Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

1 நிபந்தனை

NiranjanaNepol

1 நிபந்தனை.

நான் கௌதம். யங் பிசினஸ் மேன்.
நாம் நினைப்பதை எல்லாம் வாழ்க்கை தந்து விடுவதில்லை. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. என் வாழ்க்கையில் நான் பயங்கரமான ஏற்ற இறக்கத்தை எல்லாம் பார்த்திருக்கிறேன். இது என்னுடைய வாழ்க்கை பயணம். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் சீட் பெல்ட்டைப் பிணைத்துக் கொண்டு, இந்தப் பயணத்திற்குத் தயாராகுங்கள். ஏனென்றால், நான் காரை கொஞ்சம் வேகமாய் ஓட்டுவேன். அதற்காக நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் மிகவும் பாதுகாப்பாய் ஓட்டுவேன்.

எனக்கு என் குடும்பம் தான் எல்லாம். என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் இருக்க நான் எதையும் செய்வேன். அழகிய பெண்கள் என்னைப் பற்றிப் பெருமையாய் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். பெண்கள் என்னை வெளிப்படையாகவே புகழ்வார்கள். நான் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை. நான் எப்பொழுதும் எந்த ஒரு நிபந்தனைக்கும் உட்பட்டவனாய் இருக்க விரும்பியதில்லை. நான் எந்தப் பெண்ணிடத்திலும் சிக்காமல் இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம். என்னை நானே ஆள நினைத்தேன். என் உணர்ச்சிகளுக்கு நான் தான் எஜமானனாக இருக்க வேண்டும். போகிற போக்கிற்குச் செல்வதெல்லாம் எனக்குப் பிடிக்காது. என் வாழ்க்கை, நான் விருப்பப்பட்டபடி தான் அமைய வேண்டும் என்று எண்ணினேன். அதனால் தான், எனக்காக எதை வேண்டுமானாலும் செய்ய பெண்கள் தயாராக இருந்த போதும் நான் அதில் ஈடுபாடு காட்டவில்லை. என்னிடம் அப்படி ஒரு ஆளுமை இருந்தது.

என் குடும்பத்தைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும்.

சகுந்தலா இளவேந்தன், என் அம்மா. அவர்கள் தான் என் உலகம். எந்த ஒரு குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டிய உன்னத பெண்மணி. ஆனால் அவர்கள் மதிப்பு தெரியாத ஒருவர் தான் அவருக்குக் கணவனாய் கிடைத்தார். என் அப்பாவைத் தான் சொல்கிறேன்! நான் யாரையும் காதலிக்காமல் இருந்ததற்கு என் அம்மா தான் காரணம். என் மனைவி, என் அம்மாவுக்கு ஒரு நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவள் என் அம்மாவின் மனச்சோர்வை போக்குபவளாய் இருக்க வேண்டும். என் அம்மா கவலையாக இருக்கும்போது, 'இப்போ என் மருமகளைப் பார்த்தா நல்லா இருக்குமே' என்று நினைக்க வேண்டும் என எண்ணினேன். ஆனால், என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு பெண்ணை நான் சந்திக்கவே இல்லை. என்னை விரும்பிய எல்லா பெண்களுடைய கவனமும், என் மீது மட்டும் தான் இருந்தது. அதனால், ஒரு எலிஜிபில் பேச்சுலராக இருந்தாலும், நான் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறேன்.

என் அப்பா இளவேந்தன். அவருக்குக் கவுரவமும் வியாபாரமும் இரண்டு கண்கள். தன் வியாபாரத்தை வளர்க்கவும், கௌரவத்தைக் காப்பாற்றவும் அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அவரது தொழிலை நான் எடுத்து நடத்த வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். நானும் அதைச் செய்யத் தயாராகத் தான் இருந்தேன். என் அப்பாவிற்குப் பிள்ளையாய் இருப்பதால், அதை நான் செய்துதானே தீர வேண்டும்! அதற்காக, நான் மட்டுமே அவருக்கு வாரிசு என்று நினைத்து விடாதீர்கள். எனக்கு மாதங்கி, நந்தினி என்று இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள்.

