5 ஹரிதாவின் நிலை
5 ஹரிதாவின் நிலை
திருப்தியுடன் புன்னகை புரிந்தாள் ஹரிதா. சுதர்சன் ஒரு பெருந்தன்மையாளன். அவன் கொடுத்த குறிப்புகளைப் பயன்படுத்தி மீண்டும் தன்னிடத்தில் வந்து அமர்ந்தாள். அவன் அங்கு இல்லாததை உணர்ந்த ஹரிதா, அவன் கழிப்பறைக்குச் சென்றிருக்கலாம் என்று எண்ணினாள்.
பத்து நிமிடத்திற்குப் பிறகு, தன் இருக்கையில் வந்து அமர்ந்தான் சுதர்சன்.
"நீங்க வந்துட்டீங்களா?" என்றாள் அவன் வந்ததை உணர்ந்த அவள்.
"ஒருத்தரோட ஸ்மெல்லை வச்சே அவங்களோட இருப்பை உங்களால கண்டுபிடிக்க முடியுமா?"
"நீங்க உங்க பர்ஃபியூமை மாத்தாத வரைக்கும்..." என்று சிரித்தாள்.
தன் முகத்தை லேசாய் திருப்பி, தன் சட்டையை நுகர்ந்தான் அவன்.
"நீங்க என்ன வேலை பாக்குறீங்க?"
"நான் ஒரு கெமிஸ்ட்... "
"நீங்க எப்படி டைம் பாஸ் பண்ணுவீங்க?"
அவள் ஏன் அதைக் கேட்டாள் என்று புரியாத அவன்,
"என்னோட டைம் பாஸ் பத்தி ஏன் கேக்குறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? உங்ககிட்ட ஏதாவது சஜஷன் இருக்கா?" என்றான் புன்னகையோடு.
"நீங்க எம்ஈ படிச்சுக்கிட்டு இருக்கும் போது உங்க அம்மா அப்பா தவறிட்டதா உமா சொன்னான். உங்களுக்குக் கூடப் பிறந்தவங்களும் யாரும் இல்ல. அப்படின்னா நீங்க வீட்ல தனியா தானே இருப்பீங்க? அப்போ நீங்க தனிமையை உணர்வீங்க தானே...?"
அழகாய் புன்னகைத்தான் சுதர்சன்.
"நான் எப்பவுமே என்னை பிஸியா வச்சுக்குவேன். ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் தான் போகவே போகாது. அதை வீட்டை கிளீன் பண்றதுல செலவிடுவேன்."
"உங்க பேரன்சை நீங்க ரொம்ப மிஸ் பண்றீங்க தானே?"
தன் பெற்றோரைப் பற்றி எண்ணிய அவன், அவளது நிலையை மறந்து தலையசைத்தான். அதைக் காண முடியாத அவள், அவன் வருத்தத்தில் இருப்பதாய் எண்ணி,
"நான் உங்களை அப்செட் பண்ணியிருந்தா சாரி." என்றாள்.
"அப்படியெல்லாம் இல்ல. நீங்க சொன்னது எதார்த்தம் தானே?"
"ஆனா, நீங்க அமைதியா ஆயிட்டீங்களே."
"நான் தலையசை..." என்று பாதியில் நிறுத்தினான், தான் செய்த தவறை உணர்ந்த அவன்.
அதைப் புரிந்துக்கொண்டு புன்னகைத்தாள் ஹரிதா.
"ஐ அம் சாரி... நான்..."
"என்னோட சிங்க்ரனைஸ் ஆக எல்லாருக்கும் கொஞ்சம் டைம் ஆகும்."
தன்னைத்தானே கடிந்து கொண்டான் சுதர்சன். ஆனால் அவளோ, அதனால் பாதிக்கப்பட்டது போல் தெரியவில்லை.
"நீங்க தினமும் ஹோட்டல்ல தான் சாப்பிடுவீங்களா?"
