2 சுதர்சனின் அதிர்ச்சி
2 சுதர்சனின் அதிர்ச்சி
உமாபதி தன்னிடம் உண்மையை மறைத்து விட்டான் என்ற உண்மையை ஜீரணிக்கவே முடியவில்லை சுதர்சனால். உமாபதி எப்பொழுதுமே சுயநலம் பிடித்தவன். சிறு சிறு பிரச்சனைகளுக்குக் கூடத் தன் நண்பர்களுடன் சண்டை போடுவான். எல்லா விஷயத்திலும் தனக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நினைப்பான். ஆனால் அவன் அதை எப்பொழுதும் செய்ததில்லை. அவனது நண்பர்கள் அவனை அதைப் பற்றிக் கூறி கேலி செய்வதுண்டு.
அவன் தன் தங்கையைப் பற்றி மறைத்ததற்கான காரணம் அவள் அழகாய் இருக்கிறாள் என்பதாக இருக்குமோ,என்று எண்ணினான் சுதர்சன். தன் தங்கையைப் பார்த்தால், அனைவரும் அவளிடம் வழிவார்கள் என்பதற்காக அவன் அதை மறைத்து விட்டதாய் எண்ணிய அவன் மனம் வெதும்பியது.வீட்டிற்குச் சென்று தனது வேலைகளை முடித்துக் கொண்ட அவன், உமபதிக்கு ஃபோன் செய்தான். இந்நேரம் அவன் வீட்டிற்குச் சென்று சேர்ந்திருப்பான் என்று எண்ணினான். அழைப்பை ஏற்ற உடன் அவனைத் திட்ட வேண்டும் என்று எண்ணிய அவன்,
"யார் பேசுறீங்க?" என்ற பெண்ணின் குரலைக் கேட்டு,
"நான் உமாபதி கிட்ட பேசணும்." என்றான்.
"சுதர்சன், நீங்களா? அவன் குளிச்சிக்கிட்டு இருக்கான்." என்றாள் அந்தப் பெண்.
"நீங்க யார் பேசுறது?" என்றான் அது யார் என்று அவன் கணித்து விட்டபோதிலும்.
"நான் ஹரிதா பேசுறேன். நம்ம மீட் பண்ணோமே..."
"ஓ... உமா என் நம்பரைச் சேவ் பண்ணி வைக்கலையா?" என்ற அவன் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
"சாரி, நான் கவனிக்கல." என்றாள்.
"சரி, உமாகிட்ட நான் ஃபோன் பண்ணேன்னு சொல்லுங்க."
"அவன் பெங்களூர் போற அவசரத்துல இருக்கான். நாளைக்கு அவனுக்கு இன்டர்வியூ. அவன் உங்களுக்கு அப்புறமா ஃபோன் பண்ணுவான்!"
"ஓ... அவன் இன்டர்வியூக்குப் போறானா?"
"ஆமாம், ரெண்டு கம்பெனிக்கு அப்ளை பண்ணி இருந்தான். ரெண்டு நாள்ல திரும்பி வந்துடுவான்."
"சரி, நான் அவன்கிட்ட அப்புறம் பேசறேன்."அழைப்பைத் துண்டித்தான் சுதர்சன். அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. உமாபதியின் தங்கை அவனிடம் பேசும் போது எந்தத் தயக்கமும் இல்லாமல் வெகு சகஜமாய் பேசுகிறாள். அப்படி இருக்க, தனக்கு ஒரு தங்கை இருப்பதை அவன் ஏன் மறைத்து வைத்தான்? அவனுக்கு உமாபதியைப் பிடித்து வெளுக்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் இப்பொழுது அவன் நேர்காணலுக்காக பெங்களூர் புறப்பட்டு கொண்டிருக்கிறான். இப்பொழுது அவனிடம் இதைப் பற்றிப் பேசி, அவனைக் கலக்கமடையச் செய்வது சரியாகாது. அவன் நேர்காணலை முடித்துக் கொண்டு திரும்பி வரட்டும் என்று எண்ணினான்.
