Truyen3h.Co

Slug

58 என்னவாகியிருக்கும்?

இனியவனின் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை ஆழ்வியால். அவன் செய்வதெல்லாம் அவன் பேசுவதற்கு நேர்மாறாக   இருக்கிறது. அவன் எதற்காக அவளை வீட்டை விட்டு அனுப்புவதை பற்றி பேசினான் என்று அவளுக்கு புரியவில்லை. தமிழரசி அவனைப் பற்றி கூறியதெல்லாம் உண்மை தான். அவன் திறமைகளின் இருப்பிடம். அதனால் தான் வழக்கறிஞர்கள் கூட அவனுக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நாளை அவளை அவன் எங்கு அழைத்துச் செல்லப் போகிறானோ. எவ்வளவு யோசித்தபோதும் அவளுக்கு ஒன்றும் பிடிப்படவில்லை. எவ்வளவு நாளைக்கு தான் இப்படிபட்ட நிச்சயமற்ற வாழ்க்கையை அவள் வாழப் போகிறாளோ தெரியவில்லை.

இரவு

வழக்கத்திற்கு மாறாக உணவு மேஜை மிகுந்த அமைதியோடு காணப்பட்டது. அந்த அமைதியை உடைத்தது இனியவன் தான்.

"அக்கா, நம்ம கவிக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன்" என்றான்.

பார்கவிக்கு விக்கல் வந்தது. அவளை நோக்கி ஒரு தண்ணீர் டம்ளரை நீட்டினான் இனியவன். அவனிடமிருந்து அதைப் பெற்று மடக்கு மடக்கு என்று குடித்தாள் பார்கவி.

"மாப்பிள்ளையா? முடியாது?" என்றாள் அவசரமாய்.

"ஏன்?"

"நான் இப்ப தானே என்னோட கிராஜுவேஷனை முடிச்சிருக்கேன்? அவ்வளவு என்ன அவசரம்?" என்றாள்.

"அவசரமா? உன் ஃபிரண்டை பாரு. அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. உனக்கும் அவ வயசு தானே?"

"அவ கதை வேற"

"வேறன்னா என்ன அர்த்தம்?" அவளும் தானே அவள் வாழ்க்கையை ஜாலியா என்ஜாய் பண்ணணும்னு நினைச்சிருப்பா? அவ மட்டும் என்ன துறவியா?"

அனைவரும் ஒரு கணம் திகைத்தார்கள். ஆழ்வியை பார்த்த இனியவன்,

"உன்னோட எதிர்காலத்தைப் பத்தி உனக்கு எந்த கனவும் இல்லயா, ஆழ்வி?" என்றான்.

அதற்கு என்ன பதில் கூறுவதென்று அவளுக்கு புரியவில்லை.

"நீ நல்லா படிக்கிற... வேலைக்கு போகணும்னு நினைக்கிற... அப்புறம் எதுக்காக அவ்வளவு அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்ட? பார்கவி மாதிரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணணும்னு உனக்கு ஆசை இல்லயா?"

தன் கண்களை மற்றவர்களின் மீது ஓட விட்டாள் ஆழ்வி.

"சரி விடு. சில நேரம் நமக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு நமக்கு புரியறதில்ல"

"ஏன் இன்னு அப்படி சொல்ற? உனக்கு அப்படி ஏதாவது நடந்திருக்கா?" என்றார் பாட்டி ஆர்வத்தோடு.

"ஆமாம் பாட்டி, நீங்க என்னோட குடும்பம். உங்ககிட்ட அதை பத்தி சொல்றதுல ஒன்னும் தப்பில்ல"

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"நான் சொன்னா நீங்க நம்புவீங்களோ மாட்டிங்களோ...( மென்மையாய் சிரித்தான் ) எனக்கு ஒரு பொண்ணு மேல க்ரஷ் இருந்தது" என்றான்.

அவனை அதிர்ச்சியோடு ஏறிட்டாள் ஆழ்வி.

