Truyen3h.Co

காதலுக்குக் கண் உண்டு!

20 சுதர்சனின் திடம்

NiranjanaNepol

20 சுதர்சனின் திடம்

அவளுக்கு நம்பிக்கை அளித்த குரல்... அவளைத் தன்னம்பிக்கையோடு திகழச் செய்த குரல்...!

அவளது ஆர்வத்தைக் கண்ட சிவகாமியும் உமாபதியும் ஒருவரை ஒருவர் கலவரத்தோடு பார்த்துக் கொண்டார்கள். திவ்யமூர்த்தி கூறிய விதத்தில் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க அவர்கள் தயாரானார்கள்.

அவள் திவ்யமூர்த்தி இருந்த அறைக்குள் நுழைய, அந்த அறையின் கதவின் கைப்பிடியைப் பிடித்த போது, உள்ளிருந்து வந்தக் குரலைக் கேட்டு நின்றாள்

"இது என் குரல் இல்ல, டாக்டர். என்னால ஏன் என்னோட பழைய குரல்ல பேச முடியல? இந்தக் குரல்ல நான் எப்படிப் பேசுவேன்? இது என்னோட குரல் இல்ல, டாக்டர்."

அதைக் கேட்ட ஹரிதா அதிர்ந்தாள். இப்பொழுது பேசியது சுதர்சனா? உள்ளே நுழைந்த அவள், சுதர்சன் தனது புதிய குரலில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.

"இது என் குரல் இல்ல, டாக்டர்."

எண்ணங்களின் குவியலாய் அவனைப் பார்த்தபடி நின்றாள் ஹரிதா. அவன் சுதர்சன் என்று அவளால் நம்ப முடியவில்லை.

"நீங்க பேசுறிங்க. அதை நினைச்சி சந்தோஷப்படணும். உங்களுக்குக் கடுமையான ஆக்சிடென்ட் ஆகி, உங்க குரல் திரும்ப வந்திருக்கு. நீங்க அதிர்ஷ்டசாலி."

"ஆனா, இது என் குரல் இல்லயே, டாக்டர்."

"ஆனா நீங்க பேசுறீங்க. அது தானே முக்கியம்?"

"டாக்டர், இவ என்னோட ஃபியான்சி. அவ பார்வை இல்லாம இருந்தப்போ நாங்க ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சோம். என் குரலை வச்சு மட்டும் தான் டாக்டர் அவ என்னை அடையாளம் தெரிஞ்சிக்க முடியும். அவளைப் பாருங்க. எப்படி நம்ப முடியாம என்னைப் பார்த்துக்கிட்டு இருக்கா!" என்றான் ஹரிதாவைப் பரிதாபமாய் பார்த்தபடி.

அவன் மீது இருந்த தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள் ஹரிதா.

அவளிடம் வந்த மருத்துவர்,

"நீங்க கொஞ்சம் வெளியில வர முடியுமா?" என்றார் ஹரிதா அவரைப் பின்தொடர்ந்தாள்.

"நீங்க அவருடைய நிலமையைப் புரிஞ்சிக்கணும். ஆக்சிடென்ட்னால அவரு ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்காரு. இப்போ, அவரோட குரல், அவருக்குக் கிடைக்கலைன்னு அவர் இன்னும் மன அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்பிருக்கு. அவ்வளவு பெரிய ஆக்சிடென்ட்டைச் சந்திச்ச பிறகு, அவர் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம். கடவுள் புண்ணியத்துல அவர் பிழைச்சிட்டார். எல்லாத்துக்கும் மேல, அவரால பேசவே முடியாதுன்னு நினைச்சோம். ஆனா இப்போ அவரால பேச முடியுது. நம்ம அதை நினைச்சி சந்தோஷப்படணும். அவரை தயவுசெஞ்சு வருத்தப்பட வைக்காதீங்க."

அவளுக்கே அவளது நிலை என்னவென்று சரியாய் புரியாத போது, அவரிடம் அவள் என்ன கூற முடியும்?

"நீங்க கவலைப்படாதீங்க, டாக்டர். என் பொண்ணு நன்றிகெட்டவ இல்ல, அவர் செஞ்சதையெல்லாம் மறக்குறதுக்கு. திவ்யமூர்த்தி மட்டும் இல்லனா, அவ வாழ்நாள் முழுக்க பார்வை இல்லாம தான் இருந்திருப்பா. அவ அவரைப் பார்த்துக்குவா." என்றார் சிவகாமி.

சரி என்று தலையசைத்த மருத்துவர், அங்கிருந்து சென்றார்.

