16 திட்டப்படி
16 திட்டப்படி
"சுதர்சனுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம்." என்று உமாபதி கூற, திகிலடைந்து அவனை நோக்கி ஓடி அவன் தோள்களைப் பற்றினாள் ஹரிதா.
"நீ என்ன சொன்ன?"
"ஆமாம், ஹரி. இப்ப தான் அப்ராட்டில் இருந்து ஃபோன் வந்தது. என்னோட நம்பரை ஆஃபீஸ்ல கொடுத்திருக்கான் போலிருக்கு. அவங்களோட புது கெமிக்கல் பிளான்டை அவன் பார்த்துகிட்டு இருந்தப்போ அங்கிருந்த ஒரு பார்ட் கொலாப்ஸ் ஆகி அவன் மேல விழுந்துடுச்சாம். ஆனா அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையாம்."
கண்ணீருடன் நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஹரிதா.
"அவங்க கம்பெனியில, அவனைப் பெங்களூருக்கு அனுப்புறாங்களாம்."
"பெங்களூருக்கா?"
"ஆமாம், அங்க இருக்குற ஒரு ஹாஸ்பிடலோட அவங்க கம்பெனி ட்டை அப் வச்சிருக்காங்களாம். ஹரி, உனக்கு இப்ப தான் ஆபரேஷன் பண்ணியிருக்கு. தயவு செஞ்சு அழாத. அவன் இவ்வளவும் செஞ்சது உனக்குப் பார்வை வரணும்னு தான். நீ அழுதா உன் கண்ணு கெட்டுப் போயிடும். அவனோட முயற்சியை எல்லாம் வீணாக்கிடாத."
தன் கண்ணீரை அடக்க முயன்றாள் ஹரீதா. ஆனால் அவளால் அது முடியவில்லை.
"நான் அவரைப் பார்க்கணும்." என்றாள்.
"கவலைப்படாத. நம்ம பெங்களூர் போகலாம்."
"சரி." என்று தன் கன்னங்களை துடைத்துக் கொண்டாள்.
"அம்மா, நம்ம பெங்களூர்ல எவ்வளவு நாளைக்குத் தங்க வேண்டி இருக்கும்னு தெரியல. எப்படி இருந்தாலும் நம்ம பெங்களூருக்கு மாறித்தானே ஆகணும்? அதனால அங்க ஒரு புரோக்கரை ஆன்லைன்ல பிடிச்சு வீடு பார்க்கச் சொல்லிடுறேன்."
"ஆனா, பெங்களூர்ல செட்டில் ஆக நமக்கு பணம் வேணுமே... அதுக்கு என்ன செய்றது?"
"என் ஃபிரெண்ட்ஸ் கிட்ட கடன் கேட்டு பாக்குறேன்."
"வேண்டாம். நமக்கு அங்க நிறைய செலவிருக்கு. இங்கிருந்து பொருளை எல்லாம் கொண்டு போக பணம் தேவைப்படும். வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும். அதோட மட்டுமில்லாம, சுதாவோட கண்டிஷன் எப்படி இருக்குன்னு தெரியல. என்ன இருந்தாலும் அவர் நம்ம மாப்பிள்ளை இல்லையா? நம்ம தானே அவருக்குத் துணையா இருக்கணும்? எல்லாத்தையும் கணக்குப் போட்டு பாரு." அக்கறையோடு கூறினார் சிவகாமி.
"அப்படி பார்க்க போனா, நமக்கு சில லட்சம் தேவைப்படுமே..." என்றான் கவலையாக.
"ஒன்னு பண்ணு, நம்ம வீட்டை அடமானம் வைக்க முடியுமான்னு பாரு."
அதைக் கேட்ட ஹரிதா அதிர்ச்சி அடைந்தாள்.
"நமக்கு வேற வழி இருக்காதுன்னு நினைக்கிறேன்." என்றான் உமாபதி நல்லவனைப் போல.
"ஆனா, அம்மா, நம்ம கிட்ட இருக்கிறது அந்த ஒரு சொத்து தானே?" என்றாள் ஹரிதா.
