டிராப் பண்ணணுமா?"
"இல்ல, நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். நான் உங்களுக்கு ஆப்போசிட் டைரக்ஷன்ல போறேன்."
"நோ ப்ராப்ளம்..." என்ற என்னைத் தடுத்து,
"நோ தேங்க்ஸ், நான் கார் எடுத்துக்கிட்டு போறேன்," என்றாள்.
எனக்கு ஒன்று தான் புரியவில்லை. அவர்களது பேலஸ், எங்கள் அலுவலகம் செல்லும் அதே திசையில் தானே இருக்கிறது? அப்படி என்றால் அவள் எங்கு செல்கிறாள்? அதைப்பற்றி அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்று எனக்குத் தெரியவில்லை.
"அங்கிள், ஆன்ட்டியைக் கேட்டேன்னு சொல்லு," என்று வேண்டுமென்றே கூறினேன். அவள் எங்கு செல்கிறாள் என்று கூறுகிறாளா என்று பார்க்க.
"நான் அங்க போகல. என்னோட டிசைனரைப் பார்க்க போறேன். மித்ரா நேத்ராவுக்கு அவங்க பர்த்டேக்கு டிரஸ் டிசைன் பண்ண போறேன்."
எனக்கு வியப்பானது. இதைத் தான் அக்கா ரகசியம் என்று கூறினாரா? அந்த ரகசியத்தை ஹாசினி என்னிடம் கூறிவிட்டது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
"இது சீக்ரெட்டா இருக்கட்டும். இது என்னோட சர்ப்ரைஸ் கிஃப்ட்." என்று என்றாள்.
நான் புன்னகையோடு தலையசைத்தேன். என் குடும்பத்தினரிடம் அவள் காட்டிய ஈடுபாடு எனக்குப் பிடித்திருந்தது.
தனது கைப்பையை எடுத்துக் கொண்டு என்னுடன் தரைதளம் வந்தாள். மீண்டும் அதே வகையான சிற்றுண்டியைப் பார்த்து எனக்கு வெறுப்பானது. வழக்கம் போலவே வேகவைத்த முட்டைகளை மட்டும் சாப்பிட்டுக் கொண்டேன். காய்கறி பழங்களை விட அது எவ்வளவோ மேல். சாப்பிட்டு முடித்துவிட்டு நாங்கள் எழுந்து நின்றோம்.
"நான் கொஞ்சம் லேட்டா தான் வருவேன். அவங்ககிட்ட விலாவரியா சொல்லிட்டு வர எனக்கு டைம் ஆகும்." என்றாள் ஹாசினி.
"சரி," என்றேன்.
"முடிஞ்ச உடனே உங்களுக்கு ஃபோன் பண்றேன்," என்றாள்.
"சரி," என்றேன் வியப்போடு.
"என் வேலை முடிஞ்ச உடனே, உங்க வீட்டுக்குப் போய் பசங்கள பார்ப்பேன்."
சந்தேகமில்லாமல் அது என் முகத்தில் புன்னகையை இட்டு வந்தது.
"சரி,"
டாலியைப் பார்த்த அவள்,
"நான் எங்க மாமியார் வீட்டில் சாப்பிட்டுக்கிறேன். எனக்கு எதுவும் சமைக்க வேண்டாம்." என்றாள்.
சரி எனத் தலையசைத்தாள் டாலி.
நாங்கள் வெளியில் நடந்தோம். அனைவரது பார்வையும் எங்கள் மீது தான் இருந்தது. தனது மினி கூப்பரை ஸ்டார்ட் செய்து, மினி பேலஸை விட்டுக் கிளம்பினாள் ஹாசினி.
நான் மகிழ்ச்சியோடு அலுவலகம் சென்றேன்.
நானும் கூட என் அம்மா வீட்டிற்கு மாலையில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் அதை செய்ய முடியவில்லை. தான் கூறியபடியே, ஹாசினி அங்கு சென்றதாய் அகிலா கூறினாள். அது எனக்கு மன நிறைவைத் தந்தது. நாங்கள் இருவரும் மினி பேலஸில் தனியாக இருக்க வேண்டும் என்று அவள் விரும்பினாலும், அவள் என் குடும்பத்தின் மீது காட்டிய அக்கறை எனக்குப் போதுமானதாய் இருந்தது. ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு ஏதோ ஒன்று இருக்கிறதே என்ற நிம்மதி தான்.
எங்களது தினசரி வழக்கத்தில் எந்த மாறுதலும் இல்லை. அடுத்த மூன்று நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது.
