Truyen3h.Co

காதலுக்குக் கண் உண்டு!

19 பெயர்

NiranjanaNepol

19 பெயர்

தனது புதிய பெற்றோரை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்ட போலி சுதர்சனைப் பார்த்தபடி நின்றாள் ஹரிதா. திவ்யமூர்த்தி என்று அழைக்கப்படுவதற்கு அவன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இவையெல்லாம் என்ன? அவளுக்குத் திவ்யமூர்த்தி என்ற பெயர் சுத்தமாய் பிடிக்கவில்லை. அது அந்நியமாய் பட்டது. சுதர்சன் என்னும் பெயர் எவ்வளவு இனிமையாய் இருக்கிறது! சுதர்சனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவனை எப்படி அவள் திவ்யமூர்த்தி என்று அழைப்பாள்? அந்த எண்ணமே அவளை இம்சை படுத்தியது. அந்தப் பெயரை விடுவது, சுதர்சனையே விடுவது போல் தோன்றியது அவளுக்கு.

அவளுக்கு ஒரு விஷயம் தான் புரியவில்லை. இந்தத் தம்பதியரை அவன் எப்படித் தன் பெற்றோராய் உடனே ஏற்றுக் கொண்டான்? தான் வாழ்நாள் முழுவதும் தாங்கியிருந்த அடையாளத்தைத் தொலைப்பதுக் குறித்து அவன் முகத்தில் எந்தவித வருத்தமோ தயக்கமோ இல்லையே! அவனால் எப்படி அது முடிகிறது? சுதர்சன் அப்படிப்பட்டவனா? அல்லது ஐநூறு கோடி சொத்தைப் பார்த்தவுடன் அவன் மனம் மாறி விட்டதா? அவனால் பேச முடியாவிட்டால் என்ன? அவனது மனதைப் புரிந்து கொள்ள, அவனது முகபாவம் போதுமானதில்லையா? ஆனால் அவன் முகத்தில் எள்ளளவும் துயரம் இல்லையே.

ஹரிதாவுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. அவளது காதல் நிலவரம் சில நிமிடங்களில் தலைகீழாய் மாறிவிட்டது. சுதர்சன் தனக்கென்று யாரும் இல்லாத தனி மனிதன். தன் மனதை அவளிடம் கொட்டித் தீர்ப்பவன். அவளிடம் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உண்மையான அன்பு செலுத்தியவன். தனக்கென்று ஹரிதா மட்டுமே இருப்பதாய் எண்ணியவன். ஆனால் இப்பொழுது, அவனுக்குப் பெற்றோர் இருக்கிறார்கள்... அதுவும் பணக்கார பெற்றோர்! ஏனோ அவளுக்கு எரிச்சலாய் இருந்தது. தன் தலையை அழுத்தினாள்.

"என்ன ஆச்சு, ஹரி?"

"தலை வலிக்குது." என்று பொய் கூறினாள். அவளுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை.

"டாக்டரைக் கூப்பிடுங்க. ஒரு மாத்திரை போட்டா எல்லாம் சரியாயிடும்." என்றார் சுந்தரவல்லி.

"பரவாயில்ல, ஆன்ட்டி. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும். அம்மா, நம்ம கிளம்பலாமா?" என்று கூறி அங்கு இருந்தவர்களை ஏமாற்றமடையச் செய்தாள் ஹரிதா.

உமாபதி சரி என்று தலையசைக்க, திவ்யமூர்த்தியைப் பார்த்த ஹரிதா,

"நான் கிளம்புறேன், சுதா. டேக் கேர்." என்றாள்.

அவன் சரி என்று தலையசைக்க, அவள் அங்கிருந்து கிளம்ப முயன்ற போது,

"ஒரு நிமிஷம், மா." என்றார் சுந்தரவல்லி.

அமைதியாய் அவரை ஏறிட்டாள் ஹரிதா.

"அவனைத் திவ்யான்னு கூப்பிட்டுப் பழகு. அவன் தான் எங்க ஒட்டுமொத்த சொத்துக்கும் ஒரே வாரிசு. நாங்க அவனை எங்க பிள்ளையா மனசுல நினைச்சு தான் அவனை அந்தப் பேர் வச்சு கூப்பிடுறோம். அது வெறும் பேர் இல்ல... எமோஷன்! அதனால் அவனை திவ்யான்னு கூப்பிடு." என்றார்.

"நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும், ஆன்ட்டி. எனக்கும் எமோஷன்ஸ் இருக்கு. திவ்யாங்கிறது உங்க எமோஷன். அதே மாதிரி சுதாங்குறது என்னோட எமோஷன். அவர் முகத்தைக் கூடப் பாக்காம நான் அவரைக் காதலிச்சேன். எனக்கு அவரைப் பத்தி எதுவுமே தெரியாது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் அவரோட பேர் சுதர்சன் அப்படிங்கிறது மட்டும் தான். அதை என்னால மாத்த முடியாது. ஒருவேளை நான் மாத்திட்டா, நான் அவரை காதலிக்கிறதையே நிறுத்திடுவேன். உங்களை நான் காயப்படுத்தி இருந்தா என்னை மன்னிச்சிடுங்க. நான் கிளம்புறேன்." என்று அங்கிருந்து நடந்தாள் ஹரிதா.

