Truyen3h.Co

Slug

44 கைபேசி

சித்திரவேல் தன்னிடம் பேசியதைப் பற்றி யோசித்துக் கொண்டு படுத்திருந்தான் இனியவன். எதற்காக அவன் தனக்கு பெண் தேடுவதை பற்றி குறிப்பாய் பேசினான்? அவனது மனைவியான ஆழ்வியின் இடத்தை வேறொருவருக்கு கொடுக்க அவன் ஏன் நினைக்கிறான்? தன்னைப் போலவே சித்திரவேலுக்கும் ஆழ்வியின் மீது மன வருத்தம் இருக்கிறதா? அதனால் தான் அவன் ஆழ்விக்கு எதிராக இருக்கிறானோ? இனியவனின் மனம் நிம்மதி இழந்தது. உண்மையான காரணம் என்னவென்பதை அவன் எவ்வளவு சீக்கிரம் தெரிந்து கொள்ள முடியுமோ தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி இருப்பது சித்திரவதை. அவனுக்கு பிடித்த அந்த பெண், இப்பொழுது அவன் கண் முன்னால் இருக்கிறாள். அவள் அவனுக்கு வெறும் க்ரஷ் மட்டும் அல்ல, மனைவியும் கூட. அவள் அவனை மணந்து கொண்டதற்கான உண்மை எண்ணம் என்ன என்பது அவனுக்கு தெரியவில்லை. முதலில் அவளது கைபேசியை பார்க்க வேண்டும். அவனது சந்தேகம் தெளிவாகிறதோ இல்லையோ, ஆனால் நிச்சயம் அவனுக்கு அவளது கைபேசியின் மூலமாக ஏதோ ஒன்று கிடைக்கப் போகிறது என்று அவன் உள் மனம் அழுத்தமாய் நம்பியது.

பலாத்காரம் என்பது சாதாரணமான விஷயம் இல்லை தானே? ஆனால் அதை ஆழ்விக்கு செய்ததற்காக அவன் மனதார வருந்துவதாய் தெரியவில்லையே, ஏன்? தான் சுயநினைவோடு இல்லாவிட்டாலும் பார்கவியிடம் அப்படி நடந்து கொண்டதற்காக அவன் எவ்வளவு வருத்தப்பட்டான்...! அப்படி இருக்கும் பொழுது, ஆழ்விடம் அவனுக்கு ஏன் மன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது? ஏனென்றால், இந்த விஷயத்தில் ஆழ்வி பொய் கூறியதாய் அவன் நினைக்கிறான். அவனைப் பொறுத்தவரை, ஒரு பைத்தியக்காரன், ஒரு பெண்ணை நிச்சயம் பலாத்காரம் செய்ய முடியாது. ஏனென்றால் உடலுறவை மேற்கொள்ள அது பற்றி  தெளிவான புரிதல் வேண்டும். அது பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். அதைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் யாராலும் உடலுறவில் ஈடுபட முடியாது. சாதாரண மனநிலையில் உள்ளவர்களுக்கே அது கடினமாய் இருக்கும் பொழுது, ஒரு பைத்தியக்காரன் அதில் எப்படி ஈடுபட்டிருக்க முடியும்? அவன் அவளை பலாத்காரம் செய்ததாய் அவள் ஏன் மற்றவரிடம் கூறினாள்?

அவள் பொய் கூறினாள் என்று எண்ணினான் இனியவன். இருந்தாலும் ஏனோ அவள் மீது அவனுக்கு வெறுப்பு ஏற்படவில்லை. ஏனென்றால், அவளை பற்றி நிறைய நல்ல விஷயங்களை அவன் கேட்டிருந்தான். அவள் பொய் கூறினாள் என்பதற்காக  அவள் மீது அவனுக்கு வருத்தம் இருந்தது. ஆனால் அதே நேரம், அவள் தனக்கு மனைவி என்பதால் அவன் மகிழ்ச்சியும் அடைந்தான்.

இப்பொழுது சித்திரவேலும் தன் பங்குக்கு அவனை குழப்பிவிட்டான். இப்பொழுது இனியவனுக்கு இரண்டு விஷயத்தில் தெளிவு வேண்டும். ஆழ்வி அவனுடைய மனைவியா இல்லையா? அவள் எதற்காக பொய் கூறினாள்?