"இல்ல, நானே சமைப்பேன்."
"உங்களுக்குச் சமைக்க தெரியுமா?" என்றாள் ஆர்வத்தோடு.
"நல்லாவே சமைப்பேன்."
"உங்க வைஃப் ரொம்ப லக்கி."
அவன் அழகாய் புன்னகைத்ததைப் பார்க்கும் அதிர்ஷ்டம் அவளுக்கு இருக்கவில்லை.
"எனக்கு சமையல்ல ரொம்ப இன்ட்ரஸ்ட். ஆனா அம்மா என்னைச் சமைக்க விட மாட்டாங்க." என்றாள் ஹரிதா.
"அவங்களுக்கு உங்க மேல அக்கறை இருக்கு." என்று அவன் கூறிய பதில், அவள் மனதைத் தொட்டது. வழக்கமாய் அவளது குறையைத் தான் அனைவரும் அடிக்கோட்டிட்டு காட்டுவார்கள். அவளது அம்மா கூட அதை அடிக்கடி செய்வதுண்டு. அவள் ஏதாவது செய்ய நினைக்கும் போதெல்லாம், 'ஹரி, உனக்குக் கண்ணு தெரியாதுங்கிறதை மறந்துடாத' என்பார், என்னவோ அவள் அதை மறந்துவிட்டது போல! ஆனால் அவன் கூறிய விதம் அவளுக்கு பிடித்திருந்தது.
"நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல." என்றாள் வேண்டுமென்றே.
"உங்களுக்குக் காயம் பட வாய்ப்பு இருக்குன்னு பயந்து அவங்க அப்படிச் சொல்லியிருப்பாங்க. உங்களை மாதிரி அனுபவம் இல்லாதவங்களுக்கு நெருப்பைக் கையாள்றது ரொம்ப ஆபத்தானது."
ஹரிதா புன்னகை புரிந்தாள்.
உமாபதியும் வாசுகியும் சாப்பிட்டு முடித்தார்கள். வாசுகி உணவக ஊழியரை அழைத்து,
"பில் கொண்டு வாங்க." என்றாள்.
"உங்க பில்லை ஏற்கனவே செட்டில் பண்ணியாச்சு மேடம்."
"யார் செட்டில் பண்ணது?"
"இவர் தான்." என்று சுதர்சனைச் சுட்டிக்காட்டினார்.
சுதர்சன் அவளைப் பார்த்து புன்னகைக்க,
"ஏன், சுதா? இது என்னோட பார்ட்டி." என்றாள்.
"இருக்கலாம்... ஆனா, நான் திடீர்னு வந்தேன். அதனால அதை நான் ஏத்துக்கிட்டேன்."
"இல்ல, இல்ல..."
"ரிலாக்ஸ், வாசு. இதை என் பர்த்டே கிஃப்டுன்னு நினைச்சிக்கோ."
"ஏன் இப்படி பண்ற, சுதா?"
"நீ இதை வேற விதத்தில் சுதாவுக்குத் திருப்பி கொடுத்துடு, வாசு." என்றாள் ஹரிதா.
"எந்த விதத்துல?"
"அவர் கல்யாணத்துக்குப் பிறகு ஒரு ட்ரீட் கொடுத்துடு."
சுதர்சன் தன் கண்களைச் சுழற்றினான்.
"நல்ல ஐடியா." என்றான் உமாபதி.
"உனக்கு, நானே சமைச்சு ட்ரீட் தரேன்." என்றாள் வாசுகி.
"ரிஸ்க் எடுக்காத, வாசு. சுதா நல்லா சமைப்பார் போலருக்கு. சமைக்கத் தெரிஞ்சவங்களைத் திருப்திப்படுத்துறது அவ்வளவு சாதாரண விஷயமில்ல. மறந்துடாத." என்றாள் ஹரிதா கிண்டலாய்.
"அப்படியா, சுதா? நீ சமைப்பியா?"
