Truyen3h.Co

காதலுக்குக் கண் உண்டு!

7 விருப்பம்

NiranjanaNepol

7 விருப்பம்

'நான் ஹரிதாவை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்' என்று சுதர்சன் கூறியதைக் கேட்ட சிவகாமி, உமாபதின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். அவனும் நம்ப முடியாதவனாய் சிலையாய் நின்றிருந்தான். அது உண்மை என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவர்கள் சுதர்சனைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள், அவன் மனிதனே அல்ல என்பது போல்! சங்கடத்தில் திணறிக் கொண்டிருந்த ஹரிதாவின் மீது சுதர்சனின் பார்வை இருந்தது.

தன் மனதில் இப்பொழுது அவள் என்ன உணர்கிறாள் என்று அவளுக்கு புரியவில்லை. சுதர்சன் ஏன் அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான் என்றும் புரியவில்லை. அவர்கள் நான்கு முறை தான் சந்தித்திருக்கிறார்கள். அவன் மிகச் சிறந்த மனிதன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவான் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல." என்றான் உமாபதி.

"இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு?" என்றார் சிவகாமி.

ஹரிதாவின் கண்கள் அலைபாய்வதைக் கண்ட சுதர்சன், அவள் மனம் என்ன என்பதைப் புரிந்து கொண்டான்.

"நீ நிஜமாதான் சொல்றியா, சுதா?"

"ஆமாம், நிச்சயமா தான் சொல்றேன்."

"இப்படி ஒரு முடிவை எது உன்னை எடுக்க வச்சிதுன்னு எனக்குத் தெரியல"

அதற்கு சுதர்சன் பதில் கூற நினைத்தபோது,

"இல்ல, எனக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்ல." என்றாள் ஹரிதா.

"ஹரி..." என்று உமாபதி ஏதோ சொல்ல நினைத்தபோது, அவனைத் தடுத்து நிறுத்தினான் சுதர்சன்.

"இரு, உமா."

மெல்ல கண்ணிமைத்தாள் ஹரிதா. சுதர்சன் அவளை நோக்கி சென்றான். அதை அவள் உணர்ந்தாள். அவள் எதிரில் வந்து நின்ற அவன்,

"நான் உங்க பக்கத்துல இருக்கேன்னு நீங்க உணர்ந்து இருப்பிங்கன்னு எனக்கு தெரியும். எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்ட சொல்லலாம். ஏன்னா இது நம்ம சம்பந்தப்பட்ட விஷயம்."

அவனை எப்படி சமாளிப்பது என்று அவளுக்குப் புரியவில்லை.

"சொல்லுங்க, ஹரிதா, உங்களை எது தடுக்குது? என்ன உங்க சந்தேகம்?" அவள் பதிலுக்காக காத்திருந்தான். ஆனால் அவள் ஒன்றும் கூறவில்லை.

"நான் உங்க மேல பரிதாபப்படுறேன்னு நினைச்சா, தயவுசெஞ்சு அந்த எண்ணத்தை மாத்திக்கோங்க. உங்க மேல பரிதாபப்பட எதுவும் இல்ல. ஏன்னா, பார்வை இருக்குறவங்களை விட நீங்க எவ்வளவோ மேல். அவங்களுக்கு எல்லாம் உங்கள மாதிரி தன்னம்பிக்கை கிடையாது. உங்க தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க தைரியத்தை நான் ரொம்ப மதிக்கிறேன்."

"ஆனா..."

"நான் இன்னும் முடிக்கல..."

ஹரிதா அமைதியானாள்.

"நான் ஃபாரின் போறது, செட்டில் ஆகுறதுக்காக இல்ல. உங்க ஆபரேஷனுக்காக சம்பாதிக்கப் போறேன்"

சிவகாமியும் உமாபதியும் நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஹரிதாவின் நிலையோ வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததாய் இருந்தது.

