Truyen3h.Co

Slug

35 எவ்வளவு வித்தியாசம்...!

பாட்டியின் அறைக்கு வந்த பார்கவி, அவருக்கு பக்கத்தில் அமர்ந்து,

"ஏன் பாட்டி அக்கா கிட்டயும் மாமா கிட்டயும் இவ்வளவு ரூடா நடந்துக்குறீங்க?" என்றாள்

"நான் ஏன் ரூடா இருக்கக் கூடாது?"

"அவங்க நம்ம குடும்பம், பாட்டி"

"அதுக்காக அவங்க என்ன வேணாலும் செய்யலாம்னு அர்த்தம் இல்ல"

"நீங்க மாமாவை இவ்வளவு தாக்கி பேசி நான் பார்த்ததில்ல. நீங்க அவரை சந்தேகப்படுறீங்களா?"

"அவர் நம்ம மேல உண்மையிலேயே அக்கறையோட இருக்காருன்னு தான், நான் எதுவுமே பேசாம இருந்தேன்"

"அவர் அப்படி இல்லன்னு நினைக்கிறீங்களா?"

"ஆமாம். அவர் உண்மையிலேயே நம்ம மேல அக்கறையோட இருக்கிறதா எனக்கு தோணல. அப்படி அவருக்கு அக்கறை இருந்திருந்தா, டாக்டரை எப்பவோ கையும் களவுமா பிடிச்சிருப்பாரு. ஆனா நம்ம வீட்டுக்கு வந்த உடனேயே ஆழ்வி அதை செஞ்சுட்டா"

"அதை செஞ்சது ஆழ்வி இல்ல, குரு"

"நான் அதை நம்பல"

"ஏன் பாட்டி?"

"நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு. நீயும் தானே அவங்க கூட மாமல்லபுரம் போயிருந்த?"

"ஆமாம்"

"அவங்க ரெண்டு பேரும், அங்க நம்ம இன்னுவோட மருந்தை பத்தி பேசினதை நீ கேட்டியா?"

இல்லை என்று யோசனையுடன் தலையசைத்தாள் பார்கவி.

"நல்லா யோசிச்சு பதில் சொல்லு"

"ஆழ்வி அன்னைக்கு முழுக்க அண்ணன் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லவே திணறிக்கிட்டு இருந்தா. ஒழுங்கா சாப்பிட கூட அவளுக்கு நேரம் கிடைக்கல"

"இப்போ உன் பதில் என்ன?"

"ஆமாம். மாமல்லபுரம் போனப்போ, அவ அந்த மருந்தை பத்தி குரு கிட்ட பேசினதா சொன்னா... ஆனா, பேசல"

"மாப்பிள்ளையை நேரடியா எதிர்க்க அவ விரும்பல. அதனால தான், அதை குரு மூலமா செய்றான்னு எனக்கு தோணுது"

பார்கவி மலைத்தாள்.

"அது மட்டும் இல்ல, எனக்கு வேறொரு சந்தேகமும் இருக்கு"

"என்ன பாட்டி?"

"ஆழ்விக்கு மாப்பிள்ளையை பத்தி ஏதோ ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கு. இல்லனா அவ கல்யாணம் ஆனா உடனேயே அந்த மருந்தை கொடுக்கிறதை நிறுத்தி இருக்க மாட்டா"

"அப்படின்னா மாமாவை பத்தி குருவுக்கும் ஏதோ தெரிஞ்சி இருக்குன்னு சொல்றீங்களா?"

"ஆமாம்" என்றார் யோசனையுடன்.

"அப்படின்னா, இப்போதிலிருந்து நானும் மாமாவை கிளோஸா வாட்ச் பண்றேன்"

"தாராளமா செய். ஆனா ஒரு விஷயத்தை மனசுல வச்சுக்கோ. எல்லா பிரச்சனைகள்லயும் இருந்து ஆழ்வியை காப்பாத்த வேண்டியது நம்ம பொறுப்பு"

சரி என்று தலையசைத்தாள் பார்கவி.

மறுபுறம்...