அனைவரது பார்வையும் அவள் மீது தான் இருந்தது. அவள் தலை குனிந்து கொண்டாள். இனியவனுக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்ததா? அப்படி என்றால், அவன் இந்த திருமணத்தை சூழ்நிலை காரணமாகத்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்று எண்ணினாள் ஆழ்வி.

"எனக்கு ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடி நான் அவளை மீட் பண்ணேன். பாத்த உடனே எனக்கு அவளை பிடிச்சிடுச்சி. அவ மத்த பொண்ணுங்களை மாதிரி இல்ல. பார்க்க ரொம்ப சாஃப்டா... ஆனா ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தா"

ஆழ்வி வேதனையோடு கண்களை மூடினாள். அனைவரும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள், இனியவன் உட்பட...!

"நான் அவளை எங்க, எப்படி பார்த்தேன் தெரியுமா? ஒரு நாள் ஆஃபீஸ்க்கு போயிக்கிட்டு இருந்தேன். அப்போ அந்த வழியா போன ஒரு பழ வியாபாரி தன்னோட பேலன்ஸை மிஸ் பண்ணி வண்டியை கீழே போட்டுட்டாரு. அவர் வண்டியில இருந்த பழமெல்லாம் ரோடு ஃபுல்லா உருண்டு ஓடுச்சு..." மெல்ல மெல்ல மாறிக் கொண்டு வந்த ஆழ்வியின் முகத்தை பார்த்தபடி அன்று நடந்தவற்றை விவரித்தான்.

"அவருக்கு யாருமே ஹெல்ப் பண்ணல. நான் அவருக்கு ஹெல்ப் பண்ணலாமுன்னு நெனச்சேன். ஆனா நான் அதை செய்றதுக்கு முன்னாடி, ஒரு பொண்ணு நடுரோட்ல வந்து கைகாட்டி எல்லா வண்டியையும் தைரியமா நிறுத்தினா"

ஆழ்வி நம்ப முடியாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அவ வெளி பார்வைக்கு ரோஜா பூ மாதிரி இருந்தா. ஆனா ரொம்ப தைரியசாலி. இல்லன்னா, யாரும் செய்ய நினைக்காததை அவ செய்வாளா?"

"அப்புறம்?" என்றான் சித்திரவேல்.

"அந்த பழ வியாபாரி எல்லா பழத்தையும் எடுக்க ஆரம்பிச்சாரு. அவளும் அவருக்கு ஹெல்ப் பண்ணா. அதுக்கப்புறம் அவ ரோடு கிராஸ் பண்ணி அங்கிருந்து வேகமா போயிட்டா"

"யார் அந்த பொண்ணு?"

"எனக்கு எப்படி தெரியும்? எனக்கும் அவளைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னு ஆசையா தான் இருந்தது. நான் ஆஃபீஸ் போற அவசரத்துல இருந்ததால, என்னால அதை செய்ய முடியல. சரியா மூணாவது நாள் எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. ஆனா அந்த மூணு நாளும் நான் எப்பெல்லாம் அந்த இடத்தை கடந்தேனோ, அந்த பொண்ண தேடிக்கிட்டே தான் கடந்தேன்"

ஆழ்வி வியப்பின் உச்சிக்கே சென்றாள். அவனுக்கு விபத்து ஏற்படுவதற்கு முன்பே அவன் அவளை பார்த்திருக்கிறானா?

அவள் முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை, அவள் குடும்பத்தார் வேறு விதமாய் எண்ணினார்கள். இனியவனின் காதல் கதையை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்ததாய் நினைத்தார்கள்.

"நீங்க மறுபடியும் அந்த பொண்ண பாக்கலயா?" என்றான் சித்திரவேல்.

"அப்போ அவளை பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கல. ஆனா, ரீசண்டா நான் அவளை மீட் பண்ணேன்"

அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது.

"மறுபடியும் அவளை பாத்தியா?" என்றாள் நித்திலா திக்கி திணறி.

"ஆமாம் கா, அவ அப்படியே தான் இருக்கா. அதே மென்மை... ஆனா அதே தைரியம்..."

"நீ அவகிட்ட பேசினியா?"

