Slug
72 உண்மை கைபேசியை கையில் பிடித்த வண்ணம் அதிர்ச்சியோடு நின்றாள் நித்திலா. அந்த கைபேசி அழைப்புக்கு என்ன அர்த்தம்? அந்த அழைப்பை பொறுத்தவரை, டாக்டரின் மரணத்திற்கு அதில் பேசிய மனிதன் தான் காரணம். அப்படி என்றால், அவன் எதற்காக சித்திரவேலுக்கு ஃபோன் செய்து, அவனை அமைதியாய் இருக்க சொல்லி கூற வேண்டும்? அதில் சித்திரவேலும் உடந்தையா? அவனும் உடந்தை என்றால், அந்த மோசமான மருந்தில் இவனது பங்கு இருக்கிறதா? அந்த மருந்தை பற்றி ஏற்கனவே சித்திரவேலுக்கு தெரியுமா? அதை இனியவனுக்கு கொடுத்தது அவன் தானா? ஆனால் எதற்காக அவன் இதையெல்லாம் செய்தான்? அப்படி என்றால், தான் நல்லவன் என்று அவன் காட்டிக் கொள்வதெல்லாம் உண்மை இல்லையா? மற்றவருக்கும் அவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லையா? எல்லாமே நடிப்பு தானா? அவன் ஏமாற்றுக்காரனா?நித்திலாவின் கரங்கள் நடுங்கின. அவளது கண்கள் கட்டுக்கடங்காமல் பொழிந்தது. அவளது இதயம் உடைந்து விடும் அளவிற்கு அடித்துக்கொண்டது. அவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது. அவள் கண்கள் இருண்டது. தன் கையில் இருந்த கைபேசியை நிழுவ விட்டு, மயங்கி விழுந்தாள். அந்த உண்மையை அவளால் தாங்க முடியவில்லை.குளியலறை விட்டு வெளியே வந்த சித்திரவேல், அவள் அசைவற்று தரையில் விழுந்து கிடந்ததை பார்த்து,"நித்...தி..." என்று கத்தியது அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது. அப்பொழுது தான் வரவேற்பறைக்கு வந்த ஆழ்வி, அதை கேட்டு நின்றாள். தன் அறைக்குச் சென்ற பார்கவியும், அவன் அலறலை கேட்டு திடுக்கிட்டாள். கால தாமதம் செய்யாமல் பாட்டி அவள் அறையை நோக்கி ஓடினார். பாட்டியை தாண்டிக் கொண்டு ஆழ்வியும் பார்கவியும் ஓடினார்கள். சித்திரவேல், மயங்கி கிடந்த நித்திலாவே கட்டிலில் படுக்க வைப்பதை அவர்கள் கவனித்தார்கள். "நித்திலாவுக்கு என்ன ஆச்சு?" என்றார் பாட்டி. "தெரியல பாட்டி. நான் இப்ப தான் பாத்ரூமில் இருந்து வந்தேன். இவள் கீழே மயங்கி கிடந்தா..."மேஜையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தாள் ஆழ்வி. மூடி இருந்த கண்களுக்குள் தன் விழிகளை அசைத்த நித்திலா, மெல்ல கண் திறந்தாள். "நித்தி உனக்கு என்ன ஆச்சு? நீ மயங்கி விழுந்ததை பார்த்து நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?" என்று சித்திரவேல் பதற, ஒன்றும் கூறாமல் தன் கண்களை மூடினாள் நித்திலா. "என்ன ஆச்சு, கா?" என்றாள் ஆழ்வி கவலையோடு. "தலை சுத்திடுச்சு""நீ எதுவும் சாப்பிடலையா?" என்றான் சித்திரவேல். அவள் சாப்பிட்டேன் என்பது போல் தலையசைத்தாள். "நான் உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்" என்று சமையலறைக்கு சென்றாள் ஆழ்வி. "நான் டாக்டருக்கு ஃபோன் செய்றேன்" என்றான் சித்திரவேல். "தேவையில்ல. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்" என்றாள் நித்திலா. "சரி, அப்படின்னா ரெஸ்ட் எடுத்துக்கோ" என்றான். நித்திலா கண்களை மூடிக்கொள்ள, அவள் பக்கத்தில் அமர்ந்து, தலையை வருடி கொடுத்தான் சித்திரவேல். அவனுக்கு எதிர்ப்புறமாய் தலையை திருப்பிக் கொண்டு மென்று விழுங்கினாள் நித்திலா.