Slug
68 சடங்கு ஆழ்வியை அனைத்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தான் இனியவன், ஆழ்வியையும் சேர்த்து. என்ன மனிதன் இவன்? இவனது பாழாய் போன மனதில் என்ன தான் இருக்கிறது? இவன் எப்பொழுது என்ன செய்வான் என்று யாருக்கும் புரிவதில்லை. இப்பொழுது அவளை அணைத்ததற்கு என்ன காரணம் கூற போகிறானோ தெரியவில்லை. அந்த அணைப்பில் இருந்து தன்னை பின்னோக்கி இழுத்தான் இனியவன். ஆனால் ஆழ்வியை தன் அணைப்பிலிருந்து விடுவிக்கவில்லை. அவனது கரங்கள் அவளை சுற்றி வளைத்த வண்ணமே இருந்தன. "தேங்க்ஸ், ஆழ்வி. நீ எனக்காக என்னெல்லாம் செஞ்சியோ எல்லாத்துக்கும் தேங்க்ஸ். எனக்கு தேங்க்ஸ் அப்படிங்கிற வார்த்தையை தவிர வேற எந்த வார்த்தையும் கிடைக்கல. உன் மதிப்பு என்னன்னு நான் தெரிஞ்சுகிட்டேன். நீ எனக்காக செஞ்சதையெல்லாம் வேற யாராலையும் செய்ய முடியாதுன்னு நான் இப்ப தான் புரிஞ்சுகிட்டேன். நீ கொண்டாடப்பட வேண்டியவ. இவ்வளவு நாளா உன்னை நான் புரிஞ்சுக்காம இருந்ததுக்காக என்னை மன்னிச்சிடு. விஷயத்தோட சீரியஸ்னஸ்ஸை புரிஞ்சிக்காம இருந்ததுக்காக ஐ அம் சாரி. இதெல்லாம் எனக்கு முன்னாடியே புரிஞ்சிருந்தா, உன்னை வைஃபா ஏத்துக்க மாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டேன்" ஒரே மூச்சில் கூறி முடித்தான் இனியவன். ஆழ்வி திடுக்கிட்டாள். அப்படி என்றால், அனைவரின் முன்னிலையிலும் அவளை மனைவியாக ஏற்க தயாராகி விட்டானா இனியவன்? அவனது முக பாவத்தை அவள் கவனித்துக் கொண்டிருந்த அதே வேளையில், அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கித் திளைத்தார்கள். சித்திரவேலோ பெயர் கூற முடியாத நிலையில் இருந்தான். இனியவன் ஆழ்வியை தன் மனைவியாய் ஏற்றுக் கொண்டான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. சந்தேகம் இல்லாமல் அதில் அவனுக்கு சந்தோஷம் தான். ஏனென்றால் நித்திலா அவர்கள் வீட்டிற்கு வந்துவிடுவாளே! அதே நேரம், அவனுக்கு பயமும் எழுந்தது. இனியவன் மற்றும் ஆழ்வியின் இணைவு அவனுக்கு கொண்டுவர இருப்பது என்ன என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை. சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்த குடும்பத்தினரின் மீது தன் கண்களை ஓட விட்டாள் ஆழ்வி. அவளுக்கும் சந்தோஷம் தான். ஆனால் இதற்கு என்ன காரணத்தை இனியவன் வழங்கப் போகிறான் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலோங்கியது. "நீ கொடுத்த மருந்தை டெஸ்ட் பண்ணி பார்த்தோம். அதை டெஸ்ட் பண்ண டாக்டருங்க மிரண்டு போயிட்டாங்க. அந்த மருந்தை எனக்கு கொடுத்தவங்க, இதயம் இல்லாத காட்டுமிராண்டியா இருக்கணும்னு அந்த டாக்டர் சொன்னாரு" அதைக் கூறும் போது சித்திரவேலின் முக பாவத்தை கவனிக்க