Truyen3h.Co

Slug

31 குருபரனின் சீற்றம்

அந்த நேரத்தில் குருபரனை அங்கு பார்த்த நித்திலாவும் பாட்டியும் ஆச்சரியம் அடைந்தார்கள். சித்திரவேலோ நடுக்கம் கண்டான். புவனேஸ்வரன் சித்திரவேலை பார்த்து கண்களால் கெஞ்சினான். இனியவனின் மேலாளனின் திறனை பற்றி அவனுக்கு தெரியும். ஆதாரம் இல்லாமல் குருபரன் எதிலும் இறங்க மாட்டான்.

"நீ என்ன சொல்ற குரு?" என்றாள் நித்திலா.

"இந்த டாக்டர் கொடுத்த மருந்து தான் இனியாவை பைத்தியமா வச்சிருந்ததுன்னு சொல்றேன்"

"ஆதாரமில்லாம நீங்க யாரையும் ப்ளேம் பண்ண முடியாது, குரு. உங்ககிட்ட அதுக்கு ஏதாவது ப்ரூஃப் இருக்கா?" என்றான் சித்திரவேல்.

"உங்க எல்லாருக்கும் பைத்தியம் பிடிச்சிருக்கு. நான் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? இதுக்கப்புறம் நான் இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன். நான் போறேன்" என்று அங்கிருந்து புறப்பட முயன்றான் புவனேஸ்வரன்.

உள்ளே நுழைந்த குருபரன், அவன் சட்டை காலரை பற்றி உள்ளே இழுத்து வந்தான்.

"இந்த வீட்டை விட்டும், இந்த கேசை விட்டும், நீ வெளியில போக முடியாது" என்றான் கோபமாய்.

"முத்து, கதவை சாத்து" என்று அவனுக்கு உத்தரவு பிறப்பித்தான் குருபரன், முத்துவின் தோளில் இருந்த அவனது துண்டை எடுத்தபடி. அந்த துண்டை கொண்டு புவனேஸ்வரனின் கரங்களை அவனது முதுகுக்கு பின்னால் வைத்து கட்டினான்.  

ஓடி சென்று கதவை சாத்தி தாழிட்டான் முத்து. ஆழ்வி முத்துவிடம் கொடுத்து அனுப்பிய லேப் டெஸ்ட் ரிப்போர்ட்டை வெளியில் எடுத்தான் குருபரன். ஆம், அந்த மருந்தை தனக்காகவும் டெஸ்ட் செய்து வைத்துக் கொண்டாள் ஆழ்வி, எப்பொழுது வேண்டுமானாலும் அது தனக்கு தேவைப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன். அந்த பரிசோதனை முடிவை நித்திலாவிடம் கொடுத்தான் குருபரன். நித்திலா அதை படித்த போது, பார்கவியும் அவளுடன் சேர்ந்து அதை படித்தாள்.

"அந்த மருந்து கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு ரொம்ப கொடூரமா பாலுணர்ச்சியை தூண்டக்கூடியது. அந்த மருந்தால தான், கட்டுப்படுத்த முடியாத ஃபீலிங்ஸோட, இனியா காட்டுத்தனமா நடந்துகிட்டான். நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா, நீங்க எந்த டாக்டர்கிட்ட வேணும்னாலும் கன்சல்ட் பண்ணிட்டு அதுக்கப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க"

நித்திலா, பாட்டி, பார்கவி மூன்று பேரும் நம்ப முடியாத அளவிற்கு அதிர்ச்சிக்கு ஆளானார்கள். தங்களுக்கே தெரியாமல், தங்கள் இன்னுவின் வாழ்க்கையில் இவ்வளவு மோசமான கொடூரம் நடந்து கொண்டிருந்தது என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. நான்கு எட்டில் புவனேஸ்வரனை நெருங்கிய நித்திலா, அவனை ஓங்கி அறைந்தாள். அவனது சட்டையின் காலரை பற்றி கொண்டு,

"ஏன்ன்டா? எதுக்காக டா என் தம்பிக்கு இப்படி ஒரு கொடூமையை பண்ண?" அவன் காலரை உலுக்கியவாறு காட்டுக் கத்தாய் கத்தினாள்.