பழச்சாறு தம்ளருடன் சமையல் அறையை விட்டு வெளியே வந்த ஆழ்வி, இனியவன் வீட்டிற்குள் நுழைவதை கண்டாள். அவனை நோக்கி ஓடிச் சென்ற அவள்,"அக்கா மயங்கி விழுந்துட்டாங்க" என்றாள். "ஏன்? என்னாச்சு? அவங்க எதுவும் சாப்பிடலையா?""சாப்பிட்டாங்க. திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க"தனது கைபேசியை எடுத்து மருத்துவரை அழைத்தான் இனியவன்."அக்கா மயங்கி விழுந்துட்டாங்க. கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா?" அழைப்பை துண்டித்தான்."டாக்டர் வரேன்னு சொல்லிட்டாங்க" "நான் அக்காவுக்கு இந்த ஜூஸை கொடுத்துட்டு வரேன்" என்றாள். அவளோடு இனியவனும் சென்றான். "அக்கா..." என்ற இனியவன் குரலை கேட்ட நித்திலா, கண் விழித்தாள். "என்ன ஆச்சு, கா?" அவன் முகத்தை குற்ற உணர்ச்சியோடு ஏறிட்டாள் நித்திலா. அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை அவளால் தடுக்க முடியவில்லை."அக்கா என்ன ஆச்சு? எதுக்காக அழறீங்க?" "கண்ணெல்லாம் எரியுற மாதிரி இருக்கு" என்று கண்ணீரை துடைத்தபடி கூறினாள். "என்னக்கா இப்படி இருக்கீங்க? உங்களை நீங்க தானே கவனிச்சுக்கணும்?" ஆம் என்று தலையசைத்தாள். "நான் அக்காவுக்கு வெள்ளரிக்காய் பேட் கொண்டு வரேன். அதை கண்ல வச்சா, எரிச்சல் குறையும்" என்றாள் ஆழ்வி."அக்கா உங்களுக்கு ஒன்னும் இல்லையே?" என்றான்.ஆம் என்று ஓர் போலியான புன்னகையை உதிர்த்தாள். இனியவனுக்கு எதுவும் சரியாய் படவில்லை. "அக்கா நான் டாக்டரை கூப்பிட்டு இருக்கேன். அவங்க இப்போ வருவாங்க""ம்ம்ம்..."நித்திலா அப்படி இருந்ததை பார்த்த இனியவனுக்கு ஏதோ தவறாகப்பட்டது. அவள் தலையசைப்பைத் தவிர வேறு எந்த பதிலையும் தரவில்லை. நித்திலா எப்பொழுதும் அப்படி இருந்ததில்லை. வெள்ளரிக்காய் சாரை பஞ்சில் முக்கி எடுத்து, அதை நித்திலாவின் கண்களில் வைத்து படுத்துக்கொள்ள செய்தாள் ஆழ்வி. "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க கா. சரியாயிடும்" என்றான் இனியவன். "சரி இன்னு" என்றாள் நித்திலா."ஒரு வழியா ஏதோ பேசினீங்களே" என்று அங்கிருந்து சென்றான் இனியவன். அவனை பின்தொடர்ந்தாள் ஆழ்வி. அவர்கள் தங்கள் அறைக்கு வந்து கதவை சாத்த நினைத்தபோது, தடுத்து நிறுத்தினாள் பார்கவி. அவர்கள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தி தாழிட்ட அவள், "என்கிட்ட ஏன் நீ எதையும் சொல்லல?" என்றாள்."நீ எதைப் பத்தி பேசுற?" என்றாள் ஆழ்வி. "இவ்வளவு நாளா என்கிட்டயும், அக்கா கிட்டயும், பாட்டிகிட்டையும் மறைச்சி வச்சிருக்கிற விஷயத்தை பத்தி தான் பேசுறேன்"அவள் சித்திரவேலின் பெயரை கூறவில்லை என்பதால், அவள் அவனைப் பற்றித்தான் பேசுகிறாள் என்பது அவர்களுக்கு புரிந்தது. இருந்தாலும்,"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல" என்றாள் ஆழ்வி. "நான் மாமாவை பத்தி தான் பேசுறேன்னு உனக்கு தெரியும்" ஆழ்வி இனியவனை ஏறிட்டாள். அவனும் அமைதியா நின்றான். "உனக்கு எப்படி தெரியும்?" என்றாள் ஆழ்வி. "டாக்டர் சாவை பத்தி நீ என்கிட்ட பேசுவேன்னு நினைச்சேன். ஆனா நீ பேசல. அதனால உன்னை ஃபாலோ பண்ணி கிச்சனுக்கு வந்தேன். அங்க நீ முத்துகிட்ட மாமாகிட்ட ஜாக்கிரதையாக இருக்க சொன்னதை கேட்டேன். சொல்லு, ஏன் என்கிட்ட இதைப் பத்தி நீ சொல்லல? நான் உனக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்னு நெனச்சியா?" "இல்ல, நான் அப்படி நினைக்கல. நீ என் வார்த்தையை நம்ப மாட்டேன்னு நெனச்சேன். ஏன்னா, அண்ணன் உங்க எல்லார் மனசிலையும் அப்படி ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தாரு. நீங்க எல்லாரும் அவரை கண்மூடித்தனமா நம்புனிங்க. நான் இந்த வீட்டுக்கு புதுசா வந்தவ. நான் எப்படி அவர் மேல குற்றம் சொல்ல முடியும்?""