"அதனால என்ன, ஹரி? உமாவுக்கு தான் பெங்களூர்ல நல்ல வேலை கிடைச்சிருக்கே... அவன் முதல்ல செட்டில் ஆகட்டும். இப்போதைக்கு நம்ம சுதாவுக்குத் துணையா இருக்கிறது தான் முக்கியம். நம்மளை விட்டா சுதாவுக்கு வேற யார் இருக்கா? நமக்கு சுதாவை விட வேற எதுவும் முக்கியம் இல்ல. சுதா நல்லா நல்லா இருக்கணும்."
ஹரிதாவுக்கு வியப்பு தாங்கவில்லை. அவளுக்குத் தெரிந்தவரை சிவகாமி இவ்வளவு பரந்த மனப்பான்மைக் கொண்டவர் அல்ல. ஆனால் இப்பொழுது, அவர் தனது நடவடிக்கையின் மூலம் அவளைத் திக்குமுக்காட செய்திருக்கிறார். அவருக்குச் சுதர்சனை மிகவும் பிடித்து விட்டது போல் தெரிகிறது. அதனால் தான் அவனுக்காக எந்த முயற்சியும் எடுக்க தயாராக இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, உமாபதியும் பெங்களூர் செல்ல வேண்டியவன் தானே? அதைப் பற்றியும் யோசித்து தான் இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்க வேண்டும். எப்படியோ, அவர்கள் சுதர்சனைப் புரிந்து கொண்டது அவளுக்கு மகிழ்ச்சி.
"அம்மா, நான் பேங்க்குக்குப் போய் வீட்டை அடகு வைக்கிறதைப் பத்தி விசாரிச்சிட்டு வரேன். நம்ம திங்ஸை எல்லாம் பேக் பண்ண ஆரம்பிங்க. நான் நம்ம டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்றேன்."
"சரி."
ஆனால், ஹரிதாவுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை, அவர்கள் ஏற்கனவே அவர்களது வீட்டை தங்கள் பக்கத்து வீட்டுக்காரரான ராதாகிருஷ்ணனுக்கு விற்று விட்டார்கள் என்று. அவர் வெகு நாட்களாய் தன் வீட்டை விரிவு படுத்த எண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது சிறிய இடம் அவருக்கு போதுமானதாய் இல்லை. அது சிவகாமி குடும்பத்திற்கும் தெரியும். உமாபதி தங்கள் வீட்டை விற்கப் போகிறேன் என்று சொன்னவுடன், கை மேல் பணம் கொடுத்து அதை வாங்கிக் கொண்டார். அது ஹரிதாவின் அறுவை சிகிச்சையின் போதே நடந்து முடிந்து விட்டது.
அதைப் பற்றி ஹரிதாவிடம் எதுவும் கூற வேண்டாம் என்றும் அவர்கள் ராதாகிருஷ்ணனிடம் வேண்டுகோள் வைத்தார்கள். அதற்கு ஒப்புக்கொண்டார், அவர்கள் வீட்டை வாங்கிய சந்தோஷத்தில் இருந்த ராதாகிருஷ்ணன்.
மீண்டும் சென்னைக்கு வரும் எண்ணமே அவர்களுக்கு இல்லாததால், அதைக் காதும் காதும் வைத்தது போல் செய்து முடித்தார்கள். அந்தப் பணத்தைத் தன் பெயரில் வங்கியில் வரவு வைத்துக் கொண்டார் சிவகாமி. சென்னையில் இருந்த அனைவரிடமும் இருந்த தங்களது உறவை முறித்துக் கொண்டு அவர்கள் பெங்களூர் செல்லத் தயாரானார்கள். தனது பழைய சிம் கார்டை உடைத்துப் போட்டான் உமாபதி. யாரும் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று!
கனத்த இதயத்தோடு தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள் ஹரிதா. முதன்முதலாய் சுதர்சனை நேரில் பார்க்க வேண்டும் என்பதில் அவளுக்கு எவ்வளவு கனவு இருந்தது! ஆனால் இப்பொழுது அவனை மருத்துவமனையில் சந்திக்கப் போகிறாள். இதெல்லாம் விதி வகுத்தது. சுதர்சனுக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று இறைவனை வேண்டினாள்.
வீட்டுக்கு வந்து சிவகாமியைத் தேடிய உமாபதி, ஹரிதா கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.