பதில் கூறாமல் தலை குனிந்தான் புவனேஸ்வரன்.

"அவன்கிட்ட ஏன் கத்திக்கிட்டு இருக்கிங்க, நித்திலா? கேள்வி கேட்காம அவனை நம்பின நீங்க எல்லாரும் தான் முட்டாள். எப்படி கண்மூடித்தனமா அவனை நீங்க நம்புனீங்க?" என்று தரமான கேள்வியை எழுப்பினான் குருபரன்.

எதிர்பார்த்தபடியே நித்திலா சித்திரவேலின் மீது ஒரு கோப பார்வையை வீசினாள்.

"இந்த டாக்டருக்கு அப்படி ஒரு கெட்ட எண்ணம் இருக்கும்னு எங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் சித்திரவேல்.

"இப்படி பேச உங்களுக்கு வெக்கமா இல்ல? ஒரு கிரிமினல் லாயரா இருந்துகிட்டு, இப்படித்தான் நீங்க விஷயத்தை கையாளுவீங்களா? இனியாகிட்ட எந்த முன்னேற்றமும் தெரியலன்னு சொல்லும் போது நீங்க எதுக்காக ட்ரீட்மெண்ட்டை மாத்தல? எதுக்கு?" என்று வீடு அதிரும்படி கத்தினான் குருபரன்

வாயடைத்து நின்றான் சித்திரவேல்.

"பொம்பளைங்க யாரும் அதைப்பத்தி யோசிக்காம இருந்தாங்கன்னா, அவங்க அந்த பொறுப்பை உங்ககிட்ட விட்டிருந்தாங்க. அவங்க உங்களை நம்பினாங்க. உங்க பக்கத்துல இருந்து எந்த தப்பும் நடக்காதுன்னு அவங்க நினைச்சாங்க. அதனால தான் இந்த ஃப்ராடை அவங்க செக் பண்ணி பாக்கணும்னு நினைச்சிருக்க மாட்டாங்க." சித்திரவேலை கண்மூடித்தனமாய் நம்பியது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை பெண்களுக்கு இடித்துரைத்தான் குருபரன்.

"அவன் தான் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தான்" என்றான் சித்திரவேல் மெல்லிய குரலில்.

"அவன் நம்பிக்கை கொடுத்தான், நீங்க கண்ணை மூடிக்கிட்டு அவனை நம்பிட்டீங்க...! அவன் யார் உங்களுக்கு? ட்ரீட்மெண்ட்டை மாத்த சொல்லி நான் உங்ககிட்ட எத்தனை தடவை சொன்னேன்? என் பேச்ச நீங்க காது கொடுத்து கேட்டீங்களா? அப்படி என்ன உங்களுக்கு பிடிவாதம்?"

"என் மேல எதுக்கு இவ்வளவு கோவப்படுறீங்க, குரு?"

அந்த கேள்விக்கு குருபரன் பதில் அளிக்கும் முன், பாட்டி பதிலளித்தார்.

"ஏன்னா, இன்னுவோட பொறுப்பை நீங்க ஏத்துக்கிட்டீங்க. நானும், நித்திலாவும் இன்னுவை ட்ரீட்மென்ட்காக வேற எங்கையாவது கூட்டிக்கிட்டு போகலாம்னு சொன்ன போதெல்லாம் நீங்க எங்களை தடுத்திங்க... உப்பு சப்பில்லாத  காரணத்தை சொன்னீங்க. உங்களையும் சந்தேகப்படுற காரணம் எங்களுக்கு இருக்கு மாப்பிள்ளை"

"நீங்க என்னை சந்தேகப்படுறீங்களா, பாட்டி?"

அவனுக்கு பதில் கூறாமல் தன் பார்வையை கோபத்துடன் வேறு பக்கம் திருப்பினார் பாட்டி.

"இப்போ நானே உங்களை சந்தேகப்படுகிறேன்" என்றாள் நித்திலா.