கோபத்தின் உச்சத்தில் இருந்தான் சித்திரவேல். எதற்காக திடீரென்று பாட்டி அவனை ஒரேடியாக எதிர்க்கிறார் என்று அவனுக்கு புரியவில்லை. அது அவனை எரிச்சல் அடைய செய்தது. நித்திலாவும் அவன் மீது கோபமாய் இருக்கிறாள். இதன் பிறகு இந்த பெண்கள் அவன் கூறுவதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிலும் அவர்கள் அவனை எதிர்க்க துவங்கினால், அவனது நிலைமை என்னவாகும்? அவனுக்கு கோபமாகவும், அதே நேரம் பயமாகவும் இருந்தது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஆழ்வி தான். அவளால் தான் அவன் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான். எவ்வளவு புத்திசாலித்தனமாய் இனியவனுக்கு மருந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதை அவனுக்கு அளிப்பதையே நிறுத்தி விட்டாள்! அவள் எப்படி இனியவனின் மனதில் இடம் பிடிக்கிறாள் என்று பார்த்து விடலாம். அவன் இருக்கும் வரை அது நிகழப் போவதில்லை. சித்திரவேலை ஏமாற்றினால் என்ன நடக்கும் என்பதன் விளைவை அவள் எதிர்கொள்ளப் போகிறாள்...! என்று பொறுமினான் சித்திரவேல்.

........

இனியவனுக்கு தூக்கமே வரவில்லை. 'என்ன்னனங்க' என்ற குரல் அவன் தலைக்குள் எதிரொளித்துக் கொண்டே இருந்தது. அது அவனை தூங்க விடாமல் செய்தது. எழுந்து அமர்ந்தான். அவனுக்கு அறைக்குள் அமர்ந்திருக்க பிடிக்கவில்லை.

அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. சாதாரண விஷயத்திற்கே அதிகப்படியாய் உணர்ச்சிவசப்படக் கூடிய அவனது குடும்பத்தினர் யாருமே, அவனை பார்க்க வரவே இல்லை. அந்த அறையை விட்டு வெளியே வரவேண்டும் என்று நினைத்தான் அவன். அப்படி வெளியே சென்றால், ஒருவேளை ஆழ்வியை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கலாம் என்று எண்ணி அறையை விட்டு வெளியேறினான்.

சரியாக அதே நேரம், குருவிடம் இருந்து குறுந்தகவலை பெற்ற முத்து, ஓடி சென்று அவனுக்கு கதவை திறந்து விட்டான். வரவேற்பறையில் யாரும் இல்லாததை கண்ட குரு,

"ஆழ்வி எங்க?" என்றான்.

"அவங்க ரூம்ல இருக்காங்க" என்றான் முத்து.

அப்பொழுது ஆழ்வி சமையல் அறைக்கு செல்வதை அவர்கள் பார்த்தார்கள். ஓடிச் சென்று, அவளுக்கு முன்னால் நின்று அவளை தடுத்து நிறுத்தினான் குரு.

"அண்ணா, நீங்களா?"

"ஷ்ஷ்..."

அவள் கையைப் பிடித்து அவளை சமையல் அறைக்கு இழுத்துச் சென்றான் குரு.

அவர்களுக்கு தெரியாது, அவன் அவளை இழுத்துச் சென்றதைப் பார்த்த ஒருவனது விழிகள் விரிவடைந்தது என்று. அவன் இனியவன் தான். அவன் திகைத்து நின்றான். இங்கு என்ன நடக்கிறது? குரு அவனைத் தானே வந்து பார்க்க வேண்டும்? அப்பொழுது தான் அவன் கோமா நிலையில் இருந்து வெளியேறி இருக்கிறான். அவனைப் பார்க்க வேண்டும் என்ற அக்கறையை விடுத்து, இந்த குரு என்னவோ, ஆழ்வியின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறான்...! எரிச்சலுடன் சமையலறையை நோக்கி நடந்தான் இனியவன்.

"அண்ணா இனியவருக்கு சுயநினைவு திரும்ப வந்துடுச்சு" என்றாள் ஆழ்வி.

"கவி எல்லாத்தையும் என்கிட்ட சொன்னா. சித்திரவேல்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க. ரொம்ப சீக்கிரமே நம்ம இனியாகிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்"

"எனக்கு உங்களுடைய இன்னொரு உதவியும் வேணும்"

"என்ன வேணும் சொல்லுங்க"

"எனக்கு ஜிம்மை பத்தி தெரிஞ்சுக்கணும்"

"அந்த கவலையை விடுங்க. நான் உங்களுக்கு ஜிம்மை பத்தின எல்லா டீடைல்ஸைய்யும் அனுப்பி வைக்கிறேன்"

இனியவன் வருவதை பார்த்த முத்து,

"அண்ணன் வராரு" என்று அவர்களை மெல்லிய குரலில் எச்சரித்தான்.

