4 விருந்து
4 விருந்து
கட்டிலில் படுத்திருந்த சுதர்சன், ஹரிதாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். பார்வையற்றவளாய் இருந்து கொண்டு, இருசக்கார வாகனத்தை ஓட்டத் துணிந்தாள் என்பதை அவனால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அது கண்துடைப்புக்கான வேலையாகவே இருந்தபோதிலும், அவளுக்குத் தான் எவ்வளவு தைரியம்! உமாபதி கூறுவது உண்மை தான், சாதாரண பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத காலகட்டத்தில், பார்வையற்றப் பெண்ணின் நிலைக் குறித்து கூறத் தேவையில்லை.
பாவம் அவள், தன் பார்வையை இழந்த போது எவ்வளவு துடித்திருப்பாள்? எவ்வளவு உடைந்து போயிருப்பாள்? என அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எழுந்து அமர்ந்தான் சுதர்சன். ஒரே கும்மிருட்டாய் இருந்தது. அந்த இருளில் தன் கண்களைச் சுழற்றினான். மெல்ல கட்டிலை விட்டு இறங்கி, அலமாரியை நோக்கி நடந்தான். அப்பொழுது சோபாவின் காலில் தன் காலை இடித்துக் கொண்டான்.
"ஆஆஆஆ..." கால் விரல்களை சுருட்டி, சோபாவை இறுகப் பற்றினான்.
அப்பொழுது மீண்டும் மின்சாரம் உயிர் பெறவும், நிம்மதி பெருமூச்சு விட்டான். மெழுகுவர்த்தியையும் தீப்பெட்டியையும் எடுத்துச் சென்று கட்டிலுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டான்.
'பார்வை இல்லாமல் இருப்பது அவ்வளவு சுலபமல்ல. ஹரிதா ஒவ்வொரு நாளும் சவால்களை எதிர்கொண்டு வாழ்கிறாள். சாப்பிடுவது, குளிப்பது, நடப்பது அனைத்துமே சவால் தான். ஆனாலும் அவள் புன்னகை புரிகிறாள். தன்னுடைய குறை, தன் மன வலிமையை உடைக்க அவள் விடுவதில்லை. அவன் அவளுக்காக வருந்தினாலும், அவளை எண்ணி பெருமை கொண்டான்.
"நான் ஒரு முட்டாள். எத்தனை முறை அக்கா என்னை ஃபாரின் போகச் சொன்னாங்க! ஆனா நான் தான் ஒத்துக்கல. நான் மட்டும் பணம் சேர்த்து வச்சிருந்தா, ஹரிதாவோட ஆப்பரேஷனுக்குக் கொடுத்து உதவி இருக்கலாம்." என்று தன் செயலுக்கு வருந்தினான்.
ஹரிதாவைப் பற்றி எண்ணியபடி தாமதமாய் உறங்கினான்.
மறுநாள் காலை
தூக்கத்தில் இருந்து கண் விழித்த அவன், மணி எட்டு என்பதைப் பார்த்து திடுக்கிட்டான். கட்டிலை விட்டு குதித்து, குளியலறையை நோக்கி ஓடினான். அவசர அவசரமாய் அலுவலகம் செல்ல தயாராகி வெளியே வந்தவன், பக்கத்து வீட்டுப் பெண் மகேஸ்வரி தன்னைப் பார்த்து வெட்கப் புன்னகையுடன் நின்றிருப்பதைக் கண்டு எரிச்சல் அடைந்தான். அந்தப் பெண்ணுக்கு அவன் மீது கொள்ளை பிரியம். ஆனால், அவனுக்கு ஏனோ அவளிடம் ஆர்வம் இல்லை.
"இன்னைக்கு ரொம்ப லேட்டா எழுந்துட்டீங்க போலருக்கு? ராத்திரி நல்லா தூங்கலையா?" என்றாள் கொஞ்சம் குரலில்.
அவளுக்குப் பதில் கூறாமல், தன் இருசக்கர வாகனத்தை உதைத்து கிளம்பினான். அலுவலகத்திற்கு வந்து தனது வரவைப் பதிவு செய்துவிட்டு, தன் நாற்காலியில் அமர்ந்தான்.