"பார்வை இல்லாத உங்களை கல்யாணம் பண்ணிக்க நான் தயங்குறதா நினைக்காதீங்க. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க என்னை பார்க்கணும்னு நான் நினைக்கிறேன். உங்க முழு சம்மதத்தோடவும் சென்ஸோடவும் நீங்க என்னை ஏத்துக்கணும்... சூழ்நிலை காரணமா இல்ல. நான் உங்க ஆப்பரேஷனுக்கு பணம் செலவு பண்ண போறேன் அப்படிங்கிறதுக்காக மட்டும் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேணாம். உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்காக நான் இதைச் செய்யல. உங்களோட தன்னம்பிக்கைக்கு இதை என்னோட கிஃப்ட்டா நெனச்சுக்கோங்க. ஒரு நல்ல பொண்ணுக்கு நம்பிக்கை தந்த சந்தோஷமும் திருப்தியும் எனக்குப் போதும். ஒருவேளை நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பலன்னா, நான் அதுக்காக வருத்தப்பட மாட்டேன். ஆனா அதே நேரம், நீங்க என்னை ஏத்துக்கிட்டா, நான் ஆசீர்வதிக்கப்பட்டவனா உணர்வேன்."

ஒரே மூச்சில் அனைத்தையும் கூறி முடித்தான், அங்கிருந்த மூவர்களையும் வாயடைக்க செய்து. மற்ற இருவரையும் விட அதிகமாய் பாதிக்கப்பட்டவள் ஹரிதா தான். என்ன மனிதன் அவன்! அவளுக்காக அவன் பணம் செலவு செய்ய தயாராக இருக்கிறான். ஆனால் திருமணத்திற்கு அவளை கட்டாயப்படுத்த அவன் விரும்பவில்லை.

"உங்களுக்கு என்னை பிடிச்சிருந்தா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். இது உங்க முழு சம்மதத்தோடு நடக்கணும்னு நான் விரும்புறேன்."

இவனை யாருக்குத் தான் பிடிக்காது? அனைவரும் மற்றவர்களை ஆளத்தான் நினைக்கிறார்கள். ஆனால் அவன் அப்படியல்ல!

"நான் ஃபாரின் போக ஒரு மாசம் ஆகும். மூணு மாசம் கழிச்சு நான் திரும்பி வருவேன். அதுக்கு முன்னாடி உங்களோட ஆபரேஷன் நடந்து முடிஞ்சிடும். அப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாமா வேண்டாமான்னு நீங்க முடிவு பண்ணுங்க."

"ஆனா, ஃபாரின்ல இருந்து திரும்பி வந்து நீ என்ன செய்வ? நீ தான் உன் வேலையை ரிசைன் பண்ணிடுவியே." என்றான் உமாபதி.

"நான் இப்போ ஒரு ப்ராஜெக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் ஃபாரின் போறதுக்கு முன்னாடி அது முடிஞ்சிடும். அது முடிஞ்சிட்டா எனக்கு நல்ல வேலை கிடைக்கும். அதுக்காகத் தான் மாமாகிட்ட ஒரு மாசம் டைம் கேட்டிருக்கேன்."

"ஓஹோ, உங்க மாமாவோட கம்பெனிக்குப் போறியா?"

"ம்ம்ம்..."

"அவர் உன்னை ரொம்ப நாளாவே அங்க வரச் சொல்லி கூப்பிட்டுக்கிட்டு இருக்காருல்ல?"

"ஆமாம், ஆனா எனக்கு தான் விருப்பம் இல்லாம இருந்தது. அதனால நான் போகல." என்ற சுதர்சன் ஹரிதாவைப் பார்த்து,

"உங்க ஆபரேஷன் சீக்கிரம் நடக்கணும்னு நீங்க விருப்பப்பட்டா, மாமாகிட்ட அட்வான்ஸ் வாங்கி உடனே நம்மளால செய்ய முடியும், உங்க எக்ஸாம்க்கு முன்னாடி..."

