Slug
20 முன் நிற்கும் சவால்"ஐ அம் சாரி" என்றான் அவள் கையில் இருந்த தழும்பை பார்த்து, அதை எதற்காக கூறுகிறார்கள் என்ற அர்த்தம் அவனுக்கு தெரியாத போதும். ஆழ்வி கூறியதை அவன் திரும்ப கூறினான். அவ்வளவே. அவனை ரசித்தபடி புன்னகை புரிந்தாள் ஆழ்வி. அவள் எப்போதும் இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். இனியவனிடம் இவ்வளவு விரைவான முன்னேற்றம் ஏற்படும் என்பதை அவள் எதிர்பார்த்து இருக்கவேயில்லை. இந்த சிகிச்சை முறை பற்றி மீனா அவளிடம் கூறிய போது, அவள் ஓரளவுக்கு நம்பிக்கையோடு தான் அதை துவங்கினாள். ஆனால் அதன் முன்னேற்றம் ஆமை வேகத்தில் இருக்கும் என்று தான் அவள் எதிர்பார்த்தாள். இந்த வேகத்தில் அவன் முன்னேற்றம் அடைவான் என்றால், இரண்டு அல்லது மூன்று மாதத்தில் அவன் முழுவதுமாய் பழைய நிலைக்கு திரும்பி விடுவான் என்பது நிச்சயம்.அதன் பிறகு அவள் இனியவனை விட்டு செல்லவே இல்லை. ஒரு விஷயத்தை அவள் கவனித்தாள். இனியவன் அவளது செயலையும், வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். ஆழ்வியின் மடியில் படுத்துக்கொண்டு, அவளது சேலை முந்தானையை இப்படியும் அப்படியும் திரும்பி பார்த்தவாறு இருந்தான் இனியவன். ஆழ்வி அவனோடு விளையாட நினைத்து, அவன் மூக்கை கிள்ளினாள். அவனும் அவள் மூக்கை கிள்ளினான். அவள் அவன் காதை பிடித்து இழுத்தாள். அவனும் அவள் காதை பிடித்து வேகமாய் இழுத்தான், தன் கையின் வேகத்தை கட்டுப்படுத்தும் திறன் இல்லாததால். "ஆ..." என்றாள் ஆழ்வி.திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான் இனியவன். உதடு சுழித்து அவனை பார்த்தாள் ஆழ்வி. தன் உதடுகளை அழுத்திக்கொண்டு, தலையை குனிந்து ஓரக் கண்ணால் அவளை பார்த்தான் இனியவன். அவனது அந்த செய்கை அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. அவள் கையை எடுத்து தன் காதை பற்றி இழுக்கச் செய்தான் இனியவன். அவளும் அதை செய்ய, அவன், "ஆ..." என்று கத்தினான். "ஐ அம் சாரி, ஐ அம் சாரி," என்றாள் ஆழ்வி பதற்றத்துடன், அவள் வேகமாய் அவன் காதை இழுக்கவில்லை என்றாலும் கூட. அவள் அவனுக்கு வலிக்கும்படி அவன் காதை பிடித்து இழுக்கவில்லை என்ற போது, அவன் ஏன் கத்தினான் என்று அவளுக்கு புரிந்தது, அவன் "ஐ அம் சாரி" என்று கூறியபோது...! மன்னிப்பு கேட்பதற்கு என்ன கூற வேண்டும் என்பதை அவன் மறந்திருக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ளத்தான், அவளை வேண்டுமென்றே தன் காதை இழுக்கச் செய்து, அதை தெரிந்து கொண்டு, பிறகு அவன் "ஐ அம் சாரி" என்று கூறினான், அவள் காதை வேகமாய் இழுத்ததற்காக. "வாவ் நீங்க ரொம்ப ஸ்மார்ட் ஆயிட்டீங்க" என்று அவன் கன்னத்தை செல்லமாய் கிள்ளினாள் ஆழ்வி. அது மதிய உணவு நேரம். அவள் இனியவனின் அறையில் இருக்கும் வரை, முத்து அவனுக்கு மதிய உணவு கொண்டு வர மாட்டான். "என்னங்க, நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க. ஆழ்வி