மறுநாள்

கட்டிலை விட்டு கீழே இறங்காமல் ஆழ்வியின் கைபேசியை எப்படி பெறுவது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் இனியவன். தனக்கு நம்பகமான ஒருவரிடமிருந்து தன் திருமணம் பற்றிய உத்திரவாதத்தை பெற நினைத்தான் இனியவன். ஏனென்றால், சித்திரவேலின் நடவடிக்கையும் அவனது வார்த்தைகளும் அவனுக்கு சந்தேகத்தை தந்தது. சித்திரவேல் அவன் அக்காவின் கணவன் ஆயிற்றே! சித்திரவேலின் கண்களில் தங்களுக்கான வெறுப்பை இனியவன் எப்பொழுதும் பார்த்ததில்லை. அவர்களின் நலனை பற்றி மட்டும் தான் அவன் சிந்தித்து இருக்கிறான். அல்லது, தன் கவனத்திற்கு வராத ஏதோ ஒன்று சித்திரவேலை தன்னை வெறுக்க செய்திருக்கிறதா? இனியவன் தன் மூளையை கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தான். ஆனாலும் அவனுக்கு ஒன்றும் கிட்டவில்லை. ஆழ்வின் கைபேசி கிடைத்துவிட்டால் அனைத்தும் தெளிவாகிவிடும்.

ஆனால் எப்படி அவளது கைபேசியை பெறுவது? வேறொருத்தியின் கைபேசியை ஆராய்ந்து பார்ப்பது நாகரீகமற்ற செயல் அல்லவா? ஆனால், அவள் வேறொருத்தியாக இருந்தால், அவனது கைரேகை பட்டு எப்படி அவளது கைபேசி திறந்து கொண்டது? இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான் இனியவன். மீண்டும் அவனது கைரேகையின் மூலம் அவளது கைப்பேசி திறந்து கொண்டால் அவளது கைபேசியை சோதனை இடுவது. இல்லாவிட்டால், வேறு வழியை தேடுவது!

குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தான் இனியவன், அவனுக்கு வேண்டிய அந்த ஒரு குறிப்பிட்ட நபரை தேடியபடி. அந்த நபரை காணாததால் படிக்கட்டில் நின்றவாறு முத்துவை அழைத்தான்.

"முத்து..."

முத்துவிற்கு பதிலாக சமையலறையில் இருந்து ஆழ்வி எட்டிப் பார்த்தாள்.  

"எனக்கு டீ கிடைக்குமா?" என்றான் இனியவன்.

சரி என்று தலையசைத்துவிட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றாள் ஆழ்வி. தன் அறைக்கு வந்த இனியவன், அவளுக்காக காத்திருந்தான். ஆனால் அவனுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தேநீர் கொண்டு வந்தது முத்து. அவனைப் பார்த்தவுடன் இனியவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது என்று கூறத் தேவையில்லை. அவனிடம் முத்து தேநீரை கொடுத்தான்.

அதை பெற்று பருகிய இனியவன், அந்த தேநீரை தயார் செய்தது ஆழ்வி என்பதை அறிந்து கொண்டான். அதை தயாரித்தது அவள் என்றால், எதற்காக அதை முத்துவிடம் கொடுத்து அனுப்பினாள்? முதல் நாள் அவன் அவளிடம் கேள்விகளைக் கேட்டு திணறடித்ததால் இங்கு வர அவள் பயப்படுகிறாளோ? என்று எண்ணினான்.

"ஆழ்வி எங்க?" என்று இனியவன் கேட்க, முத்து வியப்படைந்தான்.

"அவங்க பிரேக்ஃபாஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காங்க, அண்ணா"

"எதுக்காக வீட்டு வேலை எல்லாம் நீங்க அவளை செய்ய விடுறீங்க? நம்ம வீட்ல வேலைக்காரங்களுக்கு பஞ்சமா? எதுக்காக நம்ம வீட்டுக்கு வந்து விருந்தாளியை வேலைக்காரி மாதிரி நடத்துறீங்க? நம்ம வீட்டு பொம்பளைங்களே வேலை செய்யாம சும்மா இருக்கும் போது, எதுக்காக அவ சமையல் எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கா?"

"அவங்க நம்ம வீட்டு பொம்பளைங்க மாதிரி இல்ல போல இருக்கு, அண்ணா. அவங்க பொறந்த வீட்ல இப்படித்தான் இருக்கணும்னு  சொல்லிக் கொடுத்திருப்பாங்க போல இருக்கு..."

"பொறந்த வீடா?" என்று கண்களைத் சுருக்கினான் இனியவன்.

"அவங்க வீடுன்னு சொன்னேன்னா"

"இப்பல்லாம் நீ ரொம்ப மாத்தி மாத்தி பேசுறேன்னு உனக்கு தோணலையா?" என்றான் இனியவன்.

