Slug
15 பசுத்தோல் போர்த்திய புலி ஆழ்விக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. சற்று நேரத்திற்கு முன்பு அவளிடம் தேன் ஒழுக வாழைப்பழம் போல் பேசிய ஒரு மனிதன், ஒரு விஷ நாகம் என்பதை அவளால் எப்படி நம்ப முடியும்?*இந்த உலகம் பணத்திற்கு பின்னால் தான் சுற்றிக் கொண்டிருக்கிறதா? முதலில் அவளது அம்மாவும், அண்ணனும்... இப்பொழுது சித்திரவேல்...! சித்திரவேல் இனியவனின் பணத்திற்காக தான் இதை செய்திருக்க வேண்டும். நித்திலாவின் நிலைப்பாடு என்ன? இதில் அவளுடைய பங்கு இருக்கிறதா? அந்த எண்ணமே அவளை திகிலடையச் செய்தது. அவர்கள் பேசுவதை மேலும் ஊன்றி கவனித்தாள்."எதுக்காக இனியவனுக்கு இவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணி வச்சீங்க?" என்றான் அந்த மற்றொரு மனிதன் சித்திரவேலிடம். "எல்லாம் நித்திலாவால தான். எப்படியாவது தன்னோட தம்பியை க்யூர் பண்ணிடணும்னு அவ துடிக்கிறா. இந்த தடவை அவளை எதிர்த்து என்னால எதுவுமே செய்ய முடியல" என்று அலுத்துக் கொண்டான் சித்திரவேல். "ஒருவேளை, அவங்க இனியவனோட ட்ரீட்மெண்ட்டை மாத்தணும்னு நினைச்சா என்ன செய்றது?""அப்படி நடக்க நான் விடமாட்டேன். அவங்க ட்ரீட்மெண்ட்டை மாத்த நினைச்சா, யாருக்கும் தெரியாம நம்ம வச்சிருக்கிற இன்ஜெக்ஷனை அவனுக்கு போட ஆரம்பிச்சிடலாம்"தன் பயத்தை விழுங்கினாள் ஆழ்வி."அப்படின்னா, நான் எதுக்கும் ஒரு பவர்ஃபுல்லான இன்ஜெக்ஷனை அமெரிக்காவிலிருந்து வர வைக்கிறேன். உன் பொண்டாட்டியோ, இனியவன் பொண்டாட்டியோ, அவனோட ட்ரீட்மெண்ட்டை மாத்தணும்னு பிடிவாதம் பிடிச்சா, அதை நம்ம அவனுக்கு போட்டுவிட்டுடலாம். அது மூலமா நம்ம அவனை எப்பவுமே பைத்தியக்காரனா வச்சிருக்க முடியும்""நீ கவலைப்படாதே. ஆழ்விக்கு என் மேல நிச்சயம் சந்தேகம் வராது. மத்தவங்களை என்னை நம்ப வைக்கிறதுல நான் எக்ஸ்பர்ட். இந்த குடும்ப பொம்பளைங்க நாய்க்குட்டி மாதிரி என் காலையே சுத்தி வராங்க. அவங்களை எப்பவும் நான் என் கட்டுப்பாட்ல தான் வச்சிருப்பேன்" பெருமையாய் கூறினான் சித்திரவேல்."ஆனாலும் ஜாக்கிரதையா இரு. ஓவர் கான்ஃபிடண்டா இருக்காத""அது எனக்கும் தெரியும். இனியவன் நமக்கு கையில இருக்கிற வரைக்கும், யாராலயும் என்னை எதுவும் செய்ய முடியாது""சரி, வா போகலாம், நான் இனியவன் பொண்டாட்டிகிட்ட பேசணும். அப்போ தான் அவ மைண்ட் செட் என்னன்னு எனக்கு தெரியும்""அவ கோவிலுக்கு போயிருக்கா. எப்ப வேணாலும் வந்துடுவா""அப்படின்னா வா உள்ளே போகலாம். அவளுக்கு நம் மேல் கொஞ்சம் கூட சந்தேகம் வரக்கூடாது""ஆமாம்..."