கைபேசியை எடுத்து தனது கல்லூரி வாட்ஸ்அப் குரூப்பில் இருந்த தகவல்களைப் பார்த்தான். அதில் குறிப்பாய் எந்தத் தகவலும் இல்லை. எல்லாம் வழக்கம் போல் காலை வணக்கம் மட்டுமே கூறியது. கைபேசியை மேசையின் மீது வைத்துவிட்டு கண்களை மூடியனான். அந்தச் சில நொடி இருள், அவன் மனதைத் தாக்க, திடுக்கிட்டு கண் விழித்தான். ஹரிதா மீண்டும் அவன் நினைவுக்கு வந்தாள். அவளுக்கு உதவ வேண்டும் என்று தனக்கு ஏன் தோன்றுகிறது என்று அவனுக்குப் புரியவில்லை. ஒருவேளை அது பரிதாப உணர்ச்சியாய் இருக்கலாம். பரிதாபப்படுவது அப்படி ஒன்றும் தவறில்லையே!
மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த சுதர்சன், யாரோ தன்னை அழைப்பது கேட்டு பின்னால் திரும்பினான். வாசுகி, தன் இருசக்கர வாகனத்தில் அவனைப் பின்தொடர்வதைக் கண்டான். அவள் அவனைப் பார்த்து பளிச்சென்று புன்னகைத்தாள்.
சாலையின் ஓரமாய் வண்டியை நிறுத்த எண்ணிய அவனுக்கு, அருகில் இருந்த
பிரசித்தி பெற்ற ஒரு உணவகத்தைச் சுட்டிக்காட்டிய வாசுகி, அதன் முன்னாள் தன் வண்டியை நிறுத்தினாள். அவனும் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கினான். அவனைப் பார்த்த வாசுகி மகிழ்ச்சி அடைந்தாள்.
"ஆஃபீஸ் முடிஞ்சு வீட்டுக்குப் போறியா?" மகிழ்ச்சியோடு புன்னகை புரிந்தாள்.
"ஆமாம். இந்த வழியா தான் நான் வீட்டுக்குப் போவேன்."
"எப்படி இருக்க?"
"கிரேட். நீயும் உன் பிரின்ஸ் சார்மிங்கும் எப்படி இருக்கீங்க?"
"சூப்பரா இருக்கோம். நேத்து தான் அவன் பெங்களூர்ல இன்டர்வியூ முடிச்சிட்டு வந்தான்."
"தெரியும்."
"நீ அவனைத் தப்பா புரிஞ்சுகிட்டதைச் சொன்னான்."
"ஆமாம், அவன் தங்கச்சியைப் பத்திச் சொல்லாம மறைச்சிட்டான்னு நான் அவன் மேல கோவமா இருந்தேன். ஆனா அவங்களுக்குப் பார்வை இல்லங்குற விஷயம் எனக்குத் தெரியாது."
"எனக்கே அவளைப் பத்தி ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் சொன்னான். அதுவும் நான் அவளை அவனோட சேர்த்து பார்த்த பிறகு..."
"ஆமாம், நானும் அவங்க பைக் ஓட்டுறதைப் பார்த்தேன்."
"நான் தான் சொன்னேனே, அவ ரொம்ப தன்னம்பிக்கையான பொண்ணுன்னு..."
"ஆமாம்... சரி, நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"
"என்னோட பிரின்ஸ் சார்மிங்குக்காகவும், அவனோட அழகான தங்கச்சிக்காகவும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்."
சுதர்சனின் கண்கள் பளிச்சிட்டது. ஹரிதா வரப்போகிறாளா?
"ஏதாவது ஸ்பெஷலா?"
"இன்னைக்கு என் பர்த்டே"
"என்னது பர்த்டேவா? ஹாப்பி பர்த்டே. ஆனா யாருமே உனக்குக் குரூப்ல விஷ் பண்ணவே இல்லயே?"
"நீ எப்போ நம்ம குரூப்பைச் செக் பண்ண?"
"டென் ஓ கிளாக்..."
