Truyen3h.Co

காதலுக்குக் கண் உண்டு!

12 அழகு

NiranjanaNepol


12 அழகு

ஹரிதா தன்னை அணைத்துக் கொள்ள, மென்மையாய் புன்னகைத்தான் சுதர்சன். தங்களுக்கு இடையில் இருந்த அனைத்து தயக்கங்களையும் அவள் உடைத்தெறிந்தது, அவன் எதிர்பாராத ஒன்று.

"எப்ப திரும்பி வருவீங்க?" என்றாள் கவலையாக.

"தொண்ணுறு நாள் ப்ராஜெக்ட். தொண்ணுத்தி ஓராவது நாள், நான் உன் முன்னாடி இருப்பேன்."

நேராய் அமர்ந்த அவள்,

"நான் உங்களுக்கு ஒன்னு கொடுக்க நினைக்கிறேன். நீங்க அதை வாங்கிக்குவீங்களா?"

"என்ன?"

தன் கைப்பையில் இருந்து தன் அப்பாவின் கைக்கடிகாரத்தை எடுத்து அவனிடம் நீட்டி,

"இது எங்க அப்பாவோட வாட்ச். இதை வாங்கிக்கிறீங்களா?" என்றாள்.

"நீ என்ன கொடுத்தாலும் நான் வாங்கிக்குவேன்."

மகிழ்ச்சியோடு அவன் வலது கையில் அதைக் கட்டி விட்டாள்.

"நல்லா இருக்கு."

"பொய்... அது ரொம்ப ஓல்ட் மாடல் வாட்ச்."

"ஆனா, அதைக் கொடுத்தது நீயாச்சே! உன் அன்பைச் சொல்ற எல்லாமே அழகு தான்!"

"உங்களை மாதிரி யாருமே இல்ல."

"உன்னை மாதிரியும் யாரும் இல்ல. ஆனா நீ ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு இருக்க? நீ தான் ரொம்ப தைரியசாலியான பொண்ணாச்சே..."

"நானும் பலவீனமடைய வேண்டாம்னு தான் நினைக்கிறேன். ஆனா நீங்க தான் என்னை இப்படி மாத்தி இருக்கீங்க"

"நானா?"

"ஆமாம். உங்க அன்பால என்னைப் பலவீனமாகிட்டீங்க. நான் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருப்பேன் தெரியுமா? இதனால தான், காதல் கீதல் எல்லாம் செய்யக்கூடாது" என உதடு சுழித்தாள்.

சுதர்சன் புன்னகைத்தான்.

"சுதா..."

"ம்ம்?"

"நான் பார்க்க எப்படி இருக்கேன்?"

அவளை விசித்திரமாய் ஏறிட்டான்.

"சொல்லுங்க, நீங்க எவ்வளவு நேர்மையானவர்னு நான் தெரிஞ்சுக்கணும்."

"அதுக்கு என்ன அர்த்தம்?"

"எனக்கு பார்வை வந்த பிறகு, நான் என்னைக் கண்ணாடியில பார்ப்பேன். உங்க வார்த்தை எந்த அளவுக்கு உண்மைன்னு அப்போ தெரிஞ்சிக்குவேன்"

"இந்த உலகத்துலயே ரொம்ப அழகான பொண்ணு நீ தான்."

ஹரிதா தன் கண்களைச் சுழற்றினாள்.

"நம்ம மனசுக்கு எது நிம்மதியும் சந்தோஷமும் தருதோ, அது தானே அழகு? நீ தான் என் மனசுக்கு அமைதியைத் தர்ற. அப்படின்னா என்னோட பார்வையில இந்த உலகத்துலயே நீ தான் அழகான பொண்ணு!"

"ஓஹோ, உங்க மனசுக்கு நிம்மதி தர்றதனால தான் நான் அழகா?"

"நீ கலர்ஃபுல்லா இருக்க."

"கலர் ஃபுல்லாவா?"