அங்கிருந்த அனைவரும் திகைத்து நின்றார்கள். இயலாமையுடன் நின்ற உமாபதியை ஏறிட்டான் திவ்யமூர்த்தி. வேறு வழியின்றி அவர்கள் ஹரிதாவைப் பின்தொடர்ந்தார்கள். தன் கழுத்தில் இருந்த பட்டையைக் கழட்டி எரிச்சலோடு வீசி எறிந்தான் திவ்யமூர்த்தி.

"நாங்க சொல்றோம்னு தப்பா நினைக்காத, திவ்யா. இந்தப் பொண்ணு கூட உன்னால சந்தோஷமா இருக்க முடியும்னு நினைக்கிறியா?" என்றார் ரோஜாபாபு.

"ஆமாம், திவ்யா, உனக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு, நாங்க என்ன செய்யவும் தயாரா இருக்கோம். ஆனா அவளோட மனசை மாத்துறது அவ்வளவு சுலபமா தெரியல. நீ அவளோட பாய் ஃபிரண்ட் இல்லன்னு அவளுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்?"

"அவளை எப்படி வழிக்குக் கொண்டு வரணும்னு எனக்குத் தெரியும்." என்றான் திவ்யமூர்த்தி.

"எப்படி வழிக்குக் கொண்டு வருவ? அவ முகத்தைப் பார்த்தியா? நீ கோடீஸ்வரன்னு தெரிஞ்சதுக்குப் பிறகும், கொஞ்சம் கூட சந்தோஷம் இல்ல. அவளோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிருப்பாங்க. ஆனா இவ, குழப்பத்தோட நின்னா. அவளுக்கு நம்ம மேல சந்தேகம் இருக்குன்னு நினைக்கிறேன்."

"ஆமாம், திவ்யா. அவ பணத்துக்கு எந்த மதிப்பும் கொடுக்கலன்னா, வேற எது அவளைச் சந்தோஷப்படுத்திட போகுது?"

"அம்மா, எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. இவ்வளவு சிம்பிளான அழகோட ஒரு பொண்ண நீங்க பார்த்திருக்கீங்களா? எல்லாத்துக்கும் மேல, அவ மிடில் கிளாஸ் பொண்ணு. அவ பணக்கார பொண்ணுங்களை மாதிரி நினைச்ச நேரத்துல மனச மாத்திக்க மாட்டா. இந்தக் காலத்துல பொண்ணுங்க ரொம்ப சுலபமா மனசை மாத்திக்கிறத நம்ம பாக்கலயா? அந்த மாதிரி பொண்ணு எனக்கு வேண்டாம் மா. அவளோட பிடிவாதம் தான் எனக்குப் பிடிச்சிருக்கு. இப்போ அவ பிடிவாதமா இருக்கலாம். ஆனா கல்யாணத்துக்குப் பிறகு, அவ என்னை விடமாட்டான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ என்னை ஏத்துக்க கொஞ்ச காலம் ஆனாலும் எனக்கு அதுல எந்தப் பிரச்சனையும் இல்ல."

என்ன சொல்வது என்று புரியாமல் நின்றார்கள் அவனது பெற்றோர்.

.....

"ஹரி, எதுக்காக நீ இப்படிச் செய்ற? நீ திவ்யான்னு கூப்பிடணும்னு அவங்க நினைக்கிறாங்க. அதுல என்ன தப்பு இருக்கு?" என்றார் சிவகாமி.

"நான் சொன்னதை நீங்க கேட்கலயா?"

"ஹரி..."

தன் கையைக் காட்டி அவரைத் தடுத்த ஹரிதா,

"என்னால அவரை திவ்யான்னு கூப்பிட முடியாது. அவ்வளவு தான். நான் அவரை அப்படித் தான் கூப்பிடணும்னு நீங்க கட்டாயப்படுத்தினா, நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்."

"என்னடி பேசற? அவன் இப்போ ஒரு கோடீஸ்வரன்."

"அதனால? அவர் கோடீஸ்வரனா இருந்தா என்ன? இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லன்னு புரிஞ்சுக்கோங்க."

"ஆனா..."

சிவகாமியைத் தடுத்தான் உமாபதி.

"அம்மா, விடுங்க. எதுக்காகவும் நீங்க அவளைக் கட்டாயப்படுத்தாதீங்க. இது திவ்யாவுக்கும் அவளுக்கும் இருக்கிற விஷயம்." என்ற உமாபதியை அதிசயமாய் பார்த்தாள் ஹரிதா.

