Truyen3h.Co

Slug

19 முன்னேற்றம்

ஆழ்வியும் இனியவனை அணைத்துக் கொண்டாள். அவளது கரத்தை தன் முதுகில் உணர்ந்த அவன், மெல்ல அவளை ஏறிட்டான். அவனை பார்த்து அவள் செல்லமாய் புன்னகை புரிந்தாள். அவன் தன் கன்னத்தை அவளிடம் காட்டிய போது அவள் நெகிழ்ந்தாள். முதல் நாள் அவள் அவனுக்கு முத்தமிட்டதை நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் அவளை முத்தமிட சொன்னான். அப்படி என்றால், அவளது செயல்களை அவனால் உள்வாங்க முடிகிறது. புன்னகையுடன் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவன் மற்றொரு கன்னத்தில் முத்தம் கேட்கும் முன், அவளாகவே  மறு கன்னத்திலும் முத்தமிட்டாள். அதன் பிறகு, கட்டிலை நோக்கி நடந்தாள்.

"ஓய்ய்ய்..." என்றான் அவன்.

தன் ஆள்காட்டி விரலை உதட்டின் மீது வைத்து, அமைதியாய் இருக்கும்படி அவனுக்கு சைகை செய்தாள்.

"சத்தம் போடக்கூடாது. மெதுவா தான் பேசணும்" என்று ரகசியமாய் கூற, அவன் கண்களை சுருக்கினான். அவள் பேசுவது அவனுக்கு புரியவில்லை.

"நான் ஆழ்வி... உங்க வைஃப்..." தன்னை சுட்டிக்காட்டி அவள் கூறினாள்

"நான் ஆழ்வி, உங்க வைஃப்" என்று அவன் அதை திரும்ப கூறினான், தன்னை சுட்டிக்காட்டிக் கொண்டு.

"இல்ல, நான் ஆழ்வி. உங்க வைஃப். நீங்க இனியவன். என்னோட ஹஸ்பண்ட்" என்று அவனை தொட்டு கூறினாள். அவன் முகம் சுருக்கினான்.

மறுபடியும் அவள் தன்னை சுட்டிக்காட்டி,

"ஆழ்வி... உங்க வைஃப்"

அவன் மீது கை வைத்து,

"இனியவன், என் ஹஸ்பண்ட்" என்றாள்.

அவன் அதை திரும்ப கூறவில்லை. அதற்காக அவள் வருத்தப்படவில்லை.

தன் தலையை சுட்டிக்காட்டினான் அவன்.

"என்ன?" என்றாள்.

அவள் கையை எடுத்து தன் தலையை கோதச் செய்தான். புன்னகையுடன் அதை அவனுக்கு செய்து விட்டாள்.

"இனியவன் ரொம்ப இனியவன்" என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவள் தன் கன்னத்தை அவளிடம் காட்ட, எப்படி முத்தமிடுவது என்று தெரியாத அவன், தன் உதடுகளால் அவள் கன்னத்தை மோதினான். 

அவன் கையை எடுத்து, அவனுக்கு எப்படி முத்தமிடுவது என்று முத்தமிட்டு காட்டினாள். அவள் கையை எடுத்து அவனும் அதை திரும்பச் செய்தான்.

"குட் பாய்" என்று புன்னகையோடு அவன் கன்னத்தை கிள்ளினாள். அவனும் அதையே செய்தான். ஆனால், புன்னகைக்காமல்.

எதையோ யோசித்த ஆழ்வி, கிரில் கதவை நோக்கி சென்றாள், அவள் அங்கிருந்து செல்ல முயன்றால், அவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக. பின்னால் இருந்து அவள் இடையை சுற்றி வளைத்த அவன், அவளை தூக்கிக் கொன்டு கட்டிலை நோக்கி ஓடி சென்று, அவளை அதில் அமர வைத்தான். அவள் ஒரு நொடி திகைத்து நிற்க, தன் கையையும், காலையும் அகல விரித்து,

"நோ" என்றான், அவள் வழியை மறைத்துக் கொண்டு.