ஹரிதா தன்னைக் கூர்மையான பார்வை பார்ப்பதைக் கண்ட சிவகாமி,

"என்னை ஏன் அப்படிப் பாக்குற, ஹரி?" என்றார்.

"நான் ஒத்துக்குறேன்... ஒருவேளை சுதா இல்லாம போயிருந்தா எனக்குப் பார்வை திரும்ப கிடைச்சிருக்காது. ஆனா, சுதா மட்டும் இல்லனா, நான் வாழ்நாள் முழுக்க பார்வை இல்லாமலேயே இருந்திருப்பேன்னு ஏன் சொன்னீங்க? இப்ப தான் உமாவுக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கே... சுதாவே இல்லன்னா கூட, உமா எனக்கு ஆபரேஷன் பண்ணி இருக்க மாட்டானா?" என்றாள்.

சிவகாமியும் உமாபதியும் திகைத்து நின்றார்கள். தான் சற்று அளவுக்கு மீறி பேசி விட்டதை உணர்ந்தார் சிவகாமி,

"நான் அப்படிச் சொல்லல, ஹரி. எவ்வளவு சுயநலமில்லாம திவ்யா நமக்கு ஹெல்ப் பண்ணான்?"

"திவ்யா இல்ல சுதா." என்றாள்.

"அந்தப் பேரை நீ விட மாட்டியா?"

"மாட்டேன். என் கடைசி மூச்சு வரைக்கும் விட மாட்டேன்." என்று அங்கிருந்து நடந்தாள்.

அவள் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய சிவகாமி,

"எங்க போற? திவ்யாவைப் பார்க்காம நம்ம எப்படிப் போறது?"

"அவரோட பேர் மாறிடுச்சு. குரல் மாறிடுச்சு. எதார்த்தத்தை ஏத்துக்க எனக்குக் கொஞ்ச டைம் வேணும். உங்களுக்கு இங்க இருக்கணும்னு தோணுச்சுன்னா இருங்க. நான் கோவிலுக்குப் போறேன்."

"நீ இந்த ஊருக்குப் புதுசு. தனியா எங்க போவ?"

"நம்ம வீட்ல இருந்து கொஞ்ச தூரத்துல ஒரு கோவில் இருக்கு. தயவு செஞ்சு என்னைப் போக விடுங்க." என்று அங்கிருந்து நடந்தாள்.

"அவளுக்கு உண்மை தெரியும் போது, நம்ம எப்படி அவளைச் சமாளிக்கப் போறோம்னு எனக்குத் தெரியல." எரிச்சலோடு தன் தொடையை ஓங்கி குத்தினான் உமாபதி.

"நம்ம போகலாம் வா." என்று திவ்யமூர்த்தியின் அறையை நோக்கிச் சென்றார் சிவகாமி.

"ஹரிதா எங்க?"

"உங்களுக்குக் குரல் திரும்பி வந்ததுனால அவ கோயிலுக்குப் போயிருக்கா."

"அவங்க அப்செட்டா இருக்காங்கன்னு எனக்கு ஏன் தோணுது?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பா..."

"நான் அவங்க முகத்தைப் பார்த்தேன். எனக்குக் குரல் வந்ததுல அவங்களுக்குச் சந்தோஷம் இல்ல."

"சீக்கிரமே சரியாயிடுவா."

"அவ திவ்யாவை ஏத்துக்குவான்னு நினைக்கிறீங்களா?" என்றார் சுந்தரவல்லி.

"கல்யாணம் வரைக்கும் அவ அப்படித் தான் இருப்பா. கல்யாணம் ஆன பிறகு, நிச்சயம் அவரை ஏத்துக்குவா. அதனால சீக்கிரம் அவங்க கல்யாணத்தை நடத்திடலாம்." என்றார் சிவகாமி.

"அது எப்படி அவசரமா நடத்த முடியும்?" என்றார் ரோஜாபாபு.

"என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணுங்கப்பா." என்றான் திவ்யமூர்த்தி.

"ஆனா..."

"ஆன்ட்டி சொல்றது சரி. கல்யாணத்துக்குப் பிறகு நான் சுதர்சன் இல்லன்னு தெரிஞ்சாலும் ஹரிதா என்னை ஏத்துக்குவாங்க."

சுந்தரவல்லி ரோஜாபாபுவைப் பார்க்க, அவர் சரி என்று தலையசைத்தார். உமாபதியும் சிவகாமியும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

அவர்கள் திருப்தியோடு வெளியே வந்தார்கள்.