நீ முத்துவை நம்பி இருக்க... ஆனா என்ன நம்பலையா?" "நான் யாரையும் நம்பல. நான் யாரையும் நம்புற நிலைமையில இல்ல. முத்து அவராவே தான் கண்டுபிடிச்சார். நான் அந்த மருந்தை கிச்சன் சிங்கில் கொட்டுறதை அவர் பார்த்துட்டார். அப்படித்தான் நான் அவர்கிட்ட மாட்டிகிட்டேன். அதேநேரம், நாங்க பேசிகிட்டு இருந்ததை குரு அண்ணனும் கேட்டுகிட்டு, எங்க கூட சேர்ந்துக்கிட்டார்" அதைக் கேட்டு பார்கவி அதிர்ச்சி அடைந்தாள். இந்த விஷயம் குருவுக்கும் தெரியுமா?"டாக்டர் உண்மையை உளறிடுவான்னு நாங்க நினைச்சோம். ஆனா அது நடக்கல. அவன் எதுவும் சொல்லாம அண்ணனை காப்பாத்தி கொடுத்துட்டான். அது நாங்க எதிர்பார்க்காதது..." "என்னை மன்னிச்சிடு, ஆழ்வி. நான் ஒரு முட்டாள். என் அண்ணனோட வாழ்கை என் கண்ணு முன்னாடியே பாழாகிக்கிட்டிருக்கிற விஷயத்தை கூட புரிஞ்சுக்காம இருந்திருக்கேன்" என்று தொண்டை அடைக்க கூறினாள் பார்கவி. "இல்ல, அது உன் கண்ணு முன்னாடி நடக்கல. உங்க முதுகுக்கு பின்னாடி நடந்த விஷயம்" என்று அவளை சமாதானபடுத்த முயன்றான் இனியவன். அவனை அணைத்துக் கொண்டு அழுதாள் பார்கவி."நம்ம இவ்வளவு நம்பிக்கை வச்சிருந்த ஒருத்தர், இதயமே இல்லாதவன்னு என்னால நம்ப முடியல. இந்த உண்மையை அக்கா எப்படி தாங்க போறாங்கன்னு எனக்கு தெரியல" என்றாள்."அதனால தான் இந்த உண்மையை நான் அவங்க கிட்ட சொல்லல" என்றாள் ஆழ்வி."இல்ல ஆல்வி, அக்கா கிட்ட இந்த விஷயத்தை மறைச்சி வைக்க கூடாது. மாறு வேஷத்தில் இருக்கிற ஒரு பாம்பு கூட வாழறது அவங்களுக்கு நல்லது இல்ல" "இல்ல பார்கவி, அவசரப்பட்டு எதுவும் செஞ்சிடாதே" "அக்காகிட்ட அவரைப் பத்தி சொல்லியே ஆகணும்" "அக்கா நம்மளை நம்பலனா என்ன செய்வ? எப்படி அவங்களுக்கு புரிய வைப்ப?" "அது எனக்கு தெரியாது. ஆனா இந்த விஷயத்தை நம்ம அக்கா கிட்ட மறைக்க கூடாது" "கவி... என்று அழைத்த இனியவனை ஏறிட்டாள் பார்கவி. "அக்காகிட்ட நிச்சயம் சொல்லலாம். ஆனா, இப்போ இல்ல. அக்கா ஏற்கனவே வீக்கா இருக்காங்க. அவங்க கொஞ்சம் நார்மல் ஆகட்டும்""ஆனா அண்ணா..." "நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன். என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கு இல்ல?" ஆம் என்று தலைசைத்தாள். "எனக்கு ஒரு கப் காபி கிடைக்குமா?" என்றான் இனியவன். சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் ஆழ்வி. அவளை பின்தொடர்ந்து வந்த பார்கவி, அவர்கள் சற்று தூரமாய் வந்தவுடன் அவள் கையை பிடித்து நிறுத்தினாள்."என்ன?""இந்த விஷயம் குருவுக்கு தெரியுமா?"ஆம் என்று தலையசைத்தாள் ஆழ்வி. "அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, இவ்வளவு முக்கியமான விஷயத்தை என்கிட்ட மறைச்சிருப்பான்!""இந்த விஷயம் தெரிஞ்சா நீ அமைதியா இருக்க மாட்டேன்னு அண்ணனுக்கு தெரிஞ்சிருக்கும்" "அவன் என்கிட்ட என்ன சொன்னான் தெரியுமா?" "என்ன?""