அவர்கள் துணுக்குற்றார்கள். அங்கு வந்த இனியவன், திடமான பார்வையோடு நின்றான். அவனைப் பார்த்த அடுத்த நொடி, அவனை நோக்கி பாய்ந்து ஓடிய குரு, அவனை உணர்ச்சிவசப்பட்டு அனைத்துக் கொண்டான். அவனை கேட்க வேண்டிய கேள்வி இருந்த போதிலும், தானும் அவனை அணைத்துக் கொண்டான் இனியவன்.

"உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு, இனியா" என்றான் உணர்ச்சிவசப்பட்டு.

"நான் உன் முன்னால வந்ததுக்கு பிறகு தான் என்னை பார்த்து நீ உணர்ச்சி வசப்படுவியா?" என்றான் இனியவன்.

குருவும் ஆழ்வியும் சில நொடி திகைத்தார்கள். அவர்கள் இருவரும் சமையலறைக்கு வந்ததை அவன் பார்த்து விட்டான் என்பதை அவர்கள் கவனிக்கவில்லை.

"நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்றான் இனியவன்.

"என்ன கேள்வி கேக்குற, இனியா?உன்னை பார்க்க தான் வந்தேன்"

"நான் கிச்சன்ல இருக்கேன்னு உனக்கு யார் சொன்னது?" என்றான் தன் கைகளை கட்டிக்கொண்டு.

அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று குருவுக்கு புரியவில்லை.

"நீ நேரா என்னை தான் பாக்க வருவேன்னுல நான் நெனச்சேன்..."

"என் தலை வெடிக்கிற மாதிரி வலிக்குது. அதனால தான் ஆழ்விகிட்ட ஒரு காபி கேட்கலாம்னு வந்தேன். அவங்க ரொம்ப நல்லா காப்பி போடுவாங்க தெரியுமா?

"ஆழ்வி நல்லா காபி போடுவான்னு உனக்கு யார் சொன்னது?" என்று மேலும் ஒரு கேள்வியை கேட்டான். இனியவன்.

"நான் இங்க வரும் போதெல்லாம் அவங்க காபியை குடிச்சிருக்கேன் பா. நான் சொல்றது சரி தானே, ஆழ்வி?"

ஆமாம் என்று மெல்லிய புன்னகையோடு தலையசைத்தாள் ஆழ்வி. அது அவனுக்கு எரிச்சலை தந்தது. அவள் குருவை மட்டும் பார்த்து ஏன் புன்னகை புரிகிறாள்? அவனிடம் மட்டும் எதற்காக பதற்றமாய் காணப்படுகிறாள்?

"ஆழ்வி இங்க வந்ததுக்கு பிறகு நீ எத்தனை தடவை இங்க வந்த?"

"நித்திலாகிட்ட சிக்னேச்சர் வாங்க மூணு தடவை வந்தேன்"

மூன்று சந்திப்பிலேயே அவர்கள் இருவரும் கையைப் பிடித்து இழுத்துச் செல்லும் அளவிற்கு எப்படி நெருக்கமானார்கள் என்று யோசித்தான் இனியவன்.

அவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். ஆழ்வியோ இனியவனை கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டு நின்றாள். இனியவன் சுயநினைவோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவன் கேள்வி கேட்பதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அவனது நடவடிக்கையிலும், உடல் மொழியிலும் தான் என்ன ஒரு வித்தியாசம்...! என்ன ஒரு கம்பீரம்...! என்ன ஒரு அழகு...!

"நான் ஆழ்வி செஞ்ச பிரேக்ஃபாஸ்டையே சாப்பிட்டு இருக்கேன்" என்றான் குரு.

இனியவன் ஆழ்வியை நோக்கி திரும்ப, அவள் அவனுக்குள் தொலைந்து போய் இருப்பதை கண்டு திகைத்தான்.

"ஆழ்வி..." என்று குரு அவளை அழைக்க, அவள் திடுக்கிட்டாள்.

