Slug
84 ஆழ்வியின் மனதில் என்ன?தூக்கத்திலிருந்து கண் விழித்த இனியவன், ஆழ்வி எதையோ யோசித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை கண்டான். "என்ன யோசிச்சுகிட்டு இருக்க?" என்றான். அவளது முகபாவம் உடனே மாறியது. "ஒன்னும் இல்ல." என்று புன்னகைத்தாள். அவளது புன்னகை இயல்பாக இருப்பதாய் இனியவனுக்கு தோன்றவில்லை. அவள் எதையோ தீவிரமா யோசித்துக் கொண்டிருந்தது அவனுக்கு தெரியும். அப்படி இருக்கும் போது, எதற்காக அவனிடம் அவள் பொய் கூறுகிறாள்? அவள் அவனிடமிருந்து எதையாவது மறைக்கிறாளா?"நீ எப்போ எழுந்த?" என்றான் கட்டிட விட்டு கீழே இறங்கியபடி."ஆறு மணிக்கு" "ஏன் அவ்வளவு சீக்கிரமா எழுந்த?" "தூக்கம் கலஞ்சுருச்சு." அவளை விசித்திரமாய் ஏறிட்டான். "போய் முகம் கழுவிட்டு வாங்க நான் உங்களுக்கு காபி கொண்டு வரேன்." என்று அறையை விட்டு வெளியேறினாள். இனியவனின் சந்தேகம் வலுத்தது. முதல் நாள் இரவு அவர்கள் இணைந்த போது, அவள் எந்த தடையும் கூறவில்லை. தனது மன அழுத்தத்தை குறைக்க அதை வேண்டுமென்று எண்ணியது இனியவன் தான். ஆனால் நித்திலா இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது ஆழ்வி தன்னுடன் ஒத்துழைக்க மாட்டாள் என்று எண்ணியிருந்தான் இனியவன். ஆனால் ஆழ்வியின் முகத்தில் எந்த தயக்கமும் இல்லை. இப்பொழுது கூட அவள் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒன்றும் இல்லை என்பது போல் பொய் உரைக்கிறாள். அது பற்றி யோசித்தபடி குளியல் அறைக்கு சென்றான் இனியவன்.குளித்து முடித்து வெளியே வந்த இனியவன், ஆழ்வியின் கைபேசி மணி அடிப்பதை கேட்டான். அதில் சுவாமிஜியின் எண் ஒளிர்ந்தது. வழக்கமாய் அவன் ஆழ்விக்கு வரும் எந்த அழைப்பையும் ஏற்பதில்லை. ஆனால் சுவாமிஜியிடம் இருந்து வந்த அழைப்பை தவிர்க்க அவனுக்கு மனம் வரவில்லை. ஏனென்றால், அவர் நித்திலாவை பற்றி ஏதாவது கூறுவதற்காக தான் அழைத்திருக்க வேண்டும் என்பதால், அந்த அழைப்பை ஏற்று, கைப்பேசியை தன் காதுக்கு கொடுத்தான். அவன் எதுவும் கூறுவதற்கு முன், சுவாமிஜி பேசினார், அது ஆழ்வி என்று எண்ணி. ஆனால், அவர் பேசிய வார்த்தை இனியவனுக்கு அதிர்ச்சியை அளித்தது. "நான் உன்னோட மெசேஜை பார்த்தேன். நீ எதுக்காக மா உன்னோட நாத்தனார் பைத்தியம் மாதிரி நடிக்கிறதா நினைக்கிற?" என்றார். இனியவன் திகைப்புக்கு ஆளானான். நித்திலா நடிக்கிறாளா? எதுவும் பேசாமல் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்த இனியவன், அந்த கைபேசியை எங்கிருந்து எடுத்தானோ அங்கேயே வைத்தான். ஏனென்றால் சுவாமிஜி பேசிக் கொண்டிருக்கும் விஷயம் அவனுக்கு தெரியாத ஒன்று. உண்மையை கூறப்போனால், அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவனது அக்கா நடிக்கிறாளா? ஆனால் ஏன்? அவனுக்கு நிச்சயம் தெரியும், இது ஆழ்வியின் கணிப்பாக மட்டும் இருக்காது. அவள் நித்திலாவிடம் எதையோ கவனித்திருக்கிறாள். அவள் தான் மனநிலை சரியில்லாதவர்களை புரிந்து கொள்வதில் கைதேரிந்தவள் ஆயிற்றே! இதற்காகத்தான் சுவாமிஜி அங்கே வரவேண்டும் என்று ஆழ்வி நினைக்கிறாளா? ஆனால் அவள் ஏன் இதை பற்றி அவனிடம் ஒன்றும் கூறவில்லை? அவன் ஆழ்வியின் கொலுசு