போய் சாப்பாடு கொண்டு வரேன்" என்று கட்டிலை விட்டு எழுந்தாள். அவன் முடியாது என்று அவசரமாய் தலையசைத்தான். "நான் நிச்சயமா சீக்கிரம் வந்துடுவேன்" என்று தன் தலையில கை வைத்து கூறினாள். "நல்ல பிள்ளையா இங்கேயே உட்கார்ந்து இருக்கணும்" என்று அவனை கட்டிலில் மீண்டும் அமர வைத்தாள். கோபமாய் தன் உதடுகளை அழுத்திக்கொண்டு, முகத்தை உம் என்று வைத்துக்கொண்டு அமர்ந்தான் அவன். அவள் சிரித்தபடி அங்கிருந்து செல்ல நினைத்தபோது, அவன் கட்டிலை விட்டு எழ முயன்றான். தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி, அவனை அமரச் சொல்லி சைகை செய்து விட்டு, சமையல் அறைக்கு சென்றாள். அவள் வருவதை பார்த்து, இனியவனுக்கு ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டு அதை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றான் முத்து."என்கிட்ட குடுங்க முத்து. நான் கொண்டு போய் அவருக்கு கொடுக்கிறேன்" என்ற அவளை அவன் அதிர்ச்சியோடு ஏறிட்டான். அவன் கையில் இருந்த தட்டை பெற்றுக்கொண்டு, இனியவனின் அறையை நோக்கி விரைந்தாள் ஆழ்வி. அது முத்துவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆழ்வி இனியவனின் அறைக்கு வந்த போது, அவன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவனிடம் வந்த அவள், தன் தலையை சாய்த்து அவனை பார்த்து புன்னகைத்தாள். தட்டை ஓரமாய் வைத்து விட்டு, அவன் கன்னத்தில் முத்தமிட்டு,"ஐ அம் சாரி" என்றாள். ஒரு வாய் உணவை அவன் வாயின் முன் ஊட்டுவதற்காக நீட்டினாள். அதை பார்த்த இனியவன் மனம் குளிர்ந்தான். ஏனென்றால் அது அவனுக்கு புதிதாய் இருந்தது. அவள் ஊட்டிய உணவை அவன் சந்தோஷமாய் உண்டான். ஆம் அவனும் கூட அவளுக்கு ஊட்டி விட முயன்றான் தான்...! ஊட்டி விடுகிறேன் என்ற பெயரில், அவள் முகம் முழுவதும் சாப்பாட்டை பூசி வைத்தான். அதைப்பற்றி கவலைப்படாத ஆழ்வி, சிரித்தபடி அவனுக்கு உணவை ஊட்டி முடித்தாள். அன்று முழுவதும் அவள் அவனுடனே கழித்தாள். ...........தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த பார்கவியை பார்த்த குருபரன், என்ன செய்வதென்றே புரியாமல் இயலாமையுடன் அமர்ந்திருந்தான். "அண்ணன் ரூம்ல இருந்து ஆழ்வி எந்த கோலத்துல வெளியில வந்தா தெரியுமா?" என்றாள் கண்ணீர் சிந்தியபடி.குருபரன் அமைதியாய் இருந்தான். "அவ நரக வாழ்க்கை வாழறா. இதை என்னால தாங்கவே முடியல. நான் குற்ற உணர்ச்சியில தினம் தினம் சாகுறேன்" "இதுல நீ வருத்தப்பட எதுவும் இல்ல, கவி. ஆழ்வி இனியவன் குணமாகணும்னு நினைக்கிறாங்க""நம்ம எல்லாரும் கூட தான் அவரை குணமாகணும்னு நினைச்சோம். ஆனா நம்மால என்ன செய்ய முடிஞ்சது? ஒண்ணுமே இல்லயே... அப்படி இருக்கும் போது, அவ மட்டும் ஏன் செய்யணும்?" "இந்த விஷயத்துல நம்மால எதுவும் செய்ய முடியாது. அப்படி செய்ய முடிஞ்சா, நம்ம இவ்வளவு நாள் சும்மா இருந்திருப்போமா? அவனோட உண்மை நிலைமை உனக்குத் தெரியாதா?""