Truyen3h.Co

காதலுக்குக் கண் உண்டு!

1 நண்பன்

NiranjanaNepol

1 நண்பன்

சென்னை

"சுதா, மாமா சொல்றதை ஏன் கேட்க மாட்டேங்கிற?" என்றாள் ராஜா என்ற ராஜஸ்ரீ.

"எனக்கு ஃபாரின் போக விருப்பம் இல்லைன்னு எத்தனை தடவைச் சொல்றது?" என்றான் சுதா என்கின்ற சுதர்சன்.

"உங்க மாமா ஒரு பெரிய கான்ட்ராக்டர். அவரால எத்தனையோ பேர் நல்லா வாழுறாங்க. ஆனா, நீ தான் அதைப் பயன்படுத்திக்க விருப்பமே காட்ட மாட்டேங்குற." அலுத்துக் கொண்டாள் ராஜஸ்ரீ.

"நான் ஏற்கனவே சந்தோஷமா தான் இருக்கேன், கா."

"நீ வெறும் முப்பதாயிரம் தான் சம்பாதிக்கிற..."

"எனக்கு அது போதும். சொந்தமா வீடு இருக்கு. வாடகைப் பிரச்சினை இல்ல. திருப்தியான சம்பளம் வருது. அது போதாதா?"

"அது போதுமா? உன் எதிர்காலத்துக்குச் சேர்த்து வைக்கணும்னு உனக்கு எண்ணம் இல்லயா?"

"நான் கெமிக்கல் இன்ஜினியரிங்ல மாஸ்டர் முடிச்சு ரெண்டு வருஷம் கூட ஆகல. அதை முடிக்க என்னோட முழு எஃபெர்டையும் போட்டிருக்கேன். கொஞ்சம் என்னை நிம்மதியா மூச்சு விட விடுக்கா. தேவைப்பட்டா நான் நிச்சயம் மாமாகிட்ட வேலை கேட்பேன். போதுமா?"

"உனக்கு அந்த வேலையில விருப்பம் இல்லன்னா, ஷட்டவுன் வேலைக்கு போகலாம்ல? அது வெறும் மூணு மாசம் தான். நல்ல சம்பளம் கிடைக்கும்."

"இதுக்குத் தான் நான் உன் வீட்டுக்கே வர்றதில்ல. நான் சொல்றதை நீ கேக்குறதே இல்ல." என்று சிடுசிடுத்தான் சுதர்சன்.

"சரிடா, சாமி. நான் உன்னை எதுவும் சொல்லல."

"எனக்கு இந்தியாவை விட்டுப் போக விருப்பம் இல்லக்கா. எங்க கம்பெனியில நான் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். அது மட்டும் நல்லா முடிஞ்சிட்டா, எனக்கு இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைக்கும்."

"சரி, மேற்கொண்டு நான் உன்னை வெறுப்பேத்த விரும்பல. நீ மாமா கூட சேர்ந்தா, உன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தான் சொன்னேன். உனக்குத் தேவைப்பட்டா அவரு சப்- காண்ட்ராக்ட் கூட எடுத்துக் கொடுப்பாரு. நாளைக்கு நான் ஒன்னும் சொல்லலன்னு நீ சொல்லக் கூடாதுல்ல?"

"சரிக்கா, நான் மனசுல வச்சிக்கிறேன். இப்போ நான் கிளம்புறேன்."

"இருடா, காபி சாப்பிட்டுட்டுப் போ."

"பரவால்ல, கா. டிரஸ் எல்லாம் அயர்ன் பண்ண வேண்டிய வேலை இருக்கு. எனக்குக் கிடைக்கிறதே ஒரு நாள் தான். அதுல எல்லா வேலையும் செய்யணும்." என்றபடி தன் ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு, கையசைத்துவிட்டு கிளம்பினான் சுதர்சன்.

ராஜஸ்ரீ சுதர்சனின் பெரியம்மா மகள். ஆனாலும் அவர்கள் இருவருக்கும் நல்ல சினேகம் இருந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் அக்காவைச் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தான் சுதர்சன். ராஜஸ்ரீயின் கணவன் சீதாராமன் சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து கொண்டிருந்தான். அவனுக்குச் சுதர்சனை மிகவும் பிடிக்கும். தன் மைத்துனனுக்கு நல்ல வேலைக் கொடுக்க விரும்பினான்  சீதாராமன். ஆனால் சுதர்சனுக்கு வெளிநாடு செல்வதில் விருப்பமில்லை.