சத்தத்தை கேட்டான். இரண்டு குவளை காப்பியுடன் வந்த அவள், ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு இன்னொன்றை பருகினாள். "ஆழ்வி, சுவாமிஜிகிட்ட இருந்து ஃபோன் வந்தது. நான் அதை அட்டென்ட் பண்ண ட்ரை பண்ணேன். ஆனா டிஸ்கனெக்ட் ஆயிடுச்சு. சிக்னல் ப்ராப்ளம்னு நினைக்கிறேன்" என்றான், சுவாமிஜி தன்னிடம் கூறிய விஷயத்தைப் பற்றி ஒன்றும் கூறாமல். என்ன நடக்கிறது என்று பார்க்க நினைத்தான் அவன்."ஓ..."தன் கைபேசியை எடுத்து பார்த்த ஆழ்வி, சுவாமிஜிக்கு ஃபோன் செய்யவில்லை. "அவருக்கு ஃபோன் பண்ணு, ஆழ்வி." "ஆங்... பண்றேன்." என்று அவன் முன்னால் ஃபோன் செய்ய தயங்கினாள்."அவர் அக்காவோட ட்ரீட்மென்ட் பத்தி பேசுவார்னு நினைக்கிறேன். அவர் எப்ப வராருன்னு கேளு." என்றான், அதை விட்டு விட மனமில்லாத இனியவன்.வேறு வழியில்லாமல் அவள் அவருக்கு ஃபோன் செய்ய, அந்த அழைப்பை ஏற்றார் சுவாமிஜி."சாரி சுவாமிஜி, கால் டிஸ்கனெக்ட் ஆயிடுச்சு. டவர் பிராப்ளம்னு நினைக்கிறேன்." என்று இனியவன் கூறியதை கூறினாள்."பரவாயில்ல மா. நான் உன்னோட மெசேஜை பார்த்தேன். உங்க நாத்தனார் நடிக்கிறாங்கன்னு உனக்கு ஏன் தோணுது?" என்று இனியவனிடம் கேட்ட அதே கேள்வியை அவளிடம் கேட்டார் சுவாமிஜி.இனியவனுக்கு முன்னால் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாத ஆழ்வி,"நீங்க எப்ப வரிங்க சுவாமிஜி?" என்று அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் கூறினாள் ஆழ்வி. அது சுவாமிஜியை உஷார் படுத்தியது. அவள் பதிலளிக்க முடியாத நிலையில் இருக்கிறாள் என்பதை அவர் புரிந்து கொண்டார். "உன்னோட வீட்டுக்கார் அங்க இருக்காரா அம்மா?" என்றார்."ஆமாம் சுவாமிஜி. நீங்க எப்ப வர போறீங்கன்னு நாங்க காத்துகிட்டு இருக்கோம்." "பிரச்சனை பெருசா இருக்கும் போல தெரியுது. நான் இன்னைக்கே சென்னைக்கு வர முயற்சி பண்றேன். முடிஞ்சா எனக்கு ஃபோன் பண்ணு. இல்லன்னா மெசேஜ் பண்ணு." "சரிங்க சுவாமிஜி. தேங்க்யூ சோ மச்." என்று அழைப்பை துண்டித்தாள்."எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரேன்னு சொல்லி இருக்கார்" என்றாள்."ஒ..." என்றான் அவளை கூர்மையாய் கவனித்துக் கொண்டிருந்தான் இனியவன். காபியை குடித்து முடிக்கும் வரை அவனை ஏறெடுத்து பார்க்கவேயில்லை ஆழ்வி. காபியை பருகி முடித்த பிறகு, காலி குவளையுடன் எழுந்து நின்றாள். தனது குவளையையும் அவளிடம் நீட்டினான் இனியவன். அதைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து நடந்தாள். அவனது கண்கள் அமைதியாய் அவளை பின்தொடர்ந்தன.நித்திலாவின் அறைக்கு வந்த ஆழ்வி, அவள் ஒரு தலையணையை அணைத்தபடி படித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்."அக்கா ஏதாவது சாப்பிட்டாங்களா?" என்றாள் பாட்டியிடம்.அவர் இல்லை என்று தலையசைத்தார்."நான் அவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவரேன்." என்று அவள் அங்கிருந்து போக எண்ணிய போது, அங்கு வந்தான் இனியவன். "நான் முத்துவை கொண்டு வர சொல்றேன்" என்று தனது கைபேசியை எடுத்து, "முத்து, அக்காவுக்கு பிரேக்ஃபாஸ்ட் கொண்டு வா" என்றான்."