ஆழ்விக்கு நம்ம ஏதாவது செஞ்சே ஆகணும், குரு. எல்லாத்துக்கும் மேல, அண்ணன் குணமாயிட்டா என்ன செய்வார்னு எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. அவர் ஆழ்வியை மறந்துட்டா என்ன செய்றது?" "நம்ம எதுக்கு இருக்கோம்? அப்படியே அவன் மறந்தாலும், நம்ம அப்படியா விட்டுடுவோம்?" "அண்ணனைப் பத்தி உனக்கு தெரியாதா? அவர் ஒரு தடவை முடிவு எடுத்துட்டா, அதை யாராலயும் மாத்த முடியாது. ஆனா, அவர் கல்யாண விஷயத்துல, அவரை கேட்காம நம்ம முடிவெடுத்து இருக்கோம். அவர் என்ன செய்யப் போறாரோ தெரியல. எல்லாத்துக்கும் மேல, இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. தான் பைத்தியமா இருந்தோம்னு தெரிஞ்சா அண்ணன் எவ்வளவு வேதனைப்படுவார்? நீ உன் தங்கச்சியையே தொட முயற்சி பண்ண போது ஆழ்வி அவளை உன்கிட்ட இருந்து காப்பாத்தினா, அப்போ நீ அவளை ரேப் பண்ணிட்ட. அதனால தான் அவளை நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்னு சொன்னா, அவர் மனசு எவ்வளவு வேதனைப்படும்?" "நீ இனியாவை பத்தி கவலைப்படாத. அதை எப்படி அவன்கிட்ட சொல்லணும்னு எனக்கு தெரியும். நமக்கு வேற வழி இல்ல. நம்ம இதை அவனுக்கு சொல்லித்தான் ஆகணும். அது கொடுமையான விஷயமா இருந்தாலும், அது அவனுக்கு தெரிஞ்சு தான் ஆகணும். அதே நேரத்துல, அதை மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லவும் கூடாது""இந்த விஷயத்துல நான் உன்னை மட்டும் தான் நம்புறேன், குரு" குரு யோசனையில் ஆழ்ந்தான். ...........சித்த வைத்தியருக்கு ஃபோன் செய்து, இனியவனை பற்றி அவரிடம் கூற வேண்டும் என்று நினைத்தாள் ஆழ்வி. அவன் உறங்கும் வரை அவன் அறையை விட்டு அவளால் வெளியே வர முடியவில்லை. அவனை உறங்கச் செய்துவிட்டு, தன் அறைக்கு வந்து, தன் கைபேசியை எடுத்து பார்த்த அவள், அதில் சித்த மருத்துவரிடம் இருந்து மூன்று மிஸ்டுகால்கள் வந்திருப்பதை கண்டாள். உடனடியாக அவருக்கு ஃபோன் செய்தாள். அவர் மூன்றாவது மணியில் அந்த அழைப்பை ஏற்றார். "மன்னிச்சிடுங்க சுவாமி, நான் அவர் கூட இருந்தேன். அதனால தான் உங்க ஃபோனை என்னால அட்டென்ட் பண்ண முடியல" "அதனால ஒன்னும் பிரச்சனை இல்லம்மா. உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்காரு?""நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்ல போறேன்னு எனக்கே தெரியல. நம்ப முடியாத அளவுக்கு அவர்கிட்ட நல்ல முன்னேற்றம் தெரியுது" என்றாள் சந்தோஷமாக. "அப்படின்னா, நான் உங்கிட்ட சொல்லும் போது இவ்வளவு முன்னேற்றம் இருக்கும்னு நீங்க நம்பலயா?" என்றார் அவர் சிரித்தபடி."