அங்கிருந்த ஒரு சுவற்றிற்கு பின்னால், நன்றாக மறைந்து கொண்டாள் ஆழ்வி. அவர்களைப் பற்றி யோசித்தபடி அங்கேயே சிறிது நேரம் நின்றாள் ஆழ்வி. தன் வாழ்வின் மிக முக்கியமான, அதே நேரம், மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் அவள் இருக்கிறாள். அவள் மட்டுமல்ல இனியவனும் தான்...! சமுதாயத்தில் எப்படிப்பட்ட கௌரவம் அவனுடையது...! எப்படிப்பட்ட புகழ் வெளிச்சத்தில் உலா வந்தவன்...! இந்த பாதகர்கள் அவனை குணமாக விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அவள் என்ன செய்யப் போகிறாள்? இந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் சித்திரவேலை நம்புகிறார்கள். அவன் தனது உலக மகா நடிப்பின் மூலம் அவர்களை நம்ப செய்து கொண்டிருக்கிறான். இன்று காலை, அவன் அவளிடம் எப்படி தேன் ஒழுக பேசினான் என்பதைத்தான் அவள் பார்த்தாளே...! இந்த பெண்கள் அப்பாவிகள் மட்டுமல்ல, கதியற்றவர்களும் கூட. உண்மைக்கும், பொய்மைக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அவர்கள் உணரவில்லை. இப்படிப்பட்ட மோசக்காரர்களை அவர்கள் இதற்கு முன் சந்திக்காமல் இருந்தது கூட அதற்கு காரணமாக இருக்கலாம். நீண்ட மூச்சை இழுத்துவிட்டு உள்ளே சென்றாள் ஆழ்வி. என்ன செய்ய வேண்டும் என்பதை அவள் முடிவு செய்துவிட்டதாய் தெரிகிறது. அவளுக்காக அனைவரும் வரவேற்பறையில் காத்திருந்தார்கள். அவர்களிடம் சென்றாள். "ஆழ்வி, இவரு தான் இனியவனோட டாக்டர், புவனேஸ்வரன்" அவரை அறிமுகம் செய்து வைத்தான் சித்திரவேல்.முகத்தில் எந்த பாவமும் இன்றி அவனை ஏறிட்ட ஆழ்வி, "வணக்கம் சார்" என்றாள். "நீங்க இவர்கிட்ட இன்னுவை பத்தி என்ன வேணும்னாலும் கேட்கலாம்" என்றாள் நித்திலா."ஆமாம், நீங்க என்னை என்ன வேணும்னாலும் கேட்கலாம்" என்றான் புவனேஸ்வரன். "இதுல நான் கேட்க என்ன இருக்கு?" என்று கூறிவிட்டு சித்திரவேலை பார்த்த அவள்,"சித்திரவேல் அண்ணனை மாதிரி ஒரு நல்ல இதயம் படச்ச ஒருத்தரோட பாதுகாப்புல அவர் இருக்கும் போது, அவரை பத்தி நான் ஏன் கவலை படணும்?" என்றாள் புன்னகையுடன்.சித்திரவேல் பெருமையுடன் புவனேஸ்வரனை ஏறிட்டான். அவன் தன் கண்களாலேயே சித்திரவேலை பாராட்டினான். "ஆழ்வி, இன்னு உங்களோட ஹஸ்பெண்ட். உங்களுக்கு அவன் மேல எல்லா உரிமையும் இருக்கு. உண்மையை சொல்லப்போனா, உங்களுக்கு மட்டும் தான் இருக்கு""நான் இல்லன்னு சொல்லல. ஆனா, அவரை மட்டும் இல்ல, நம்ம எல்லாரையுமே அண்ணன் தானே கவனிச்சிக்குறாரு? உங்களுக்கு அவர் மேல நம்பிக்கை இல்லயா?"இயலாமையுடன் அமைதியானள் நித்திலா. அவள் ஆழ்வியிடம் எதிர்பார்த்தது இதுவல்ல. "நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் அவருக்காக செய்ய நினைக்கிறேன், அண்ணா""சொல்லுங்க, ஆழ்வி""அவருக்கு சாப்பாடும், மருந்தும் கொடுக்கிற பொறுப்பை மட்டும் எனக்கு குடுங்க. ஒரு வைஃபா, நான் அதை அவருக்கு செய்ய நினைக்கிறேன். செய்யலாம்ல?" என்றாள் அடக்கமாய்."