முத்து அமைதியாய் நின்றான். அவன் ஆழ்வியை அண்ணி என்று அழைத்ததை பற்றித்தான் இனியவன் பேசுகிறான் என்று புரிந்தது முத்துவிற்கு.

"இந்த டீயை போட்டது அவ தான்னு எனக்கு தெரியும்"

ஆம் என்று தலையசைத்தான் முத்து.

"அப்புறம் இதை நீ ஏன் எடுத்துக்கிட்டு வந்த? அதை அவகிட்ட கொடுத்து அனுப்ப வேண்டியது தானே? நீ எதுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்யணும்?"

"இதுக்கு அப்புறம் அவங்களை வேலை செய்ய விடமாட்டேன், அண்ணா"

தேனீரை பருகி விட்டு குவளையை அவனிடம் கொடுத்தான் இனியவன். கதவருகே வந்து நின்ற முத்து, இனியவனை பார்த்து,

"நான் அவங்களை அனுப்பணுமா?" என்றான் சீரியஸாக.

"கெட் அவுட்" என்றான் சலிப்போடு.

உள்ளூர நகைத்தவாறு அங்கிருந்து சென்றான் முத்து.

தரைதளம் வந்த இனியவன், அங்கு ஒரு புடவை வியாபாரி புடவை மூட்டைகளுடன் அமர்ந்திருப்பதை கண்டான். அவனது குடும்ப பெண்கள் தங்களுக்கு வேண்டிய புடவைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆழ்வி அங்கு இல்லை. அவள் எங்கே என்று யோசித்தபடி அவன் நின்றிருந்த போது, அவள் புடவை வியாபாரிக்கு தேனீர் கொண்டு வருவதை பார்த்து அவனது எரிச்சல் உச்சத்திற்கு சென்றது.
  
"இன்னு, இங்க வா..."

"இங்க என்ன நடக்குது?"

"நாளைக்கு பூஜைக்காக புடவை எடுத்துக்கிட்டு இருக்கோம்" என்றாள் பார்கவி.

"நீ புடவை கட்ட போறியா? உனக்கு புடவை எல்லாம் கட்ட தெரியுமா? புடவை கட்டுறவங்க தானே புடவை வாங்கணும்?" என்றான் ஆழ்வியை பார்த்தவாறு.

"நாளைக்கு கட்டலாம்னு நினைக்கிறேன்" என்றாள் பார்கவி.

"ஜாக்கிரதையா இரு. வேணுமுன்னா என்னோட பெல்ட்டை கூட கொடுக்கிறேன்"

அனைவரும் சிரிக்க, ஆழ்வி தன் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"அண்ணா, சும்மா என்னை கிண்டல் பண்ணாத" என்றாள் பார்கவி.

"உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? எப்பவும் போலவே ஜீன்சை மாட்டிக்கிட்டு முடிச்சிட வேண்டியது தானே?"

"எப்படி இருந்தாலும் அவ ஒரு நாளைக்கு புடவை கட்டி தானே ஆகணும்?" என்றார் பாட்டி

"ஆமாம், ஒருநாள் கட்டி தான் ஆகணும். ஆனா அதை நாளைக்கு ஏன் செய்யணும்?"

"அண்ணா, சும்மா தொனதொன்னு பேசாத. புடவையை செலக்ட் பண்ண விடு..."

"உங்களுக்கு நான் எடுத்துக் கொடுக்கிறேன்..." என்று புடவை வியாபாரியை பார்த்த இனியவன்,

"உங்களுக்கு பணம் நான் தரேன்" என்றான்.

"ஏன் இன்னு?"

"சும்மா தான் கா. நானும் உங்களுக்கு புடவை வாங்கி கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு இல்ல"

"அப்படின்னா எங்களுக்கு நீயே செலக்ட் பண்ணி கொடு"

"ஓகே"

அங்கிருந்த புடவைகளில் தன் கண்களை ஓட விட்டான் இனியவன். அனைவரும் அவனையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எழுந்து நின்ற இனியவன், மூன்று புடவைகளை எடுத்தான். அனைத்துமே சிகப்பு நிறத்தில் வெவ்வேறு ஷேடில் இருந்தது. பாட்டிக்கும் நித்திலாவுக்கும் பார்கவிக்கும் ஒன்றொன்றாய் கொடுத்தான்.

"இன்னு, ஆழ்விக்கும் ஒன்னு எடுத்துக் கொடு" என்றாள் நித்திலா.

அதை எதிர்பார்த்த இனியவன், தக்காளி சிவப்பு நிற புடவையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

"நான் கொடுத்த புடவை உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்"

"அண்ணா, எனக்கு இந்த கலர் நல்லாவே இருக்காது" என்றாள் பார்கவி. 