அக்காவின் கணவர் மனோகர், ஒரு வழக்கறிஞர். தன் கௌரவத்தைப் பற்றிக் கவலைப்படாமல் என் அப்பா செய்த ஒரே செயல், என் அக்காவை மனோகருக்குத் திருமணம் செய்து வைத்தது தான். மனோகர் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர். ஆனாலும், என் அப்பா அவர்களது திருமணத்திற்குச் சம்மதித்தார். என் அக்கா மீது இருந்த அக்கறையினால் அல்ல... அக்கா திருமணம் செய்து கொண்டு, எங்கள் வீட்டை விட்டுச் சென்று விட்டால், என் அப்பாவுக்கு வியாபாரத்தில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று எங்கள் குடும்ப ஜோசியர் கூறிவிட்டார். பெரிய இடத்துப் பிள்ளைகள் யாரும் வீட்டோடு மாப்பிள்ளையாய் வரமாட்டார்களே! அதனால், என் அக்காவுக்குக் கல்யாணமே செய்து வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அவர். அக்கா மனோகரைக் காதலிக்கும் விஷயம் தெரிந்து, திருமணத்திற்குப் பிறகு, எங்கள் வீட்டை விட்டு செல்லாமல் அவர் கூடவே இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டுதான் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். அக்கா மீது இருந்த காதலால், மனோகரும் அதற்கு ஒப்புக்கொண்டார். இப்போது, அக்கா, அக்காவின் மகள்களான மித்ரா, நேத்ராவுடன் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார் மனோகர். அக்காவின் மகள்கள் இருவரும் படுசுட்டி. ஆனாலும் பெரியவர்கள் பேச்சைக் கேட்கும் சமத்துப் பிள்ளைகள்.

இறுதியாய், ஆனால் மிக முக்கியமான ஒரு நபர், என் செல்லத் தங்கை நந்தினி. எங்களுக்கு ஆறு வயது வித்தியாசம்.
ஆனால் எங்கள் இரண்டு பேருக்கும் இருந்த பந்தம் அசாதாரணமானது. எந்த முக்கியமான விஷயமாக இருந்தாலும் அவள் என்னிடம் தான் பகிர்ந்து கொள்வாள். அண்ணன் தங்கை உறவுக்கு மேல், எங்களுக்குள் ஒரு நல்ல புரிதலும் நட்பும் இருந்தது. மற்றவர்களை விட என்னை மிக நன்றாக புரிந்து கொண்டவள் அவள் தான். அவளது மகிழ்ச்சி எனக்கு மிக முக்கியம். அவளுக்காக நான் எதையும் செய்வேன்.

ஒரு கட்டத்தில், அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றியே தீர வேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் நான் இருந்தேன். அவள், அரச குடும்ப வழிவந்த, ரவீந்திர சேதுபதியின் மகனான சூரிய குமாரசேதுபதியைக் காதலித்தாள். அவர்களது குடும்பம் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பல வியாபாரங்கள் செய்து வந்தார்கள். எங்களை விட 100 மடங்கு பணக்காரர்கள். ஆனாலும், எங்களுடன் இணைந்து வியாபாரம் செய்யத் தயாராக இருந்தார்கள். ஒரு நிபந்தனையுடன்...!

நந்தினி, சூரியகுமார் திருமணம் நடக்க வேண்டும் என்றால், நான் சூர்யாகுமாரின் தங்கை ஹாசினியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம். சந்தேகமில்லாமல் இது ஒரு கிவ் அண்ட் டேக் பாலிசி தான். நான் அவர்கள் மகளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஏன் விரும்பினார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. அவர்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார மாப்பிள்ளைகள் அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது, நான் அவர்கள் வீட்டு மாப்பிள்ளையாய் வரவேண்டும் என்று அவர்கள் ஏன் நினைத்தார்கள் என்று தான் எனக்குப் புரியவில்லை.

இந்தத் திருமணம் எனக்குச் சுத்தமாய் பிடிக்கவில்லை. நான் ஆசைப்பட்டது இதுவல்ல. நான் குடும்பப்பாங்கான ஒரு பெண் தான் எனக்கு மனைவியாய் வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஹாசினி நிச்சயம் அப்படிப்பட்டவளாய் இருக்க மாட்டாள். ஏனென்றால் அவள் அரச குடும்ப வாரிசு. என் அம்மாவின் போராட்டத்தை எல்லாம் அவளால் ஒருநாளும் புரிந்து கொள்ள முடியாது. என் அம்மாவிடம் அவள் சிரித்து பேசுவாளா என்பது கூடச் சந்தேகம் தான்.