தாராளமா செய்யுங்க. நாங்க அவரோட மருந்தை சாப்பாட்டில் கலந்து தான் கொடுக்கிறோம். ஏன்னா, தனியா கொடுத்தா, அவர் மாத்திரையை முழுங்க மாட்டார்ல...!""என்ன ஒரு ஐடியா...! நீங்க செஞ்ச மாதிரியே நானும் செய்றேன்" என்று சிரித்தாள் ஆழ்வி."ஆனா, அதை செய்யும் போது நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவர் என்ன செய்வார்னு நாங்க உங்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்ல. நீங்க ஏற்கனவே அனுபவபட்டவங்க" என்றான் புவனேஸ்வரன். ஆமாம் என்று சோகமாக தலையசைத்த ஆழ்வி,"தயவுசெய்து அதை மட்டும் எனக்கு ஞாபகப்படுத்தாதீங்க. அதை நினைக்கும் போதெல்லாம் என் உடம்பு நடுங்குது" என்றாள் போலியான பயத்துடன்."நம்ம இன்னுவோட ட்ரீட்மெண்ட்டை நம்ம ஏன் மாத்தி பார்க்க கூடாது?" என்றார் பாட்டி.புவனேஸ்வரன் அவருக்கு பதில் கூறும்,"பாட்டி, பொம்பளைங்களை பார்த்தா அவர் என்ன செய்வார்னு உங்களுக்கு தெரியாதா? புது ட்ரீட்மென்ட்டை மாத்துற சமயத்துல, அவர் என்கிட்ட நடந்துக்கிட்ட மாதிரி வேற ஒரு பொண்ணுகிட்ட நடந்துகிட்டா என்ன செய்வீங்க? அவளையும் அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்களா?" என்று அவள் கேட்க, பாட்டி செயலிழந்து நின்றார்.சித்திரவேலும் புவனேஸ்வரனும் ஒருவரை ஒருவர் குதூகலமாய் பார்த்துக் கொண்டார்கள்.இனியவன் குடும்ப பெண்களுக்கு ஏமாற்றமாய் போனது. அதற்கு மேல் பேசுவதற்கு அங்கு ஒன்றும் இல்லை அல்லவா?புவனேஸ்வரன் எழுந்து நின்றான்."சரி மா. நான் கிளம்புறேன். நீங்க இனியவனை பத்தி ஏதாவது தெரிஞ்சிக்கணும்னு நினைச்சா, தாராளமா எனக்கு ஃபோன் பண்ணலாம்""ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா, நான் அண்ணன்கிட்ட கேட்டுக்குறேன்"சரி என்று தலையசைத்த புவனேஸ்வரன், புன்னகையுடன் அவளிடமிருந்து விடை பெற்றான். அவனை வழி அனுப்ப, சென்றான் சித்திரவேல். வெளியே வரும் வரை அமைதியாக இருந்த புவனேஸ்வரன்,"எப்படி இந்த கலக்கு கலக்குற? ஒரே நாளில் அவளை எப்படி உன்னை இந்த அளவுக்கு நம்ப வச்ச?""பொம்பளைங்க கடைஞ்செடுத்த முட்டாளுங்க. அவங்களை கோமாளியாக்க சர்க்கரை தோய்ச்ச நாலே வார்த்தை போதும். நீ நல்லா இருக்கியா மா? சாப்டியா மா? உனக்கு நான் இருக்கேன் மான்னு சொன்னா விழுந்துடுவாங்க..."அதைக் கேட்ட புவனேஸ்வரன் வாய்விட்டு சிரித்தான்."இந்த வீட்ல இருக்கிறவங்களை கோமாளியா மாத்துறதோட உன் திறமையை நிறுத்திக்கோ. அதை கொண்டு போய் வெளியில காட்டாத""அட, இது கேக்க ரொம்ப நல்லா இருக்கே" என்று சிரித்தான் சித்திரவேல்."