"திவ்யாவா? நிஜமாவா? எப்படி உமா... அவ்வளவு சீக்கிரம் உன்னால மாத்திக்க முடியுது?"

ஒன்றும் கூறாமல் அங்கிருந்து நடந்தான் உமாபதி. நம்ப முடியாமல் அவனைப் பின்தொடர்ந்தாள் ஹரிதா.

......

உமாபதியின் அலுவலகத்தைத் தேடத் தயாரானான் சுதர்சன். அவனது நண்பர்களும் தயாரானதைப் பார்த்த அவன்,

"உங்க ஆஃபீஸ் எங்க இருக்கு?" என்றான்.

"பெல் பக்கத்துல தான். ஆனா இப்போ நாங்க ஆஃபீசுக்குப் போகல. உமாவைத் தான் தேடப் போறோம்."

அதைக் கேட்டு வியப்படைந்த அவன்,

"நான் பார்த்துக்கிறேன்," என்றான்.

"நாங்க ரெண்டு பேரும் மெடிக்கல் லீவ்ல இருக்கோம். அடுத்த பத்து நாள் உன் கூட தான் இருக்கப் போறோம். இந்தப் பத்து நாளைக்குள்ள உமாவைக் கண்டுபிடிச்சிடலாம்.
கவலைப்படாதே."

"ரொம்ப தேங்க்ஸ் டா."

"எமோஷனல் ஆகாத, மச்சி. நம்ம தினமும் ஒரு கம்பெனிக்குப் போய் கண்டுபிடிச்சிடலாம். எப்படியும் அவன் நம்ம கண்ணுல மாட்டுவான்."

ஆம் என்று தலையசைத்து, சட்டையை அணிந்து கொண்ட சுதர்சன், தன் பெட்டியில் இருந்த ஹரிதாவின் அப்பாவின் கைக்கடிகாரத்தை எடுத்து, அன்பாய் புன்னகையோடு தடவிக் கொடுத்தான். அதைப் பார்த்த இந்திரனும் மாலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு அதன் பின்னால் இருக்கும் கதை எண்ணவாக இருக்கும் என்று புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கவில்லை.

"அந்த வாட்ச் ஹரிதாவோட கிஃப்ட்டா?"

"ஆமாம், அவங்க அப்பாவோட வாட்ச். எனக்குக் கொடுத்தா."

"அப்பாவோட வச்சா?"

"ஆமாம். அவ வாழ்க்கையில, அவங்க அப்பாவுக்கு அடுத்த இடத்தை அவ எனக்குக் கொடுத்திருந்தா."

இந்திரன் யோசனையில் ஆழ்ந்தான்.

"நீ நினைக்கிறது சரி தான். என் ஹரி மாதிரி யாருமே இல்ல."

"அப்படின்னா அவங்க எதுக்காக உன்கிட்ட சொல்லாம சென்னையை விட்டு போனாங்க?" என்றான் மாலன்.

"தெரியல, மாலா. அவ ஏன் அப்படிப் பண்ணான்னு எனக்குப் புரியல."

"அவங்களைப் பார்க்குற வரைக்கும், உன் நம்பிக்கையை விடாதே." என்றான் இந்திரன்.

ஆம் என்று தலையசைத்த அவன், அவர்களுடன் ஹரிதாவைத் தேடிப் புறப்பட்டான்.

.......

அவர்கள் ஹரிதாவைத் தேட துவங்கி அது மூன்றாவது நாள். மூன்று கம்பெனியைப் பார்த்தாகிவிட்டது. அதில் திவ்யமூர்த்தியின் நிறுவனம் இல்லை. அவர்கள் தேடுதலைத் தொடர்ந்தார்கள்.

.......

அதே நேரம்,

சோம்பேறித்தனமாய் கட்டிலில் படுத்திருந்தாள் ஹரிதா. ஏனோ அவளுக்கு எதுவுமே செய்யத் தோன்றவில்லை.

அப்பொழுது அவளது அறைக்கு விரைந்து வந்த சிவகாமி,

"ஹரி, சீக்கிரம் கிளம்பு. நம்ம ஹாஸ்பிடலுக்குப் போகணும்." என்றார்.

விருப்பமின்றி அவரை ஏறிட்டாள் ஹரிதா.

"திவ்யாவுக்குக் குரல் திரும்ப வந்துடுச்சாம்."

கட்டிலை விட்டு குதித்து எழுந்தாள் ஹரிதா. அவளது முகம் பிரகாசம் அடைந்தது. சுதர்சன் அவளோடு பேசப் போகிறான், குறைந்தபட்சம், அவனது குரலாவது அவன் சுதர்சன் என்னும் உணர்வை அவளுக்குத் தரப்போகிறதே! சுதர்சனின் குரலைக் கேட்க அவசரமாய் தயாராகி மருத்துவமனைக்கு விரைந்தாள் ஹரிதா.

கண் சிமிட்டும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co