Truyen3h.Co

காதலுக்குக் கண் உண்டு!

8 ஒப்புதல்

NiranjanaNepol


8 ஒப்புதல்

"நீங்க என்னை நம்புறீங்க... நீங்க நித்தியா மேல கோவப்பட்டப்போ, அதை நான் தெரிஞ்சுகிட்டேன். என் கையை நீங்க இறுக்கமா பிடிச்சுக்கிட்டீங்க. நான் உங்களை விட்டுட்டு போக கூடாதுன்னு நினைச்சீங்க. என் மேல நம்பிக்கை இல்லாம அதை உங்களால செஞ்சிருக்க முடியாது."

மெல்ல தன் கண்களை மூடி, அந்த நிகழ்வை மீண்டும் எண்ணிப் பார்த்தாள் ஹரிதா.

"வாழ்க்கை முழுக்க உங்களுக்கு அப்படி ஒரு உணர்வை கொடுக்கணும்னு நான் விரும்புறேன். அதை, உங்களுக்குப் பார்வையில்லாத காரணத்துக்காக நான் செய்ய நினைக்கல. எங்க அம்மா அப்பா இறந்ததற்கு பிறகு, என் வாழ்க்கையே வெறிச்சோடி போச்சு. அந்த இடத்தை நீங்க நிரப்பணும்னு நான் விரும்புறேன். அதை உங்களால தான் செய்ய முடியும்னு எனக்கு ஏன் தோணுதுன்னு எனக்குத் தெரியல. வேற யார் கிட்டயும் நான் அப்படி உணர்ந்ததும் இல்ல. என் மனசுல என்ன தோணுதோ இப்போ அதைத் தான் சொன்னேன். உங்க இயலாமையை நான் எனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிறதா நீங்க நினைக்கக் கூடாதுன்னு தான், என்னைத் தவிர்க்க உங்களுக்கு நான் சானஸ் கொடுக்கிறேன். என்னை உங்களுக்குப் பிடிச்சிருந்தா மட்டும் நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும்."

"எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு." என்று கூறி அவனைத் திணறடித்தாள்.

"என்னைப் பார்த்ததுக்குப் பிறகு உங்க முடிவைச் சொன்னா போதும்."

"தேவையில்ல."

"அப்படின்னா?"

"நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்."

"அவசரத்துல முடிவெடுக்காதீங்க. ஒருவேளை நான் உங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி இல்லாம போகலாம்..."

"ஏற்கனவே நீங்க என் எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி தான் இருக்கீங்க."

"அது என்னைப் பார்த்த பிறகு மாறிப் போகலாம்..."

"நான் இந்த முடிவை கண்ணால எடுக்க விரும்பல. மனசால எடுக்க விரும்புறேன். என் மனசால நான் ஏற்கனவே உங்களைப் பார்த்துட்டேன். நீங்க ரொம்ப நல்லவர்."

"தேங்க்ஸ்." என்றான் மகிழ்ச்சியோடு.

"என் ப்ராஜெக்ட் முடியுற வரைக்கும், ஒரு மாசத்துக்கு நான் இங்க இருப்பேன். அதுக்கப்புறம், மூணு மாசம் ஃபாரின் போவேன். அதுக்குள்ள உங்களோட ஆபரேஷன் முடிஞ்சிடும். நான் திரும்பி வந்ததுக்குப் பிறகு, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். ஒருவேளை அதுல உங்களுக்கு..."

அவனது பேச்சை இடைமறித்து,

"எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல." என்றாள்.

"தேங்க்ஸ்."

"நான் தான் உங்களுக்குத் தேங்க்ஸ் சொல்லணும்."

"வேண்டாம், இதை நான் சுயநலம் இல்லாம செய்யல."

"நீங்க சொல்றது எனக்குப் புரியல."

"நான் இதைச் செய்றதுக்கு காரணம், எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. நீங்க என் வாழ்க்கையில வரணும்னு நான் நினைக்கிறேன்."

"உங்களுக்குச் சொந்தக்காரங்க யாரும் இல்லையா?"

"ஒரு கசின் சிஸ்டரும், அவங்க ஹஸ்பண்டும் இருக்காங்க. அவங்க தான் நான் லைஃப்ல செட்டில் ஆகணும்னு நினைக்கிறாங்க. என் மாமா எனக்கு வேலை கொடுக்க ரெடியா இருந்தாரு. நான் தான் இந்தியாவை விட்டுப் போக விரும்பல."

"ஆனா, இப்போ நீங்க போக நினைக்கிறீங்க... எனக்காக..."

"இல்ல, உங்களுக்காக இல்ல. லைஃப்ல செட்டில் ஆக போறேன்."