உன்னை யாரும் அசைச்சிக்கவே முடியாது. உன்னோட லாயர் மூளையை நீ ரொம்ப பிரமாதமா பயன்படுத்துற. நீ பெரிய நடிகன் ஆகி இருக்கலாம். ஆஸ்கர் அவார்டு நிச்சயம் கிடைச்சிருக்கும்" என்றான் புவனேஸ்வரன் கிண்டலாய். சித்திரவேலின் முகத்தில் பெருமை தாண்டவம் ஆடியது.வீட்டின் உள்ளேதன் அறைக்குச் செல்ல ஆழ்வி நினைத்தபோது,"ஆழ்வி, நீங்க என் மேல அப்செட்டா இருக்கீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா உங்க கோபத்தை என் தம்பி மேல காட்டாதீங்க" என்றாள் நித்திலா. "நீங்க இப்ப சொன்னதுக்கு என்ன அர்த்தம்? நான் என்னோட வெறுப்பை அவர் மேல காட்டுறேன்னு நினைக்கிறீங்களா?""இல்ல, நான் அப்படி சொல்லல" "வேற எப்படி சொன்னீங்க? நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க? என்னை அப்படியே கொண்டு போய் உங்க தம்பிகிட்ட உடனடியா ஒப்படைக்கணும்னு சொல்றீங்களா?" அவள் கேட்ட அந்த மிகக் கூர்மையான கேள்விக்கு பதில் கூற இயலவில்லை நித்திலாவால்."ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சிக்கோங்க. உங்களை பொறுத்த வரைக்கும், அவர் உங்க வாழ்க்கையோட ஒரு பகுதி. ஆனா, எனக்கு அவர் தான் வாழ்க்கை. உங்களைவிட எனக்கு அதிகமான பொறுப்பு இருக்கு. ஆனா, நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். எனக்கும் கொஞ்சம் கால அவகாசம் தேவை. ஆழம் தெரியாம என்னால காலை விட முடியாது""ஐ அம் சாரி, ஆழ்வி. நீங்க வேண்டிய அவகாசத்தை எடுத்துக்கோங்க" "ஆரம்பத்துல எனக்கு உங்க மேல கோபம் இருந்தது வாஸ்தவம் தான். ஆனா இப்போ, எனக்கு உங்களை பார்க்க பாவமா இருக்கு" என்று மறைமுக அர்த்தத்தில் கூறினாள், சித்திரவேலை மனதில் நிறுத்தி.ஆனால் நித்திலா அதை புரிந்து கொள்ளவில்லை. அவள் உணர்ச்சிவசப்பட்டு ஆழ்வியை அணைத்துக் கொண்டாள்."ரொம்ப தேங்க்ஸ், ஆழ்வி..."அந்த அணைப்பிலிருந்து தன்னை பின்னால் இழுத்த அவள், நித்திலாவை பார்த்து புன்னகை புரிந்தாள். அங்கு பார்கவி குற்ற உணர்ச்சி மேலோங்க நின்றிருப்பதை கண்ட ஆழ்வி,"கவி, கொஞ்சம் உன் ஃபோனை எனக்கு கொடுக்கிறியா? நான் மீனாகிட்ட பேசணும்" என்றாள்."ஆமாம், நான் நேத்து அவகிட்ட பேசினேன்...""அப்படியா? ஆனா அதை பத்தி நீ என்கிட்ட எதுமே சொல்லலையே? (என்று சற்று நிறுத்திவிட்டு) சரி பரவாயில்ல, விடு..." என்று பெருமூச்சு விட்டாள். "ஐ அம் சாரி, ஆழ்வி. ஒரு நிமிஷம்..." என்று மீனாவின் எண்ணுக்கு ஃபோன் செய்தாள்.அந்த அழைப்பை மீனா ஏற்கும் முன், தன் கையை நீட்டி, அவளது கைபேசியை கேட்டாள் ஆழ்வி. பார்கவி அதை அவளிடம் உடனே கொடுத்தாள்."ஹாய், கவி" என்றாள் மீனா. "நான் ஆழ்வி பேசுறேன்...""ஹாய், நீ அண்ணன் கிட்ட ட்ரீட்மெண்ட்டை பத்தி பேசிட்டியா?""