Truyen3h.Co

Slug

36 சந்தேகத்திற்கு மேல் சந்தேகம்

இனியவன் மலைத்து நின்றான். அவனது அறையில் இருக்கும் தலையணையில் வீசும் வாசனை, ஆழ்வியின் கேச எண்ணெயின் வாசனையா? அல்லது அவன் குடும்பத்தை சேர்ந்த யாராவது அதே எண்ணெய்யை உபயோகப் படுத்துகிறார்களா? ஆனால் அவனுக்கு தெரிந்த வரை, அவன் குடும்பத்தில் யாரும் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இல்லாதவர்கள். அப்படி இருக்கும் போது, இது எப்படி சத்தியம்?

தன் தலையை பின்னால் இழுத்த ஆழ்வி,

"ஆஆஆஆ..." என்றாள். அது அவனை சுய நினைவுக்கு இட்டு வந்தது.

"வெயிட்..." என்று மெல்ல அவன் பொத்தானில் மாட்டி இருந்த அவளது கூந்தலை பிரித்து விட்டான்.

"ஐ அம் சாரி, நீங்க வந்ததை நான் கவனிக்கல" என்று தயக்கத்துடன் அவள் கூற,

"பரவாயில்ல..." என்ற அவன்,

"முத்...து..." என்று உரத்த குரல் எழுப்பி ஆழ்வியை திடுக்கிட செய்தான்.

சமையலறையில் இருந்து ஓடி வந்தான் முத்து.

"என் ரூமுக்கு வா" என்று கூறிவிட்டு ஆழ்வியை பார்த்தபடியே தன் அறையை நோக்கி நடந்தான் இனியவன்.

அவனது உரத்த குரலைக் கேட்டு வரவேற்பறைக்கு ஓடிவந்த சித்திரவேல், நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள அவர்களை பின்தொடர்ந்து சென்றான்.

தன் அறைக்கு வந்த இனியவன், முத்துவை ஏறிட்டான்.

"எதுக்கு என்னை கூப்பிட்டீங்க, அண்ணா?" என்றான் முத்து.

தலையணையை எடுத்து முத்துவிடம் கொடுத்த அவன்,

"இதுல வர்றது என்ன ஸ்மெல்?" என்றான்.

தனது தந்திரம் பலன் அளித்து விட்டதை புரிந்து கொண்ட முத்து, உள்ளூர புன்னகைத்துக் கொண்டான்.

"சோப்பு பவுடர் ஸ்மெல்" அண்ணா.

அடுத்த தலையணையை எடுத்து அதை அவனிடம் கொடுக்காமல், அவனை நோக்கி நீட்டி,

"இது என்ன ஸ்மெல்?" என்றான்.

அதை நுகர்ந்த முத்து,

"தெரியல அண்ணா" என்றான்.

"ஆனா, எனக்கு தெரியும்"

அப்படியா? என்பது போல் உள்ளூர துள்ளி குதித்தான் முத்து.

"இது ஆழ்வியோட ஹேர் ஆயில் ஸ்மெல்"

"ஓ... ஆனா அது உங்களுக்கு எப்படி தெரியும்?"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சுகிட்டேன், அவ என் மேல மோதின போது..."

"ஓ..."

"என்னோட பில்லோவுல அவ தலைல வர்ற ஸ்மெல் எப்படி வருது? அவ என்னுடைய பில்லோவை யூஸ் பண்ணாளா?"

அதற்கு முத்து அளித்த பதில், இனியவனின் அதிரசெய்தது.

"இல்ல அண்ணா, அவங்க உங்க ரூம்ல தங்கி இருந்தாங்க"

"என்னது? ஆழ்வி என் ரூம்ல தங்கி இருந்தாளா?"

அதற்கு முத்து பதில் அளிக்கும் முன், அவர்களை பின்தொடர்ந்து வந்த சித்திரவேல் முந்திக் கொண்டு,

"ஒரு நாள் அவங்க உங்க ரூம்ல தங்கியிருந்தாங்க" என்றான்.

இனியவன் முகம் சுருக்க, முத்து எரிச்சல் அடைந்தான்.