தவறவில்லை இனியவன். அவனது முகம், பேய் அறைந்ததைப் போல் மாறியது. நித்திலாவின் முகம் சொல்லவொனா அதிர்ச்சியை வெளியிட்டது. தன் குடும்பத்தினர் அந்த மருந்தின் வீரியத்தையும் அதன் விளைவுகளையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அதைப்பற்றி அவர்கள் முன்னிலையில் கூறினான் இனியவன். ஏனென்றால் அவனுக்கு தெரியும் நிச்சயம் ஆழ்வில் அந்த மருந்தின் கொடூரத்தை பற்றிய உண்மையை அவர்களிடம் கூறி இருக்க மாட்டாள் என்று. "அந்த மருந்துல கலந்திருந்த மெடிசன் காம்பவுண்ட் நிறைய நாட்டுல தடை செய்யப்பட்டதாம், இந்தியாவையும் சேர்த்து. அது மனுஷனுடைய ஹார்மோன்சை முடுக்கி விட்டு, அவனை காட்டுமிராண்டித்தனமா மாத்துமாம். அதை சாப்பிடறவங்க கண்ட்ரோல் பண்ண முடியாத நிலைமைக்கு போவாங்க. அவங்க மனநிலை, யாராலயும் கையாள முடியாததா இருக்குமாம். நீ உண்மையிலேயே ஒரு எபிக் கேரக்டர் ஆழ்வி. என்னை கல்யாணம் பண்ண பிறகு, எனக்கு மனைவிங்குற அந்தஸ்தை வச்சுக்கிட்டு, என்னை கம்ப்ளிட்டா இக்னோர் பண்ணிட்டு, நீ ஜாலியா வாழ்ந்திருக்க முடியும். ஆனா நீ அப்படி செய்யல. பாக்க நீ ரொம்ப மென்மையானவளா இருந்தாலும், உனக்கு நம்ப முடியாத அளவுக்கு தைரியம் இருக்கு. அது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்""நீ ஆழ்வியை உன் மனைவியா ஏத்துக்கிட்டன்னு நாங்க நம்பலாமா?" என்றாள் நித்திலா ஆர்வத்தோடு. "நிச்சயமா கா. ஆழ்வியை விட ஒரு நல்ல வைஃப் எனக்கு கிடைப்பாள்னு நான் நம்பல. எனக்கு அவளை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு" என்றான் ஆழ்வியை பார்த்து புன்னகைத்தவாறு. அந்த புன்னகை, மற்ற அனைவரின் முகத்திலும் படர்ந்தது. அவனது புன்னகையில் தன்னை தொலைத்தாள் ஆழ்வி. இந்த மனிதன் தான் எவ்வளவு பூசிக்கத்தக்கவன்! எவ்வளவு அழகாய் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு காரணத்தை முன்னிறுத்தி அவளை தன் மனைவியாக ஏற்றுக் கொண்டதாய் அறிவித்து விட்டான்! இப்பொழுது யாருக்கும் அவன் மீது எந்த சந்தேகமும் எழாது. அவளது தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டு தன் குடும்பத்தினரை பார்த்த இனியவன், "ஒரு கிராண்ட் ரிசப்ஷன் வச்சு என் வெட்டிங்கை அனோன்ஸ் பண்ணணும்னு நினைக்கிறேன்" ஆழ்வியை நோக்கி ஓடிய பார்கவி, அவளை இழுத்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டு, "கங்கிராஜுலேஷன்ஸ் மிஸஸ் ஆழ்வி இனியவன்" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். "நீ என்னை ரொம்ப டிசப்பாய்ண்ட் பண்ணிட்ட, கவி" என்றான் இனியவன். அது பார்கவியின் முகத்தை மாற்றியது. "ஏன் ண்ணா?" என்றாள்."