இனியவன் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை அவளுக்கு கண்களால் உணர்த்தினான். தன்னை சமாளித்துக் கொண்டு தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள் ஆழ்வி.

அவளுக்கு என்ன ஆனது? எதற்காக அவன் பார்த்தவுடன் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்?

"உனக்கு சமைக்க தெரியுமா? நீ எங்க விருந்தாளியாச்சே... நீ எதுக்காக சமைக்கிற?" என்றான்.

"ஏன்னா, அவங்க ரொம்ப நல்லா சமைப்பாங்க" என்று பல்லைக்காட்டி சிரித்தான் குரு.

இனியவன் குழம்பினான். அவனது வீட்டின் வழக்கம் இதுவல்ல. இப்படி அவன் குடும்பத்தில் இதற்கு முன் நடந்ததே இல்லை. எதற்காக அவன் குடும்பத்தினர் ஒரு விருந்தாளியை சமைக்க விடுகிறார்கள்?

"என்ன யோசிக்கிற, இனியா?"

"ஒன்னும் இல்ல. வா போகலாம்" என்று நடந்தான் இனியவன்.

"எங்களுக்கு காபி கொண்டு வாங்க, ஆழ்வி" என்று கூறியபடி இனியவனை பின்தொடர்ந்தான் குரு.

ஆழ்வி சரி என்று தலையசைத்தாள்.

"உனக்கு ஆழ்வியை முன்னாடியே தெரியுமா?"

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திகைத்தான் குரு. அவர்களுக்கு இடையில் காணப்பட்ட நெருக்கம் அவனை அப்படி ஒரு கேள்வியை கேட்க செய்தது என்று அவனுக்கு புரிந்தது.

"ஓ... தெரியுமே. அவங்க பார்கவி ஃபிரென்ட் ஆச்சே" என்றான்.

"பார்கவி என்னோட தங்கச்சி. ஆனா அவளோட ஃபிரண்டை உனக்கு தெரிஞ்சி இருக்கு... அது எப்படி?"

"அவங்க பார்கவி கூட ஒரு தடவை நம்ம ஆஃபீசுக்கு வந்திருக்காங்க"

"என்னோட ஆக்சிடென்ட்க்கு அப்புறமா?"

"இல்ல ஆக்சிடென்ட்க்கு முன்னாடி"

"ஆக்சிடென்ட்க்கு முன்னாடி அவ நம்ம ஆஃபீசுக்கு வந்தாளா?" என்றான் நம்ப முடியாமல்.

"ஆமாம். பார்கவியோட வந்தாங்க. உனக்கு ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு முதல் நாள்"

"அப்போ நான் என்ன செஞ்சுகிட்டு இருந்தேன்?"

"வழக்கம் போல உன்னோட கேபின்ல தான் இருந்த. பார்கவி ஷாப்பிங் போகறதுக்கு உன்கிட்ட கிரெடிட் கார்டு வாங்கிட்டு போக வந்திருந்தா"

"எதுக்காக ஆழ்வி என்னோட கேபினுக்கு பார்கவி கூட வரல?"

"உன்னை பத்தி எனக்கு தெரியாதா? முன்ன பின்ன தெரியாதவங்க அனாவசியமா உன் கேபின்குள்ள நுழையிறது உனக்கு பிடிக்காது. அதனால, நான் தான் உன் கேபினுக்கு அவங்களை போக வேண்டாம்னு சொல்லிட்டேன்"

அதைக் கேட்டு இனியவன் எரிச்சல் அடைந்தான் என்று கூற வேண்டிய தேவையில்லை.

அவர்களுக்கு காபி எடுத்துக் கொண்டு வந்த ஆழ்வி, அவன் அறையின் கதவை தட்டினாள். இனியவன் எதுவும் கூறுவதற்கு முன்,

"உள்ள வாங்க, ஆழ்வி" என்றான் குரு.

ஆழ்வி உள்ளே நுழைந்தாள், இனியவனை பார்க்காமல். காபியை அவள் அவர்களிடம் வழங்க, அதை பருகிய குரு,

"ம்ம்ம்ம்.... இந்த ஒரு காபிக்காக எத்தனை மைல் வேணும்னாலும் கடந்து வரலாம்" என்றான் கனவுலகத்தில் சஞ்சரிப்பவன் போல.