"ஹரி, தேவையில்லாம ஸ்டிரஸ் ஆகாத. உன் ஃபிரெண்ட்ஸை போய் பார்த்துட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டு வா." என்று வேண்டுமென்றே கூறினான், அவர்கள் மீது அவளுக்கு எந்தச் சந்தேகமும் வரக்கூடாது என்பதற்காக. ஏனென்றால் அவனுக்குத் தெரியும், இப்பொழுது அவளுக்கு இருக்கும் மனநிலையில் அவள் யாரையும் பார்க்க விரும்ப மாட்டாள் என்று.
அவன் ஊகித்தபடியே வேண்டாம் என்று தலையசைத்தாள் ஹரிதா.
"ஏன், ஹரி?"
"எனக்கு இப்போ யாரையும் பார்க்கத் தோணல, சுதாவைத் தவிர! அவரைப் பாக்குற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது." என்ற அவள் தொண்டை அடைத்தது.
"சரி, இன்னைக்கு ராத்திரியே நம்ம கிளம்பணும்."
"நமக்கு டிக்கெட் கிடைச்சிடுச்சா?" என்றாள் ஆர்வமாய்.
"ஆமாம். ஒரு ஏஜென்ட் மூலமா டிக்கெட் வாங்கிட்டேன். சுதா பெங்களூர் வந்துட்டானாம்."
"அவர் எப்படி இருக்காரு?"
"ஒரு பெரிய இரும்பு பைப் அவன் தொண்டையில விழுந்திடுச்சு போல இருக்கு."
"என்ன சொல்ற?" என்றாள். அவள் தொண்டையை யாரோ நெறிப்பது போல் இருந்தது அவளுக்கு.
"அவன் நிலைமை கொஞ்சம் மோசமா தான் இருக்கு போல..."
ஓவென்று அழுதாள் ஹரிதா.
"ஹரி, ப்ளீஸ் அழாதே. நீ இப்படி அழறதைப் பார்த்தா சுதாவோட நிலைமை ரொம்ப மோசமாகும்."
கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
"என்னோட துரதிஷ்டம் அவரை விடாம துரத்துது போலருக்கு. அதனால தான் அவர் இப்படி எல்லாம் கஷ்டப்படுறார்."
"அவன் நல்லா இருப்பான். உன்னோட அன்பு அவனைக் காப்பாத்தும்."
அவனை அணைத்துக் கொண்டு அழுதாள் ஹரிதா. அதைப் பார்த்து புன்னகைத்தார் சிவகாமி.
"ஹரி, போய் முகத்தைக் கழுவிக்கிட்டு தயாராகு. நமக்கு டைம் இல்ல."
"சரி," என்று அங்கிருந்து செல்ல நினைத்த ஹரிதா நின்று,
"வாசு ஏன் என்னைப் பார்க்க வரவே இல்ல? என்னோட ஆபரேஷனைப் பத்தி அவளுக்குத் தெரியாதா?" என்றாள்.
"உனக்கு ஆபரேஷன் முடிஞ்சு நீ மயக்கமா இருந்தப்போ அவ வந்திருந்தா. அதுக்குப் பிறகு வேலையில ரொம்ப பிசியா ஆயிட்டா. உனக்குத் தான் தெரியுமே..."
"நான் அவ கிட்ட பேசட்டுமா?"
"இப்ப தான் நான் அவ நம்பருக்கு ட்ரை பண்ணேன். ஆனா அவ என்னோட ஃபோனை எடுக்கல. பிஸியா இருக்கா போலருக்கு. அவ எனக்கு கால் பண்ணா உனக்குக் கொடுக்கிறேன்." தான் தயாராய் வைத்திருந்த பதில்களை அவளுக்குச் சந்தேகம் ஏற்படாத விதத்தில் கூறி சமாளித்தான் உமாபதி.
எதையோ யோசித்த ஹரிதா, அவனைப் பார்த்து,
"உன்னோட காலேஜ் ஆல்பம் எங்க?" என்றாள்.
உமாபதி புன்னகைத்தான்.
"என்ன?"
"சுதா ரொம்ப புத்திசாலி."
"ஏன்?"
"அவன் உன்னை ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்கான். அதனால தான் லாஸ்ட் டைம் நம்ம வீட்டுக்கு வந்தப்போ, அதை அவன் வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயிட்டான்." என்று சிரித்தான்.
