2 ஹாசினி
2 ஹாசினி
நந்தினியை சூரியகுமார் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், நான் சூரியகுமாரின் தங்கை ஹாசினியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை வைத்தார்கள் சேதுபதியின் குடும்பத்தினர். அவர்களது நிபந்தனை அத்துடன் நிற்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு நான் என் பெற்றோருடன் இருக்கக் கூடாது... அதாவது, கூட்டு குடும்பத்தில் இருக்கக் கூடாதாம். எங்களுக்கு அரண்மனை போல் ஒரு பங்களாவைக் கொடுத்து, அதில் தான் நாங்கள் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஏனென்றால், அப்பொழுதுதான் அவர்களது மகள் மகாராணியைப் போல் இருப்பாளாம். அந்த நிபந்தனையைக் கேட்டபோது என் ரத்தம் கொதித்துப் போனது.
ஆனால்...
அவர்களது அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு, என் அப்பா என் திருமணத்தை ஹாசினியோடு முடிவு செய்தார். வேறு எதைப் பற்றியும் யோசிக்கும் நிலைமையில் அவர் இல்லை. அவருக்கு வேண்டியதெல்லாம், நஷ்டத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதுதான். இளவேந்தன் என்கிற ஒரு சுத்தமான வியாபாரியிடம் இருந்து நான் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
ஹாசினி... அவள் யார் என்று எனக்குத் தெரியாது. அவள் எப்படி இருப்பாள் தெரியாது. அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா இல்லையா என்று கூடத் தெரியாது. ஆனாலும் நான் அவளைத் திருமணம் செய்து கொண்டு தான் ஆக வேண்டும். எனக்கு வேறு வழியே இல்லை. எனக்கு வேறு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஹாசினி என்னும் பெண், என்னை ஆளப் போகிறாள். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஏனென்றால், அவள் என்னை விலைக்கு வாங்கி இருக்கிறாள். அதனால் எங்களுக்கு இடையில் எந்தப் புரிதலும் இருக்கப் போவதில்லை.
எனக்குத் திருமணத்தை நிச்சயம் செய்த விஷயத்தை, என் அப்பா கூறியவுடன், நான் என் அம்மாவைக் கோபமாய் பார்த்தேன். அவர்கள் இயலாமையுடன் தலை குனிந்து கொண்டார்கள். என் தங்கையோ, என்னை பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறியே ஆக வேண்டும். என் தங்கையின் கண்கள் மிக அழகாய் இருக்கும். அதில் நான் தவிப்பைக் கண்டேன். எனக்கு என்ன வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். இப்பொழுது எனக்குக் கிடைத்திருப்பது நான் ஆசைப்பட்டது அல்ல.
அவள் முதல் முறை சூரியகுமாரைச் சந்தித்தபோது, வாய் ஓயாமல் அவனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றைக்கு அவனுடைய எளிமையும் அடக்கமும் அவளுக்குப் பிடித்திருக்கிறது என்று எண்ணினேன். ஆனால், அவன் மீது அவளுக்குக் காதலே ஏற்பட்டுவிடும் என்று நான் எதிர்பார்க்கக்கவில்லை. அவள் என்னிடம் மறைத்த ஒரே விஷயம் அது மட்டும் தான். எந்தத் தங்கைதான் அண்ணனிடம் தன் காதல் கதையைக் கூறுவாள்?
என் கையைப் பிடித்து, என்னைத் தனியாய் இழுத்துச் சென்றாள் நந்தினி.
"அண்ணா, எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்." கலங்கிய கண்களோடு கூறினாள். அவள் கண்ணீரை என்னால் சகிக்க முடியாது. ஏனென்றால் அதில் எப்போதும் உண்மை மட்டும் தான் இருக்கும். நான் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டேன்.
"உன் ஆசை என்னன்னு எனக்குத் தெரியும். நான் சூர்யாகிட்ட உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிடுறேன். நான் சொன்னா அவர் கேட்பார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, அண்ணா" என்றாள்.
"ஓய்... கல்யாணத்துக்கு முன்னாடியே அவரை உன் கண்ட்ரோல்ல கொண்டுவர நினைக்கிறியா?" என்று, சகஜமாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றேன்.
"சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்காத. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்றாள்.
"எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம்." என்று பொய் கூறினேன்.
"பொய் சொல்லாத." அவள் உண்மையைக் கண்டுபிடித்து விட்டாள்.
"நான் ஏன் பொய் சொல்லணும்? நம்ம இருக்கிறது ரொம்ப கிரிட்டிக்கலான கண்டிஷன். சரியான நேரத்துல நமக்கு கை கொடுத்து உதவுறதுக்காக, நம்ம அவங்களுக்குத் தேங்க்ஸ் தான் சொல்லணும். நான் எவ்வளவு டென்ஷனா இருந்தேன் தெரியுமா? அவங்க நம்ம வழியைக் கிளியர் பண்ணி கொடுத்திருக்காங்க. அதுல ஜாலியா நடந்து போக எனக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது? உன் கல்யாணத்தை ஜாலியா என்ஜாய் பண்ணு." என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றேன்.