"கலர் பிடிக்கலைன்னா மாத்திக்கோங்க" என்றான்.

அவன் கொடுத்த புடவையை வைத்துவிட்டு வேறு ஒரு புடவையை எடுத்துக் கொண்டாள் பார்கவி. இனியவன் ஆழ்வியை பார்த்தான். அவள் அதை மாற்றும் எண்ணத்தில் இல்லாதது அவனுக்கு புரிந்தது.

"நீ மாத்திக்கலயா, ஆழ்வி?" என்றான்.

"இது எனக்கு பிடிச்சிருக்கு" என்றாள் ஆழ்வி.

"ஆனா ஆழ்வி, உன்னோட ஃபேவரைட் கலர் பிங்க் தானே? அப்புறம் எதுக்கு ரெட்டை எடுத்துக்கிற?" என்று வேண்டுமென்றே கேட்டாள் பார்கவி

"அப்படியா? உன்னோட ஃபேவரைட் கலர் பிங்க்கா? அந்த கலர் கூட இருக்கு பாரு. நீ அதை எடுத்துக்கோ" என்றான் அந்த இளஞ்சிவப்பு நிற புடவையை கையில் எடுத்த இனியவன்.

வேண்டாம் என்று அவசரமாய் தலையசைத்தாள் ஆழ்வி.

"ஏன்?"

"எனக்கு இது பிடிச்சிருக்கு" என்றாள் அந்த புடவையை அணைத்தவாறு.

"நெஜமாதான் சொல்றியா?"

"ஆமாம்"

அது தனக்கு பிடித்த நிறமோ இல்லையோ, இனியவன் தனக்காக  கொடுத்ததை மாற்றிக் கொள்ள அவள் விரும்பவில்லை. பார்கவி அவளை பார்த்து பொருளோடு புன்னகைக்க, 'சும்மா இரு' என்பது போல் அவளுக்கு ஜாடை காட்டினாள் ஆழ்வி. அவர்கள் இருவருக்கும் தெரியாது இனியவன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான் என்று.

ஆழ்வி நல்ல பெண்ணாக தெரிகிறாள். யார் மனதையும் நோகடிக்க வேண்டாம் என்று நினைக்கிறாள். அப்படி இருக்கும் பொழுது, நடக்கவே முடியாத ஒரு விஷயத்தை நடந்ததாக ஏன் அவள் பொய் கூறினாள்? 

புடவை வியாபாரிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தான் இனியவன்.

அப்பொழுது கையில் ஒரு பையுடன் சித்திரவேல் வருவதை அவர்கள் பார்த்தார்கள். அவன் அந்தப் பையை நித்திலாவிடம் கொடுத்தான்.

"இது என்ன, சித்ரா?" என்றாள்.

"நாளைக்கு பூஜக்காக உனக்கு ஒரு புடவை வாங்கிவிட்டு வந்தேன்" என்றான் சித்திரவேல்

"சாரி சித்ரா. இப்ப தான் எனக்கு இன்னு ஒரு புடவை வாங்கிக் கொடுத்தான்" என்று தன்னிடமிருந்த புடவையை அவனிடம் காட்டினாள். சித்திரவேல் செயற்கையாய் ஒரு புன்னகையை உதிர்த்தான்.

"அக்கா நான் என் ரூமுக்கு போறேன் எனக்கு குடிக்க ஏதாவது கொடுத்து விடுங்க" என்று கூறிவிட்டு சென்றான் இனியவன்.

நித்திலா ஆழ்வியை பார்க்க, அவள் சரி என்று தலையசைத்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு, இனியவன் எதிர்பார்த்தபடியே, ஆரஞ்சு பழச்சாறுடன் அவன் அறைக்கு சென்று கதவை தட்டினாள் ஆழ்வி. உள்ளே வா என்பது போல் தலையசைத்து விட்டு தன் கைபேசியை எடுத்தான் இனியவன். ஆனால் அது சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. ஆம், அதை ஆஃப் செய்தது அவனே தான்.

"ச்சே... நான் இதை சார்ஜ் போட மறந்துட்டேன்" என்றான் வெறுப்போடு.

பழச்சாறு டம்ளருடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள் ஆழ்வி.

"அவசரமா குருவுக்கு ஃபோன் பண்ணணும். இப்ப நான் என்ன செய்யறது?" என்று முணுமுணுத்தான்.

"என்னோட ஃபோன்ல இருந்து பண்ணிக்கோங்களேன்" என்று தன் கைபேசியை அவனிடம் நீட்டினாள் ஆழ்வி.