ஹரிதாவுக்கு என்ன கூறுவதென்று புரியவில்லை.

"இல்ல, சுதா, அவ ஏற்கனவே ஸ்க்ரைபுக்கு அப்ளை பண்ணிட்டா. இப்போ அதை மாத்த முடியாது."

"இதுல உனக்கு சம்மதம்னு நான் எடுத்துக்கலாமா?" என்றான் உமாபதியிடம்.

"எனக்கு ஏன் சம்மதம் இருக்காது? நீ என் தங்கச்சியை நல்லா பார்த்துக்குவேன்னு எனக்குத் தெரியும்."

"அது எனக்கு சந்தோஷம் தான். ஆனா அதுக்காக என்னை ஏத்துக்கச் சொல்லி நீ ஹரிதாவைக் கட்டாயப்படுத்தாத. அவங்களுக்கு என்ன வேணுமோ அதை அவங்களே முடிவு பண்ணட்டும்." என்று ஹரிதாவின் பக்கம் திரும்பிய அவன்,

"நீங்க என்ன வேணா முடிவெடுக்கலாம், ஹரிதா. மத்தவங்க விருப்பத்தைப் பத்தி எல்லாம் யோசிக்க வேண்டாம். இது உங்க வாழ்க்கை. அதை முடிவு செய்ற உரிமை உங்களுக்கு மட்டும் தான் இருக்கு. உங்களுக்கு நாலு மாசம் டைம் இருக்கு, நீங்க என்னை நேரில் பார்க்குற வரைக்கும்..."

'பார்க்குற' என்ற வார்த்தை, அவளுக்குப் பரவசத்தைத் தந்தது. அது அவளை உணர்ச்சிவசப்பட வைத்தது.

"உங்களை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காம எக்ஸாம்ல கான்செண்ட்ரேட் பண்ணுங்க. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா, நீங்க எனக்கு கால் பண்ணலாம்." என்று தன் கைபேசி எண்ணை கூறிவிட்டு அங்கிருந்து நடந்தான்.

சிலை போல் நின்றாள் ஹரிதா, அவனது கைபேசி எண்ணை மனனம் செய்தபடி தான்! அவளை நோக்கி ஓடிய சிவகாமி, அவளை அணைத்துக் கொண்டார்.

"ஹரி, இந்த ஆபரேஷன்க்கு ஒத்துக்கோ. அவனுக்குச் சொந்தமாக வீடு இருக்கு. அம்மா அப்பா கிடையாது. நல்லா சம்பாதிக்கிறான். நீ அவனோட ராணி மாதிரி வாழலாம். அவனுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். உனக்காக அவன் என்ன வேணா செய்வான். இப்படி ஒருத்தன் நம்மக்கு நிச்சயம் கிடைக்க மாட்டான். உனக்கும் அவனை நிச்சயம் பிடிக்கும். ஏன்னா, அவன் பார்க்க ரொம்ப அழகா இருக்கான்." என்றார்.

அவர் கூறிய எதுவும் அவளுக்குப் புதிதல்ல. சுதர்சனைப் பற்றி உமாபதி ஏற்கனவே அவளிடம் கூறியிருக்கிறான். அவன் தான் அவர்களது கல்லூரி பெண்களின் கனவு நாயகனாயிற்றே! ஆனால், அவன் வெளி அழகை விட உள் அழகிற்காக கொண்டாடப்பட வேண்டியவன்! அவனது பெருந்தன்மையான குணம், ஏற்கனவே ஹரிதாவைக் கவர்ந்துவிட்டிருந்தது. அதற்கு மேலும் அவன் சுவை சேர்த்திருக்கிறான். அவள் அவன் மீது கொண்டிருந்த மரியாதை மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

அவளிடம் வந்த உமாபதி, அவள் கரத்தைப் பற்றி,

"நானும் நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் விரும்புறேன். அவன் ரொம்ப நல்லவன். உன் வாழ்க்கைக்கு அவன் சிறந்த வழிகாட்டியா இருப்பான்."