உனக்கு ஒரு நல்ல ஃபிரண்டா இருந்து அவ உன்னோட வாழ்க்கையை காப்பாத்தியிருக்கா. ஆனா உன்னோட டர்ன் வந்தப்போ அதை செய்ய நீ தவறிட்ட""நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல. நீ எதை பத்தி பேசுற?""அதானே, எல்லாத்தையும் நீ அவ்வளவு சுலபமா புரிஞ்சிருந்தா, ஆழ்வியோட ஹெல்ப் இல்லாம நீயாவே உன்னோட எக்ஸாம்ஸ்ல பாஸ் பண்ணி இருப்பியே" "ஓ, நீ என்னோட எக்ஸாம் பத்தி பேசுறியா?" "இல்ல, அவ உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்துனா. ஆனா என்னை கல்யாணம் பண்ணிக்க விடாம அவளை நீ காப்பாத்தல. என்ன ஃபிரண்டு நீ?" என்றான் சீரியஸான முகபாவத்தோடு. "அண்ணா, என்னால முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்ணேன். இந்த கல்யாணத்துல எனக்கு சுத்தமா உடன்பாடே கிடையாது. ஆனா அக்கா தான் யார் சொன்னதையும் கேட்கத் தயாரா இல்ல" என்றாள் நித்திலாவை பார்த்தபடி."அப்படின்னா நீ போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கணும்" என்றான் இனியவன். பார்கவி மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியோடு அவனை ஏறிட்டார்கள். "ஒரு இக்கட்டான சூழ்நிலையில உன்னால முடிவெடுக்க முடியலன்னா, நீ இவ்வளவு தூரம் படிச்சதுக்கு என்ன அர்த்தம் இருக்கு?""அக்காவுக்கு எதிரா நான் எப்படி கம்ப்ளைன்ட் கொடுக்க முடியும்?" "அவங்க செய்றது தப்பு தான்னு உனக்கு நிச்சயமா தெரிஞ்சதுனா, நீ அதை நிச்சயமா செய்யணும். அப்படி இல்லன்னா அப்படி செய்வேன்னு அவங்களை மிரட்டியாவது இருக்கணும்" அதிர்ச்சியே வடிவாய் நின்றிருந்த நித்திலாவை ஏறிட்டாள் பார்கவி. நித்திலாவின் வாயில் இருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. "எது எப்படி இருந்தாலும் எது நியாயமோ அதைத்தான் செய்யணும். தப்பு செஞ்சவங்க நம்ம அக்கா அப்படிங்கிறதுக்காக மட்டும் எல்லாத்துக்கும் பொறுமையா போகக்கூடாது. நீ எப்படி இவ்வளவு ப்ளைண்டா இருந்த?"இனியவனின் ஒவ்வொரு வார்த்தையும் சித்திரவேலின் தலையில் நெருப்பை அள்ளி கொட்டியது. அது அவனுக்கு மறைமுக எச்சரிக்கை போல் தோன்றியது. ஆம், அவன் நினைத்தது சரி தான். தன் அக்காவிடமே அவன் இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டால், அவனது கதி என்னவாகும்? உண்மையை கூற போனால், நித்திலா செய்தது தவறாகவே இருந்தாலும், அது இனியவனுக்கு நற்பயனை தான் அளித்திருக்கிறது. ஆனாலும் அவளை மன்னிக்க இனியவன் தயாராக இல்லை. சித்திரவேல் எண்ணியது சரிதான். அதனால் தான் அவன் நித்திலாவை அவ்வளவு எளிதாய் மன்னிக்கவில்லை. ஏனென்றால், சித்திரவேலை இனியவன் சுலபமாக மன்னித்து விடுவான் என்ற எண்ணம் நித்திலாவின் மனதில் எழக்கூடாது என்று எண்ணினான் இனியவன்."