அப்படி இருக்கும்போது இந்தக் கல்யாணத்தை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? என்னைப் பொறுத்தவரை இது ஒரு அழிவு. என் கனவு, ஆசை எல்லாவற்றையும் முடித்து விடப் போகிறது. நான் காலமெல்லாம் ஹாசினிக்கு அடிமையாய் இருக்கப் போகிறேன்.

எனக்கு இது பிடித்திருக்கிறதா இல்லையா என்று என் அப்பா என்னைக் கேட்கவில்லை. என் விருப்பத்தைத் தெரிந்து கொள்ள அவர் தயாராக இல்லை. திடீரென்று ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து எங்கள் வியாபாரத்தை காப்பாற்றி, ஒரு நிலைதன்மைக்குக் கொண்டு வர அவர் விரும்பினார். எங்கள் நிறுவனம் பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. அது திடீரென்று எப்படி நடந்தது என்று எங்களுக்குப் புரியவே இல்லை. என் அப்பா நிலைகுலைந்து போனார். தன்னுடைய நம்பிக்கையை மொத்தமாய் இழந்தார். எங்கள் நிறுவனத்தை மீட்டெடுக்க அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார்.

அப்பொழுதுதான், அரச குடும்பம் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியது. அவர்கள் மகன் சூரியகுமாரும் என் தங்கை நந்தினியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்று நாங்கள் அறிந்து கொண்டோம். அரச குடும்பத்தின் வரனை ஏற்கும் அளவிற்கு எங்களிடம் வசதி இல்லாததால், என் அப்பா செய்வதறியாமல் தவித்தார். எங்கள் வியாபாரத்தை மீட்டெடுக்க எங்கள் கையில் இருந்த மொத்த சேமிப்பையும் நாங்கள் ஏற்கனவே செலவு செய்து விட்டிருந்தோம். அரச குடும்பத்தின் தகுதிக்கு ஏற்றார் போல் எங்களால் அந்தத் திருமணத்தை நடத்த முடியும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், அவர்கள் எங்களிடம் எதுவுமே கேட்கவில்லை.

அதுமட்டுமல்லாமல், எங்களுடன் இணைந்து புதிய வியாபாரத்தைத் தொடங்கவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். அது நாங்கள் கொஞ்சமும் எதிர்பாராத ஒன்று. செய்வதறியது தத்தளித்துக் கொண்டிருந்த எங்களுக்கு, கை கொடுத்து உதவும் போது, அவர்கள் கடவுளளைப் போல் தெரிந்தார்கள். எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், அந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. அதாவது என்னுடைய மகிழ்ச்சி! அவர்களது நிபந்தனையைக் கேட்டு அது பறந்து சென்றது.

அவர்கள் எங்களுக்குக் கொடுக்கத் தயாராக இருந்த அத்தனை உதவிகளையும் அடைய, நான் ஹாசினியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

வியாபாரத்தில் எங்களுடன் கைகோர்க்கத் தயாராக இருந்த, அப்படிப்பட்ட ஒரு மிகச்சிறந்த சம்பந்தத்தைத் தவறவிட என் அப்பா தயாராக இல்லை. கலப்படமில்லாத, சுத்தமான வியாபாரியான அவர், அந்தச் சந்தர்ப்பத்தை அடைய, அவரது மகனைத் தியாகம் செய்ய முடிவெடுத்தார். என் விருப்பத்தைப் பற்றி ஒரு வார்த்தையும் கேட்காமல், அவர்களுக்குச் சம்மதம் தெரிவித்தார்.

என்னை நிர்பந்திக்கும் எந்த ஒரு விஷயத்தையும் செய்ய நான் எப்போதும் விரும்பியதே இல்லை. ஆனால் இப்பொழுது, அரச குடும்பத்தின் நிபந்தனையை ஏற்கும் நிர்பந்தத்திற்கு ஆளானேன். நான் அதை ஏற்கத் தயாராக இருந்தேனா, இல்லையா என்று என் அப்பா கவலைப்படவில்லை. என் திருமணம் ஹாசினியோடு நிச்சயமானது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co