ஞாயிற்றுக்கிழமை
அன்று மித்ரா நேத்ராவின் பிறந்தநாள். அந்த நாள் முழுக்க என் அம்மா வீட்டில் இருக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாய் இருந்தது. ஆனால் அதை ஹாசினி விரும்புவாளா என்று தெரியவில்லை. ஒருவேளை அவளுக்கு பிடிக்கவில்லை என்றால் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணினேன். முழுவதும் தயாரான நிலையில் அவளது அறையின் கதவை தட்டினேன். தன் அறையின் கதவைத் திறந்த ஹாசினி,
"ஆங்... கிளம்பிட்டேன்," என்றாள்.
அவளும் எங்கள் வீட்டிற்குச் செல்ல தயாராகி இருந்ததால் வியப்போடு தலையசைத்தேன். சற்றே அகலமான கழுத்தோடு கூடிய, பளபளப்பான கருப்பு நிற ஃபிஷ் கட் கவுனுடன், அதற்கு பொருத்தமான வைர நகை அணிந்து பார்ப்பவர் மூச்சை நிறுத்தும் அளவிற்கு அழகாய் இருந்தாள் ஹாசினி. அவளது உடை, எனக்கு இளவரசி டயானாவை நினைவு படுத்தியது.
"போகலாம்," என்று இரண்டு பெரிய பைகளை எடுத்துக் கொண்டாள்.
அவற்றை அவளிடம் இருந்து பெறுவதற்காக என் கையை நீட்டினேன்.
"இது ஒன்னும் ஹெவியா இல்ல," என்றாள்.
"பரவாயில்ல," என்று அவளிடம் இருந்து அதை வாங்கிக் கொண்டேன்.
ஆமாம் அது வெகு லேசாய் இருந்தது. அதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் தரைதளம் வந்தோம். நாங்கள் இருவரும் வெளியே செல்வதைக் கண்ட வேலைக்காரர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"யுவர் ஹைனஸ், பிரேக்ஃபாஸ்ட் இஸ் ரெடி," என்றாள் டாலி.
"நாங்க என் மாமியார் வீட்ல சாப்பிட்டுக்குறோம்." என்றாள் ஹாசினி.
சந்தோஷமாய், கூச்சலிட்டபடி குதிக்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு. ஒரு வாரத்திற்குப் பிறகு என் அம்மாவின் சமையலை நான் சாப்பிட போகிறேன். சந்தோஷமாய்க் காரை ஓட்டிச் சென்றேன்.
நாங்கள் எங்கள் வீட்டைச் சென்று அடைந்தோம். அந்தப் பைகளை எடுத்துக் கொள்ளாமல் காரை விட்டு இறங்கினாள் ஹாசினி. நான் அவற்றை எடுக்க நினைத்தபோது, என்னைத் தடுத்தாள்.
"நாட் நவ். ஈவினிங் எடுத்துக்கலாம்." என்றாள்.
அவள் பிள்ளைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
நாங்கள் சீக்கிரமே வந்து விட்டதை கண்ட என் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. மித்ராவும் நேத்ராவும் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்கள் இருவரையும் ஒன்றாய் அணைத்துக் கொள்ள நான் தயாரானேன். ஆனால், அவர்கள் என்னை விட்டு, ஹாசினியை அணைத்துக் கொண்டு, எனக்குப் பல்பு கொடுத்தார்கள்.
"கௌதம், உன் முகத்தைத் தொடச்சிக்கோ. வழியுது..." என்று சீலன் வழக்கம்போல் என் காலை வாரிவிட்டு, வெடித்து சிரித்தான்.
இந்தப் பரதேசி ஏன் எப்பொழுதும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று எனக்குப் புரியவில்லை.
"கௌதம், கல்யாணத்துக்குப் பிறகு, மாப்பிள்ளைப் பசங்க பளபளன்னு ஆயிடுவாங்கன்னு கேள்விப்பட்டப்போ நான் நம்பல. ஆனா இப்போ நம்புறேன். நீ வானத்தில் இருக்கிற நட்சத்திரம் மாதிரி ஜொலிக்கிற." என்றான்.
நான் நட்சத்திரமா? அவன் என்னைக் கலாய்க்கிறான் என்று எனக்குத் தெரியும்.
"ராயல் சாப்பாடு அவனை அப்படி மாத்தி இருக்கும்," என்று எனது மாமி கவுண்டர் கொடுத்தது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் உண்மையிலேயே ஜொலிக்கிறேனா? ஆனால், அதற்கு அவர்கள் நினைத்துக் கொண்டிருந்த காரணம் எனக்குச் சிரிப்பை வரவழைத்தது. ராயல் சாப்பாடு!
"ஆனா ஹாசினி முதல்ல இருந்தா மாதிரியே தான் இருக்கா." என்றாள் அகிலா.
"அப்படின்னா கௌதம் அவங்களை ஒழுங்கா கவனிச்சுக்கறது இல்ல... நான் சொல்றது சரிதானே, அண்ணி?" என்றான் சீலன்.