அது கண்டு சிரித்த அவள்,

"சரி, நான் போகமாட்டேன். இங்க உட்காருங்க" என்று கட்டிலை தட்டினாள்.

கட்டிலில் அமர்ந்து கொண்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனை இழுத்து தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள் ஆழ்வி.  அவள் மடியில் படுத்து கொண்டு, அவளையை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அவனது தலையை கோதிவிட தொடங்கினாள். அவனது கண்கள் மெல்ல மூடின. ஆனால் திட்டுக்கிட்டு கண்ணை திறந்தான். அவன் தூங்கினால், அவள் அங்கிருந்து சென்று விடுவாள் என்பதற்காக அவன் தூங்காமல் இருக்க முயன்றான். அவன் ஒவ்வொரு முறை தூங்கி கண் விழிக்கும் போதும், அவள் அங்கு இருப்பதில்லை அல்லவா? அதனால் அவன் எச்சரிக்கையுடன் இருக்க முயன்றான். ஆனால் அவனால் வெகு நேரம் தூங்காமல் இருக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் உறங்கிப் போனான்.

தன் மடியில் இருந்து மெல்ல அவன் தலையை எடுத்து ஒரு தலையணையின் மீது வைத்து விட்டு, சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். தன் தலை முடியையும், புடவையையும் கலைத்து விட்டுக்கொண்டு, முந்தானையால் தன்னை போர்த்திக்கொண்டு அலங்கோலமான நிலையில் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்திருப்பதை கண்டாள் ஆழ்வி. பெண்கள் அனைவரும் அழுதபடி இருந்தார்கள். அவளை பார்த்தவுடன் அனைவரும் எழுந்து நின்றார்கள். தலை குனிந்தபடி அங்கிருந்து ஓடிச் சென்றாள் ஆழ்வி.

"ஆழ்வி..." என்று அழுதபடி முனங்கினாள் பார்கவி.

தொப்பென்று சோபாவில் அமர்ந்தாள் நித்திலா. உள்ளூர புன்னகை புரிந்தான் சித்திரவேல்.

"இப்படி வாழற வாழ்க்கை நரகம் கா" என்றாள் பார்கவி.

"இதுக்காகத்தான் அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம்னு சொன்னேன். ஆழ்வி இனியவனை கண்ட்ரோல் பண்ணுவாங்கன்னு சொன்ன. பாரு இப்ப என்ன ஆச்சு... உன் தம்பியோட வெறித்தனத்துக்கு அந்த பொண்ணு பலிகடவா ஆயிடுச்சு" என்றான் சித்திரவேல்

"அவனுக்கு திடீர்னு என்ன ஆச்சுன்னு எனக்கு புரியல. அவங்களை பார்த்த உடனே அவன் ஓடி போய் ஒளிஞ்சிகிட்டதை நான் பார்த்தேன். ஆனா இன்னைக்கு, நானும் பாட்டியும் அவனுக்கு முன்னாடி இருந்த போது கூட, எங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு அவன் ஏன் அவங்களை மட்டும் கூப்பிட்டான்னு எனக்கு புரியல" என்றாள் கண்ணீர் சிந்தியபடி.

"அவங்களை பார்த்து பார்த்து அவருக்கு பழகிப்போச்சு. நமக்கு தெரியாதா, ஒரு விஷயம் பழகிட்டா அவருக்கு போர் அடிச்சிடும்னு? அதுக்காகத்தானே நம்ம அவரை நம்ம வீட்டில் இல்லாதப்போ வீட்டுக்குள்ள உலவ விட்டோம்..."

"ஆனா, அவனுக்கு  பொம்பளைங்க மேல இருந்த அட்ரக்ஷன் குறைஞ்ச மாதிரியே தெரியலயே..."

"அது வேற..."

