11 தயார் நிலை
11 தயார் நிலை
ஹரிதா, ஐ லவ் யூ என கூறியதைக் கேட்ட சுதர்சன் உணர்ச்சிவசப்பட்டான். மீண்டும் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்
"உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, சுதா. நீங்க ரொம்ப நல்லவர். உங்களை மாதிரி ஒருத்தரை நான் இதுவரைக்கும் சந்திக்கல. எங்க அப்பாவுக்கு பிறகு யாரும் என்னைப் பத்திக் கவலைப்படவே இல்ல."
"ஹரி, ரிலாக்ஸ்."
"இல்ல, சுதா, என் வாழ்க்கையில எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருந்தது. எனக்கு வாழ்க்கையே இல்லன்னு தோணிச்சு. ஆனா இப்போ, என் வாழ்க்கைக்கு நீங்க ஒரு வேல்யூ கொடுத்திருக்கீங்க. நான் வாழ்வதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கீங்க... என்ன காரணம் தெரியுமா?"
"என்ன காரணம்?"
"நீங்க ஆசைப்பட்ட மாதிரியான ஒரு வாழ்க்கையை உங்களுக்குக் கொடுக்கணும். உங்களை சந்தோஷப்படுத்தணும்."
சுதர்சன் ஏதோ சொல்ல முயன்று, அவள் கூறியதைக் கேட்டு நிறுத்தினான்.
"இது ஈடு கட்டுற விஷயமில்ல... இது ஒரு ஈடுபாடு... என்னோட விருப்பம். நான் இதுவரைக்கும் எந்த விருப்பமும் இல்லாம தான் இருந்தேன். ஆனா, இப்போ எனக்கு விருப்பம் ஏற்பட்டிருக்கு. இன்னொரு விருப்பமும் இருக்கு."
அமைதியாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"உங்களைப் பாக்கணும்னு ஆசையா இருக்கு."
மென்னகை புரிந்த அவன்,
"சீக்கிரமே நீ என்னைப் பார்ப்ப." என்றான்.
"அந்த நாளுக்காக நான் காத்துக்கிட்டு இருக்கேன். உங்களைப் பத்தி உமா நிறைய சொல்லி இருக்கான். அப்போ அதை எல்லாம் நான் பெருசா நினைக்கல. ஏன்னா அப்போ நீங்க பத்தோட பதினொன்னா இருந்தீங்க. ஆனா இப்போ எல்லாம் மாறிடுச்சு."
அவள் எதற்காகவோ தயங்குவது போல் உணர்ந்தான். என்ன என்று அவனுக்குப் புரியவில்லை.
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?"
"தாராளமா கேளு."
"நான் உங்களைத் தொடலாமா?"
இன்னும் அவள் பிடியில் இருந்த தன் கையைப் பார்த்தான். அவள் ஏற்கனவே அவனைத் தொட்டுக் கொண்டு தானே இருக்கிறாள்? பின் எதற்காக அனுமதி?
தன் கையை நீட்டி அவன் தலையைத் தொட்டு, அவன் கேள்விக்குத் தன் செயலால் பதில் அளித்தாள் ஹரிதா. மெல்ல தன் கையைக் கீழே இறக்கி, அவன் வெற்றியை வருடி, தன் விரலால் அவனது புருவங்களை வரைந்து, பிறகு அவனது கண்கள், மூக்கு, கன்னம் என ஒவ்வொன்றாய் தொட்டுப் பார்த்தாள்.
"நீங்க ரொம்ப அழகா இருக்கணும்."
சுதர்சன் ஒன்றும் கூறவில்லை.
"உங்க முகம் ரொம்ப திருத்தமா இருக்கிற மாதிரி தெரியுது." என்று புன்னகைத்தாள்.
"உனக்கு சிம் கார்டு வேணும்னா நான் ஒன்னு வாங்கித் தரேன். இந்த ஃபோன்ல போட்டு பேசலாம்." என்று பேச்சை மாற்றினான்.
"ஆமாம், நீங்க ஃபாரின் போகும் போது எனக்கு ஒன்னு வேணும்."
"சரி, நான் வாங்கிக்கிட்டு வரேன்."
அங்கிருந்து கிளம்பினான் சுதர்சன். அவன் மனதில் ஏராளமான எண்ணங்கள் இருந்தன. ஹரிதா அவனிடம் இவ்வளவு இனிமையாய் பழகுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு அவனை பிடித்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவும் அவன் எதிர்பாராத அளவிற்கு...! அவளது அணுகுமுறை அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. திருமணத்திற்கு பிறகு தங்கள் உறவை பலப்படுத்த அவன் மிகவும் உழைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால், அவளது பழக்கத்தில் நன்றி உணர்ச்சி மேலோங்கி இருந்தது. அவள் மீது அவன் கொண்ட காதலை விட மரியாதை அதிகரித்தது.
மறுபுறம்
தன் மடியில் இருந்த தலையணையை, சுதர்சனின் முகத்தை நினைவு கூர்ந்த படி வருடினாள் ஹரிதா.