அவள் கைபேசியையும், பிறகு அவளையும் பார்த்தான் இனியவன். அவன் அதை எதிர்பார்த்தான் என்ற போதிலும் அவன் முகத்தில் ஆர்வத்தை காட்டிக் கொள்ளவில்லை.

"பரவாயில்ல. நான் குருவுக்கு ஃபோன் பண்ணணும். எனக்கு அவன் நம்பர் தெரியாது" என்று அப்பத்தம்மாய் பொய் கூறினான் இனியவன். அவனுக்கா குருவின் எண் தெரியாது? தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் அவனது எண்ணை ஒப்பித்து விடுவானே...!

"என்கிட்ட அவர் நம்பர் இருக்கு" என்றாள் ஆழ்வி.

"உன்கிட்ட இருக்கா? நெஜமாவா? அவன் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சது?"

"அது... வந்து... ஆங்...அக்கா ஒரு தடவை என் ஃபோன்ல இருந்து அவருக்கு பேசினாங்க" என்று சமாளித்தாள் ஆழ்வி.

"அப்படியா? சரி குடு"

தனது கைபேசியை அன்லாக் செய்துவிட்டு அதை அவனிடம் கொடுத்தாள் ஆழ்வி. அதை அவளிடம் இருந்து பெற்று ரீசன்ட் கால்ஸ் பகுதியை திறந்தான். அவனது கரங்கள் அப்படியே நின்றது, அதில் இருந்த சுவாமிஜி என்ற பெயரை பார்த்தபோது. அந்த ஒரு அழைப்பை தவிர  வேறு எந்த அழைப்பும் முதல் நாள் அவளுக்கு வந்திருக்கவில்லை. அந்த அழைப்பு வந்த நேரத்தை கவனித்தான் இனியவன். முதல் நாள் அவள் அவனது அறையில் இருந்த போது தான் அந்த அழைப்பு வந்திருந்தது. இந்த அழைப்பு தான் அவளை பதற்றம் அடைய செய்ததா? யார் இந்த சுவாமிஜி? சர்க்கரைப்பாகில் ஊற வைத்த வார்த்தைகளை பேசும் போலிச் சாமியாரிடம் அவள் மாட்டிக் கொண்டிருக்கிறாளோ என்று எண்ணினான் அவன்.

அதைப்பற்றி யோசித்தபடி குருவின் பெயரை அதில் அவன் தட்டச்சு செய்ய, அவனது எண், குரு அண்ணா என்ற பெயருடன் தோன்றியது. மெல்லிய புன்னகையோடு அந்த கைபேசியை தன் காதில் வைத்து காத்திருந்தான் இனியவன். இரண்டாவது மணியில் அந்த அழைப்பை ஏற்ற குரு, இனியவன் பேசத் துவங்கும் முன்,

"ஆழ்வி, நீங்க உங்க புருஷன் கூட ஆஃபீசுக்கு வர போறதா கேள்விப்பட்டேன். என்ன ஒரு எபிக் மொமெண்ட்...! பாருங்க இனியாவே உங்களை ஆஃபீசுக்கு கூட்டிகிட்டு வரப் போறான். நம்ம ரொம்ப நாளா அவனை இருட்டுல வச்சிருக்க கூடாது. தயவுசெய்து அவன்கிட்ட உண்மையை சொல்லிடுங்க ஆழ்வி. அவன் கோவத்தை பத்தி உங்களுக்கு தெரியாது. அவனுக்கு உண்மை தெரிஞ்சா அவன் ரொம்ப கோபப்படுவான். நீங்க தான் அவனோட ஒய்ஃப் அப்படிங்கற உண்மையை அவனுக்கு சொல்லிடுங்க" என்று உளறி கொட்டினான் குரு.

ஆழ்வியை பொருள் பொதிந்த பார்வை பார்த்தான் இனியவன். அவளது கைபேசியை சோதித்துப் பார்த்து தனக்கு வேண்டிய உத்தரவாதத்தை பெற நினைத்தான் இனியவன். அவன் அதை செய்வதற்கு முன்பாகவே, இந்த உலகத்திலேயே அவன் கண்களை மூடிக்கொண்டு நம்பக்கூடிய நம்பகத்தன்மை வாய்ந்த ஒருவனிடமிருந்து அந்த உத்திரவாதம் அவனுக்கு கிடைத்து விட்டது... குருபரன்...! உள்ளூர புன்னகைத்துக் கொண்டான் இனியவன்.

தொடரும்...






Bạn đang đọc truyện trên: Truyen3h.Co