"கெஸ்ட் ரூம்ல, டிரைனேஜ் ப்ராப்ளம் இருந்தது. அதனால நாங்க அவங்களை இங்க ஒரு நாள் தங்க வச்சோம்" என்று சமாளித்தான் சித்திரவேல்.

ஆழ்ந்து யோசித்தபடி கண்களை சுருக்கினான் இனியவன்.

"அவங்க நம்ம விருந்தாளி இல்லயா?" என்றான் சித்திரவேல்.

"ஆனா அவ பார்கவியோட ஃபிரண்டு தானே? அவ ரூம்ல தங்குறதுக்கு பதிலா, அவளை எதுக்காக என்னோட ரூம்ல தங்க வச்சீங்க?" என்ற தரமான கேள்வியை எழுப்பினான். 

பதில் கூற முடியாமல் திகைத்தான் சித்திரவேல். அவள் பார்கவியின் தோழி என்பதை அவன் எப்படி மறந்தான்?

"உங்களுக்கு தான் தெரியுமே, பார்கவி எப்பவுமே பிரைவசி வேணும்னு நினைப்பா. அதனால தான் ஆழ்வியை நாங்க உங்க ரூமுக்கு மாறிக்க சொன்னோம்"

சித்திரவேலின் பதில் இனியவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவனுக்கு ஏதோ தவறாய் தெரிந்தது. அவன் குடும்பத்தாரை பற்றி அவனுக்கு நன்கு தெரியும். அவனுடைய பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது கூட அவனுக்கு பிடிக்காது என்பதை அவர்கள் அறிவார்கள். அப்படி இருக்கும் பொழுது ஒரு அந்நிய பெண்ணை அவனது அறையில் எப்படி தங்க அனுமதித்தார்கள்? அது ஒரு நாளைய விஷயமாக இருந்தாலும் தான் என்ன?

"முத்து, அந்த பில்லோ கவரை மாத்து" என்றான் சித்திரவேல்.

"பரவாயில்ல, நீ போ" என்றான் இனியவன் உறுதியான குரலில்

"இல்ல மச்சான்..."

"நான் குளிக்கணும். எனக்கு ரொம்ப அன்னீசியா இருக்கு" என்றான் இனியவன்.

சித்திரவேல் சரி என்று தலையசைக்க, அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியேறினார்கள்.

இனியவன் குளியலறை நோக்கி நடந்தான். அவன் செல்லும் வரை காத்திருந்த சித்திரவேல், முத்துவை பார்த்து முறைத்தான்.

"நான் தான் ஆழ்வியோட திங்ஸ் எல்லாத்தையும் இனியவனோட ரூம்ல இருந்து எடுக்க சொல்லி சொன்னேனே..."

"எல்லாத்தையும் எடுத்துட்டேன், அண்ணா"

"அப்புறம் எதுக்காக அந்த பில்லோ கவரை மட்டும் எடுக்காம விட்ட?"

"அதை முதல் நாள் தான் அண்ணி மாத்தினாங்க. அதனால தான் மாத்தாம விட்டேன்"

"எதுக்காக ஆழ்வி இங்க தங்கின விஷயத்தை நீ இனியவன்கிட்ட சொன்ன?"

"அவருக்கு உண்மை தெரிஞ்ச பிறகு நான் வேற என்ன சொல்றது?"

"உனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?"

"அவர் இனிமே ஏதாவது கேட்டா, நான் அப்படியே சொல்லிடுறேன்"

எரிச்சலுடன் அங்கிருந்து சென்றான் சித்திரவேல். சிரிப்பை அடக்கியபடி அவனை பின் தொடர்ந்தான் முத்து. எப்படியோ ஆழ்வியைப் பற்றி இனியவனின் மனதில் ஒரு சந்தேக விதை விழுந்தாகிவிட்டது.

இதற்கிடையில்...

பார்கவிக்காக வீட்டிற்கு வெளியே காத்திருந்தான் குருபரன். அவனைப் பார்த்து புன்னகைத்த படி வந்தாள் அவள்.

"என்னை எதுக்காக கூப்பிட்ட, குரு?"

"நீ என்னை எந்த அளவுக்கு காதலிக்கிற?"