அனைவரும் ஹாசனியைப் பார்க்க, அவள் ஆம் என்று தலையசைத்து, அனைவரும் சிரிக்க காரணம் கொடுத்தாள். அதை எதிர்பார்க்காத நான் வாயைப் பிளந்தேன்.
"டேய், நமக்கெல்லாம் ஒரே ஒரு ரைட் ஹேண்டும், ஒரே ஒரு லெஃப்ட் ஹேண்டும் தான் இருக்கு. ஆனா என் பொண்டாட்டிக்கு, 10 வலது கையும் 10 இடது கையும் இருக்கு... சர்வன்ட் என்ற பேர்ல... என் வைஃபைக் கவனிச்சுக்கணும் அப்படிங்கிற எண்ணத்தைக் கூட அவங்க எனக்கு விட்டுக்கொடுக்க மாட்டாங்க." என்றேன்.
"அவங்க தான் இளவரசி ஆச்சே!" என்றார் என் அக்கா. அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு தலையசைத்தார்கள்.
"அங்கிளும் ஆன்டியும் எங்க?" என்றாள் ஹாசினி.
"ஒரு ஃபிரண்டோட வீட்டு கிராஹப் பிரவேசத்துக்குப் போயிருக்காங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவாங்க." என்றார் அக்கா.
அனைவரும் சேர்ந்து சிற்றுண்டி உண்டோம். பூரியும் கிழங்கும் எனக்கு சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை தந்தது. வாவ்...!
மீண்டும் வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தோம்.
"எனக்கு உங்க ரூமைக் காட்ட மாட்டீங்களா?" என்றாள் ஹாசினி, மித்ரா நேத்ராவிடம்.
அவர்கள் அவளைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் அவர்கள் வெளியே வரவில்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஹாசினி அனைவரிடமும் சகஜமாய் பழகியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அது நான் சிறிதும் எதிர்பாராதது. நான் அனைவரிடமும் மகிழ்ச்சியாகப் பேசி சிரித்துக் கொண்டிருந்தாலும், எனது பார்வை, படிக்கட்டுகளின் மீது இருந்தது, ஹாசினியை எதிர்பார்த்து. என் அக்கா மகள்களுடன் அவள் தரைதளம் வந்தாள். எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவர்கள் சமையலறையை நோக்கிச் சென்றார்கள். ஹாசினி புன்னகையோடு சென்றாள். நான் அவர்களோடு செல்ல நினைத்தபோது,
"கௌதம், சும்மா இரு. உன் வைஃப் வந்துருவாங்க. யாரும் கிச்சனுக்கு போயி அவங்களை முழுங்கிட மாட்டாங்க." என்று கவுண்டர் கொடுத்தான் சீலன்.
அதைக் கேட்டு சிரித்தபடி சென்றாள் ஹாசினி.
"மாமா, நாங்க கேக் செய்யப் போறோம்," என்று நடந்தபடி கூறினாள் மித்ரா.
"நீயா?"
"ஆமாம்,"
நாங்கள் அனைவரும் வியப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
"ஹாசினியா கேக் பண்ண போறா?" என்றாள் அகிலா.
"ச்சேச்சே...இருக்காது. அவ எப்படி கேக் செய்ய முடியும்? ரொம்ப நல்லா சமைக்கத் தெரிஞ்சவங்களுக்கே கேக் செய்யறது கஷ்டம் ஆச்சே..." என்றார் அக்கா.
"அவங்க நம்ம மணியோட ஹெல்ப்ப கேக்கப் போறாங்கன்னு நினைக்கிறேன்," என்றான் சீலன்.
"இருங்க, பாத்துட்டு வரேன்," என்று நான் சமையலறைக்கு ஓடினேன்.
மித்ராவும் நேத்ராவும் சமையலறை மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஆப்ரன் அணிந்திருந்த ஹாசினியைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
"நீ சமைப்பியா?" என்றேன்.
"எப்பவாவது," என்றாள்.
அவளுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் மேடையின் மீது எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் மணி.
"நீங்க கேட்டதெல்லாம் இங்க இருக்கு, அண்ணி,"
"தேங்க்ஸ்." என்றாள்.
"மாமா, கேக் செய்யறது எப்படின்னு மாமி எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் போறாங்க." என்றாள் நேத்ரா.
எனக்கு சிரிக்கத் தோன்றியது. அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் போகும் ஆசிரியருக்கே அதை எப்படிச் செய்வது என்று தெரியாது. அப்படி இருக்கும் பொழுது, அவள் எப்படி அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியும்?
"முதல்ல ஓவனை 350 டிகிரி ஹீட் பண்ணிக்கணும்."
"ம்ம்ம்..."