நான் நல்லா இருக்கேன். கவியும் நல்லா இருக்கா" என்று சம்பந்தமில்லாமல் பதில் கூறினாள் ஆழ்வி."ஏன் சம்பந்தமில்லாம பேசுற?""ஓ, நிஜமாவா? உங்க ஊர்ல மழை பெய்யுதா?""என்ன சொல்ற?" என்றாள் குழப்பத்துடன் மீனா. "அப்படின்னா உன்னோட ஹாலிடேசை நீ மழையோட என்ஜாய் பண்றேன்னு சொல்லு...""ஆழ்வி, உனக்கு என்ன ஆச்சு?""ஆமாம். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. பொண்ணுங்க அவங்க பாய் ஃப்ரெண்ட்ஸ் கூட ஃபோன்ல பேசும் போது, அவங்க அம்மாகிட்ட மாட்டிக்காம இருக்க, சம்பந்தம் இல்லாம பேசுவாங்க. ஏன்னா, அவங்க அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சிட்டா, விளைவுகள் மோசமா இருக்கும் இல்லையா?""இதுக்கு என்ன அர்த்தம், ஆழ்வி?""யோசிச்சு பாரேன்...""நான் அண்ணனோட ட்ரீட்மெண்ட்டை பத்தி பார்கவிகிட்ட பேச வேண்டாம்னு சொல்றியா?""அதே தான்... அதைத் தான் நான் சொல்ல வந்தேன்...""ஆனா ஏன்?""அதை நான் எப்படி சொல்ல முடியும்? அது அவங்களோட விருப்பத்தைப் பொறுத்தது" "இனியவன் அண்ணனை இங்க கொண்டு வந்து ட்ரீட் பண்ண அவர்களுக்கு விருப்பம் இல்லையா?""வாய்ப்பே இல்ல...""உண்மையாவா?""ஆமாம்""பார்கவி அங்க இருக்காளா?""அவ மட்டும் இல்ல...""அப்படின்னா, ஒட்டு மொத்த குடும்பமும் அங்க தான் இருக்காங்களா?""ஆமாம்""அப்படின்னா நம்ம அப்புறமா பேசலாமா?""கண்டிப்பா...""நைட் 11:00 மணிக்கு?""ஷுயூர்...""சரி, கவிகிட்ட ஃபோனை குடு"பார்கவியிடம் ஃபோனை கொடுத்தாள் ஆழ்வி."ஹாய் மீனா...""ஹாய், உங்க புது அண்ணி எப்படி இருக்கா?""நல்லா இருக்கா" என்று சங்கடத்துடன் சிரித்தாள்."இதோ வரேன்மா" என்று கூறிய மீனா,"கவி, அம்மா கூப்பிடுறாங்க. நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்" என்றாள். "சரி" என்று அழைப்பை துண்டித்தாள் பார்கவி."மீனா உனக்கு ஃபோன் பண்ணா, என்னை கூப்பிடு" என்றாள் ஆழ்வி.எதையோ யோசித்த நித்திலா, குருபரனுக்கு ஃபோன் செய்தாள். அந்த அழைப்பை ஏற்றான் அவன். "சொல்லுங்க, நித்திலா""ஒரு புது ஃபோனும், புது சிம் கார்டும் உடனே வாங்கிட்டு வாங்க. ரொம்ப அவசரம்""யாருக்கு?""ஆழ்விக்கு..." "சரி, எனக்கு அவங்க ஆதார் நம்பர் கிடைக்குமா?""வாங்கி தரேன். அப்படியே அவங்களுக்கு ஒரு பேங்க் அக்கவுண்டும் ஓபன் பண்ணணும்""உடனே செஞ்சுடுறேன்" என்று அழைப்பை துண்டித்தான் குருபரன்."ஆழ்வி உங்க ஆதார் நம்பரை கொஞ்சம் கொடுக்கறீங்களா?" என்றாள் நித்திலா.சரி என்று தலையசைத்து விட்டு அதை கொண்டு வர தன் அறைக்கு சென்றாள் ஆழ்வி. அதை நித்திலா ஏன் கேட்டாள் என்று அவளுக்கு புரிந்திருந்தது. அவளுக்காக ஒரு புது கைபேசியை வாங்கித் தரப் போகிறாள். அதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஆழ்வி. மீனாவிடம் பேசுவதற்கு மட்டுமல்ல, சித்த வைத்தியரிடம் பேசுவதற்கும் அவளுக்கு தனியாய் ஒரு கைபேசி அவசியம்.