"அஃப்கோர்ஸ், நான் எப்படி பேசாம இருப்பேன்? என் வாழ்க்கையிலயே நான் விரும்பின ஒரே பொண்ணு அவளாச்சே...!"

தன் கண்ணீரை விழுங்கினாள் நித்திலா. அவள் என்ன காரியம் செய்துவிட்டாள்... இனியவன் வேறொரு பெண்ணை நேசிக்கிறான். இப்பொழுது அவள் என்ன செய்யப் போகிறாள்? உனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவள் அவனிடம் எப்படி கூறுவாள்? அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது. ஜோசியர் கூறிய வார்த்தைகள் உண்மையாகிவிடும் போல் தெரிகிறது. அவன் வேறு பெண்ணை விரும்பினால், எப்படி ஆழ்வியை தன் மனைவியாய் ஏற்பான்? அவளுக்கு தெரியாதா? இனியவனை பற்றி? அவன் யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுப்பவன் இல்லையே...!

இனியவன் ஒவ்வொருவரது முகத்தையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அதில் ஆழ்வி ஒருத்தி தான் நிம்மதியாய் காணப்பட்டாள். மற்ற அனைவரும் திகிலோடு அமர்ந்திருந்தார்கள். தடுமாற்றத்துடன் காணப்பட்ட நித்திலாவை அமைதியாய் பார்த்தான் சித்திரவேல். பாட்டியும் பார்கவியும் இயலாமையுடன் காணப்பட்டார்கள்.

இனியவனுக்கு தெரியும், அவளது நிலையற்ற வாழ்க்கை ஆழ்விக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் என்று. சூழ்நிலை காரணமாகத்தான் அவன் தன்னை மனைவியாய் ஏற்றுக் கொண்டான் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களது திருமணம் சட்டப்படி செல்லாத ஒன்று. அது நிச்சயம் அவளுக்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும். அவனுக்கு விபத்து ஏற்படுவதற்கு முன்பே அவளை அவனுக்கு தெரியும் என்று அவள் தெரிந்து கொண்டால், அவள் நிம்மதி அடைவாள் என்று எண்ணித் தான் அதைப் பற்றி அவர்களிடம் கூறினான்.

அதே நேரம், திருமணம் என்ற பெயரில் நித்திலா செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதையும் அவளுக்கு உணர்த்த நினைத்தான். அவனுக்கு ஆழ்வியை பிடித்திருந்தாலும், அவளை கட்டாயப்படுத்தி தனக்கு திருமணம் செய்து வைத்ததில் அவனுக்கு உடன்பாடு இல்லை... திருத்தம், அவனுக்காக அவளை விலை கொடுத்து வாங்கியதில் உடன்பாடு இல்லை...! அவளுடைய அந்த முடிவு எவ்வளவு தவறானது என்பதை அவளுக்கு உணர்த்த நினைத்தான். இப்பொழுது அது தான் நடந்தது.

தன் சந்தோஷத்தை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க படாத பாடுப்பட்டாள் ஆழ்வி. சாப்பிட்டு முடித்து தன் அறைக்குச் சென்றான் இனியவன். ஆழ்வி சாப்பாட்டை பாதியிலேயே விட்டுவிட்டு தன் அறைக்கு சென்றாள். அவளை சாப்பிட சொல்லி கேட்கும் தைரியம் அங்கு யாருக்கும் இருக்கவில்லை... முக்கியமாய் நித்திலாவுக்கு. அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

"இதுக்காகத்தான் ஆரம்பத்துல இருந்தே இந்த கல்யாணத்துக்கு நான் எதிரா இருந்தேன். இப்போ நீ என்ன செய்யப் போற? இப்படி செய்யாதன்னு நான் உன்கிட்ட எப்படி கெஞ்சினேன்? நீ தான் யார் சொல்றதயும் கேட்கல" என்றாள் பார்கவி ஏமாற்றத்துடன்.

அழுதபடி தன் அறைக்கு ஓடிச் சென்றாள் நித்திலா. அவளை பின்தொடர்ந்து சென்றான் சித்திரவேல். பாட்டி எழுந்து நிற்க, அவர் கையைப் பிடித்தாள் பார்கவி.