அதைக் கேட்டு புன்னகைத்த ஆழ்வி அங்கிருந்து செல்ல நினைத்த போது,

"ஆழ்வி, என்று அவளை அழைத்தான் இனியவன்.

அவனை மிரட்சியோடு ஏறிட்டாள் ஆழ்வி.

"நீ ஜிம்மை பத்தி குருகிட்ட பேசிக்கிட்டு இருந்த இல்ல?"

குருவை பார்த்துவிட்டு, ஆம் என்று தலையசைத்தாள் ஆழ்வி.

"குரு ரொம்ப பிஸி. நான் ஆஃபீஸ்க்கு போற வரைக்கும் அவன் ரொம்ப பிசியா தான் இருப்பான். அதனால, உனக்கு ஜிம்மை பத்தி ஏதாவது விஷயம் வேணும்னா என்ன கேளு" என்றான்.

ஆழ்வி குருவை எறிட்டாள். அவனோ இனியவனை நம்ப முடியாத பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

சரி என்று தலையசைத்தாள் ஆழ்வி.

"ஆழ்வி, அவனைக் கேட்க தயங்காதிங்க. இனியவனோட டைம் கிடைக்கிறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்ல. நீங்க ரொம்ப லக்கி" என்று சிரித்தான் குரு.

சரி என்று புன்னகையோடு தலையசைத்து விட்டு சென்றாள் ஆழ்வி.

"எனக்கு ஒரு விஷயம் புரியல" என்று முகம் சுருக்கினான் இனியவன்.

"என்ன புரியல?"

"அவ உன்னை பார்த்து மட்டும் சிரிக்கிறா. என்னை பார்க்கும் போது ஏன் அவ்வளவு இறுக்கமாக இருக்கா?"

குருவின் கண்களில் பொறி பறந்தது. இது இனியவனின் ஸ்டைல் கேள்வி இல்லையே...! ஆனால், எந்த ஒரு முடிவுக்கும் உடனடியாய் அவனால் வந்துவிட முடியவில்லை.

"அவங்க ஈசி கோயிங் கேர்ள். ஆனா உன்னை பார்த்தா பதட்டம் ஆகுறாங்கன்னு நினைக்கிறேன்"

"ஏன்?"

"ஆஃப்டர் ஆல், நீ இனியவன் பாலகுமாரன்...!"

"நான் இனியவன் பாலகுமாரன் தான், பேய் இல்லயே"

"இல்ல தான்...! ஆனா, அவங்க உன்னை பார்த்து சிரிக்கலன்னு நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுற?"

இப்பொழுது அவனுக்கு பதில் சொல்ல இனியவன் தினறினான்.

"என்னன்னே தெரியல, ஏதோ ஒரு விசித்திரமா ஃபீல் பண்றேன்"

"ஆர் யூ ஆல்ரைட்?" என்றான் கவலையோடு.

"எனக்கு தெரியல. என்னால எதுவுமே சொல்ல முடியல. நான் என்ன ஃபீல் பண்றேன்னு எனக்கே புரியல"

"ரிலாக்ஸ் இனியா, உன்னை நீ ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத. உன்னோட மைன்டை காமா வச்சுக்கோ"

காபியை பருகினான் இனியவன்.

"நானும் ஆழ்வியும் மாமல்லபுரம் போனப்போ தான் குளோசானோம்" என்று அவன் முகத்தை படித்தபடி கூறினான் குரு.

அவனை அதிர்ச்சியோடு ஏறிட்டான் இனியவன்.

"என்னது? நீ மாமல்லபுரம் போனியா?"

"அத பத்தி மட்டும் கேட்காதே. நான் சென்னையிலேயே பிறந்து, சென்னையிலேயே வளர்ந்திருந்தாலும், பக்கத்தில் இருக்கிற மாமல்லபுரத்தை பார்க்க ஆழ்வி தான் காரணமா இருந்தாங்க. அவங்களும் பார்கவியும் மாமல்லபுரம் போகணும்னு விரும்பினாங்க. ஆனா நித்திலா அவங்களை தனியா அனுப்ப தயாரா இல்ல. அதனால நான் அவங்களை எஸ்கார்ட் பண்ணிக்கிட்டு போனேன்"

"என்னால இதை நம்ப முடியல"

"ஏன்?"