சரிங்க அண்ணா." என்று அழைப்பை துண்டித்தான் முத்து. எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாய் படுத்திருந்த நித்திலாவை பார்த்த இனியவன், "ஆழ்வி, அக்கா எதுக்காக இவ்வளவு சோம்பலா இருக்காங்க? நானும் இப்படித்தான் இருந்தேனா?" என்றான்.ஆழ்வி இல்லை என்று தலையசைத்தாள்."உங்க கேஸ் வித்தியாசமானது. மனநோயில பலவிதம் இருக்கு. அது ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும்." என்றாள் ஆழ்வி ஆழ்வி கூறியதை கேட்டபடி நித்திலாவை கவனித்துக் கொண்டிருந்தான் இனியவன். "நான் ரொம்ப முரட்டுத்தனமா இருந்தேன்னு நீ நிறைய தடவை சொல்லியிருக்க. அப்படி பாக்க போனா, அக்காவுக்கு மனநிலை சரியில்லன்னு யாருமே நம்ப மாட்டாங்க போல இருக்கு." என்று அவன் கூறிய அடுத்த நிமிடம், கட்டில் மீது எழுந்து அமர்ந்து கலகலவென சிரிக்கத் துவங்கினாள் நித்திலா. இனியவன் ஆழ்வியை பார்க்க, அவள் மென்று விழுங்கினாள். மீண்டும் கட்டிலில் படுத்த நித்திலா, ஓவென்று அழுதாள். "மனநிலை சரியில்லாதவங்க இப்படித்தான் விசித்திரமா நடந்துக்குவாங்க." என்றார் பாட்டி வருத்தத்தோடு.இனியவனின் சந்தேகம் ஊர்ஜிதமானது. நித்திலா நடிப்பதாகவே அவன் எண்ணத் துவங்கினான். அப்பொழுது நித்திலாவுக்கு சிற்றுண்டி எடுத்துக் கொண்டு வந்தான் முத்து."அவ எதுவுமே சாப்பிடல" என்றார் பாட்டி."ஆனா மனநிலை சரியில்லாதவங்க சாதாரணமா இருக்குறவங்களை விட மூணு பங்கு அதிகமா சாப்பிடுவாங்கன்னு நான் கேள்விப்பட்டேனே... அவங்களுக்கு ரொம்ப பசிக்குமாமே..." என்றான் இனியவன். *அப்படியா?* என்பது போல் அவனை வினோதமாய் பார்த்தாள் ஆழ்வி. ஏனென்றால் அப்படிப்பட்ட விஷயத்தை பற்றி சுவாமிஜி அவளிடம் எப்பொழுதும் கூறி இருக்கவில்லை. "அதுக்காகத்தான் நீ கத்திக்கிட்டே இருந்த போல இருக்கு அண்ணா" என்றாள் பார்கவி. "அப்படியா?" என்றான் இனியவன் ஆழ்வியிடம். அவள் ஆம் என்று தலையசைத்தாள்."ஆனா, நீ சாப்பாட்டுக்காக கத்துனதை விட, ஆழ்விக்காக தான் அதிகமாக கத்தின." என்றாள் பார்கவி.அதை கேட்டு சிரிக்கும் மனநிலையில் ஆழ்வி இல்லை. முத்துவிடமிருந்து உணவை பெற்றுக் கொண்டு வந்து நித்திலாவின் பக்கத்தில் அமர்ந்தான் இனியவன். அதை சாப்பிட மறுத்தாள் நித்திலா. வலுக்கட்டாயமாய் அவளுக்கு ஊட்டி விட்டான். முகத்தை சுளித்தபடி சாப்பிட்டு முடித்தாள் நித்திலா. "அப்பொழுது ஆழ்வியின் கைபேசி ஒலித்தது." "சுவாமிஜி தான் பேசுறாரு." என்று அழைப்பை ஏற்றாள். "நான் இன்னைக்கு சாயங்காலம் அங்க வரேன்" என்றார் அவர். "ரொம்ப தேங்க்ஸ் சுவாமிஜி." என்றாள் அவள் மகிழ்ச்சியோடு. "இன்னைக்கு சாயங்காலமே சுவாமிஜி இங்க வர்றாராம்" என்றபடி அழைப்பை துண்டித்தாள் ஆழ்வி.நித்திலாவின் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் இனியவன். ஆனால் அவள் முகம் தெளிவாய் இருந்தது. ஆழ்வி எண்ணியது சரியாக இருக்குமா என்று அவனால் கணிக்க முடியவில்லை. ஏனென்றால் ஆழ்விக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது என்று அவனுக்கு புரியவில்லை. அதனால் பொறுத்திருந்து பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தான். மாலைஇனியவன் குடும்பத்தினர் சுவாமிஜியை வரவேற்றார்கள்."