பொருட்களை அளக்கும் கோப்பையை எடுத்த ஹாசினி,
"மூணு கப் ஆல் பர்பஸ் ஃப்ளோர் எடுத்து வச்சுக்கணும்."
"ம்ம்..."
"ரெண்டு கப் சுகர் பவுடர், அப்புறம் பட்டர் எல்லாத்தையும் சேர்த்து பீட் பண்ணணும்." பீட்டரை ஆன் செய்து, அவை அனைத்தையும் அடிக்கத் துவங்கினாள்.
முழு ஈடுபாட்டுடன் அதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஹாசினியின் முகத்தில் இருந்து என் கண்கள் அகலவில்லை. கேக்குக்குத் தேவையான கலவையைத் தயார் செய்த பின், கேக் டின்னில் வெண்ணையைத் தடவி, அதில் அந்தக் கலவையை ஊற்றி, அதை ஓவனில் வைத்தாள் ஹாசினி.
"அது பேக் ஆகட்டும். அதுக்கப்புறம் நம்ம அதை ஐஸிங் பண்ணலாம்." என்று அழகாய் புன்னகைத்தாள்.
அப்பொழுது, எனது அப்பா சமையலறையை நோக்கி வருவதைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து முறைத்த பின், ஹாசினியைக் கனிவோடு பார்த்தார்.
"நீ இங்க என்னமா பண்ற?"
"தாத்தா, மாமி எங்களுக்குப் பர்த்டே கேக் பண்றாங்க."
"நம்ம ஏற்கனவே கேக்கை ஆர்டர் பண்ணி இருக்கோம். அது உங்களுக்குத் தெரியாதா? எதுக்காக அவங்களால செய்ய முடியாத வேலை எல்லாம் செய்யச் சொல்றீங்க?" என்று பிள்ளைகளைப் பார்த்து கத்தினார்.
"இப்ப எதுக்காக இவ்வளவு டென்ஷன் ஆக்குறீங்க?" என்றேன்.
"கௌதம், திஸ் இஸ் டூ மச். நம்ம குடும்பத்துக்கு அவ மருமகளா ஆயிட்டான்னு அவளை என்ன வேணா செய்ய வைப்பீங்களா?"
தன் கையில் அணிந்திருந்த ஓவன் உறையைக் கழட்டி வைத்துவிட்டு, அந்த இடத்தை விட்டுச் சென்றாள் ஹாசினி. பிள்ளைகள் அவளைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவள் வருத்தத்தில் இருக்கிறாள் என்று புரிந்து எனக்குக் கோபம் வந்தது.
"இப்போ அவ கேக் செஞ்சா என்ன? சந்தோஷமா தன்னோட பர்த்டேவை கொண்டாட காத்துகிட்டு இருக்குற பிள்ளைகளை இப்ப எதுக்காக இப்படிக் கத்துனீங்க?"
"அவங்க வேற வழியில சந்தோஷமா இருக்க முடியும். அதுக்கு இது வழி இல்ல. ஹாசினி ஒரு பிரின்சஸ் அவளை சமைக்க விடறோம்னு உனக்குக் கொஞ்சம் கூட உறுத்தலே இல்லையா? ஜென்டிலா நடந்துக்கோ, கெளதம். இப்படி ஒரு அரோகண்டான ஹஸ்பண்டா இருக்காத."
"அரோகண்டா? நானா?"
"ஆமாம். நீ ரொம்ப அரோகண்டா நடந்துக்கிற. அவ சில்வர் ஸ்பூனோட இல்ல, கோல்டன் ஸ்பூனோட பொறந்த பொண்ணு. எதுக்காக அவளை இப்படித் தாழ்வான் நினைக்க வைக்கிற?"
"நான் அப்படிச் செய்யல..."
"நீ செய்யுற...அவளை வெறுப்பேத்தாத. ஹாசினி, சமையல் செய்றதை நரகம் மாதிரி ஃபீல் பண்ணுவான்னு சொல்லித் தான், அவங்க அம்மா அவ சமைக்கக் கூடாதுன்னு ஒரு கண்டிஷனைப் போட்டிருக்காங்க. அதை புரிஞ்சுக்கோ," என்று சமையலறையை விட்டுச் சென்றார் என் அப்பா.
நரகமா? அவள் சமைத்த போது நான் அப்படி ஒரு பாவத்தை அவள் முகத்தில் பார்க்கவே இல்லையே! பிள்ளைகளோடு எவ்வளவு சந்தோஷமாய் இருந்தாள் ஹாசினி. அல்லது, பிள்ளைகளைச் சந்தோஷப்படுத்துவதற்காக இல்லாத சந்தோஷத்தைக் காட்டிக்கொண்டாளா நான் மீண்டும் குழம்பினேன்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co