என் வாழ்க்கையில எதையுமே உன்கிட்ட மறைக்க மாட்டேன்னு சொன்னான்""அப்படியா?" என்று சிரித்தாள் ஆழ்வி."போதும் சிரிக்கிறத நிறுத்து" "எல்லாம் சரியாயிடும் கவலைப்படாதே. இனியவர் எல்லாத்தையும் பாத்துக்குவார்" என்றாள். "ஆனா, நான் குருவை விட போறது இல்ல" "இந்த ஆட்டத்துக்கு நான் வரல" என்று சமையலறைக்கு சென்றாள் ஆழ்வி. காபியை எடுத்துக்கொண்டு தங்கள் அறைக்கு சென்ற ஆழ்வியை கவனிக்கவில்லை இனியவன். அவன் தலை குனிந்த படி அமர்ந்திருந்தான். "என்ன யோசிக்கிறீங்க?" "இன்னைக்கு அக்காவோட நடவடிக்கை ரொம்ப வித்தியாசமா இருந்தது" "அவங்க டயர்டா இருக்காங்க" "இதுக்கு முன்னாடி கூட பல தடவை அவங்க டயர்டா இருந்திருக்காங்க. ஆனா இந்த மாதிரி அவங்க இருந்ததில்ல. 'எனக்கு ஒன்னும் இல்லன்னு' கூட அவங்க சொல்லல""நீங்க என்ன நினைக்கிறீங்க?" ஒன்றும் இல்லை என்று தலையசைத்தான்."நம்ம அக்காவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாமா?" "இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்துடுவாங்க. அவங்க என்ன சொல்றாங்களோ அதுபடி செய்யலாம்" "கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாயிடும்"அதைக் கேட்டு சிரித்த இனியவன், "வழக்கமா, எல்லாருக்கும் இதை நான் தான் சொல்லுவேன். இன்னைக்கு எனக்கு இதை சொல்ல என் வைஃப் தேவையா இருக்கா. இதுவும் நல்லா தான் இருக்கு" என்றான்."அதுல எனக்கு சந்தோஷம்" "நெஜமாவா?""ஆமாம். இனியவனை சமாதானப்படுத்துறது அவ்வளவு சுலபம் இல்லன்னு எனக்கு தெரியும்" "கேட்க நல்லா இருக்கு""எது?""நீ சொல்லி கேக்க, என் பேர் நல்லா இருக்கு" புன்னகைத்தபடி அவன் நெற்றியில் முத்தமிட்ட ஆழ்வி,"எனக்கு இப்போ எப்படி இருக்கு தெரியுமா?" என்றாள்."பைத்தியக்காரன் கூட இருக்கிற மாதிரி இருக்கா?""இங்க பாருங்க, அந்த மாதிரி சொல்லாதீங்கன்னு நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன்..."சிரித்தபடி அவள் தோளில் முத்தமிட்டான்."அண்ணனை பத்தி அக்கா கிட்ட சொல்லி ஆகணும்" "நானும் அதைப்பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். இந்த விஷயம் சிவியர் ஆயிகிட்டே போகுது. நம்ம லேட் பண்ண கூடாது""கொஞ்சம் கொஞ்சமா அக்காவுக்கு ஹின்ட் கொடுக்க ஆரம்பிங்க. உடனே சொல்லிடாதீங்க""ஆமாம் அக்காவால அந்த உண்மையை தாங்க முடியாது"ஆம் என்று தலையசைத்தாள் ஆழ்வி.அப்பொழுது, அவர்கள் அறையின் கதவை தட்டினாள் பார்கவி. என்ன என்பது போல் அவளை பார்த்தான் இனியவன். "அண்ணா டாக்டர் வந்துட்டாரு" என்றாள். சரி என்று வெளியே சென்றான். அவனுடன் ஆழ்வியும் சென்றாள் என்று கூறத் தேவையில்லை. அறையின் வெளியே காத்திருந்தான் சித்திரவேல். மருத்துவர் நித்திலாவை பரிசோதித்து கொண்டிருந்தார். சித்திரவேல் சிரித்தபோது தன் எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை பார்கவியால். 'அப்படி செய்யாதே' என்பது போல் அவளுக்கு சைகை செய்தாள் ஆழ்வி. அறையை விட்டு வெளியே வந்தார் மருத்துவர்."டாக்டர், அக்கா எப்படி இருக்காங்க?""நல்லா இருக்காங்க. நாளைக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வாங்க" "எதுக்கு?""அவங்களுக்கு பேசிக்கா எடுக்க வேண்டிய செக்கப் எல்லாம் பண்ணணும். ஏன்னா, அவங்க பிரக்னண்டா இருக்காங்க" என்றார் மருத்துவர். தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co