சுதர்சன் எவ்வளவு இனிமையானவன்! அவள் மீது அவனுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது. அவன் ஏனோ, தானோ என்று எதையும் செய்யாமல் முழு மனதோடு செய்கிறான். அப்படி ஒருவனை தன் வாழ்க்கையில் அடைந்ததற்காக தன்னை அதிர்ஷ்டம் மிக்கவளாய் உணர்ந்தாள் ஹரிதா.
........
சுதர்சன் வெளிநாடு செல்ல தேவையான அனைத்து வேலைகளும் முழு மூச்சுடன் நடந்து கொண்டிருந்தது. சுதர்சன் தனது ப்ராஜக்டையும் நல்லபடியாக முடித்தான்.
அதோடு சுதர்சனுக்கும் ஹரிதாவுக்கும் இடையில் இருந்த உறவின் ஆழம் அதிகரித்துக் கொண்டே சென்றது. தான் கூறியபடியே அவளுக்கு ஒரு சிம் கார்டு வாங்கி கொடுத்தான் சுதர்சன். ஒவ்வொரு நாளும், உறங்குவதற்கு முன், இருவரும் மனம் விட்டு சிறிது நேரம் பேசினார்கள். அதில் பெரும்பாலானவை 'ஸ்வீட் நத்திங்ஸ்' ஆகத்தான் இருந்தது. அவள் படிக்க வேண்டிய பாடம் அனைத்தையும் கிட்டத்தட்ட பதிவேற்றி விட்டான் சுதர்சன். ஹரிதா தன் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள், சுதர்சன் பதிவிறக்கம் செய்து கொடுத்தவற்றைக் கேட்டபடி.
'நேரம்' காலில் இறக்கையைக் கட்டிக்கொண்டு பறந்தது. சுதர்சன் வெளிநாடு செல்ல இன்னும் ஒரு வாரமே மீதம் இருந்தது.
சிவகாமியின் அறைக்கு வந்த ஹரிதா,
"அம்மா எனக்கு அப்பாவோட வாட்ச் வேணும்" என்றாள்.
"அப்பாவோட வாச்சா? எதுக்கு?"
"வேணும், குடுங்க."
கருப்பு நிற பட்டையுடன் கூடிய ஒரு பழைய கைக்கடிகாரத்தை அலமாரியில் இருந்து எடுத்து ஹரிதாவிடம் கொடுத்தார் சிவகாமி.
"தேங்க்ஸ்."
"இந்த வாட்சை வெச்சுகிட்டு நீ என்ன செய்யப் போற?"
"சுதாவுக்குக் கொடுக்கப் போறேன்."
"இந்தப் பழைய வாட்சை அவனுக்கு பிடிக்குமான்னு தெரியலையே..."
அவருக்கு எந்தப் பதிலும் கூறாமல்,
"உங்க ஃபோனைக் குடுங்க" என்றாள்.
சிவகாமி அதை கொடுத்தவுடன், அதில் ஒரு எண்ணைப் பதிந்து அழைத்தாள். அந்த அழைப்பு ஏற்கப்பட்டது.
"விஷால், இன்னைக்கு நீ கிருஷ்ணா வீட்டுக்குப் போறியா?"
"நானா? ஏன் ஹரி?"
"நீ தானே சொன்ன, என்னையும் உன் கூட கூட்டிக்கிட்டுப் போறேன்னு..."
"நானா? எப்ப சொன்னேன்?"
"சரி, வந்து கூட்டிக்கிட்டுப் போ"
"ஹரி நீ எங்கேயாவது போகணுமா?"
"ஆமாம்."
"எங்க?"
ஹரிதா அமைதியாய் இருந்தாள்.
"சுதா வீட்டுக்கா?"
"ம்ம்..."
"இன்னைக்கா?"
"இன்னைக்கு சாயங்காலம்."
"சரி, நான் வரேன்."
"விஷால்..."
"உங்க அம்மாவையும் அண்ணனையும் பொறுத்த வரைக்கும் நம்ம கிருஷ்ணா வீட்டுக்குப் போறோம். அது தானே?"
"ஆமாம்."
"புரிஞ்சிருச்சு." என்று அழைப்பை துண்டித்தாள் விசாலாட்சி.
"எதுக்காக இன்னைக்குக் கிருஷ்ணா வீட்டுக்கு போக போற?" என்றார் சிவகாமி.
"இன்னிக்கி அவ பர்த்டே."
"ஓ..."
மாலை
ஹரிதாவை அழைத்துச் செல்ல வந்தாள் விசாலாட்சி.
"அம்மா, நான் கிளம்புறேன்."
"ஜாக்கிரதையா போயிட்டு வா"
"கவலைப்படாதீங்க, ஆன்ட்டி. நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரேன்." என்றாள் விசாலாட்சி.
"உனக்கு சுதா வீடு தெரியுமா?"
"எப்ப வந்து கேக்குற?" என்று சிரித்த விஷாலாட்சி,
"தெரியும்" என்றாள்.