"விளைவு என்னவா வேணும்னாலும் இருக்கட்டும். நான் அண்ணன் கிட்ட உண்மையை சொல்லப் போறேன்" என்றாள் பார்கவி.

பாட்டி சரி என்று தலையசைத்தார்.

"நம்ம அவன்கிட்ட நாளைக்கு பேசலாம்"

"ஏன் இப்ப பேசக்கூடாது?"

"அவன் இப்போ ஒரு கற்பனை உலகத்துல இருக்கான். இப்போ அவன்கிட்ட பேசுறது புத்திசாலித்தனமா இருக்காது. அவன் கொஞ்சம் நார்மல் ஆகட்டும்" என்றார் பாட்டி.

சரி என்று தலையசைத்து விட்டு தன் அறைக்கு சென்றாள் பார்கவி. அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆழ்வி நிம்மதி பெருமூச்சு விட்டு இனியவன் அறைக்குச் சென்றாள்.

அவனது அறையின் கதவு பாதி திறந்திருந்தது. கதவை தட்டாமல் உள்ளே நுழைந்தாள் ஆழ்வி. அங்கு இனியவன் இல்லை. பின்னால் இருந்து இருமல் சத்தம் கேட்டது. தன் கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி நின்றிருந்தான் இனியவன்.

"நான் வருவேன்னு உங்களுக்கு தெரியுமா?"

"ஆமாம்... எனக்கு இன்னொன்னும் தெரியும்..."

"என்ன?"

"முதல்ல இருந்த தயக்கம் இல்லாம இப்போ நீ என்னை கட்டிப்பிடிப்ப" என்று தன் கைகளை விரித்தான்.

அவன் கூறியபடியே, அனைத்து தயக்கங்களையும் உதறிவிட்டு அவனை நோக்கி ஓடிய ஆழ்வி, அவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள்.

"நிஜமாவே நீங்க என்னை விரும்புனீங்களா?"

"ரொம்ப..."

மேலும் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

"என்ன சொன்ன? நான் உனக்காக போராடணும்னு சொன்னல்ல? நமக்கு கல்யாணம் ஆகாம இருந்திருந்தா கூட நான் உனக்காக போராடி இருப்பேன். அப்படி இருக்கும்போது என் பொண்டாட்டியை நான் விட்டுடுவேனா? ம்ம்ம்?"

"ஏன் எல்லாரையும் தவிக்க வைக்கிறீங்க?"

"அவங்க செஞ்சது எப்படிப்பட்ட தப்புன்னு அவங்களுக்கு தெரியணும். இந்த விஷயத்தோட வீரியத்தை அவங்க புரிஞ்சுக்கணும். விளைவுகளை ஆராயாம எப்படி அவங்க எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சாங்க? இப்போ பாரு, இந்த கல்யாணத்தை உடைக்க எத்தனை சாத்திய கூறுகள் இருக்கு...! பணம் இருக்கு அப்படிங்கிறதுக்காக எதை வேணா செய்யலாம்னு அக்கா எப்படி நினைக்கலாம்?"

"உங்க நல்லதுக்காக தானே அக்கா அப்படி செஞ்சாங்க?" என்றாள் தன் தலையை உயர்த்தி.

"ஒருவேளை, எனக்கு உன்னை பிடிக்காமல் போயிருந்தா? நான் ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிச்சிருந்தா? நான் காதலிச்ச பெண்ணையே கல்யாணம் பண்ணிக்க நினைச்சிருந்தா? உன் நிலைமை என்னவாகி இருக்கும்? என் குடும்பத்துக்காக நான் உன்னை வேண்டா வெறுப்பா ஏத்துக்கிட்டிருந்தா என் நிலைமை என்னவாகி இருக்கும்? நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருந்திருக்கும்னு நினைக்கிறியா? நிச்சயமா இருந்திருக்காது. நான் ஒத்துக்கிறேன், எங்க அக்கா என் மேல வச்சிருக்கற அன்புக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன். ஆனா, அவங்களோட அன்பு தான் என்னை நரகத்துல தள்ளிச்சு. அவங்களுக்கு கொஞ்சம் புத்தி வரட்டும்னு தான் இப்படி எல்லாம் செய்றேன்"

மீண்டும் அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

"சரி, நீ உன் ரூமுக்கு போ. நாளைக்கு நம்ம ஒரு இடத்துக்கு போகணும்"

அவனிடமிருந்து பின்னால் நகர்ந்து,

"குட் நைட்" என்றாள்.