மறுநாள்
போக்குவரத்து நெரிசலின் காரணமாக, தன் இருசக்கர வாகனத்தை மெல்ல நகர்த்திக்கொண்டு இருந்தான் சுதர்சன். அப்பொழுது ஹரிதாவைப் பார்த்த அவனது முகம் ஒளிர்ந்தது. தனது தோழியோடு பேசியபடி, அவள் நடைபாதையில் சென்று கொண்டிருந்தாள். அவன் சில நொடி தன்னை மறந்தான். அவள் புன்னகை மாசற்று இருந்தது! அவள் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடி மேலும் அவளுக்கு அழகு சேர்த்தது.
வழக்கமாய் சுதர்சன் பெண்களிடம் வலிய சென்று பேச விரும்பாதவன். ஆனால் இப்பொழுது அவன் அதைச் செய்யத் தயங்கவில்லை. அவளை நோக்கி கையசைத்தான். அவனைக் கடந்து சென்ற போது அவனைப் பார்த்த அவள், பார்க்காதது போல் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அது அவனுக்கு ஏமாற்றம் அளித்தது. கைபேசியில் அவனோடு எவ்வளவு இனிமையாய் பேசினாளே! அப்படி இருக்கும் போது, இப்போது ஏன் அவனைத் தவிர்க்கிறாள்? வலிய போய் பேசுவதால் அவனைத் தவறாக நினைத்து விட்டாளோ?
அன்று முழுவதும் அவனுக்கு மனதே சரியில்லை. அவள் தன்னைத் தவிர்த்து விட்டு சென்றதை அவன் அவமானமாய் உணர்ந்தான். அதை மறந்துவிட்டு தன் வேலையைப் பார்க்க நினைத்தபோது, அது அவனால் முடியவில்லை. அவனது பாழாய் போன மனம், மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டிருந்தது.
மாலை
சுதர்சன் வீடு திரும்பி கொண்டு இருந்தான். அப்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தைக் கடந்த போது, அவனது கால் அணிச்சையாய் பிரேக்கை அழுத்தியது. காலையில், ஹரிதா உள்ளே செல்வதை அவன் பார்த்திருந்தான். அவள் அவனைத் தவிர்த்து விட்டு சென்றதை அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதை நினைத்த போது அவனுக்கு மனம் வெதும்பியது.
அப்பொழுது, பல்கலைக்கழகத்தின் உள்ளிருந்து ஹரிதா தன் தோழியோடு வெளியே வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து துணுக்குற்றான். அதை அப்படியே விட்டுவிட அவனுக்கு மனம் வரவில்லை. அவளுக்கு முன்னால் சென்று நின்றான் அவன். ஹரிதாவுடன் இருந்த பெண், அவனைப் பார்த்து முகம் சுருக்கி,
"என்ன வேணும்? எதுக்காக எங்க வழியை மறிக்கிறீங்க?" என்றாள்.
"உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனா இவங்களுக்குத் தெரியும்." என்றான் ஹரிதாவைப் பார்த்தபடி.
ஹரிதாவின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது! அவள் புன்னகைக்கும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாள்!
"ஹாய், சுதா! யூனிவர்சிட்டிக்கு வந்தீங்களா?" என்றாள்.
"இல்ல, உங்களைப் பார்த்தேன். உமாவைப் பத்தி விசாரிக்கலாம்னு வந்தேன்."
"நீங்க அவனுக்குக் கால் பண்ணலையா?"
"இல்ல, அவன் பெங்களூர்ல இருந்து திரும்பி வந்த பிறகு பேசிக்கிறேன். நான் ஃபோன் பண்ணா அவன் அப்செட் ஆவான்." என்றான் வேண்டுமென்றே, அவள் முகபாவத்தைக் கவனித்தபடி.