"நித்தி..."

"போதும் நிறுத்துங்க. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. உங்களை சந்தேகப்படுறதுக்கான காரணத்தை நீங்க தான் கொடுத்திருக்கீங்க. நீங்க மட்டும் ஜாக்கிரதையா இருந்திருந்தா, என் தம்பி இப்படிபட்ட மோசமான நிலைமையில இருந்திருக்க மாட்டான். இந்த நேரம் அவன் குணமாகி இருப்பான்" என்று வெடித்து சிதறினாள் நித்திலா.

தன் கையை விட்டு அனைத்தும் நழுவி விட்டதை உணர்ந்தான் சித்திரவேல்.

"இந்த விஷயத்தை நான் சும்மா விட போறதில்ல. இதுக்கு பின்னாடி யார் இருக்கான்னு கண்டுபிடிக்க தான் போறேன். அவங்களுக்கு நரகம்னா என்னன்னு நான் காட்டுறேன்" என்றான் குருபரன் கோபமாய்.

கைபேசியை எடுத்து போலீசுக்கு ஃபோன் செய்ய அவன் முயன்ற போது, சித்திரவேல் நடுங்கினான்.

"குரு, இந்த விஷயம் வெளியில போச்சுன்னா, எல்லா நியூஸ் பேப்பர்லயும் வரும். அது இனியவனோட கௌரவத்தை பாதிக்கும்" என்று வழக்கமான புராணம் பாடினான் சித்திரவேல்.

"அதை பத்தி நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டியதில்ல, சித்திரவேல். இந்த விஷயத்தை வெளியில கொண்டு வராம, எப்படி அவன் வாயில இருந்து உண்மையை வர வைக்கணும்னு எனக்கு தெரியும். அல்பத் தனமான காரணம் சொல்றதை நிறுத்துங்க" சீறி விழுந்தான்.

"எனக்கு இனியவன் மேல அக்கறை இல்லங்கிற மாதிரி பேசாதீங்க, குரு"

"வேற எப்படி பேச சொல்றீங்க? இன்னைக்கு பைத்தியம் பிடிச்சு நிக்கிறது, சாதாரண ஆள் இல்ல... இனியவன் பாலகுமாரன். இனியவனோட கௌரவம் போயிடும்னு அவனை ட்ரீட் பண்ணாம வச்சிருந்தேன்னு நீங்க சொன்னா, கேட்கிறவங்க சிரிப்பாங்க" நெருப்பை உமிழ்ந்தான் குருபரன்.

"நீங்க அந்த மருந்து ரொம்ப மோசமானதுன்னு சொன்னீங்க. அப்படி இருக்கும் போது, எப்படி மச்சான் குணமானாரு?"

குருபரன் ஆழ்வியை நோக்கி திரும்ப, அனைவரது பார்வையும் அவளிடம் சென்றது.

"எங்களுக்கு கல்யாணமான அடுத்த நாளே, நான் அவருக்கு மருந்து கொடுக்கிறத நிறுத்திட்டேன்" என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாள் ஆழ்வி.

"அப்படின்னா இந்த மருந்தை பத்தி உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? எப்படி தெரிஞ்சது?" என்றாள் நித்திலா.

"இல்லக்கா. எனக்கு அந்த மருந்தை பத்தி தெரியாது. ஆனா, அந்த மருந்தை கொடுக்கிற விருப்பமே எனக்கு இல்ல. ஏன்னா, அதை சாப்பிட்டு அவர்கிட்ட எந்த மாற்றமும் இல்லன்னு சொல்லும் போது, அதை கொடுக்கிறதுல என்ன அர்த்தம் இருக்க போகுது? அதை சாப்பிட்ட பிறகும் கூட, அவர் காட்டுத்தனமா தானே நடந்துகிட்டாரு? அப்புறம் திரும்ப திரும்ப அந்த மருந்தை நம்ம ஏன் கொடுக்கணும்? அதனால கொஞ்ச நாள் அதை நிறுத்தி பார்க்கலாம்னு தோணுச்சு. நான் அதை நிறுத்துனதுக்கு பிறகு, அவர்கிட்ட லேசான மாற்றம் தெரிய ஆரம்பிச்சது. நாங்க மாமல்லபுரம் போன போது, அதைப்பத்தி குரு அண்ணன்கிட்ட சொன்னேன். அதனால தான் அவருக்கு அந்த மருந்து மேல சந்தேகம் வந்திருக்கு போல இருக்கு" என்றாள் ஆழ்வி பட்டும் படாமலும்.