"அப்படின்னா, அண்ணன் மறுபடியும் ஆழ்வியை கூப்பிடுவாரா?" என்றாள் பார்கவி பயத்தோடு.

"நிச்சயமா கூப்பிடுவார், அவருக்கு அவங்க கிட்ட திருப்தி ஏற்படுற வரைக்கும் கூப்பிடுவார். அதனால தான் நான் இதையெல்லாம் ஈசியா சமாளிக்கிற ஒரு பொம்பளையை கூட்டிக்கிட்டு வரணும்னு சொன்னேன். ஆனா அப்போ நான் சொன்னதோட அர்த்தத்தை நீங்க யாருமே புரிஞ்சுக்கல. இன்னைக்கு அழுது என்ன செய்றது?"

"போதும் நிறுத்துங்க மாப்பிள்ள. இன்னு, ஆழ்வியை அவனுடைய ரூமுக்கு கூப்பிட்டான் தான். அது நமக்கு சங்கடத்தை கொடுத்தாலும் கூட, ஆழ்வி அவனோட மனைவி. நம்ம யாரும் ஆழ்வியை அவன் ரூமுக்கு போக சொல்லி கட்டாயப்படுத்தல. அவளா தான் போனா"

"அவங்க வேற என்ன செய்வாங்க, பாட்டி? நித்திலா அவங்களை ஒரு கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கா. அதுக்கு ஏதாவது செய்யணும்னு தானே அவங்க நினைப்பாங்க?"

"நான் அவங்களை விலை கொடுத்து வாங்கினேன்னு மட்டும் சொல்லாதீங்க. இன்னுவை திருப்தி படுத்தணும்னு நினைச்சிருந்தா, அதை சில ஆயிரத்தை தூக்கி எறிஞ்சு என்னால செஞ்சிருக்க முடியும். என்னால அதை முடியாதுன்னு நினைக்கிறீர்களா? நான் அவங்களை விலை கொடுத்து வாங்கல. இன்னுவோட வாழ்க்கைக்கு அவங்க தேவைன்னு தான் அவங்களை அவன் வாழ்க்கையில கூட்டிட்டு வந்தேன். அவங்க அம்மாவுக்கு நான் பணம் கொடுத்தேன் தான். ஆனா, அதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. முதல்ல அதை புரிஞ்சுக்கோங்க"

சித்திரவேல் அமைதியானான். நித்திலா ஆழ்வியின் அறையை நோக்கி சென்றாள்.

இதற்கிடையில்...

தன் அறைக்கு வந்த ஆழ்வி, நிம்மதி பெருமூச்சு விட்டாள். சிரித்தபடி கட்டிலில் அமர்ந்த அவள், அங்கு வைக்கப்பட்டிருந்த இனியவனின் புகைப்படத்தை பார்த்து,

"மிஸ்டர் இனியவன் பாலகுமாரன், ஒருவேளை எதிர்காலத்துல நீங்க இப்போ என்னவெல்லாம் செஞ்சீங்கன்னு சொன்னா நம்புவீங்களோ இல்லையோ... உங்க அம்மாவுக்கு அடுத்தபடியா, நீங்க செய்ற குழந்தைத்தனமான சேட்டை எல்லாம் பார்க்கிற கொடுப்பினை எனக்கு கிடைச்சிருக்கு. உங்ககிட்ட தெரியிற முன்னேற்றத்தை பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப சீக்கிரமே இந்த ஃபோட்டோவுல இருக்கிற மாதிரி, நீங்க மறுபடியும் போஸ் கொடுக்க தான் போறீங்க" என்றாள் புன்னகையுடன்.

அப்பொழுது கதவை கட்டும் சத்தம் கேட்டது. தன்னை சுதாகரித்துக் கொண்டு கதவை திறந்தாள். சிவந்த கண்களுடன் நித்திலா நின்றிருப்பதை கண்டாள். அவளுக்கு தெரியும், நித்திலா அழுத்திருக்கிறாள் என்று. உள்ளே நுழைந்த நித்திலா,

"எதுக்காக நீங்க இன்னுவோட ரூமுக்கு போனீங்க, ஆழ்வி? அவன் காட்டுத்தனமா நடந்துக்குவான்னு உங்களுக்கு தெரியாதா?" என்றாள்.