"என்ன கேள்வி இது? நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு உனக்கு தெரியாதா?"

"சரி, நீ எந்த அளவுக்கு என்னை நம்புற?"

"உன்னை எந்த அளவுக்கு காதலிக்கிறேனோ அந்த அளவுக்கு நம்புறேன்"

"ஒருவேளை, என்னையும் ஆழ்வியையும் சேத்து வச்சி யாராவது உன்கிட்ட தப்பா சொன்னா நீ என்ன செய்வ?"

"அவனை செருப்ப கழட்டி அடிப்பேன்" என்றாள் கோபமாய்.

"இதுல நீ கடைசி வரைக்கும் உறுதியா இருப்பியா?"

"எதுக்காக இப்படி முட்டாள்தனமான கேள்விகள் எல்லாம் கேக்குற?"

"உன் மனசுல அப்படி ஒரு சந்தேகத்தை யாராவது கிளப்ப முயற்சி பண்ணுவாங்க. அதுக்காக தான் சொல்றேன்"

பார்கவிக்கு புரிந்து போனது, அவன் சித்திரவேலை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று.

"நீ யாரை பத்தி சொல்ற?" என்றாள்.

"அது யாரா வேணும்னாலும் இருக்கட்டும். நீ என்னை நம்புறல?"

"என்னை விட அதிகமா நான் உன்னை நம்புறேன்"

அப்பொழுது குருவுக்கு முத்துவிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்றான் குரு.

"குரு அண்ணா"

"சொல்லு முத்து"

"இனியவன் அண்ணன் மனசுல நான் சந்தேக விதையை தூவிட்டேன்"

"எப்படி?" என்றான் ஆவலாக.

சற்று முன் நடந்தவற்றை அவனிடம் கூறினான் முத்து.

"நீ ரொம்ப நல்ல வேலை செஞ்சிருக்க முத்து. அங்க நடக்குறது என்னன்னு எனக்கு சொல்லிக்கிட்டே இரு"

"நிச்சயமா சொல்றேண்ணா" என்று அழைப்பை துண்டித்தான் முத்து.

சற்று யோசித்த குரு, பார்கவியை பார்த்து,

"நீ ஒரு வேலை செய்யணும்" என்றான்.

"நீ என்ன சொன்னாலும் செய்வேன்"

"நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ"

அவள் செய்ய வேண்டியதை அவளுக்கு விளக்கிக் கூறினான். ஒரு கேள்வியும் கேட்காமல் அவன் கூறியதை செய்ய ஒப்புக்கொண்டாள் பார்கவி.

"அவனுடைய ரியாக்ஷன் என்னன்னு எனக்கு சொல்லு"

"ஓகே" என்று வீட்டிற்குள் சென்றாள் பார்கவி.

இதற்கிடையில்,

குழம்பிய மனதுடன் குளியலறைக்கு வந்தான் இனியவன். சித்திரவேல் கூறிய எந்த காரணமும் பொருத்தமாய் இருப்பதாய் அவனுக்கு தோன்றவில்லை. உடைகளை கலைந்து விட்டு ஷவரின் அடியில் நின்றான். முழுவதும் நனைந்துவிட்ட நிலையில், ஷவரை அணைத்துவிட்டு சோப்பு போட துவங்கினான். அப்பொழுது அவனது கரம் அவன் தோள்பட்டையை தடவியவாறு நின்றது. அந்த இடத்தில் மட்டும் ஏதோ சொரசொரப்பாய் உணர்ந்தான். கண்ணாடியை நோக்கி திரும்பிய அவன், அது என்ன என்பதை கவனித்தான். அவனது கண்கள் குழப்பத்துடன் அகல விரிந்தன. அது அவனை யாரோ கடித்தது போல் இருந்த தழும்பு. அந்த தழும்பை தடவியபடி கண்ணாடியை நெருங்கினான்.

"என்னோட தோள்ல இந்த பைட் மார்க் எப்படி வந்தது? யார் என்னை கடிச்சது? நான் கோமாவில் இருந்த போது யாரும் ஏன் என்னை கடிக்கணும்?"

அந்த தழும்பை பார்த்தபடி நின்றான்.