"ஆமாம். உன் முகத்துல நீ நாலு கலரை வச்சிருக்க. கருகரு முடி... பழுப்பு நிற கண்... கோதுமை நிறம்... சிவந்த உதடு..."

அவன் அவளை வர்ணித்த விதம், அவளுக்குச் சங்கடத்தைத் தந்தது. அவனது குரல் வெகு சாதாரணமாய் இருந்தாலும், அதற்கு எப்படி எதிர்வினை புரிவது என்று அவளுக்குப் புரியவில்லை. அவளது சங்கடத்தை உணர்ந்த அவன் உள்ளூர புன்னகைத்தான்,

"ஹ...ரி..."

"ஆங்?"

"என்ன ஆச்சு?"

"நான் என்னைக் கண்ணாடியில பார்த்து ரொம்ப நாளாச்சு. நான் இப்போ எப்படி இருப்பேன்னு எனக்குத் தெரியல."

"உனக்கு பார்வை திரும்ப வரும் போது, நீ உன்னை கண்ணாடியில பாரு. அப்போ என் குரல் உன் காதுல எதிரொலிக்கும்."

"நீங்க அதை என்கிட்ட நேரடியா, என் கண்ணைப் பார்த்து சொல்ல மாட்டீங்களா?" என்று கேட்டு அவனைத் திணறடித்தாள்.

கண்களைப் பார்த்தா? இப்பொழுதும் கூட அவன் அவள் கண்களைப் பார்த்து தானே கூறுகிறான்? இப்பொழுது, அவன் அவளைத் தான் பார்க்கிறான் என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் அவளுக்கு பார்வை வந்த பிறகு, இந்த நிலை இருக்காது, என்று எண்ணிய போது அவனுக்குள் என்னவோ நிகழ்ந்தது.

"நிச்சயம் உன் கண்ணைப் பார்த்து நான் சொல்லுவேன்."

அப்பொழுது, யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.

"இரு யாருன்னு பாத்துட்டு வரேன்." என்று கூறிவிட்டுச் சென்றான் சுதர்சன். கதவைத் திறந்தவன், கோபமும் சலிப்புமாய் மகேஸ்வரி நிற்பதைக் கண்டான்.

"யார் அவ?" என்றாள்.

"என்னோட உட்பி வைஃப்." என்றான் தயக்கமின்றி.

"இது உங்களுக்கு நல்லா இருக்கா? உங்களுக்காக ஒவ்வொரு நாளும் சாகுற என்னை விட்டுட்டு நீங்க எப்படி இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கலாம்?"

"உன்னை யார் சாகச் சொன்னது?"

"என்னை விட்டுட்டு நீங்க ஏன் அவளைத் தேர்ந்தெடுத்தீங்க?"

"நான் ஏன் உனக்கு பதில் சொல்லணும்?"

"எனக்கு பதில் சொல்லக் கூட உங்களுக்குப் பிடிக்கலையா?"

"நீ யார் எனக்கு?"

மகேஸ்வரி ஏதோ கூற நினைத்தபோது, உள்ளிருந்து வந்த குரல் அவளை நிறுத்தியது.

"சுதா, அங்க என்ன நடக்குது?"

ஹரிதாவின் குரலைக் கேட்டு, சுதர்சனப் பிடித்துத் தள்ளிவிட்டு, அவளுக்குப் பதில் சொல்ல உள்ளே சென்ற மகேஸ்வரி, அப்படியே திகைத்து நின்றாள், அவள் தன் கைகளைக் காற்றில் துழாவி சுதர்சனைத் தேடுவதைப் பார்த்து. அதிர்ச்சியோடு சுதர்சனை ஏறிட்டாள். ஹரிதா அங்கிருந்த நாற்காலியில் தன் காலை இடித்து கொள்ள போனாள். சுதர்சன் ஓடிச்சென்று அவளைத் தடுத்து நிறுத்தினான். அதைக் கண்ட மகேஸ்வரி செய்வதறியாது நின்றாள்.

"அது யார், சுதா?"