நான் உங்க டிரீட்மென்ட்டை நம்பினேன். ஆனா இவ்வளவு வேகமான முன்னேற்றம் இருக்கும்னு நிச்சயமா நினைக்கல, சுவாமி" "சரியான டிரீட்மென்ட் கொடுத்திருந்தா, உங்க புருஷன் எப்பவோ குணமாகி இருப்பாரு மா. அவருடைய துரதிஷ்டம், அவருக்கு கொடுக்கக் கூடாத மருந்தை கொடுத்து, அவரை அந்த மாதிரி நிலைமைக்கு ஆளாக்கி இருக்காங்க. அந்த மருந்தை பத்தி நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தேன். அந்த மருந்தால தான் அவர் இவ்வளவு காட்டுதனமா நடந்துக்கிட்டார். ஆனா, இனிமே அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்ல. நம்ம மருந்து, அவருடைய மூளையோட செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும். அவருடைய நரம்புகளை அமைதிப்படுத்தும். நம்ம மருந்து, வெறும் மாற்று மருந்தா மட்டும் இல்லாம, அவரோட உடம்புல இருக்கிற நச்சு தன்மை உள்ள அனைத்தையும் வெளியேற்றி, அவர்கிட்ட நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அதனால தான் அவர் இவ்வளவு வேகமா முன்னேற்றம் காட்டுறாரு. அவர் ரொம்ப சீக்கிரம் குணமாயிடுவாரு. கவலைப்படாதீங்க""ரொம்ப நன்றி சுவாமி""நான் ஏற்கனவே சொன்னேன், இது உங்க பிரச்சனை மட்டுமில்ல. இது என்னோட மருத்துவ அனுபவத்துக்கு மிகப்பெரிய சவால். நம்ம நிச்சயம் அவரை மீட்டுக் கொண்டு வந்துடலாம். நான் உங்களுக்கு ஃபோன் பண்ணது ஒரு முக்கியமான ஒரு விஷயத்தைப் பத்தி சொல்லத்தான்" "சொல்லுங்க சுவாமி""நாளைக்கு அம்மாவாசை" "ஆமாம் சுவாமி""மனநிலை சார்ந்த விஷயங்களுக்கும் நிலாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா நாங்க நம்புறோம். அதனால, நிலாவுல ஏற்படுற மாற்றங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவங்களோட மூலையில அதிக அளவு விளைவுகளை ஏற்படுத்தும்" "நான் இப்போ என்ன செய்யணும் சுவாமி?" என்றாள் பதற்றத்தோடு."நான் உங்களுக்கு அனுப்புன மருந்துல ஒரு சின்ன பாட்டில் இருக்கு. அதுல இருக்கிற மருந்தோட அளவு வெறும் பத்து மில்லி தான். ஆனா இதுவரை நம்ம கொடுத்த மருந்தை விட பத்து பங்கு சக்தி வாய்ந்தது. நாளைக்கு காலையில அதை உங்க புருஷனுக்கு கொடுத்துடுங்க. நாளைக்கு ராத்திரி, அவரோட மனநிலையை அது சமநிலையில் வைக்கும். அந்த மருந்து, அமாவாசை அன்னைக்கு பவர் ஃபுல்லா வேலை செய்யும். அமாவாசைக்கு அடுத்த நாள், நீங்க அவர்கிட்ட மிகப்பெரிய மாற்றத்தை பார்ப்பீங்க""சரிங்க சுவாமி. நீங்க சொல்ற மாதிரியே செஞ்சுடுறேன்...""உங்க மனசுல இப்போ என்ன கேள்வி எழுந்திருக்குன்னு நான் சொல்லட்டுமா? இவ்வளவு சக்தி வாய்ந்த மருந்தை, நம்ம ஏன் முன்னாடியே கொடுக்கலன்னு கேக்க நினைக்கிறீங்க... அப்படித்தானே?" "அது வந்து..." "ஆரம்பத்துல, அவருடைய உடம்பு நம்ம கொடுக்கிற சக்தி வாய்ந்த மருந்தை ஏத்துக்கிற அளவுக்கு தயாரா இல்ல. ஆனா இப்போ, அவருடைய உடம்பு பதினஞ்சி நாளா நம்ம மருந்துக்கு பழகி இருக்கு. இப்போ அதை நம்ம அவருக்கு கொடுக்கும் போது, அதுக்குண்டான பலனை அவர் உடம்பு கிரகச்சிக்கும். அதனால எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. அதனால தான் இந்த மருந்தோட சக்தியை, நிதானமா இந்த மாதிரி ஏத்தி கொடுக்கிறோம்" "இந்த மாதிரி ஒரு கேள்வி என் மனசுல வந்ததுக்காக மன்னிச்சிடுங்க, சுவாமி.""