"ஏன் எல்லாமே எனக்கு விசித்திரமா தெரியுது? எல்லாரும் என்கிட்ட ஏன் வித்தியாசமா நடந்துக்குறாங்க? நான் எதையாவது மிஸ் பண்றேனா? இதைப்பத்தி நான் யார் கிட்ட கேக்குறது? ஒருவேளை யாருக்குமே எதுவுமே தெரியலன்னா? நான் தான் ஹாஸ்பிடல் இருந்தேனே...! அப்போ இதைப்பத்தி யாருக்கு தெரிஞ்சிருக்கும்? ஹாஸ்பிடல்ல ஏதாவது தப்பு நடந்திருக்குமோ? இருக்கலாம்..." என்று எண்ணினான் இனியவன்.

குளித்து முடித்து உடைமாற்றிக் கொண்டு, நித்திலாவின் அறைக்கு  வந்தான். அவனைப் பார்த்து புன்னகை புரிந்தாள் நித்திலா.

"உனக்கு ஏதாவது வேணுமா, இன்னு?"

"ஒன்னும் வேணாம், கா. மாமா எங்க?"

"இப்ப தான் க்ளயன்ட்டை பார்த்துட்டு வரேன்னு கிளம்பி போனாரு"

"என்னோட மெடிக்கல் கண்டிஷனைப் பத்தி தெரிஞ்சுக்க தான் நான் இப்போ வந்தேன்"

"உனக்கு ஒன்னும் இல்ல. நீ நல்லா இருக்க"

"டாக்டர் என்னை எந்த இன்ஸ்ட்ரக்ஷன்சையும் ஃபாலோ பண்ண சொல்லி சொல்லலையா?"

"உன்னை நல்லா பாத்துக்க சொல்லி எங்ககிட்ட தான் சொன்னாரு. நீ உன்னை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத"

"எனக்கு பிளட் லாஸ் அதிகமா இருந்திருக்கும் தானே?"

"ஆமாம்"

"எனக்கு பிளட் லாஸ் ஏற்பட்டுச்சு. நான் கோமாவில் இருந்தேன். ஆனாலும் நான் எப்படி இவ்ளோ ஹெல்த்தியா இருக்கேன்? எனக்கு கொஞ்சம் கூட டயர்டாவே இல்லயே? எப்படிக்கா என்னால இவ்வளவு ஃபிட்டா இருக்க முடியுது?"

நித்திலா வாயடைத்து போனாள். அவளுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை.

"மெடிக்கல் ஃபீல்டு அவ்வளவு இம்ப்ரூவ் ஆயிடுச்சா?" என்றான்.

அவள் அதை பிடித்துக் கொண்டு,

"ஆமா, இன்னு நிறைய இம்ப்ரூவ் ஆயிடுச்சு" என்று அசட்டுத்தனமாய் சிரித்தாள்.

"என்னோட ஆக்சிடென்ட்க்கு பிறகு, என்னை நீங்க எங்க பார்த்தீங்க? யார் என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது?"

"உன்னை குரு தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணான். உன் ஆளுங்களோட அவன் அங்க வந்ததை பாத்து, உன்னை அடிச்சவங்க உன்னை அங்கேயே விட்டுட்டு போயிட்டாங்க. உன்னை ஐசியுல பார்த்த போது நாங்க எல்லாரும் நொறுங்கி போயிட்டோம்"

"அதை விடுங்க, கா, நான் இங்க ஏன் வந்தேன்னா, நான் ஆஃபீசுக்கு போகலாம்னு இருக்கேன்"

"என்னது? ஆஃபீஸுக்கா? நீ இப்ப தான் ரெக்கவர் ஆகியிருக்க..."

"அதான் ரெக்கவர் ஆயிட்டேனே"

"அதெல்லாம் முடியாது. நான் உன்னை அவ்வளவு சீக்கிரம் ஆஃபீஸ் போக விட மாட்டேன். ஒரு வாரமாவது நீ வீட்ல தான் இருக்கணும்"

"என்ன்னனது? ஒரு வாரமா? அக்கா ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணாதீங்க"

"நான் ஒரு பூஜைக்கு அரேஞ்ச் பண்ணி இருக்கேன். அது முடியிற வரைக்குமாவது வீட்ல இரு, இன்னு. ப்ளீஸ் ப்ளீஸ்..."