"உனக்கு எப்படித் தெரியும்?"
"என் கசின் வீடு அவங்க வீட்டு பக்கத்துல தான் இருக்கு."
"ஓ..."
ஓரிடத்தில் தனது வண்டியை நிறுத்தினாள் விசாலாட்சி. அங்கு அவர்களுக்காக கிருஷ்ணப்பிரபா காத்திருந்தாள். அவர்களது நாடகத்தில் அவளும் ஒரு கதாபாத்திரம். அதனால் அவளையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள நினைத்தாள் விசாலாட்சி, எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்று!
அவர்கள் சுதர்சனின் வீட்டிற்கு வந்தார்கள். விசாலாட்சி அழைப்பு மணியை அழுத்தினாள். கதவைத் திறந்த சுதர்சன், ஹரிதாவைப் பார்த்து,
"ஹரி..." என்றான் ஆச்சர்யமாய்.
"ஹாய்."
"உள்ள வாங்க."
"நீங்க ஹரியைக் கூட்டிகிட்டு போங்க. நாங்க இப்ப வந்துடுறோம்." என்றாள் விசாலாட்சி.
"நீ எங்க போற?" என்றாள் ஹரிதா.
"என் கசினைப் பார்க்க போறேன்." என்று கிருஷ்ணப்பிரபாவுடன் அங்கிருந்து சென்றாள் விசாலாட்சி.
ஹரிதாவை உள்ளே அழைத்துச் சென்றான் சுதர்சன். அதைப் பார்த்த அவனது பக்கத்து வீட்டு மகேஸ்வரி முகம் சுருக்கினாள்.
"நீ என்னைக் கூப்பிட்டிருந்தா நானே உங்க வீட்டுக்கு வந்திருப்பேனே"
"அதனால தான் கூப்பிடல." என்று சிரித்தாள்.
"அதுக்கு என்ன அர்த்தம்?"
"நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதா?"
"இது நம்ம வீடு."
"நீங்க இந்தியாவை விட்டு போறதுக்கு முன்னாடி உங்களைச் சந்திக்க நினைச்சேன்... இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு?" என்ற அவளது குரலில் வருத்தம் இழையோடியது.
"வெறும் மூணு மாசம் தான். பெரிய விஷயத்தைச் சாதிக்க, சின்ன சந்தோஷத்தைத் தியாகம் பண்ணித் தானே ஆகணும்?"
ஆம் என்று தலையசைத்தாள். அவளை சோபாவில் அமர வைத்த அவன்,
"இரு உனக்குக் குடிக்க ஏதாவது கொண்டுவரேன்." என்றான்.
"அப்புறமா கொண்டு வரலாம். இப்போ என்னோட உட்காருங்க."
அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான் சுதர்சன்.
"உங்க குரலைக் கேட்காம நான் எப்படி இருக்க போறேன்னு தெரியல."
"ஃபோன்ல நீ என் குரலைக் கேட்கலாம்."
அவளது முகம் வதங்கிப் போனது.
"மூணு மாசம் தான், ஹரி. அதுக்குப் பிறகு நம்ம எப்பவும் ஒண்ணா தான் இருக்க போறோம். அப்போ உனக்கு பார்வை திரும்ப கிடைச்சிடும்."
"நான் உங்களைப் பார்ப்பேன்..." என்ற போது அவள் முகம் மகிழ்ச்சியில் மின்னியது.
"ம்ம்ம்..."
"உங்களைப் பார்க்க நான் எவ்வளவு ஆசையா இருக்கேன் தெரியுமா?"
"எவ்வளவு?"
"அதை நான் இப்போ சொல்ல மாட்டேன். அதை அனுபவிச்சு புரிஞ்சுக்கோங்க."
"நீ என் ஆர்வத்தைத் தூண்டுற."
"உங்களை விட ஒன்னும் அதிகம் இல்ல..."
"நான் உன் ஆர்வத்தைத் தூண்டுறேனா?"
"இல்லையா?"
"எனக்கு எப்படித் தெரியும்?"
"தூண்டுறீங்க... உங்க அன்பால... அக்கறையால..."
நிமிர்ந்து அமர்ந்த அவள், அவன் முகத்தைத் தன் கையில் ஏந்தினாள். அவன் நெற்றியில் அவள் இதழ் பதித்த போது அவன் திகைத்தான். அவள் அவனை அணைத்துக் கொண்டு, அவனது நிலையைப் பரிதாபமாக்கினாள்.
"உங்களைப் பிரியுறதை நினைக்கும் போது எனக்கு மனசு வலிக்குது." என்றாள் சோகமாய்.
"நம்ம பிரிய போறது இல்ல. அது எப்பவும் நடக்காது. அப்படி ஒரு விஷயம் நடக்க நான் விடமாட்டேன்." என்று அவள் தலையைத் தொட்டான்.
அவள் மேலும் இறுக்கமாய் அவனை அணைத்துக் கொண்டாள்.
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co