நித்திலாவிடம் ஆதார் அட்டையை கொடுத்துவிட்டு, சமையலறைக்கு சென்றாள் ஆழ்வி. அவளை பார்த்து புன்னகைத்தான் முத்து."நான் ஒரு காபி போட்டுக்கட்டுமா?" என்றாள்."நான் உங்களுக்கு போட்டுக் கொடுக்கிறேன் அண்ணி" என்றான் அவன்."சரி" என்று அங்கேயே நின்ற அவள்,"இங்க மொத்தம் எத்தனை பேர் வேலை செய்றாங்க?" என்றாள். "நாங்க மொத்தம் பத்து பேர் இருக்கோம். நாலு பேர் செக்யூரிட்டி, ரெண்டு தோட்டக்காரங்க""அவரை யார் கவனிச்சுக்குவா?" "அண்ணனுக்கு சாப்பாடு நான் கொடுப்பேன். மத்த மூணு பேரும், அவரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்க வைப்பாங்க""என்னை மன்னிச்சிடுங்க. நீங்க அவருக்காக செய்ற வேலையை நான் உங்ககிட்ட இருந்து பிடுங்கிக்கப் போறேன்" "நான் அதை சந்தோஷமா உங்களுக்கு விட்டுக் கொடுப்பேன். ஆனா நீங்க மட்டும் அவர்கிட்ட ஜாக்கிரதையா இருங்க" சரி என்று தலையசைத்தாள். "நான் உங்ககிட்ட சாரி சொல்லலாமா வேண்டாமான்னு எனக்கு தெரியல" என்றான் முத்து."எதுக்கு சாரி?" "அன்னைக்கு அண்ணன்கிட்ட இருந்து உங்களை என்னால காப்பாத்த முடியாம போனதுக்கு" "அதுல என்ன உங்களுக்கு குழப்பம்?" "நான் அன்னைக்கு உங்களை காப்பாத்தி இருந்தா, நீங்க அண்ணனை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டீங்கல்ல?"மென்மையாய் புன்னகைத்தாள்."நீங்க அதுக்காக மன்னிப்பு கேட்க வேண்டாம். அதுல உங்க தப்பு எதுவும் இல்ல. இது என்னுடைய விதி."முத்து அமைதியாய் நின்றான். "சரி, நீங்க அவருக்கு எப்படி சாப்பாடு கொடுப்பீங்கன்னு சொல்லுங்க"அலமாரியில் இருந்த ஒரு டப்பாவை எடுத்தான் முத்து."இது தான் அண்ணனுக்கு கொடுக்கிற மருந்து. காலையிலயும் ராத்திரியும், அரை ஸ்பூன் மருந்தை அவர் சாப்பிடற சாப்பாட்டோட கலந்து கொடுக்கணும்" என்று கூறியபடி இரண்டு குவளை காப்பியை தயார் செய்தான்."அவ்வளவு தானா?" "அவ்வளவு தான்" என்று அவளிடம் ஒரு கப் காப்பியை கொடுத்தான். "இன்னொரு கப் காப்பி யாருக்கு?" "நித்திலா அக்காவுக்கு"அந்த குவளையை எடுத்துக்கொண்டு நித்திலாவிடம் கொடுக்கச் சென்றான் முத்து. அந்த டப்பாவை எடுத்துகொண்டு இங்கும் அங்கும் எச்சரிக்கையுடன் பார்த்தாள். அலமாரியில் ஒரு செய்தித்தாள் இருந்தது. அதை சிறிதளவு கிழித்து எடுத்து, அந்த மருந்தை அந்த காகிதத்தில் பொட்டலம் கட்டினாள். அதை தன் உடையில் மறைத்துக் கொண்டு, அங்கிருந்து சத்தமின்றி வெளியேறினாள் ஆழ்வி.தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co