"ஆமாம், அவன் சரியான சிடுமூஞ்சி." என்று சிரித்தாள் அவள்.
"இன்னைக்குக் காலையில நான் உங்களைப் பார்த்து கையசைச்சப்போ ஏன் பாக்காத மாதிரி போனீங்க?"
"இன்னைக்குக் காலையிலயா? எங்க?"
"இந்த ரோட்ல தான்."
"சாரி, நான் கவனிக்கல. வரப்போற எக்ஸாம் பத்தி என் ஃபிரண்டுகிட்ட பேசிகிட்டு இருந்தேன். அதனால தான் உங்களைக் கவனிக்காம இருந்திருப்பேன். நான் உங்களைக் காயப்படுத்தி இருந்தா, சாரி." என்றாள் வருத்தத்துடன்.
அவனுக்கு என்ன கூறுவதென்றே புரியவில்லை. அவள் அவனைக் கவனிக்கவில்லையா? ஆனால் அவள் அவனைப் பார்த்ததை அவன் பார்த்தானே. ஒருவேளை அவள் கண்ணாடி அணிந்திருந்ததால், அவன் தவறாக எண்ணிக் கொண்டானோ? என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான் சுதர்சன்.
"இவ என்னோட ஃபிரண்ட் கிருஷ்ணபிரபா."
"ஹாய்," என்றாள் கிருஷ்ணபிரபா.
"கிருஷ்ணா, இவர் உமாவோட ஃப்ரெண்ட். அவங்க ரெண்டு பேரும் காலேஜ் மேட்ஸ். சுதாவுக்கு அவங்க காலேஜ் கேர்ள்ஸ்கிட்ட பெரிய டிமாண்ட் இருந்துதாம்." என்று சிரித்தாள் ஹரிதா.
சில நொடி திகைத்த சுதர்சன்,
"நீங்க என்னைக் கிண்டல் பண்ணலயே?" என்றான்.
"கிண்டலா? ஏன்? நீங்க உங்களைக் கண்ணாடியில பார்த்ததே இல்லையா?" என்றவள், கிருஷ்ணபிரபாவைப் பார்த்து,
"நீயே சொல்லு, கிருஷ்ணா, சுதர்சன் ஹாண்ட்சமா இல்ல?" என்றாள்.
"ரொம்ப ஹாண்ட்சமா இருக்காரு." என்றாள் கிருஷ்ணபிரபா.
சுதர்சனால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.
"உமா எப்பவும் உங்களையும் உங்க கேங்கையும் பத்திப் பேசிக்கிட்டே இருப்பான். உங்க காலேஜ்ல நடந்த அத்தனை கலாட்டாவும் எனக்குத் தெரியும்." என்று சிரித்த அவள், அவன் கூறியதைக் கேட்டு சிரிப்பதை நிறுத்தினாள்.
"ஆனா, எங்க யாருக்கும் உங்களைப் பத்தி தெரியாது. உமாபதிக்கு ஒரு தங்கச்சி இருக்கிறது கூட எங்களுக்குத் தெரியாது." என்ற அவன் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
"உமா அப்படித்தான். சில சமயம் அவன் ரொம்ப சில்லியா நடந்துக்குவான். உங்களுக்கு அவனைப் பத்தி தெரியாதா?"
அவள் கூறியது சரி தான். உமாபதி அப்படித்தான். வாசுகி கூட அவனை அடிக்கடி கடிந்து கொள்வதுண்டு. அவர்களுக்கு இடையில் ஏற்படும் அனைத்து சண்டைக்கும் உமாபதி தான் காரணமாக இருப்பான். ஆனால் அதற்காக அவன் வருந்தியதே கிடையாது.
"உமா எப்ப பெங்களூர்ல இருந்து வரான்?"
"நாளைக்கு நைட் வருவான்."
"ஓ..."