அதே நேரம், அந்த மருத்துவமனையைக் கடந்த மாலன், உமாபதி ஆட்டோவில் ஏறுவதைப் பார்த்தான். சுதர்சனை ப்ளூடூத் வழியாக அழைத்துவிட்டு அந்த ஆட்டோவைப் பின்தொடர்ந்தான்.

அவனது அழைப்பை ஏற்ற சுதர்சன்,

"சொல்லு, மாலா." என்றான்.

"சாதா, நான் உப்புமாவைப் பார்த்துட்டேன். அவன் ஆட்டோல எங்கேயோ போறான். நான் அவனை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் லைவ் லொகேஷன் ஷேர் பண்றேன்."

"சரி, சீக்கிரம் செய்." அழைப்பைத் துண்டித்து விட்டு இந்திரனைப் பார்த்த அவன்,

"உமாவை மாலா பாத்துட்டானாம்."

"தட்ஸ் கிரேட்..."

அந்த ஆட்டோவை நெருக்கமாய் பின்தொடர்ந்தான் மாலன், அவனைத் தவற விட்டுவிடக் கூடாது என்று. அவர்கள் ஒரு சிக்னலில் நின்ற போது, தன் லொகேஷனைச் சுதர்சனுக்கு ஷேர் செய்தான்.

அவர்களது ஆட்டோ ஒரு வீட்டின் முன்னாள் நின்ற போது மாலனும் நின்றான். ஆட்டோவுக்குப் பணம் செலுத்தி விட்டு, அவர்கள் அந்த வீட்டின் உள்ளே சென்றார்கள். ஹரிதாவும் அந்த ஆட்டோவில் இருப்பாள் என்று அவன் எண்ணினான். ஆனால் அவள் இல்லை. அதனால், அவள் வீட்டில் இருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. சுதர்சன் வருவதற்காகக் காத்திருந்தான். அரைமணி நேரத்தில் இந்திரனோடு அங்கு வந்து சேர்ந்தான் சுதர்சன்.

"அந்த வீடு தான்..." உமாபதியின் வீட்டைச் சுட்டிக்காட்டினான் மாலன்.

அந்த வீட்டை நோக்கிச் சென்ற சுதர்சன், கதவைத் தட்டினான். கதவைத் திறந்த உமாபதி தன் வாழ்நாள் அதிர்ச்சியை அடைந்தான். கொந்தளிப்போடு நின்றிருந்த சுதர்சனைப் பார்த்து அவன் வெலவெலுத்துப் போனான்.

"சு...தா..."

"உனக்கு என்னை ஞாபகம் இருக்கா?"

"நாங்க இங்க..."

உமாபதியை உள்ளே தள்ளிய சுதர்சன்,

"ஹரி... ஹரிதா வெளியில வா." என்று கத்தினான்.

வெளியே வந்த சிவகாமி, சுதர்சனைப் பார்த்து அதிர்ச்சியோடு நின்றார்.

"எவ்வளவு தைரியம் இருந்தா, என்கிட்ட சொல்லாம, கொள்ளாம, சென்னையை விட்டு வருவீங்க? ஹரிதா எங்க?"

"அவ இங்க இல்ல." என்று தடுமாறினான் உமாபதி.

"இங்க இல்லைனா, எங்க போனா?" என்று அவன் காலரைப் பற்றினான்.

"அவ பாய் ஃபிரண்டோட மைசூருக்குப் போயிருக்கா." என்று வெட்கமில்லாமல் பொய் கூறினான்.

அவன் பிடித்திருந்த பிடி தளர்ந்தது.

"என்னது? என்ன சொன்ன? பாய் ஃபிரெண்டா? பொய் சொல்லாத. எனக்கு ஹரிதாவைப் பத்தி நல்லா தெரியும். அவ உன்னை மாதிரி இல்ல."

"நாங்களும் அப்படித்தான் நினைச்சோம். ஆனா, ஒரு கோடீஸ்வரனைப் பார்த்த உடனே, அவ மனசு மாறிடுச்சு. அவளுக்காக அவன் என்ன வேணா செய்யத் தயாரா இருக்கான். கோடிக்கணக்கான பணத்தை அவ காலடியில கொட்டினான். அவ சொன்னதைக் கேக்குறதைத் தவிர எங்களுக்கு வேற வழியில்லாம போச்சு." என்றார் சிவகாமி.

"தன் வீட்டு கதவைத் தட்டின அப்பேர்ப்பட்ட ஒரு வாழ்க்கையை அவ எப்படித் தவற விடுவா? அவ பேருல நூறு கோடி ரூபாயை அவன் டெபாசிட் பண்ணியிருக்கான். அது அவளோட நடவடிக்கையை அடியோட மாத்திடுச்சு. எங்க அப்பா கட்டின வீட்டைக் கூட விக்கச் சொல்லி எங்களைக் கட்டாயப்படுத்தினா. அந்த வீட்டு மேல நாங்க எவ்வளவு பிரியமா இருந்தோம்னு கூட அவ மறந்துட்டா."