"அவர் என்னோட புருஷன். அவருக்கு வேண்டியதை கொடுத்தா, அவர் குணமாக வாய்ப்பிருக்குன்னு அண்ணன் சொன்னாரே..."

"அதுக்காக நீங்க நெருப்புல இறங்கணும்னு அவசியம் இல்ல"

"அவசியம் இருக்கு. அப்புறம் நீங்க என்னை அவர் வாழ்க்கையில கொண்டு வந்ததுக்கு என்ன பிரயோஜனம் இருக்கு?"

"சித்ரா என் மேல ரொம்ப கோவமா இருக்காரு. நான் உங்க அம்மாவுக்கு பணம் கொடுத்ததால தான் நீங்க இப்படி எல்லாம் செய்றீங்கன்னு அவர் நினைக்கிறார்"

ஆழ்வி அமைதியாக இருந்தாள். அவர்கள் இப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். எல்லாம் அவளுக்கு கதகமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

"என்னை பத்தி நீங்க கவலைப்படாதீங்க. நான் முயற்சி பண்ணி தான் பார்க்கிறேனே... அவர் நல்லா ஆயிட்டா, என்னுடைய முயற்சிகளுக்கு எல்லாம் பலன் இருக்கும் இல்லையா?"

அவள் கைகளை பற்றிக்கொண்டு அழுதாள் நித்திலா.

"என்னை மன்னிச்சிடுங்க, ஆழ்வி"

"நான் ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேன், அவர் உங்க வாழ்க்கையோட ஒரு அங்கம் மட்டும் தான். ஆனா எனக்கு அவர் தான் வாழ்க்கை. அவர் குணமாவாருன்னா, நான் எந்த அளவுக்கு போவேன்"

"ஆமாம், நீங்க அன்னைக்கு சொன்னிங்க தான். ஆனா, அன்னைக்கு நான் அந்த வார்த்தையோட ஆழத்தை புரிஞ்சிக்கல" என்று அவளை அணைத்துக் கொண்டாள் நித்திலா.

அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு, பார்கவி அவள் அறையின் வாசலில் நின்றிருப்பதை பார்த்தாள் ஆழ்வி.  அடுத்த நொடி, அவர்களை நோக்கி ஓடிவந்த அவள், அவர்கள் இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

ஆழ்வியின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. ஒருவேளை சித்திரவேலை பற்றிய உண்மை தெரிந்தால், இந்த பெண்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அப்போது நித்திலாவின் முடிவு என்னவாக இருக்கும்? அவள் பெருமூச்சு விட்டால். இப்போதைக்கு இனியவனை குணப்படுத்துவதை தவிர வேறு எதைப் பற்றியும் அவள் யோசிக்க கூடாது. அந்த சூழ்நிலை வரும் போது, அவர்களே முடிவெடுத்துக் கொள்ளட்டும்.

தன் புடவையை மாற்றிக்கொண்டு மீண்டும் இனியவனின் அறைக்கு சென்றாள் ஆழ்வி.

"எங்க போறீங்க, ஆழ்வி?"

"அவர் தூங்கிக்கிட்டு இருக்காரு. நான் அங்க இல்லன்னா, மறுபடியும் அவர் கத்த ஆரம்பிக்கலாம்.  அதனால நான் அவர் ரூமுக்கு போறேன்"

"அவன் ஒருவேளை உங்களை கூப்பிடம கூட போகலாம். எதுக்காக அவன் ரூமுக்கு போகணும்?"