அதைக் கேட்டு வாயைப் பிளந்த ஹரிதா, முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டாள்.
"நீ அவனைப் பார்க்க ட்ரை பண்ணுவேன்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கு. நீ அவனை முதல் தடவைப் பார்க்கும் போது, உன் முகத்தைப் பார்க்கணுமாம்..." என்று நிறுத்திய அவன்,
"ஆனா..." என்றான்.
"இப்பவும் நான் அதே ஆர்வத்தோட தான் இருக்கேன். சுதாவும் அப்படித்தான் இருப்பாரு. உனக்கு அவரைப் பத்தித் தெரியாது. அவர் தன் வலியைக் காட்டிக்காதவர். சந்தோஷத்தை மட்டும் தான் அடுத்தவங்களுக்குக் கொடுப்பாரு. அது தான் என் சுதா." என்று தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி கூறினாள்.
தனது நெற்றியைத் தேய்த்தான் உமாபதி. சுதர்சனைப் பற்றி அவளிடம் இனி பேசவே கூடாது என்ற முடிவுக்கு வந்தான்.
அவர்கள் பெங்களூருவை நோக்கி புறப்பட்டார்கள். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் சுதர்சனைப் பற்றி யோசித்தபடி அமர்ந்திருந்தாள் ஹரிதா. சுதர்சன் இருக்கும் நிலை அவளுக்கு மிக்க வருத்தத்தை அளித்தது. ஆனால் அதே நேரம், அவனைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்தை அவளால் தடுக்கவே முடியவில்லை. எப்படி இருந்தாலும் அது அவள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாய் அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் பயணித்தாள்.
......
ஹரிதாவிடம் பேசி இரண்டு நாட்கள் தான் ஆனது. ஆனால் சுதர்சனுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது. எதற்காக ஹரிதா அவனிடம் பேசவில்லை? அவள் தன் கைபேசியைத் தொலைத்திருந்தால் தான் என்ன? உமாபதியின் கைபேசியிலிருந்து அவனிடம் பேச முடியாதா? அல்லது, அவளது தோழிகளின் கைபேசியில் இருந்து பேச முடியாதா? அவளுக்கு என்ன ஆனது? இங்கு அவன் அவளை எண்ணி எவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிறான்!அவள் ஏன் இப்பொழுது அப்படி இல்லை?
சுதர்சன் வாசுகியைக் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டான். அந்த அழைப்பை ஏற்ற அவள்,
"எப்படி இருக்க, சுதா?" என்றாள்.
"நல்லா இருக்கேன். நீ ஹரியைப் பார்த்தியா?"
"இல்ல, சுதா. நான் டார்கெட்ல வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். இந்த வாரம் தான் போய் பார்க்கப் போறேன்."
"அவ ஆபரேஷனுக்குப் பிறகு நீ அவளைப் பாக்கவே இல்லயா?"
"ஆப்ரேஷனா? எந்த ஆபரேஷனைப் பத்திப் பேசுற?"
"கண் ஆபரேஷன் தான். அதைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவளுக்குப் பார்வை திரும்ப வந்துடுச்சு..."
"என்ன்னனது? எப்போ?"
"நேத்து தான் அவ கண்ணில் இருந்த கட்டை ரிமூவ் பண்ணாங்க."
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, சுதா. ஏன் உமா என்கிட்ட எதுவுமே சொல்லல?"
சுதர்சனுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அவனது கேள்விக்கு அவள் பதில் சொல்வாள் என்று எதிர்பார்த்தால், அவள் அவனிடம் கேள்வி எழுப்புகிறாள்! அது அவனுக்குக் குழப்பத்தைத் தந்தது.
"வாசு, ப்ளீஸ், ஹரியை மீட் பண்ண முடியுமா?"
"நிச்சயமா போறேன். உனக்காக இல்ல... உமாகிட்ட பேசுறதுக்காக. அவன் ஏன் ஹரியைப் பத்தி என்கிட்ட எதுவும் சொல்லலைன்னு கேட்கணும். அவனை நாலு அறை கொடுக்கப் போறேன்." என்றாள் கோபமாக.
சுதர்சனும் கிட்டத்தட்ட அதே மனநிலையில் தான் இருந்தான். ஆனால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கண் சிமிட்டும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co