"உமா எனக்கு விஷ் பண்ண பிறகு தான் எல்லாரும் என்னை விஷ் பண்ண ஆரம்பிச்சாங்க. அவன் நேத்து ராத்திரி ஹரிகிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்து, லேட்டா தூங்கி, லேட்டா எழுந்தானாம்."
"ராத்திரி 12:00 மணிக்கு அவன் உன்னை விஷ் பண்ணலையா?"
"பண்ணான்."
"அவன் அப்பவே குரூப்ல மெசேஜ் போட்டிருந்தா, நானும் உன்னை விஷ் பண்ணி இருப்பேன்."
"பரவாயில்ல, பா."
அப்பொழுது ஹரிதாவுடன் அங்கு வந்தான் உமாபதி. சுதர்சனை அமைதியாய் இருக்கச் சொல்லி சைகை செய்தாள் வாசுகி. அதை உமாபதியும் கவனித்தான்.
"ஹாய், ஹரி," அவளை அணைத்துக் கொண்டாள் வாசுகி.
"ஹாப்பி பர்த்டே, வாசு." என்று, வண்ண காகிதத்தால் சுற்றப்பட்ட ஒரு டப்பாவை அவளிடம் கொடுத்தாள் ஹரிதா.
"தேங்க்யூ சோ மச்." என்று அதைப் பெற்றுக் கொண்டாள் வாசுகி.
அப்பொழுது ஹரிதா யோசனையுடன்,
"சுதா இங்க இருக்காரா?" என்றாள்.
அதைக் கேட்டு சுதர்சனின் முகம் ஆச்சரியத்தில் திளைத்தது.
"நீ அசத்திட்ட, ஹரி." என்றாள் வாசுகி.
"நான் இங்கே இருக்கிற விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றான் சுதர்சன் ஆச்சரியமாய்.
"ஐ கேன் ஸ்மெல் யு." என்றாள் புன்னகையோடு.
"ஆனா, நம்ம மூணு தடவை தானே மீட் பண்ணோம்?"
அவள் முகத்தில் சங்கடத்தின் சாயல் தெரிந்ததைக் கவனித்தான் சுதர்சன். அப்பொழுது தான் அவனுக்கு ஒரு விஷயம் உரைத்தது, அவளை நகரும் படிக்கட்டில் இருந்து அவன் தூக்கினான் அல்லவா? அப்பொழுது அவன் மீது வீசிய வாசத்தை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.
"ஐ அம் சாரி. எனக்கு நீங்க பிளைன்டுன்னு..." தயக்கத்தோடு ஆரம்பித்தான் சுதர்சன்.
"அதை விட்டுத் தள்ளுங்க, சுதா,"
"உமாவைச் சுதா தப்பா நினைச்சதுல எந்தத் தப்பும் இல்ல. ஏன்னா, உங்க அண்ணன் அப்படித் தான்." என்று கிண்டல் செய்தாள் வாசுகி.
ஹரிதாவின் பக்கத்தில் நின்றிருந்த உமாபதி, வாசுகியின் பக்கம் வந்து அவள் கையைக் கிள்ளினான்.
"ஆஆஆஆ... பாரு ஹரி, உங்க அண்ணன் என்னைக் கிள்றான்."
"ஏன், உமா?" என்று அவன் தோளில் ஓர் அடி போட்ட ஹரிதா, சுருக் என்று கையை இழுத்துக்கொண்டாள்.
ஏனென்றால், அங்கு நின்றிருந்தது உமாபதி அல்ல சுதர்சன். உமாபதி வாசுகியின் பக்கம் சென்று விட்டதால், சுதர்சன் ஹரிதாவின் அருகில் வந்து நின்றான். அதை அறியாத அவள், அங்கு நிற்பது உமாபதி என்று எண்ணி அவனை அடித்துவிட்டாள்.
"இங்க இருக்குறது யாரு? உமா எங்க?" என்றாள் ஹரிதா.
உமாபதியும் வாசுகியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டார்கள். சுதர்சனோ வியப்பின் உச்சிக்குச் சென்றான். அங்கு நின்றது உமபதி அல்ல என்பதை, ஒரு அடியை வைத்து அவளால் தெரிந்து கொள்ள முடியுமா?
"நான் தான். நீங்க அடிச்சது என்னைத் தான்." என்றான் சுதர்சன்.