அவள் கூறிய வார்த்தைகள் சித்திரவேலை அடியோடு ஆட்டம் காண செய்தது. அவர்கள் மாமல்லபுரம் சென்றார்களா? எப்பொழுது? அவன் இல்லாத நேரத்தில் இங்கு என்ன தான் நடந்தது?

"அதுமட்டுமில்ல ஆழ்வி, எனக்கு நிறைய விஷயங்கள்ல சந்தேகம் ஏற்பட்டிருக்கு. அதையெல்லாம் தீத்துக்கிற வேலையில நான் தீவிரமா இறங்கி இருக்கேன். ரொம்ப சீக்கிரம், முக்கியமான குற்றவாளி யாருன்னு நான் கண்டுபிடிப்பேன்" என்று சித்திரவேலை பார்க்காமல் அவன் கூற, சித்திரவேலோ, அவனை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருந்தான்... திகிலுடன்...!

கமிஷனருக்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை அவரிடம் கூறினான் குருபரன்.

"கேஸ் ஃபைல் பண்ணாம, இந்த விஷயத்தை உங்க ஸ்டைல்ல விசாரிங்க சார்... இனியவனுக்காக" என்று அவரிடம் தாழ்மையோடு கேட்டுக் கொண்டான் குருபரன்.

"கவலைப்படாதீங்க, குரு. இந்த கேசுக்கு நாங்க எஃப்ஐஆர் கூட ஃபைல் பண்ண போறது இல்ல. கிரிமினல்கிட்ட இருந்து, எங்க ஸ்டைலில் விசாரிச்சு நாங்க உண்மையை வாங்குறோம். இனியவன் வீட்டுக்கு அசிஸ்டன்ட் கமிஷனர் நவ்ஷத்தை நான் அனுப்பி வைக்கிறேன். டாக்டரை அவர் கஸ்டடியில் எடுத்துக்குவார்"

"தேங்க்யூ சார்" அழைப்பை துண்டித்தான் குரு.

தன் கைகளின் நடுக்கத்தை மறைக்க அரும்பாடு பட்டான் சித்திரவேல்.

அரை மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார் அசிஸ்டன்ட் கமிஷனர் நவ்ஷத். அவரிடம் டாக்டரை ஒப்புவித்தான் குருபரன். சித்திரவேலின் மீது ஒரு கோப பார்வையை வீசிவிட்டு அங்கிருந்து சென்றான் புவனேஸ்வரன்.

"நான் பேசுனது உங்க மனசை காயப்படுத்தி இருந்தா அதைப் பத்தி நான் கவலைப்படல. இப்போ நான் சொல்றதை கேட்டு, நீங்க என்ன நினைச்சாலும் அதைப்பத்தியும்  நான் கவலைப்பட போறதில்ல. நான் இனியாவை ராமநாதபுரத்துக்கு ட்ரீட்மென்ட்காக கூட்டிக்கிட்டு போக போறேன். அதுல உங்களுக்கு விருப்பம் இருந்தாலும் சரி, இல்லனாலும் சரி. அதை பத்தி எனக்கு கவலை இல்ல" என்று ஆழ்வியை நோக்கி திரும்பிய குருபரன்,

"நீங்க என்ன சொல்றீங்க, ஆழ்வி? நீங்க இனியாவை கூட்டிகிட்டு வர தயாரா இருக்கீங்களா? ஏன்னா, இனியாவை ட்ரீட் பண்ண, எனக்கு வேற யாரும் தேவையில்ல. நீங்க மட்டும் இருந்தா போதும்"

"அவருக்காக என்ன செய்யவும் நான் தயாரா இருக்கேன்" என்றாள் ஆழ்வி யோசிக்காமல். 