ஹரிதா அமைதியாய் நின்றாள். அதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவள் ஒன்றும் முட்டாள் அல்ல. சுதர்சன் நல்லவன் என்பதை அவள் ஏற்கனவே புரிந்து கொண்டாள். அவளுக்கு இருந்த ஒரே சந்தேகம், ஒருவேளை அவள் அவனை திருமணம் செய்து கொள்ள மறுத்தாலும், அதை ஏற்றுக் கொள்வேன் என்றானே. அவனுக்கு ஏமாற்றமாக இருக்காதா? அதை அவன் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியுமா? அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என்றால், அது என்ன மாதிரியான காதல்? உண்மையான காதலன் தன் காதலுக்காக போராட மாட்டானா?

இரவு

தூக்கம் வராமல் கட்டிலில் பிரண்டு கொண்டிருந்தாள் ஹரிதா. மெல்ல அறையை விட்டு வெளியே வந்தவள், மேசையின் மீது இருந்த சிவகாமியின் பொத்தான் கைப்பேசியை எடுத்துக் கொண்டு மீண்டும் தன் அறைக்கு வந்தாள். சுதர்சனின் எண்ணை நினைவுபடுத்தி அழுத்தினாள்.

மறுப்புறம், சுதர்சனும் தூக்கமின்றி தான் இருந்தான். சந்தேகம் இல்லாமல் அவன் ஹரிதாவைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தான். அவள் அறுவைசிகிச்சைக்கு ஒப்புக் கொள்வாளா என்று அவனுக்கு நிச்சயமாய் தெரியவில்லை. அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் நிச்சயம். அவள் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டால், நிச்சயம் அவள் அவனை மணந்து கொள்வாள். அவனை மணந்து கொள்ள அவள் விரும்பவில்லை என்றால், அறுவைசிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள மாட்டாள்.

அவனது கைப்பேசி மணி ஒலித்த போது, அவனது எண்ணம் தடைப்பட்டது. தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பை அவன் ஏற்றான்.

"யார் பேசுறீங்க?"

"ஹரிதா..."

எழுந்து அமர்ந்தான் சுதர்சன்.

"ஹரிதா, ஒன்னும் பிரச்சனை இல்லயே?"

"எனக்கு ஏதாவது சந்தேகம்னா உங்களுக்கு ஃபோன் பண்ண சொன்னீங்களே..."

"ஆமாம், சொன்னேன்,"

"என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னீங்க. அதே நேரம், கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்த மாட்டேன்னும் சொன்னீங்க. இது என்ன மாதிரியான விருப்பம்? நீங்க என்னை விரும்புறதா இருந்தா, என்னை அடைய நீங்க சண்டை தானே போடணும்?"

சுதர்சன் புன்னகை புரிந்தான்.

"நான் நிச்சயம் சண்டை போடுவேன்... நீங்களும் (என்பதை அழுத்தி) என்னை விரும்பினா..." என்றான்.

"என்னோட முடிவு என்னவா இருக்கும்னு உங்களுக்கு நிச்சயம் இல்லாதப்போ, எதுக்காக எனக்கு உதவ நினைக்கிறீங்க?"

"எனக்கு நிச்சயம் இல்லன்னு யார் சொன்னது? நீங்க என்னை விரும்பாம இருக்கலாம். ஆனா, ஆபரேஷனுக்கு ஒத்துக்கிட்டா, நீங்க நிச்சயம் என்னைக் கல்யாணம் பண்ணிக்குவீங்க"

"எப்படி அவ்வளவு நம்பிக்கையோட சொல்றீங்க?"

"ஏன்னா, நீங்க என்னை நம்புறீங்க!" என்று கூறி அவளைத் திகைக்கச் செய்தான் சுதர்சன்.

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co