"பின்ன? எனக்காக சமைக்க எங்க வீட்ல யாரு இருக்கா? அதனால கத்துக்கிட்டேன்?"
"யார் சொல்லிக் கொடுத்தா?"
"செஃப் கூகுள்..." என்று அவன் கூற, மற்றவர்கள் சிரித்தார்கள்.
"நீ சமையல் கத்துக்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பல்ல?"
ஹரிதாவைப் பார்த்தபடி,
"ஆமாம், சமைக்கிறது ஒன்னும் அவ்வளவு ஈசி இல்லையே." என்றான்.
அவன் அதைத் தனக்காக தான் கூறுகிறான் என்று புரிந்து கொண்ட ஹரிதா, புன்னகைத்தாள்.
"சரி, நான் கிளம்புறேன்." என்றான் சுதர்சன்.
"நாங்களும் கிளம்பறோம்." என்று மூவரும் எழுந்தார்கள்.
அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்களிடம் விடைபெற்று தனது இருசக்கர வாகனத்தைத் இயக்க முனைந்தாள் வாசுகி. ஆனால் அது ஸ்டார்ட் ஆகவில்லை.
"அடக்கடவுளே! இப்போ நான் எப்படி வீட்டுக்குப் போவேன்?"
"கேப் புக் பண்ணட்டுமா?" என்றான் சுதர்சன்.
"அப்படின்னா நான் என் பைக்கை எப்படி எடுப்பேன்? நாளைக்கு நான் ஆஃபீஸ் போகணுமே?"
"சரி, இரு, மெக்கானிக்கைக் கூப்பிடுறேன்." என்று தனக்குத் தெரிந்த ஒரு மெக்கானிக்குக்கு ஃபோன் செய்தான் சுதர்சன்.
"வாசு, மெக்கானிக் வர்ற வரைக்கும் நீயும் ஹரிதாவும் உள்ள இருங்க." என்றான் சுதர்சன்.
அவன் கூறியபடியே ஹரிதாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் வாசுகி. வரவேற்பில் அவளை அமர வைத்து, தானும் அமர்ந்துகொண்டாள். அரை மணி நேரத்தில் மெக்கானிக் வந்து, வாசகியின் வாகனத்தைப் பரிசோதித்தான். அதைப் பார்த்த வாசுகி,
"ஹரி, மெக்கானிக் வந்துட்டாரு. நான் போய் என்னன்னு பாத்துட்டு வரட்டுமா? நீ இங்க இருக்கியா?" என்றாள்.
"நான் இருக்கேன், நீ போ."
பிரச்சனை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளச் சென்றாள் வாசுகி.
"இன்ஜின்ல பிரச்சனை, சார். அது இப்போ முடியாது. நேரம் ஆகும்." என்றான் மெக்கானிக்.
வாசுகிக்கு 'ஐயோ!' என்றானது. இன்ஜின் பிரச்சனை அவ்வளவு சீக்கிரம் தீராது என்று அவளுக்குத் தெரியும்.
மெக்கானிக் கூறுவதை வாசுகி கேட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட சுதர்சன்,
"வாசு, ஹரி எங்க?" என்றான்.
"அவ ரிசப்ஷன்ல இருக்கா."
வரவேற்பை நோக்கி சென்றான் சுதர்சன்.
இதற்கிடையில்...
சோபாவில் சாய்ந்து அமர்ந்த ஹரிதா, யாருக்காகவோ காத்திருப்பது போல் பாவனைச் செய்தாள். அப்போது அவள் தொடையை யாரோ தொட திடுக்கிட்டாள். அவள் அந்தக் கையைத் தட்டி விட்டாள்.
"எப்படி இருக்க, ஹரி?" என்ற குரலைக் கேட்ட ஹரிதா, திகில் அடைந்தாள்.
அது உமாபதியின் நண்பன் நித்தியானந்தம், ஹரிதாவிடம் தவறாக நடந்து கொண்டவன்.