"என் பக்கத்து வீட்டு பொண்ணு."

"இவங்களுக்கு கண்ணு..." என்றாள் மகேஸ்வரி.

"ஆமாம்." என்றான் சுதர்சன்.

ஹரிதாவைப் பரிதாபமாய் பார்த்த மகேஸ்வரி, அங்கிருந்து விறுவிறுவென சென்றாள்.

"அந்தப் பொண்ணு யாரு, சுதா?"

"அவளை விடு. உன் ஃபிரெண்ட்ஸ் வர்றதுக்கு முன்னாடி ஏதாவது சாப்பிடு."

அவளைச் சமையலறைக்கு அழைத்துச் சென்ற அவன், சமையலறை மேடையின் பக்கத்தில் நிற்க வைத்தான்.

"அந்தப் பொண்ணு உங்களைக் காதலிக்கிறாளா?"

சில நொடி திகைத்த அவன்,

"இருக்கலாம்." என்றான்.

"உங்களுக்கு அவங்களைப் பிடிக்கலையா?"

"நான் அதையெல்லாம் யோசிக்கல. "

"ஏன்?"

"தெரியல."

"பாவம் அவங்க. அப்செட் ஆயிட்டாங்க போலருக்க"

ஒன்றும் கூறாமல் ஆரஞ்சு பழச்சாறு தயாரித்த அவன், அதை அவளிடம் கொடுத்தான்.

"அவங்க பேர் என்ன?"

"மகேஸ்வரி."

"அவங்க கிட்ட என்னைக் கூட்டிகிட்டுப் போறீங்களா?"

"எதுக்கு?" என்றான் குழப்பத்தோடு.

"மன்னிப்பு கேட்க."

"நீ யார்கிட்டயும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்ல. புரிஞ்சுதா?"

"ஆனா,"

"நான் உன்னைக் காதலிக்காம போயிருந்தா கூட, அந்தப் பொண்ணை காதலிச்சிருக்க மாட்டேன். ஏன்னா, அந்தப் பொண்ணு மேல எனக்கு எந்த ஃபீலிங்ஸும் வரல. அதனால, உன்னைக் குற்றம் சொல்றதை நிறுத்து."

"ம்ம்ம்..."

"நம்மளை யார் காதலிக்கிறாங்க அப்படிங்குறது முக்கியமல்ல. நம்ம யாரை காதலிக்கிறோம் அப்படிங்கிறது தான் முக்கியம். புரிஞ்சிதா?"

"அப்படி சொல்லாதிங்க. அவங்க மனவேதனை நம்மளை தாக்கும். உலகத்திலேயே ரொம்ப மோசமான வலி காதல் வலி தான்."

"அப்படியே இருந்தாலும், அவளோட வலிக்கு காரணம் நீ இல்ல. ஏன்னா, நீ அவளோட சந்தோஷத்தைப் பறிக்கல. எனக்கு அவளைப் பிடிக்கல. அவ்வளவு தான்."

"ம்ம்ம்..."

"ஜூசைக் குடி."

ஹரிதா அதைப் பருகினாள்.

"முதல் தடவையா நான் செஞ்ச ஏதோ ஒன்னை நீ சாப்பிடுற. அது எப்படி இருந்ததுன்னு சொல்லாம, வேற யாரைப் பத்தியோ கவலைப்படுற..." என்று அவள் மனதைத் திசை திருப்ப முயன்றான்.

"உங்களை மாதிரியே ஸ்வீட்டா இருக்கு."

"அப்படியா?"

"ம்ம்ம்..."

"ஆனா, நீ எப்போ என்னை டேஸ்ட் பண்ண?"

அவனுக்குப் பதில் கூற எத்தனித்த அவள், அவன் கூறியதன் அர்த்தம் புரிந்து தடுமாறினாள். அவள் கன்னங்கள் சிவந்தன. அதைக் கண்ட சுதர்சன்,

"எனக்கு பதில் சொல்ல மாட்டியா?" என்றான்.