"ஓகே, சுதா, நாங்க காலையில வந்தோம். இன்னும் கூட எங்க வேலை
முடியல. லேட் ஆகுது. அம்மா வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க."
"சரி, நீங்க கிளம்புங்க."
"பை,"
அவள் அங்கிருந்து சென்றாள். சுதர்சன் ஒரு விஷயத்தைக் கவனித்தான். அவள் எப்பொழுதும் தன் தோழியின் கையைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் கூட அவள் கையை விடவில்லை. நடக்கும் பொழுதும் அவள் கையைச் சுற்றி வளைத்துக் கொண்டே நடந்து செல்கிறாள். அவர்கள் இருவரும் ஆட்டோவில் நுழைந்தார்கள்.
புன்னகைத்தபடி தன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றான். அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலை இப்பொழுது இல்லை. ஹரிதா எவ்வளவு இனிமையானவள்! எவ்வளவு கனிவாய் பேசுகிறாள்! உமாபதி அவனைப் பற்றி அவளிடம் நல்ல விதமாய் கூறியிருக்க வேண்டும். அதனால் தான் தயக்கமின்றி அவனிடம் சகஜமாய் பேசி பழகுகிறாள். சுதர்சனுக்கு ஒரு விஷயம் தான் புரியவில்லை. அவர்களைப் பற்றித் தன் தங்கையிடம் அனைத்தையும் உமாபதி பகிர்ந்து கொண்டிருக்கிறான் என்றால், அவளைப் பற்றி ஏன் அவர்களிடம் கூறவில்லை? உமாபதி பெங்களூரில் இருந்து திரும்பி வந்த பிறகு அவனிடம் கேட்க வேண்டும் என்று எண்ணினான் சுதர்சன்.
மறுநாள்
தன் அக்கா மகளின் பிறந்த நாளுக்குப் பரிசு வாங்க ஓர் வணிக வளாகத்திற்குச் சென்றான் சுதர்சன். உள்ளே நுழைந்தவன், புன்னகையோடு நின்றான், அங்கு ஹரிதாவைப் பார்த்து. இந்த முறை அவள் வேறொரு பெண்ணோடு இருந்தாள், கிருஷ்ணபிரபாவோடு இருந்தது போல் தன் விரல்களை அவளோடு பிணைத்துக் கொண்டு. ஆர்வத்தோடு அவளை நோக்கி ஓடினான். ஆனால் அவனைக் கண்டுகொள்ளாமல் அவனைக் கடந்து சென்றாள் ஹரிதா. அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவள் தன் தோழியோடு நகரும் படிக்கட்டை நோக்கி செல்வதைக் கண்டான். ஓடிச் சென்று அவர்களை வழிமறித்தான். ஹரிதாவோடு இருந்த பெண், அவனைப் பார்த்து திடுக்கிட்டு, தான் பற்றி இருந்த ஹரிதாவின் கையை விட்டாள். சரியாய் அதேநேரம், நகரும் படிக்கட்டில் காலை வைத்து விட்டாள் ஹரிதா. அதைக் கண்ட அந்தப் பெண்,
"ஹ...ரி..." என்று கத்தியவள், சுதர்சனை நோக்கி கோபமாய் திரும்பி,
"என்ன வேலை செஞ்சு வச்சிருக்கீங்க? அவ கீழ விழப் போறா," என்றபடி கோபமாய் அவனைப் பிடித்து தள்ளிவிட்டு, படிக்கட்டில் ஏறினாள்.
குழப்பத்தோடு தானும் அந்தப் படிக்கட்டில் ஏறி,
"கீழ விழுந்துடுவாளா? ஏன்? அவ என்ன சின்ன குழந்தையா? எஸ்கலேட்டர்ல அவளால இறங்க முடியாதா?" என்றான்.
"அவ குழந்தை இல்ல, பிளைன்ட்!" என்றாள் அந்தப் பெண், அவனுக்கு அதிர்ச்சி அளித்து.
கண் சிமிட்டும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co