அவன் முதுகலை முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது அவனது தாயார் தவறினார். அதன் பிறகு அவனுடைய அப்பாவும் கண்ணெதிரில் பலவீனமடையத் துவங்கினார். அவன் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது அவரும் காலமானார். மிகப்பெரிய மன உளைச்சலுடன் தான் சுதர்சன் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றான். அவனது மனதை ஆற்றுவதில் சீதாராமன் ஜெயஸ்ரீயின் பங்கு மிகவும் பெரியது. அவனது நண்பர்களும் கூட அவனுக்குத் துணையாய் நின்றார்கள்.

சுதர்சனுக்கென்று யாரும் இல்லை. அவன் வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருந்தான். அவனுக்கு யாரையும் சார்ந்து இருப்பதில் விருப்பமில்லை.  அவனது கல்லூரியில் நடந்த வளாக நேர்காணலில் வேலை கிடைத்தது. அதுவே தனக்குப் போதுமானது என்று எண்ணினான் அவன்.

இவற்றையெல்லாம் யோசித்தபடி தன் இரு சக்கர வாகனத்தைச் செலுத்திக் கொண்டு வந்தான். அடையாறு சிக்னலில் சிகப்பு நிறம் ஒளிர, அதைப் பார்த்து வண்டியை நிறுத்தினான். அப்பொழுது தனக்கு மிகவும் தெரிந்த ஒரு நபரைப் பார்த்து அவன் முகம் சுருக்கினான். அது அவனுடன் இளங்கலை பயின்ற, அவனது நெருங்கிய நண்பனான உமாபதி. அவனைக் கண்ட சுதர்சன் அதிர்ச்சி அடைந்தான். ஏனென்றால், அவன் ஒரு பெண்ணோடு இருந்தான். அவனது அதிர்ச்சிக்கு காரணம், அவர்கள் கல்லூரியில் படிக்கும் போது, அவர்களுடன் பயின்ற வாசுகியை, உமாபதி காதலித்தது அவனுக்குத் தெரியும். வாசுகி இன்னமும் கூட உமாபதியைக் காதலித்துக் கொண்டு தான் இருந்தாள் என்பதும் அவன் அறிவான். அதைப் பற்றி உமாபதியே அவர்களது கடைசி சந்திப்பின் போது கூறியிருந்தான். 

சுதர்சனின் கண்கள், உமாபதியின் பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் மீது நகர்ந்தது. அவள் பார்க்க மிக அழகாய் இருந்தாள். கருப்பு கண்ணாடி அணிந்திருந்த அந்தப் பெண், அவனோடு வெகு சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்தாள்.

அதைச் சுதர்சனால் அவ்வளவு சுலபமாய் விட்டுவிட முடியவில்லை. சிக்னல், சிகப்பிலிருந்து பச்சைக்கு மாற காத்திருந்தான். உமாபதியைத் தன் கண் எல்லைக்குள்ளேயே வைத்து, அவனைப் பின்தொடர்ந்தான். அவனுக்கு உமாபதியின் வீடு எங்கிருக்கிறது என்று தெரியாது. அவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்த போதிலும், அவனை உமாபதி தன் வீட்டிற்கு அழைத்ததே இல்லை. அதைப் பற்றி சுதர்சன் கவலைப்பட்டதில்லை. உமாபதியின் குடும்பம் மிகவும் கண்டிப்பானது என்று எண்ணியது தான் அதற்கு காரணம்.

உமாபதியைத் தேடியபடி வந்த போது, கடற்கரையை ஒட்டி இருந்த ஆள் நடமாட்டம் குறைந்த ஓர் சாலையில், உமாபதி தன்னுடன் இருந்த பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தைச் செலுத்த கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவர்களது வண்டிக்கு முன்னால் தன் வண்டியை நிறுத்தி, அவர்களை வழிமறித்தான் சுதர்சன்.

"சுதா, நீயா?" என்று சங்கடத்தோடு புன்னகைத்தான் உமாபதி.

"என்னைப் பார்த்து அதிர்ச்சியா இருக்கா?" என்றான் சுதர்சன் கோபமாய்.

"இல்ல, நான் ஏன் உன்னைப் பார்த்து அதிர்ச்சியாகணும்?" என்றான் உமாபதி தடுமாற்றத்துடன்.

பின்னால் திரும்பி உமாபதியைப் பார்த்தாள் அந்தப் பெண்.

"ஹரி, நான் உன்கிட்ட என் ஃபிரண்ட் சுதாவைப் பத்திச் சொன்னேன்ல? இவன் தான் அது." என்றான் உமாபதி.

"ஓஹோ! உங்க காலேஜ் கேர்ள்ஸ் எல்லாம் பயங்கரமா சைட் அடிப்பாங்கன்னு சொன்னியே, அது இவர் தானா?" என்று சுதர்சனைப் பார்த்துப் புன்னகைத்தாள் அந்தப் பெண்.