"எப்பவும் நான் உன்னைப் பத்தித் தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன், ஹரி. உன்னை என்னால மறக்கவே முடியல தெரியுமா?" என்று அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
தன் பையில் வைத்திருந்த பெப்பர் ஸ்பிரே பாட்டிலை எடுத்து, அதை அவன் முகத்தில் அடித்தாள் ஹரிதா. காரம் தாங்காமல் துடித்தான் நித்தியானந்தம்.
"எவ்வளவு தைரியம் இருந்தா என்னைத் தொடுவ? உன்னைப் பார்த்து நடுங்கின அதே ஹரிதான்னு நினைச்சியா? உன்னைக் கொன்னுடுவேன் டா... வெறி நாயே! உன் தைரியத்தை நீ என்கிட்ட மட்டும் தான் காட்டுவியா? நீ சரியான ஆம்பளையா இருந்தா, உன் பொறுக்கி தனத்தைக் குறை இல்லாதவங்க கிட்ட காட்டுடா." என்று அவனைப் பிடித்து தள்ள, அவன் கத்தியபடி தரையில் விழுந்தான்.
அங்கு வந்த சுதர்சன், அதைப் பார்த்துத் திகைத்து நின்றான்.
"வாயை மூடுடி, குருட்டு நாயே..." என்று ஆத்திரத்தில் கத்தினான் நித்தியானந்தம்.
அவனைப் பிடித்து தூக்கி ஓங்கி அறைந்தான் சுதர்சன்.
"அடிச்சு பல்லை எல்லாம் உடைச்சிடுவேன்... யாரை பாத்து என்ன சொல்ற?" சுதர்சனின் குரலைக் கேட்ட ஹரிதா,
"சுதா... சுதா, அவனை விட்டுடாதீங்க... அந்தப் பொறுக்கியை விடுடாதீங்க." என்று கத்தினாள். அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. அவளது பரிதாபமான நிலையைப் பார்த்த சுதர்சன், நித்யானந்தத்தைப் பிடித்து தள்ளிவிட்டு அவளிடம் வந்து,
"ஹரி, ரிலாக்ஸ்." என்றான்.
அவனது சட்டையை இறுக பற்றிய ஹரிதா,
"சுதா, அவன் நல்லவன் இல்ல. ரொம்ப மோசமானவன். அவனை விட்டுடாதீங்க." என்றாள் பரிதவிப்புடன்.
"அவன் என்ன செஞ்சான்?"
"அவன் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணான், இதுக்கு முன்னாடி செஞ்ச மாதிரியே..."
அவன் யார் என்று சுதர்சனுக்குப் புரிந்து போனது. கோபமடைந்த அவன், நித்தியானந்தத்தை நோக்கி செல்ல முயன்ற போது, அவன் சட்டையை மேலும் இறுக்கமாய் பிடித்துக் கொண்டாள் ஹரிதா.
"சுதா, ப்ளீஸ் போகாதீங்க,"
"இல்ல, நான் போகல."
கூச்சல் கேட்டு அந்த இடத்தில் கூடிய மக்கள், நித்தியானந்தத்தைப் பிடித்துக் கொண்டார்கள். உமாபதியும் வாசுகியும் அவர்களை நோக்கி ஓடி வந்தார்கள். தனது 'முன்னாள் நண்பனை' பார்த்த உமாபதி அதிர்ச்சி அடைந்தான்.
ஹரிதா பதற்றத்துடன் சுதர்சனின் சட்டையைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவன், என்ன நடந்திருக்கக் கூடும் என்பதை ஊகித்துக் கொண்டான். நித்தியானந்தத்திடம் வந்து, அவன் முகத்தில் ஓங்கி குத்து விட்டான்.