இன்னு, நித்திலா செஞ்சது தப்பு தான். ஒத்துக்குறேன். ஆனா ஆழ்வி மாதிரி ஒரு நல்ல பொண்ணு உனக்கு மனைவியா வந்ததுக்கு அவ செஞ்ச தப்பு தான் காரணம். அதை நீ மறந்துடாத" என்றார் பாட்டி. "நான் ஆழ்வையை மனைவியா ஏத்துக்கிட்டேன் அப்படிங்கறத்துக்காக அக்கா செஞ்சதை நியாயப்படுத்தாதீங்க பாட்டி. அவங்க செஞ்சது கத்தி மேல நடக்கிற மாதிரியான ஒரு விஷயம். நான் ஆழ்வியை ஏத்துக்கிட்டேன். அதனால இதை சந்தோஷமான முடிவுன்னு ஏத்துக்கலாம். ஆனா ஒருவேளை, நான் ஏத்துக்காம போயிருந்தா என்னவாகி இருக்கும்? ஒருவேளை நான் கடைசி வரைக்கும் குணமாகாம போயிருந்தா என்னவாகி இருக்கும்? ஒருவேளை ஆழ்வி அந்த மருந்தை நிறுத்தணும்னு நினைக்காம போயிருந்தா என்னவாகி இருக்கும்?""அண்ணா ப்ளீஸ், பழசை எல்லாம் மறந்துட்டு ஆழ்வியோட புது வாழ்க்கையை ஆரம்பியேன்" என்றாள் பார்கவி கெஞ்சலாய். நித்திலாவை இனியவனின் வார்த்தைகள் உடைத்துப் போட்டிருந்தது. "உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல விரும்புறேன், இன்னு" என்றாள் நித்திலா. "நீங்க என்கிட்ட எது வேணும்னாலும் சொல்லலாம்கா. நான் உங்க மேல டிசப்பாய்மென்ட்ல இருக்கேன் அப்படிங்கிறதுக்காக நீங்க பேசக்கூடாதுன்னு நான் உங்களை தடை செய்ய மாட்டேன். நீங்க எதுக்காகவும் தயங்க வேண்டியதில்ல" "நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன்" "சொல்லுங்க கா""நான் நம்ம வீட்டை விட்டு போகலாம் ன்னு முடிவெடுத்து இருக்கேன்! அதை இனியவை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவனுக்கு அதில் ஆச்சரியமும் இல்லை. சித்திரவேல் தன் மகிழ்ச்சியை மறைக்க படாத பட்டுக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான். ஆனால் பார்கவி மிகுந்த அதிர்ச்சி அடைந்தாள். ஆழ்வியும் தான். "எதுக்காக கா இப்படி ஒரு முடிவை எடுத்தீங்க?" என்று முதலில் கேள்வியை எழுப்பியவள் ஆழ்வி தான். "இதை நான் ரொம்ப நாளுக்கு முன்னாடியே செஞ்சிருக்கணும், மத்த பொம்பளைங்க செய்ற மாதிரி! என் கல்யாணத்துக்கு பிறகு நான் இங்க தங்குனதுக்கு காரணம், பாட்டியை தனியா விட்டுட்டு போக வேண்டாம்னு தான். ஆனா இப்போ, நீங்க இங்க இருக்கீங்க. நீங்க இந்த குடும்பத்தை பாத்துக்குவீங்கன்னு எனக்கு தெரியும்" என்றாள் நித்திலா புன்னகையோடு. "ஆனா இதுக்கு என்ன அவசியம்?" என்றாள் பார்கவி "உண்மைய சொல்லப்போனா அது தான் முறை. நீயும் உன் கல்யாணத்துக்கு பிறகு இங்கிருந்து போகத்தான் போற. அது தான் வழக்கமாக நடக்குறது" "அக்கா, நான் பேசுனது உங்க முடிவுக்கு காரணமா இருந்தா..." என்று இனியவன் மேலே எதுவும் கூறுவதற்கு முன், அவன் பேச்சைக் தடுத்து,"இல்ல இன்னு. இந்த முடிவை நான் ரொம்ப நாளுக்கு முன்னாடியே எடுத்துட்டேன், ஆழ்வியோட திறமையை பார்த்து! அவங்களுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுக்கணும்னு