அவள் வெட்க புன்னகை பூத்தாள்.

"இப்போ இன்னும் ஒரு கலர் கூடிப்போச்சு!"

"ஆங்?"

"சிகப்பு... உன் கண்ணம் சிவந்து போச்சு..."

அவள் உதடு கடித்து சிரித்தாள். அப்பொழுது அவர்கள் மீண்டும் அழைப்பு மணியின் ஓசை கேட்டார்கள். ஹரிதாவின் முகம் மாறியது. அது மகேஸ்வரியாக இருக்குமோ என அவள் எண்ணினாள். சுதர்சனும் தான். கதவைத் திறந்து அவளிடம் சத்தமிட நினைத்தான். ஆனால் ஹரிதாவின் தோழிகள் நின்றிருந்ததைப் பார்த்து, புன்னகை புரிந்தான்.

"உள்ள வாங்க." என்று அவர்களுக்கு வழி விட்டான்.

"நம்ம கிளம்பலாமா, ஹரி?" என்றாள் விசாலாட்சி.

"ம்ம்ம்..." என்று மனமின்றி கூறினாள் ஹரிதா.

"நீ இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருக்கணும்னா நாங்க வெயிட் பண்றோம்." என்றாள் கிருஷ்ணப்பிரபா.

"பரவாயில்ல, அவங்க அம்மா அவளுக்காக காத்துக்கிட்டு இருப்பாங்க." என்றான் சுதர்சன்.

"இந்தியாவை விட்டு கிளம்பறதுக்கு முன்னாடி வீட்டுக்கு வருவீங்க தானே?"

"கண்டிப்பா வருவேன். உன்னைப் பார்க்காம நான் எப்படி கிளம்பிடுவேன்?"

"சரி, நான் கிளம்புறேன்."

"பை."

விசாலாட்சி மற்றும் கிருஷ்ணப்பிரபாவுடன் வெளியே வந்தாள் ஹரிதா. அவள் விசாலாட்சியின் வண்டியில் அமர எத்தனித்த போது,

"ஒரு நிமிஷம்." என்ற குரல் கேட்டு நின்றாள். அது மகேஸ்வரியின் குரல்.

அவள் ஹரிதாவிடம் ஏதாவது கூறி, அவளை மனதை புண்படுத்தும் முன், அவளை நோக்கி விரைந்தான் சுதர்சன்.

"என்னை மன்னிச்சிடுங்க. உங்களுக்குப் பார்வை இல்லன்னு எனக்குத் தெரியாது. சுதர்சன் ரொம்ப நல்லவரு. உங்களை அவர் நல்லா பாத்துக்குவார்." என்று கூறி அவனை திகைக்கச் செய்தாள் மகேஸ்வரி.

"நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க. ஒரு விதத்துல உங்க வேதனைக்கு நான் காரணமாயிட்டேன்."

"எல்லாம் விதிப்படி தானே நடக்கும்?"

"என் மேல வருத்தமா இருக்கீங்களா?"

"நிச்சயமா இல்ல."

"உங்களுக்கு பொருத்தமானவரோட வாழ்க்கையை அமைச்சுக்கிட்டு சந்தோஷமா இருங்க."

"முயற்சி பண்றேங்க. ஆல் தி பெஸ்ட்."

"தேங்க்ஸ். உங்களைப் புரிஞ்சுக்கிட்ட ஒருத்தரைக் கடவுள் உங்க வாழ்க்கையில கூட்டிகிட்டு வரட்டும்."

"தேங்க்ஸ்" என்று புன்னகைத்தாள் மகேஸ்வரி.

"பை." அவளிடமிருந்து விடைபெற்றாள் ஹரிதா.

சுதர்சனை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்து சென்றாள் மகேஸ்வரி. அது அவனை வியப்பில் ஆழ்த்தியது. நாம் முக்கியத்துவம் அளிக்காத சிலருக்குள்ளும் நல்ல மனம் இருக்கத்தான் செய்கிறது!

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co