"எப்போ பூஜை அரேஞ்ச் பண்ணி இருக்கீங்க?"

"இன்னும் ரெண்டு நாள்ல"

"சரி, ரெண்டு நாளுக்கு அப்புறம் நான் ஆஃபீஸ் போயிடுவேன்"

சரி என்று தலையசைத்தாள் நித்திலா.

அவள் அறையை விட்டு வெளியேறினான் இனியவன். அவளிடம் தன் தோளில் இருந்த தழும்பை பற்றி கேட்க வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனாலும், அவளை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்க அவன் விரும்பவில்லை. அவனது மனம் பெரும் சுழலில் சிக்கித் தவித்தது. எதுவுமே அவனுக்கு சரியாய் தோன்றவில்லை.

அப்பொழுது, வரவேற்பறையில் ஆழ்வியுடன் பார்கவி அமர்ந்திருப்பதை கண்டான். அவன் அவர்களை பார்க்க வேண்டும் என்று தானே பார்கவி அங்கே அமர்ந்திருந்தாள்...! அப்பொழுது தானே அவளது திட்டத்தை அவள் செயல்படுத்த முடியும்...! அவன் அவர்களை நெருங்கி வந்ததை பார்த்த அவள், ஆழ்வியை நோக்கி திரும்பி,

"ஆழ்வி, இன்னைக்கு ஒரு நாள் என்னோட ரூம்ல வந்து ஸ்டே பண்ணினேன்..." என்றாள் கெஞ்சலாய்.

"ஏன் பார்கவி?" என்றாள் ஆழ்வி வியப்போடு. 

"நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குற சான்ஸ் நமக்கு இதுவரைக்கும் கிடைக்கவே இல்ல. அதனால தான் இன்னைக்கு என் ரூம்ல வந்து என்னோட தங்குன்னு சொல்றேன்" என்றாள் வேண்டுமென்றே அவன் காதில் விழும்படி.

"எனக்கும் உன் கூட தங்கணும்னு ஆசை தான். ஆனா, என்ன பண்ண முடியும்? சூழ்நிலை அமையலயே"

"ஆனா இப்போ தான் நீ ஃப்ரீ ஆயிட்டியே... கெஸ்ட் ரூம்ல இருக்கிறதுக்கு பதில் என் கூட வந்து என் ரூம்ல இரேன்... ஜாலியா இருக்கும். ப்ளீஸ் ப்ளீஸ்..."

"சரி கெஞ்சாத. இன்னைக்கு உன்னோட ரூம்ல தங்குறேன்"

"தேங்க்யூ, ஸ்வீட் ஹார்ட்" என்று அவளை அணைத்துக் கொண்டாள் பார்கவி.

அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு நின்ற இனியவன், மேலும் குழப்பத்திற்கு ஆளானான். பார்கவி பிரைவசியை விரும்புபவள் என்று சித்திரவேல் கூறினானே...! அதனால் தானே அவர்கள் ஆழ்வியை அவனது அறையில் தங்க வைத்ததாய் கூறினான்...! ஆனால் பார்கவி கூறிய எதுவுமே சித்திரவேலின் காரணங்களுக்கு ஒத்துப் போகவில்லையே. ஆழ்வி தன் அறையில் தங்குவதற்கு, இதற்கு முன் எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவே இல்லை என்கிறாள் பார்கவி. ஆழ்வி அங்கு வந்து ஒரு மாதம் ஆகிறது என்றார் பாட்டி. அப்படி இருக்க, அவள் அறையில் தாங்கும் சந்தர்ப்பம் ஆழ்விக்கு ஏன் கிடைக்காமல் போனது? அவனது அறையில் அவளை தங்க வைத்ததற்கு பதிலாக, அவளை தன் அறைக்கு பார்கவி அழைத்துச் சென்றிருக்கலாமே...! அவனுக்கு தலையை சுற்றியது. ஏதோ தவறாக உணர்ந்தான் அவன். மிக தவறாக...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co