அதுல எந்த தப்பும் இல்லம்மா. உங்க புருஷன் மேல உங்களுக்கு இருக்கிற காதல் தான் இப்படி எல்லாம் நினைக்க வைக்கிது. அதை என்னால் புரிஞ்சிக்க முடியும்" காதல் என்ற வார்த்தையை கேட்ட ஆழ்வி சில நொடி திகைத்து நின்றாள். காதலா? அவளுடைய பார்வை, சுவரில் மாட்டப்பட்டிருந்த இனியவனின் புகைப்படத்தை நோக்கி அனைச்சையாய் நகர்ந்தது. "லைன்ல இருக்கியா மா?" என்றார் மருத்துவர். "இருக்கேன் சுவாமி""நாளைய மறுநாள், காலையில உங்க ஃபோனுக்காக நான் காத்திருப்பேன்" "நாளைக்கு முழுக்க அவரை கவனிச்சி, நாளன்னைக்கு காலையில நிச்சயம் ஃபோன் பண்ணி சொல்றேன் சுவாமி" "சரிம்மா" "தேங்க்யூ சுவாமி" அழைப்பை துண்டித்தாள் ஆழ்வி.அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இன்னும் இரண்டு நாளில், இனியவன் இப்போது இருக்கும் முன்னேற்றத்தை விட அதிகமாய் பெற இருக்கிறான். ஏதேதோ சாக்குகளை கூறி, இதுவரை அனைவரையும் அவள் நம்ப வைத்து விட்டாள். ஆனால் இப்பொழுது அவனிடம் தெரியப் போகும் அதீத மாற்றத்தை அவள் என்ன சொல்லி சமாளிக்க போகிறாள்? அதிலும், இந்த முறை இப்படி ஒரு மாற்றத்தை காணும் போது, சித்திரவேலுக்கு சந்தேகம் நிச்சயம் எழும். அப்பொழுது அவள் என்ன செய்யப் போகிறாள்? இவ்வளவு பெரிய மாற்றத்தை அவன் கண்களில் இருந்து அவளால் எப்படி மறைக்க முடியும்? அதே நேரம், எவ்வளவு நாட்களுக்குத்தான் இதை அவனிடமிருந்து அவள் மறைத்து வைத்து விட முடியும்? விரைவிலேயே இனியவன் மாறிக்கொண்டு வருகிறான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டு விடுவார்கள். இந்த வீட்டு பெண்களை அவளால் சுலபமாய் சமாளித்து விட முடியும். ஏனென்றால், அவர்கள் இனியவன் குணமடைய வேண்டும் என்பதை விரும்புகிறவர்கள். ஆனால் சித்திரவேல் அப்படி அல்லவே. அவனுக்கு சந்தேகம் எழுந்தால், இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை அவன் தோண்டி துருவ துவங்குவான். அவளை பதற்றம் ஆட்கொண்டது. *அம்மா தாயே கருமாரி, என் வாழ்க்கைக்கான அர்த்தம் என்னன்னு காட்டுனீங்க. வாழ்க்கையில நான் எதையாவது உருப்படியா செய்ய, ஒரு நல்ல பாதையை எனக்கு காட்டி இருக்கீங்க. அதுக்கு ஏத்த மாதிரி என்னால முடிஞ்சதை செஞ்சு, அவரை ஆபத்துல இருந்து காப்பாத்தி இன்னைக்கு இந்த அளவுக்கு கொண்டு வந்து இருக்கேன். இதுக்கப்புறம் அவருடைய முன்னேற்றத்தை நான் எப்படி மத்தவங்க கண்ணுல படாம பாதுகாக்க போறேன்னு எனக்கு புரியல. இந்த விஷயத்துல எனக்கு உதவி செய்யுங்க" என்று மனதிற்குள் தன் இறைவியை வேண்டினாள். கடவுள் அவளை இவ்வளவு தூரம் கொண்டு வந்தது, கைவிட்டு விடுவதற்காகவா? அவள் வேண்டுவதற்கு முன்பே அவளுக்கு உதவி செய்த இறைவி, அவள் வேண்டிக்கொண்ட பிறகா அவளுக்கு உதவாமல் இருந்து விடப் போகிறார்? அவர் எந்த விதத்தில் அவளுக்கு உதவ போகிறார் என்பதை பார்க்கலாமே...!தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co