தன் சட்டையை ஹரிதாவின் பிடியில் இருந்து எடுக்க முயன்றான் சுதர்சன். அவன் சட்டையை விட்டு, கையைப் பற்றிக் கொண்டாள் ஹரிதா. அவள் கைகள் நடுங்குவதைக் கண்டான் சுதர்சன்.
"ஹரி, நான் இங்க தான் இருக்கேன். பயப்படாதீங்க."
"சுதா, அவன் என்ன பண்ணான் தெரியுமா?"
"எனக்குத் தெரியும்." என்றான் மென்மையாய்.
ஹரிதா பார்வையற்றவள் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள், நித்தியானந்தத்தை உதைக்க துவங்கினார்கள். அங்கிருந்து அவன் ஓட முயன்ற போது, அது அவனால் இயலவில்லை. அவனது சட்டை மக்களால் கிழித்து எறியப்பட்டது. அந்த ஹோட்டலின் மேலாளர் போலீசுக்கு ஃபோன் செய்ய முனைந்த போது, அவரை உமபதி தடுத்தான்.
"சார், தயவு செஞ்சு போலீஸைக் கூப்பிடாதீங்க."
"ஏன் சார்? அவன் உங்க தங்கச்சிகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்கான்."
"விஷயம் போலீஸுக்குப் போச்சுன்னா அவ எதிர்காலம் பாதிக்கப்படும், சார், புரிஞ்சுக்கோங்க."
ஹரிதாவின் கையைப் பிடித்திருந்த சுதர்சன், அவளுடன் கோபமாய் உமாபதியிடம் சென்றான்.
"உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஹரிகிட்ட தப்பா நடந்துக்கிட்டதுக்கு அவனுக்குப் பனிஷ்மென்ட் கிடைக்கணும்."
"சுதா, ப்ளீஸ் போதும். நாங்க கிளம்பறோம்." என்று ஹரிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து நடக்க முயன்றான் உமாபதி. ஆனால் அவனால் அது முடியவில்லை. ஏனென்றால், ஹரிதா சுதர்சனின் கையை இறுக்கமாய் பற்றி இருந்தாள்.
"ஹரி, அவனை விடு."
"இல்ல, நித்யாவைப் போலீஸ்ல பிடிச்சுக் கொடு."
"ஹரி, தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ."
"நீ புரிஞ்சுக்கோ. நீ என் ஃப்யூச்சரைப் பத்திக் கவலைப்படற... எனக்கு பியூச்சரே இல்லன்னு முதல்ல புரிஞ்சுக்கோ. என்னை மாதிரி ஒரு குருட்டுப் பொண்ணை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க."
"ஹரி..."
"உண்மையிலேயே உனக்கு என் மேல பாசம் இருந்தா, அவனைப் போலீஸ்ல பிடிச்சுக் குடு."
இயலாமையோடு அவளைப் பார்த்தான் உமாபதி. அந்த உணவகத்தின் மேலாளர் காவலர்களை அழைத்தார்.
வாசுகியை டாக்ஸியில் அனுப்பி வைத்துவிட்டு, உமாபதியும் ஹரிதாவும் அங்கிருந்து கிளம்பினார்கள். ஹரிதாவைப் பற்றி நினைத்தபடி வீட்டிற்குச் சென்றான் சுதர்சன். அவள் நிலையை எண்ணிய போது அவன் இதயத்தில் ரத்தம் கசிவது போல் இருந்தது. எவ்வளவு சந்தோஷமாய் அவள் அங்கு வந்தாள்! நித்தியானந்தம் அனைத்தையும் பாழாக்கி விட்டான். அவளுக்காக மனம் வருந்திய அவன், ஒரு முடிவுக்கு வந்தான்.
வீட்டுக்கு வந்து தன் அக்காவுக்கு ஃபோன் செய்த அவன்,
"அக்கா, நான் ஃபாரின் போக ரெடியா இருக்கேன். மாமா கிட்ட பேசுங்க." என்று கூறி அவளைத் திகைக்கச் செய்தான்.
கண் சிமிட்டும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co