"ஆழ்வி, ரொம்ப சமத்தா இருக்காத"

"என்ன சொல்றீங்க?"

"நான் என் ரூமுக்கு போக மாட்டேன். இங்க தான் இருப்பேன்னு நீ சொல்லலாம்..." என்றான் இதழோர புன்னகையோடு.

வெட்கத்தோடு அவள் அங்கிருந்து செல்ல நினைத்தாள். அவளை தன்னை நோக்கி இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

"என்னங்க, என்னை விடுங்க"

"விடலன்னா?"

"யாராவது வந்துடப் போறாங்க..."

"வரட்டும்... எல்லாத்துக்கும் ஃபுல் ஸ்டாப் வச்சிடலாம்"

"அதை நீங்க எப்ப வேணாலும் செய்யலாம்... செய்ய முடியும்..."

"சீக்கிரமே செய்வேன்"

"சரி, என்னை போக விடுங்க"

"நீ போகணும்னா எனக்கு லஞ்சம் குடு"

"லஞ்சமா?"

"ஆமா..." என்று விஷம புன்னகை வீசினான். அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ஆழ்வி.

"மேடம், குழந்தை முத்தம் கொடுத்து ஏமாத்த நான் ஒன்னும் பைத்தியக்காரன் இல்ல"

"குழந்தை முத்தம் கொடுத்து மனநிலை சரியில்லாதவனை ஏமாத்திட முடியும்னு யார் சொன்னது?" என்றாள் அவன் சட்டை பொத்தானை உருட்டியவாறு.

அதை கேட்டு வாயை பிளந்த அவன்,

"நீ சொல்றதுக்கு என்ன அர்த்தம்? நம்ம லிப் லாக் ஷேர் பண்ணி இருக்கோமா?" என்றான்.

"லாக் இல்ல... ஆனா ஆமாம்..." என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.

"நெஜமாவா?" என்று அவளை பின்னால் இழுத்தான்.

அவள் ஆம் என்று தலையசைத்தாள்.

"என்னை கிஸ் பண்ண அவர் எப்பவுமே தயங்குனது இல்ல. நாங்க எந்த இடத்துல இருக்கோம்னு எல்லாம் அவர் கவலைப்பட்டதில்ல"

"டேமிட்... என்னை நீ எப்படி ஹேண்டில் பண்ண?"

"அது எவ்வளவு கஷ்டமா இருந்ததுனு எனக்கு மட்டும் தான் தெரியும்"

"அப்புறம்?"

"அப்புறம் என்ன?"

"நான் வேற என்ன பண்ணேன்னு சொல்லு"

"அது ரொம்ப பெரிய கதை. நான் உங்களுக்கு அப்புறம் சொல்றேன். இப்ப தூங்குங்க"

அவள் கையைப் பிடித்து நிறுத்திய அவன்,

"என்னை கிஸ் பண்ணிட்டு தான் நீ இங்க இருந்து போக முடியும்"

"என்னங்க..."

"உனக்கு தான் இதுல நிறைய அனுபவம் இருக்கே... கமான்" என்று அவளை தன்னை நோக்கி இழுத்தான்.

அவன் முகத்தைப் பற்றி தன் இதழ்களால் அவன் இதழ்களை வருடினாள். அதற்குப் பிறகு, அந்த அனுபவம் இல்லாத மனிதன், அவளை பின்னுக்கு தள்ளி அதிக மதிப்பெண்களைப் பெற்றான்.

தொடரும்...






Bạn đang đọc truyện trên: Truyen3h.Co