வாங்க சுவாமிஜி." என்று அவர் காலை தொட்டு ஆசி பெற்றாள் ஆழ்வி. "எப்படிமா இருக்க?" "நான் நல்லா இருக்கேன். இவர் தான் என்னோட ஹஸ்பண்ட்." என்றாள் இனியவனை சுட்டிக்காட்டி.கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காட்டுத்தனமாய் இருந்த இனியவன், அவ்வளவு அம்சமாய் இருந்ததை பார்த்த சுவாமிஜியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. சுவாமிஜியின் புன்னகையின் காரணத்தை ஓரளவு புரிந்து கொண்ட இனியவன் தானும் புன்னகை புரிந்தான்."ஹலோ சுவாமிஜி" என்று அவருடன் கை குலுக்கினான். "தேங்க்ஸ்... சென்னைக்கு வந்ததுக்கும்... எல்லாத்துக்கும்." என்றான்."நீங்க உங்க மனைவிக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். ஏன்னா எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம்." என்றார் சுவாமிஜி. ஆழ்வியை பார்த்து புன்னகை புரிந்தான் இனியவன். "நீங்க முகம் கை கால் கழுவிட்டு வாங்க சுவாமிஜி. அக்காவை பார்க்கலாம்" என்றாள் ஆழ்வி. சரி என்று அவர் நடக்க, அவரை பின்தொடர்ந்து சென்றாள் ஆழ்வி. வேண்டுமென்றே அவர்களுடன் செல்வதை தவிர்த்தான் இனியவன், அவர்களுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கி.அவர்கள் விருந்தினர் அறைக்கு வந்த பிறகு, "சொல்லுமா. என்ன விஷயம்?"அவளுக்கு நித்திலாவின் மீது எதற்காக சந்தேகம் வந்தது என்ற விஷயத்தை அவள் சுவாமிஜியிடம் கூற, அவர் அமைதியாய் கேட்டுக் கொண்டு, "நான் பார்த்துக்கிறேன்" என்றார். சொற்ப நேரமே எடுத்துக்கொண்டு முகம் கை கால் கழுவிக் கொண்டு வந்தார் அவர். தேனீரோ காப்பியோ பருகும் பழக்கம் இல்லாத சுவாமிஜிக்கு வெதுவெதுப்பான பாலை கொண்டு வந்து கொடுத்தான் முத்து.அவரை நித்திலாவின் அறைக்கு அழைத்து வந்தாள் ஆழ்வி. நித்திலாவுடன் அமர்ந்திருந்த இனியவன், அவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்றான். அவரை மருட்சியுடன் பார்த்தாள் நித்திலா. சுவாமிஜி அவளை நோக்கி சென்ற போது, அவள் பயத்தோடு பின்னோக்கி நகர்ந்தாள். அவள் அருகில் சென்று அவள் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டான் இனியவன். மூளையுடன் தொடர்புள்ள சில நரம்புகளை தொட்டு பார்த்து பரிசோதனை செய்தார் சுவாமிஜி. தன் கண்களை மூடிக்கொண்டு அவற்றை ஆழமாய் உள்வாங்கினார். மெல்ல கண்களைத் திறந்த அவர், "நான் அவங்களை தனியா செக் பண்ணணும்." என்றார். பாட்டியும் பார்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, இனியவனும் ஆழ்வியும் அதற்கான காரணத்தை புரிந்து கொண்டார்கள்."வாங்க பாட்டி போகலாம்" என்றான் இனியவன், வெளியே நடந்த படி.அனைவரும் அவனைப் பின் தொடர்ந்தார்கள். இனியவன் கதவை சாத்தினான்."மனநிலை சரியில்லாத மாதிரி ஏன் மா நடிக்கிற?" என்றார் சுவாமிஜி. அவருக்கு பதில் கூறாமல் தன் முந்தானியை முடிச்சு போட்டபடி அமர்ந்திருந்தாள் நித்திலா."நீ உன் குடும்பத்தாருக்கு வேதனையை கொடுக்கிறேன்னு உனக்கு புரியலையா?" என்றார் சுவாமிஜி.முடிச்சு போடுவதை நிறுத்திய நித்திலா, அவரை தலை நிமிர்ந்து பார்க்க, அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co