"பரவாயில்ல"

"நான் சொல்றத தயவு செஞ்சு கேளுங்க, ஆழ்வி"

"என்னுடைய இருப்பு அவருக்கு பழகட்டும். நான் எப்பவும் அவர் கூடவே இருந்தா, அவர் இப்படி காட்டுத்தனமா நடந்துக்காம இருக்க வாய்ப்பிருக்கு இல்லயா? அவருடைய வெறித்தனத்துக்கு நம்மளே காரணமா இருக்கக் கூடாது" என்றாள்.

நித்திலா அமைதியானாள். இனியவனின் அறையை நோக்கி சென்றாள் ஆழ்வி. அவளது கண்கள் சித்திரவேலை தேடியது. அவன் அங்கு இல்லாததால் அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவன் மிகவும் ஆபத்தான மனிதன். அவனை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. அவன் எப்பொழுது என்ன செய்வான் என்று யாருக்கும் தெரியாது.

இனியவன் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டாள் ஆழ்வி. கட்டிலுக்கு சென்று அவன் பக்கத்தில் அமர்ந்த அவள், அவனது தூக்கத்தை தொந்தரவு செய்யாமல் மெல்ல அவன் தலையை கோதி விட்டாள். அப்பொழுது அவளது கரம் சட்டென்று நின்றது, அவன் தோளில் இருந்த தழும்பை பார்த்த போது. அவனது சட்டையை லேசாய் விலக்கி, அதை பார்த்தாள். அவள் அவனை கடித்த தழும்பு அது. அவள் மீது அவன் பாய்ந்த அன்று, அவனிடமிருந்து தப்பிக்க, அவள் அவனை கடித்தது அவள் நினைவுக்கு வந்தது. வருத்தத்தோடு அதை தடவிக் கொடுத்தாள். அவளும் அன்று கடினமாக தானே நடந்து கொண்டாள்...?

இனியவனிடம் லேசான அசைவு தென்பட்டது. கட்டிலை விட்டு இறங்கி சென்று, கட்டிலின் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவள் அங்கு இல்லாததை தெரிந்து கொண்டு, இனியவன் என்ன செய்கிறான் என்று பார்க்க வேண்டும் என்று எண்ணினாள் அவள்.

கண்களைப் திறந்த இனியவன், திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். இங்கும் அங்கும் தன் கண்களை ஓட்டி, அவளை தேடினான். அவள் சட்டென்று தன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

"ஓய்..."

கட்டிலை விட்டு கீழே குதித்த அவன், கிரில் கதவை நோக்கி ஓடினான். அவன் மீண்டும் குரல் எழுப்புவதற்கு முன், தன் கால் கொலுசை தரையில் தட்டி ஒலி எழுப்பினாள் ஆழ்வி. அவள் கொலுசு சத்தத்தை கேட்ட அவன், பின்னால் திரும்பி பார்த்து, ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டான்.

"நான் இங்க தான் இருக்கேன். எங்கேயும் போகல" என்று அவன் முதுகை வருடி கொடுத்தாள்.

அவளை கட்டிலுக்கு அழைத்துச் சென்று அமர வைத்து, அவள் மடியில் படுத்துக்கொண்டான். அவன் தோளில், அவள் அழுத்தமாய் கடித்து வைத்திருந்த தழும்பை,  அவள் மெல்ல வருடி கொடுத்துவிட்டு, தன் நெஞ்சில் கை வைத்து,

"ஐ அம் சாரி..." என்றாள் வருத்தத்தோடு.

தன் சட்டையை இழுத்து அந்த தழும்பை மறைத்துக் கொண்டான் இனியவன். புன்னகையுடன் அவன் கண்ணத்தை வருடி கொடுத்தாள். அப்பொழுது அவள் கையில் இருந்த தழும்பு அவன் கண்களில் பட்டது. அது, அன்று அவள் தன் கிளிப்பினால் கிழித்துக்கொண்ட அதே தழும்பு தான்.

"ஐ அம் சாரி" என்று தன் உதடுகளை அழுத்தி, புருவம் உயர்த்தினான் இனியவன், ஆழ்வியை திகைக்க செய்து.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co