"நீ உன் தங்கச்சிக்குப் புத்திமதி சொல்லலயா?" என்றான் இந்திரன்.

"சொன்னோம். அவ விருப்பப்படி நடக்கலன்னா, தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டினா."

உமாபதியை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு நின்ற சுதர்சனை, ஏறிட்டான் இந்திரன்.

"அவ எப்ப வருவா?"

"இன்னைக்குத் தான் போனா. அவ திரும்பி வர நாலு நாள் ஆகும்."

"கல்யாணமாகாத ஒரு பொண்ணை, பாய்ஃபிரண்ட் கூட எப்படி நீ அனுப்பி வச்ச?"

"அவ புத்தி அவகிட்ட இல்ல. அவகிட்ட பேசுறது வேஸ்ட். அவளுக்குத் தெரியாதா, கல்யாணத்துக்கு முன்னாடி பாய்ஃபிரண்டு கூடப் போக கூடாதுன்னு? நீ அவளைப் பார்த்து என்ன செய்யப் போற, சுதா? அவளோட காதல் உண்மையானதா இருந்திருந்தா, அவளுக்கு இன்னொருத்தனை ஏத்துக்க எப்படி மனசு வந்தது?"

இந்திரனுக்கும் மாலனுக்கும் என்ன கூறுவது என்று தெரியவில்லை. அவர்கள் சுதர்சனுக்காக வருத்தப்பட்டார்கள். உமாபதியின் தங்கை அவனைப் போலவே இருப்பதாய் அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால் சுதர்சனின் மனம் வேறு எதையோ சிந்தித்தது. உமாபதியின் ஒரு வார்த்தையையும் அவன் நம்பவில்லை. ஹரிதாவைப் பார்க்காமல் அவன் கூறுவதை நம்ப அவன் தயாராக இல்லை. அவள் அவனை விட்டு விட்டாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. பணத்திற்காக அவள் தன் மனதை மாற்றிக் கொண்டிருப்பாள் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, திருமணத்திற்கு முன்பே அவள் ஒருவனோடு மைசூருக்குச் சென்றாள் என்பதை அவன் மனம் ஏற்கவில்லை.

ஒன்றும் கூறாமல் அந்த இடம் விட்டு அகன்றான். மற்ற இருவரும் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.

பல்லைக் கடித்த படி தன் தலையில் அடித்துக் கொண்டான் உமபதி.

"எப்படி அவன் இங்க வந்தான்? அவன் ஃபாரின்ல தானே இருந்தான்?" என்றார் சிவகாமி.

"அவன் எப்படி நம்மளை மோப்பம் பிடிச்சான்னு தெரியல. நம்ம உடனே வீடு மாத்தியாகணும்."

"ஆனா எப்படி?"

"எப்படியாவது செஞ்சாகணும். சுதா உண்மையைக் கண்டுபிடிக்குறதுக்கு முன்னால..."

......

வெளியே வந்த சுதர்சன்,

"நான் உமாவை நம்பல." என்றான்.

"நீ அவனை எங்க பார்த்த?" என்றான் இந்திரன்.

"கேஆர் ஹாஸ்பிடல் வாசல்ல வச்சு பார்த்தேன்."

"அவங்க எதுக்காக ஹாஸ்பிடலுக்குப் போனாங்க? அவங்க ரெண்டு பேருமே உடம்பு சரியில்லாத மாதிரி இல்லயே..." என்றான் இந்திரன்.

"அப்படியே இருந்தாலும், ஏன் அந்த ஹாஸ்பிடலுக்குப் போனாங்க? உமாபதி பெங்களூருக்குப் புதுசு. அப்படி இருக்கும்போது, அவன் தங்கி இருக்கிற வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற மத்த எல்லா ஹாஸ்பிடலையும் விட்டுட்டு அங்கே ஏன் போனான்?" என்றான் சுதர்சன்.

"அதை நான் கண்டுபிடிச்சி சொல்றேன்." என்றான் இந்திரன்.

"அதேநேரம், நம்ம அவங்க வீட்டு மேல ஒரு கண்ணு வைக்கணும். நாளைக்கு காலையில மறுபடியும் நான் இங்க வரேன்." என்றான் மாலன்.

யோசனையோடு தலையசைத்தான் சுதர்சன்.

கண் சிமிட்டும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co