"நான் கோமா ஸ்டேஜ்ல இருந்தப்போ, நீ பொண்ணுங்களை கூட்டிக்கிட்டு மாமல்லபுரம் போய் சுத்திகிட்டு இருந்தியா? நீ ரொம்ப பிசியா இருந்திருப்பேன்னு இல்ல நினைச்சேன்?"

"ஆமாம், நான் ரொம்ப பிசியா தான் இருந்தேன். அதனால தான் எனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டது"

"ஓ அப்படியா? ஆனா, நான் இதுவரைக்கும் பிரேக் எடுத்ததே இல்லயே..."

"பிரேக் இல்லாம வேலை செய்யறது நல்லதில்ல, இனியா. நீயும் டைம் கிடைச்சா ஒரு தடவை மாமல்லபுரம் போயிட்டு வா. ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்"

"அதை விடு. என்னை அடிச்சு போட்டது யாருன்னு ஏதாவது தெரிஞ்சுதா?"

இல்லை என்று இயலாமையுடன் தலையசைத்தான் குரு.

"உன்னை அடிச்சவங்க, உன்னை அப்படியே விட்டுட்டு போயிட்டாங்க. உன்னால அவங்களை அடையாளம் காட்ட முடியுமா?"

"நிச்சயம் முடியும்?"

"அப்படின்னா நான் கமிஷனருக்கு ஃபோன் பண்ணி, இந்த கேசை ஃபர்தரா டீல் பண்ண சொல்றேன்"

"என்னை அடிச்சவங்க என்னை ஏன் கொல்லாம விட்டாங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஏன் அவங்க என்னை உயிரோட விட்டாங்க?"

"உன்னோட விஷயத்துல நிறைய கேள்விக்கு பதிலே தெரியல, இனியா. உன்னோட உதவி இல்லாம அந்த கேள்விக்கெல்லாம் பதில் கண்டுபிடிக்க முடியாது. இப்போ தான் நீ திரும்பி வந்துட்டியே. நம்ம நிச்சயம் கண்டுபிடிச்சிடலாம்"

ஆமோதிப்புடன் தலையசைத்தான் இனியவன்.

"நான் கிளம்புறேன்"

"சரி" என்று அவனுடன் நடந்தான் இனியவன்.

"நீ எங்க வர?"

"எனக்கு ரூம்ல உக்காந்து போர் அடிக்குது"

"ஒரே நாள்ல உனக்கு போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சா? அப்படின்னா நீ சீக்கிரமே ஆஃபிசுக்கு வந்துடுவேன்னு நினைக்கிறேன்"

"சீக்கிரமே வருவேன்"

அவர்கள் வெளியே வந்தவுடன், குரு மீண்டும் சமையலறையை நோக்கி நடந்தான்.

"எங்க போற?" என்றான் இனியவன்.

"ஆழ்வி கிட்ட சொல்லத்தான் போறேன். அவங்கள பாக்காம எப்படிப்பா போறது?" என்று சமையல் அறையை நோக்கி விரைந்தான்.

"ஆழ்வி, நான் கிளம்புறேன்"

அவள் சரி என்று தலையசைக்க,

"நான் ஒரு விஷயம் சொன்னா செய்வீங்களா?"

"என்ன?"

"என்னை இனியா முன்னாடி அண்ணன்னு கூப்பிடாதீங்க"

"ஆனா ஏன்?"

"நான் சொல்றதை மட்டும் செய்யுங்க. நான் உங்களுக்கு அப்புறமா கால் பண்றேன்" என்று வெளியே ஓடினான்.

ஆழ்வி முகம் சுருக்கினாள். எதற்காக அவனை இனியவன் முன் அண்ணன் என்று கூப்பிட வேண்டாம் என்று கூறுகிறான்? அதைப்பற்றி யோசித்தபடி அவள் சமையலறையை விட்டு வெளியே வர, எதிரில் வந்த இனியவனை கவனிக்காமல் அவன் மீது மோதி கொண்டாள். அவளது தலை முடி அவன் அணிந்திருந்த சட்டை பொத்தானில் மாட்டிக்கொண்டது. அவள் தலையில் இருந்து வீசிய வாசனையை முகர்ந்த அவன், சிலை என நின்றான். அது அவன் அறையில் இருந்த தலையணையில் வீசிய அதே வாசனை...!

தொடரும்...








Bạn đang đọc truyện trên: Truyen3h.Co