அது சுதர்சனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அந்தப் பெண்ணுக்கு அவனைப் பற்றித் தெரிந்திருக்கிறது. அப்படி என்றால், அந்தப் பெண்ணிடம் உமாபதி தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறி இருக்கிறான். யார் இந்தப் பெண்?

"ஹாய், சுதா!" என்று தன் கையை நீட்டினாள் அவள்.

உமாபதி கூறிய அடுத்த வார்த்தைகள், சுதர்சனைக் கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

"இவ என் தங்கச்சி ஹரிதா," என்றான் சங்கடத்தோடு.

"தங்கச்சியா?" என்று முகம் சுருக்கினான் சுதர்சன். அவனது அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால், உமாபதிக்கு ஒரு தங்கை இருப்பதே அவனுக்குத் தெரியாது. இத்தனைக்கும் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். தன் சகோதரியைப் பற்றி இதுவரை அவன் கூறியதே கிடையாது. உண்மையிலேயே அவள் அவனது சகோதரி தானா? அல்லது அவன் பொய் கூறுகிறானா?

அப்போது,

"சுதா, ஹரி கையை நீட்டிகிட்டு இருக்கா பாரு." என்றான் உமாபதி. அவள் கையை மென்மையாய் பற்றி,

"ஹாய்," என்றான்.

"ஐயம் ஹரிதா," என்று மென்மையாய் சிரித்தாள், ஆனால் நம்பிக்கையோடு.

"உமா எனக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கான். நான் ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தேன். இன்னைக்குத் தான் அவனோட கருணை பார்வை எனக்குக் கிடைச்சிது." என்று வெகு சகஜமாய் அவனிடம் பேசினாள் ஹரிதா.

செயற்கை புன்னகையை உதிர்த்தான் சுதர்சன்.

"ஓகே, சுதா, நாங்க கிளம்புறோம்." என்றாள் ஹரிதா.

அவன் சரி என்று தலையசைக்க, மெல்ல வண்டியை நகரத்தினாள் ஹரிதா.

நம்ப முடியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுதர்சன்.

தன் கைபேசியை எடுத்து வாசுகிக்கு அழைப்பு விடுத்தான். அந்த அழைப்பை ஏற்ற வாசுகி,

"ஹாய் சுதா, எப்படி இருக்க? எப்ப உனக்குக் கல்யாணம்?" என்றாள்.

"கல்யாணமா? என்ன சொல்ற, வாசு?"

"ரொம்ப நாள் கழிச்சி என் ஞாபகம் உனக்கு வந்திருக்கே... அதனால உனக்குக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சோன்னு கெஸ் பண்ணினேன்."

"என் கல்யாணம் இருக்கட்டும். உன் கல்யாணம் எப்போன்னு சொல்லு." என்றான் அவன்.

"ரெண்டு வருஷம் ஆகலாம்..."

"நிச்சயமா தான் சொல்றியா?"

"ஆமாம்."

"கடைசியா உமாவை எப்ப பார்த்த?"

"ரெண்டு நாள் முன்னாடி."

"நான் அவனை இப்பத் தான் பார்த்தேன், அவன் தங்கச்சியோட..."

"ஓ... நீ ஹரியை மீட் பண்ணியா?" என்றாள் வாசுகி. அது, ஹரிதா உமாபதியின் தங்கை தான் என்பதை நிச்சயம் செய்தது.

"ஆமாம், மீட் பண்ணினேன்."

"அவளை மாதிரி தன்னம்பிக்கை உள்ள பெண்ணைப் பார்க்கவே முடியாது..."

"ம்ம்ம், சரி, நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்." என்று அழைப்பைத் துண்டித்தான் சுதர்சன்.

ஹரிதா உமாபதியின் தங்கை தான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பொழுது உமாபதி மீது அவனுக்குச் சொல்ல ஒன்னா கோபம் எழுந்தது.

வாசுகிக்குக் கூட அவனது தங்கையைப் பற்றித் தெரிந்திருக்கிறது. ஆனால் அவனுக்குத் தெரியவில்லை. அதை அவனிடம் உமாபதி மறைத்து வைக்க என்ன காரணம்? உமாபதியிடம் பேச வேண்டும் என்று நினைத்தாலும் அதை உடனே செய்ய அவன் விரும்பவில்லை. ஏனென்றால் அவன் தன் சகோதரியோடு இருந்தான். அவன் வீட்டிற்கு செல்லட்டும் என நினைத்தான்.

கண் சிமிட்டும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co