"நான் ஸ்கிரைப் ஹெல்ப்போட தான் எக்ஸாம் எழுத முடியும். ஏன்னா, நான் ஏற்கனவே அப்ளை பண்ணிட்டேன். அதனால என் எக்ஸாம்க்கு முன்னாடி என்னால ஆபரேஷன் பண்ணிக்க முடியாது."

"பரவாயில்ல. உங்க எக்ஸாமை முடிங்க."

"அது அடுத்த மாசம் கடைசில வருது."

"சரி, இது யாரோட நம்பர்?"

"அம்மாவோட ஃபோன். பேசிக் மாடல். பட்டன் இருக்கும். அதனால தான் என்னால உங்களுக்குக் கால் பண்ண முடிஞ்சது."

"சீக்கிரமே நீங்களும் ஆண்ட்ராய்டு ஃபோன் யூஸ் பண்ணுவீங்க."

ஹரிதா மெல்ல புன்னகைத்தாள்.

"குட் நைட்."

"குட் நைட்" என்று அழைப்பைத் துண்டித்தாள் ஹரிதா.

மறுநாள் காலை

உமாபதியின் அறையின் கதவைத் தட்டினார் சிவகாமி. கதவைத் திறந்து உமாபதி,

"என்னம்மா?" என்றான்.

"ஹரியை எப்படியாவது இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கணும். இப்படி ஒரு மாப்பிள்ளை நமக்கு கிடைக்க மாட்டான்."

"ஆமாம், மா, அவன் ஹரியை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவன் மாமா கிட்ட எனக்கும் ஒரு வேலை வாங்கி கொடுக்க சொல்லலாம். நானும் ஃபாரின் போய், செட்டில் ஆயிடலாம். இந்த பொண்ணு ஒத்துக்கணுமே..." என்றான் கவலையோடு.

"ஏதாவது பேசி ஒத்துக்க வைக்கலாம்." எனப் பேசிக்கொண்டார்கள்.

தன் அறையை விட்டு வெளியே வந்தாள் ஹரிதா. அவளிடம் தேநீர் குவளையைக் கொடுத்தார் சிவகாமி. உமாபதி அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான். அவனுக்கு காபி கொடுத்த சிவகாமி,

"நீ உன் தங்கச்சி கல்யாணத்தை எப்படித் தான் செய்யப் போறியோ தெரியல. உனக்கு வேலை கிடைச்சா தான் அதெல்லாம் நம்ம நினைச்சு பார்க்க முடியும். அதுக்கு குறைஞ்சது அஞ்சு வருஷமாவது ஆகும். அப்போ ஹரிதாவுக்கு 26 வயசு ஆயிடும். அதுக்குப் பிறகு தான் உனக்குக் கல்யாணம் நடக்கும். அதுவரைக்கும் வாசுகி உனக்காக காத்திருப்பாளா?" என்றார் சிவகாமி.

"அவ காத்திருக்கலன்னா என்னம்மா பண்ண முடியும்?" என்றான் கவலையாக.

அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹரிதா,

"அம்மா, நான் சுதர்சனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றாள்.

உமாபதியும் சிவகாமியும் ஆச்சரியத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒரே இரவில் அவளை இப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது எது என்று அவர்களுக்குப் புரியவில்லை.

"நீ நெஜமாத்தான் சொல்றியா?"

"ம்ம்ம்..."

"நம்ம குடும்ப பிரச்சனையை நீ அலசி ஆராஞ்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்."

"இல்லம்மா, நான் அதையெல்லாம் யோசிக்கல." என்று அவள் கூற, இருவரும் முகம் சுருக்கினார்கள்.

"நான் சுதர்சனைப் பத்தி மட்டும் தான் யோசிச்சேன். அவர் ரொம்ப நல்லவர். அவரோட அணுகுமுறை எனக்குப் பிடிச்சிருக்கு. அவர் கூட நான் சந்தோஷமா இருப்பேன்னு தோணுது."

"நீ நெனச்சது ரொம்ப சரி. நிச்சயம் அவன் உன்னைச் சந்தோஷமா பாத்துக்குவான்." என்றான் உமாபதி.

ஹரிதாவின் புத்திசாலித்தனமான முடிவுக்கு கடவுளுக்கு நன்றி கூறிய சிவகாமி, சுதர்சன் மூலமாய் அவர்களுக்கு விடிவு காலம் பிறந்துவிட்டதாய் மகிழ்ந்தார்.

"அப்படின்னா நம்ம மேற்கொண்டு பேசலாமா?"

சரி என்று தலையசைத்தாள் ஹரிதா.

தன் கைபேசியை எடுத்து சுதர்சனுக்கு ஃபோன் செய்தான் உமாபதி. அந்த அழைப்பை ஏற்ற சுதர்சன்,

"ஹாய், உமா," என்றான்.

"சுதா, ஹரி கல்யாணத்துக்குச் சம்மதிச்சுட்டா."