"நீ எங்களைப் பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்க குரு? இன்னுவை பத்தி எங்களுக்கு கவலை இல்லன்னு நினைக்கிறாயா? ஆழ்வியை பலிகடாவாக்க நான் நினைச்சது கூட பழைய இன்னுவை பாக்கணும்னு தான். அவன் குணமாகணும்னு தான், நான் ஆழ்வியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். அந்த விஷயத்துல நான் ஒரு சுயநலவாதியா மாறக்கூட தயங்கல. அது உனக்கு தெரியாதா?" என்றாள் நித்திலா கோபமாய்.

"உங்க முயற்சியை எல்லாம் நீங்க அவனோட ட்ரீட்மெண்ட்டை மாத்த பயன்படுத்தி இருக்கணும், நித்திலா. கல்யாணம் ஆகி ரெண்டு நாள்ல அவனுக்கு மருந்து கொடுக்க வேண்டாம்னு நினச்சிருக்காங்க ஆழ்வி. அப்படி ஒரு யோசனை உங்களுக்கு எப்பவாவது வந்துதா?" என்று தன் கேள்விக்கணைகளை தொடர்ந்தான் குருபரன்.

"குரு, போதும்... நான் முட்டாளா இருந்தேன். ஒத்துக்கிறேன். ஆனா, இனிமே அப்படி இருக்க நான் விரும்பல. இன்னுவை அவனோட ட்ரீட்மென்ட்காக எங்க வேணும்னாலும் கூட்டிகிட்டு வர நான் தயாரா இருக்கேன். இப்போ நான் என்ன செய்யணும்னு? சொல்லு"

"ராமநாதபுரத்துல ஒரு சித்த மருத்துவர் இருக்காருன்னு கேள்விப்பட்டேன். அவர் மனநிலை சரியில்லாதவங்களை ட்ரீட் பண்றதுல ரொம்ப பெரிய எக்ஸ்பர்ட்டாம். கைவிடப்பட்ட நிறைய கேசை அவர் குணமாக்கி இருக்காராம்"

"இந்த மாதிரி மெடிக்கல் சென்டரை பத்தி மீனா கூட என்கிட்ட சொல்லி இருக்கா" என்றாள் பார்கவி.

"அந்த மாதிரி இடத்தை பத்தி உனக்கு ஏற்கனவே தெரியுமா?" என்றாள் நித்திலா.

"மீனா என்கிட்ட சொன்னா. ஆனா, மாமா தான் அண்ணனோட ட்ரீட்மென்ட்டை மாத்த விருப்பம் காட்டவே இல்லையே! அதனால தான், நான் உன்கிட்ட சொல்லல"

உண்மையிலேயே நித்திலா எரிச்சல் தான் அடைந்தாள்.

"சித்திரவேல் இனியாவோட கௌரவத்தை பத்தி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. இப்போ தான் அவன் காட்டுத்தனமா நடந்துக்கிறது இல்லையே! அவனை இப்போ நம்ம எங்க வேணும்னாலும் கூட்டிக்கிட்டு போகலாம். ஆழ்வி அவனை பார்த்துக்குவாங்க. தேவைப்பட்டா, அவனை பிரைவேட் ஜெட்டில் இங்கிருந்து கூட்டிகிட்டு போகலாம்"

"தேவையான எல்லா ஏற்பாட்டையும் பண்ணுங்க. நம்ம போறோம்!" என்று உறுதியாய் கூறினாள் நித்திலா.

"அப்படின்னா, நான் அங்க இருக்கிற டாக்டர் கிட்ட பேசி, அப்பாயிண்ட்மெண்ட் வாங்குகிறேன்" என்று அவன் ஆழ்வியை பார்த்து கூற, அவள் வெற்றி புன்னகை பூத்தாள். அதை கவனிக்க தவறவில்லை சித்திரவேல்.

தொடரும்...




Bạn đang đọc truyện trên: Truyen3h.Co