நினைச்சேன். நம்ம எதிர்பார்ப்பை அவங்க நிவர்த்தி செய்வாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" "சந்தேகம் இல்லாம ஆழ்வி நம்ம எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வா தான். ஆனா அதுக்காக நீ வீட்டை விட்டு போனோம்னு அவசியம் இல்லக்கா" என்றாள் பார்கவி. "இல்ல கவி, ஒரு வைஃபா என் பொறுப்பு என்னன்னு நான் தெரிஞ்சுக்கணும்""நீங்க இந்த வீட்டை விட்டு முழு மனசோட சந்தோஷமா போகணும்னு நான் நினைக்கிறேன் கா" என்றான் இனியவன். "சத்தியமா எனக்கு யார் மேலயும் எந்த வருத்தமும் இல்ல. நான் செஞ்சது சரி இல்லன்னு எனக்கு தெரியும். ஆனா அதே நேரம், நான் செஞ்சது தப்பும் இல்ல" என்றாள் நித்திலா. "எங்க ரிசப்ஷன் வரைக்கும் நீங்க இங்க இருப்பீங்கன்னு நான் நம்புறேன்" "நிச்சயமா இருப்போம்" என்றான் சித்திரவேல், முந்திக்கொண்டு. ஆம் என்று தலையசைத்த நித்திலா,"ஆமாம், உன் ரிசப்ஷன் வேலை எல்லாம் நாங்க தான் பார்க்க போறோம். நான் சொல்றது சரி தானே சித்ரா?" என்றாள் நித்திலா. "நிச்சயமா... இது என் மச்சானோட கல்யாண ரிசப்ஷன் ஆச்சே!" என்றான் செயற்கையான புன்னகையை அணிந்து கொண்ட சித்திரவேல். "தேங்க்ஸ்" என்றான் இனியவன்."ஆழ்வி, உன் டிரஸையெல்லாம் பேக் பண்ண நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்" என்றாள் பார்கவி. ஆழ்வி இனியவனை ஏறிட்டாள். "அதெல்லாம் இல்ல. அதுக்குன்னு சடங்கு இருக்கு. அதை செஞ்சு தான் ஆழ்வியை இன்னுவோட ரூமுக்கு அனுப்ப முடியும்" என்றார் பாட்டி. "பாட்டி, இந்த சடங்கு சம்பிரதாயம் எல்லாம் எனக்கு வேண்டாம். தயவு செஞ்சி என்னை விட்டுடுங்க. நல்ல காலம் என் கல்யாணம் எனக்கே தெரியாம நடந்துருச்சு. நான் இந்த சடங்கு சம்பிரதாயத்தில் இருந்து தப்பிச்சுக்கிட்டேன்" என்றான் இனியவன். "ஆனா இந்த சடங்கு உனக்கு தெரியாம நிச்சயம் நடக்கவே முடியாது" என்றாள் நித்திலா. "அக்கா, சடங்கு என்ற பேர்ல என்னை டார்ச்சர் பண்றத நிறுத்துங்க" "டார்ச்சரா? நிஜமாவா சொல்ற?" "பின்ன என்னக்கா? ஆழ்வி என் வைஃப். நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறதுக்கு அதைவிட வேற என்ன காரணம் வேணும்?""நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறதுக்கான சடங்கு தான் அது. உங்க ஃபர்ஸ்ட் நைட்...!" என்றாள் நித்திலா. இனியவன் வாயடைத்து நிற்க, சங்கடத்தில் ஆழ்ந்தாள் ஆழ்வி. ஏனென்றால் அனைவரும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். "இப்ப சொல்லு தம்பி, இந்த சடங்கை நாங்க நடத்தட்டுமா, வேண்டாமா?" என்றாள் நித்திலா கிண்டலாய்.அவளுக்கு பதில் கூறாமல், புன்னகைத்தபடி அங்கிருந்து நடந்தான் இனியவன். தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co