"என்ன்னனது? ஆனா நான் உமாவைத் தானே அடிச்சேன்!"
"நான் இங்க இருக்கேன்." என்றான் உமாபதி சிரித்தபடி.
"அடப்பாவி! நீ எப்போ அங்க போன? ஐ அம் சாரி, சுதா, தெரியாம அடிச்சிட்டேன்."
"பரவாயில்ல விடுங்க. எதுக்காக என் எலும்பை உடைச்ச மாதிரி இவ்வளவு ஃபீல் பண்றீங்க?" என்று சிரித்தான்.
ஹரிதா அழகாய் புன்னகைத்தாள்.
"ஓகே, வாசு, ஹாப்பி பர்த்டே ஒன்ஸ் அகைன். நான் கிளம்புறேன்." என்றான் சுதர்சன்.
"அதெல்லாம் முடியாது... நீயும் எங்க கூட டின்னர் சாப்பிடு."
"அதானே... அது எப்படி நீ போவ? எங்க கூட இரு." என்றான் உமாபதி.
"பரவாயில்ல... நீங்க ஃபேமிலி பார்ட்டிக்குப் பிளான் பண்ண மாதிரி தெரியுது..." என்றான் கிண்டலாய்.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நீயும் எங்கள்ல ஒருத்தன் தான். எங்க கூட வா." என்றாள் வாசுகி.
"பரவாயில்ல, வாசு..."
"அட, வாடா..." என்று அவன் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் உமாபதி.
அவர்களை ஓர் தனி அறைக்கு அழைத்து வந்தாள் வாசுகி, ஹரிதாவைச் சங்கடப்படுத்த வேண்டாமென்று.
"உங்களுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணுங்க." என்றாள் வாசுகி.
"எனக்கு பிரியாணி." என்றான் உமாபதி.
"எனக்கு ஃபிரைட் ரைஸ்." என்று சுதர்சனும் ஹரிதாவும் ஒரே குரலில் கூறினார்கள்.
இருவரும் சில நொடி திகைத்து, புன்னகைத்தார்கள்.
"உங்களுக்கும் ஃபிரைட் ரைஸ் தான் பிடிக்குமா?" என்றாள் ஹரிதா.
"ஆமாம்..."
"எனக்கும்..."
அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்து சேர்ந்தது. தேக்கரண்டிகளை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு, கையில் எடுத்து சாப்பிட்டாள் ஹரிதா. அவள் அழகாய் சாப்பிடுவதைப் பார்க்கும் எவரும் அவளைப் பார்வையற்றவள் என்று கூற மாட்டார்கள் என்று எண்ணி அதிசயத்தான் சுதர்சன்.
சாப்பிட்டு முடித்த ஹரிதா, கை கழுவ யாராவது தன்னுடன் வரக் காத்திருந்தாள். ஆனால் உமாபதியும் வாசுகியும் சுவாரசியமாய் பேசியபடி மெதுவாய்ச் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.
"நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா, ஹரிதா?" என்றான் சுதர்சன்.
"அவன் கூட போ, ஹரி," என்றான் உமாபதி.
தயக்கத்துடன் தலையசைத்த ஹரிதா, எழுந்து நின்றாள்.
"லெஃப்ட் சைட் திரும்புங்க." என்றான் சுதர்சன்.
வியப்படைந்த அவள், இடது பக்கம் திரும்பினாள்.
"மூணு அடி எடுத்து வைங்க."
எடுத்து வைத்தாள்.
"லெப்ட் சைடு லைட்டா மூவ் பண்ணுங்க."
அவள் நகர்ந்தவுடன்,
"நீங்க வாஷ்பேஷினுக்கு வந்துட்டிங்க." என்றான்.
கையை நீட்டிய ஹரிதா, அங்கிருந்த வாஸ்பேஷினைத் தொட்டாள். புன்னகைத்தபடி தன் கையைக் கழுவிக் கொண்டாள். சுதர்சன் அவளை வழி நடத்திய விதம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் தன் கையைப் பிடித்து அழைத்துச் செல்வான் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை. அது அவள் மனதைக் கவர்ந்தது.
கண் சிமிட்டும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co