வியப்பதிர்ச்சி அடைந்தான் சுதர்சன். ஹரிதா இவ்வளவு சீக்கிரம் தன் முடிவை அவர்களிடம் கூறியிருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

"அவங்களே உன்கிட்ட சொன்னாங்களா?" என்றான், அவர்கள் இருவரும் பேசியதைப் பற்றி உமாபதிக்குத் தெரியுமா தெரியாதா என்று புரியாத அவன்.

"ஆமாம், அவளுக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு இப்ப தான் சொன்னா."

"அப்படின்னா, நான் ப்ராமிஸ் பண்ண மாதிரி, என்ன செய்யணுமோ அதை செய்றேன்."

"சரி, சுதா."

"ஹரிதாவை நம்ம ஹாஸ்பிடலுக்குக் கூட்டிக்கிட்டு போகலாம்."

"சரி."

"நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கட்டுமா?"

"தாராளமா வாங்கு."

"நான் அப்பாயின்மென்ட் வாங்கிட்டு சொல்றேன்."

"தேங்க்யூ, சுதா."

"நான் ஹரிதாவுக்குத் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு."

"அதை நீயே அவகிட்ட சொல்லிடு. ஒரு நிமிஷம்." என்று தன் கைபேசியை ஹரிதாவிடம் கொடுத்தான் உமாபதி.

"சுதாகிட்ட பேசு."

"ஹலோ..."

"ஹாய், ஹரி,"

"ஹாய்..."

"என்னை ஏத்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்."

"நான் உங்களுக்கு உபகாரம் பண்ண மாதிரி பேசாதீங்க..."

"நீங்க பண்ணி இருக்கீங்க... என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுத்திருக்கீங்க."

ஹரிதா அமைதியாய் இருந்தாள்.

"நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைக்கிறேன்."

"ம்ம்ம்..."

"ஐ லவ் யூ..."

ஹரிதா வார்த்தை இழந்தாள். அதற்கு என்ன கூறுவது என்று அவளுக்குப் புரியவில்லை. அவளது முக மாற்றத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சிவகாமிக்கும் உமாபதிக்கும், திடீரென்று அவளுக்கு என்ன ஆனது என்று புரியவில்லை.

"பை," என்று அழைப்பை துண்டித்தான் சுதர்சன்.

"என்ன ஆச்சு, ஹரி?"

ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து விட்டு, கைபேசியைத் திரும்ப கொடுத்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள் ஹரிதா.

"அவளுக்கு என்ன ஆச்சு? சுதா வேற ஏதாவது சொல்லி இருப்பானோ?"

"தெரியலையே."

"கேட்டுப்பாரு."

மீண்டும் அவனுக்கு ஃபோன் செய்தான் உமாபதி.

"சொல்லு, உமா."

"ஹரி கிட்ட நீ என்ன சொன்ன? திடீர்னு ஏன் அவ அமைதியாயிட்டா?"

புன்னகைத்த சுதர்சன்,

"உண்மையை சொன்னேன்." என்றான்.

"என்ன உண்மை?"

"ஐ லவ் யூ சொன்னேன்."

சில நொடி திகைத்த உமாபதி, புன்னகை புரிந்தான்.

"அப்படியா, நான் என்னவோ நினைச்சிட்டேன். சரி, நான் ஃபோனை வைக்கிறேன்." என்று அழைப்பைத் துண்டித்தான்.

"என்ன ஆச்சு?"

"ஐ லவ் யூ சொன்னானாம்."

"ஓஹோ... அந்தப் பிள்ளைக்கு நம்ம ஹரியை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்." புன்னகை புரிந்தார் சிவகாமி.

"உண்மை தான்..."

தன் அறைக்கு வந்த ஹரிதா, தன் கரங்களை இறுக்கமாய் அழுத்திப் பிடித்தாள். அவை நடுங்கிக்கொண்டிருந்தது. அவளுக்குச் சுதர்சன் தன்னை விரும்புவது தெரிந்தாலும், திடீரென்று அவன் அதை முன்மொழிவான் என்று எதிர்பார்க்கவில்லை.

மறுபுறம்,

புன்னகைத்தபடி இருந்தான் சுதர்சன். தன் மனதில் இருந்ததை அவன் ஹரிதாவிடம் கூறிவிட்டான் என்று அவனாலேயே நம்ப முடியவில்லை. வெகு சீக்கிரம் அவன் வெளிநாடு செல்ல இருப்பதால், அதை உடனே கூறி விட வேண்டும் என்று அவனுக்கு தோன்றியிருக்கலாம். அதேநேரம், அவனைத் திருமணம் செய்து கொள்ள ஹரிதாவும் சம்மதித்து விட்டாள். அதனால் அதில் தயங்க எதுவும் இருப்பதாய் அவனுக்குத் தோன்றவில்லை.

கண் சிமிட்டும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co