"உன் கல்யாணத்தை நீ என்ஜாய் பண்ணுவியா, அண்ணா?" என்னை மடக்கினாள் என் தங்கை.
"ஏன் மாட்டேன்? நான் கல்யாணம் பண்ணிக்கப் போறது ஒரு இளவரசியை ஆச்சே!" என் சிரிப்பில் இருந்த பொய்யை அவள் கண்டுபிடித்துவிடக்
கூடாது என்று நான் கவனமாக இருந்தேன்.
அவள் என்னை நம்ப முடியாமல் பார்த்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் நான் அவ்வளவு பெரிய வித்தியாசத்தைக் காட்டினால், அவளால் எப்படி நம்ப முடியும்? எனக்கு வேறு வழி இல்லை. என் தங்கையை என்னால் காயப்படுத்த முடியாது. அவள் தன் காதலை இழக்க நான் காரணமாக இருக்க முடியாது. என் தங்கைக்காக, என்மேல் திணிக்கப்பட்ட இந்தக் கல்யாணத்தை நான் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால், சூரியக்குமார் குடும்பத்தினர் அவர்களது நிலைப்பாட்டில் மிக உறுதியாய் இருந்தார்கள். நாங்கள் அதை மாற்ற முயன்றால், அவர்கள் இரண்டு திருமணத்தையும் நிறுத்தி விடுவார்கள் என்று எனக்குத் தெரியும்.
என் மனைவி, என் அம்மாவுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேனோ, அதை எல்லாம் இப்பொழுது நானே என் அம்மாவுக்கு நேரடியாகச் செய்து விட்டால் போகிறது! அவ்வளவு தானே! அந்த நிலைமையை எதிர் கொள்ள நான் தயாரானேன். ஆனாலும் என் மனதில் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்தது. நான் பார்த்து கூட இருக்காத அந்தப் பெண், என் மனதை ஆளத் தொடங்கி விட்டாள்.
வாக்கு கொடுத்தபடியே எங்கள் வியாபாரத்தில் இருந்த எல்லா பிரச்சனைகளையும் சேதுபதி குடும்பத்தினர் தீர்த்து வைத்தார்கள். எல்லாம் மாயாஜாலம் போல் நடந்தது. அது எனக்கு ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டு காட்டியது. பணம் இருந்தால் எல்லாமே சாத்தியம்! அது மட்டும் இருந்துவிட்டால், நம்மால் எதை வேண்டுமானாலும் செய்து முடிக்க முடியும். விருப்பம் இல்லாத ஒருவனை, திருமணத்திற்குக் கூட ஒப்புக்கொள்ள வைக்க முடியும்... சேதுபதியின் குடும்பம் செய்ததைப் போல!
என் திருமணம் நிச்சயமானது. மணப்பெண்ணைப் பார்க்க வேண்டும் என்றோ, அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றோ, எனக்கு விருப்பம் இருக்கவில்லை. மிக விரைவிலேயே ஹாசினியை நான் சந்திக்க வேண்டும் என்று எல்லோரும் என்னைக் கட்டாயப்படுத்தப் போகிறார்கள் என்று நான் யூகித்தேன். ஆனால் அது நடக்கவே இல்லை. அது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் இளவரசி, தனக்கு வர இருக்கும் கணவனைப் பார்க்கும் விருப்பமில்லாமல் எப்படி இருக்கிறாள்? அல்லது, எனக்கே தெரியாமல் அவள் என்னைப் பார்த்து விட்டாளா?
எது எப்படி இருந்தாலும், நான் ஹாசினியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அவள் என் மனைவியாய் மாறப் போகிறாய். இந்த வாழ்க்கையை நான் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அவளுக்கும் தன் திருமண வாழ்க்கை பற்றி நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அவளது கணவனாய், அதை எல்லாம் நிறைவேற்றி வைக்க வேண்டியது என் கடமை, அதை அவள் என்னிடம் எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும்...!
ஹாசினியை என் வாழ்க்கையில் வரவேற்க நான் தயாரானேன். அவளை என் மனைவியாய் ஏற்றுக் கொள்ளவும் என் மனதைத் தயார் படுத்திக் கொண்டேன். அவளை நான் ஏற்றுக் கொண்டேன் என்பதன் முதல் படியாய், அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் என் மனதில் துளிர்விட்டது. அவளுடைய புகைப்படம் இருக்கிறதா என்று கூகுளின் தேடினேன். ஆனால், இல்லை.
மறுநாள்
என் அலுவலகத்தில் ஒரு முக்கியமான கோப்பை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, லேண்ட்லைன் மணி அடித்தது. என் கையில் இருந்த கோப்பில் இருந்து கண்ணை எடுக்காமல், அந்த அழைப்பை ஏற்றேன்.
"கௌதம் ஸ்பீக்கிங். யார் பேசுறீங்க?"
"ஹாசினி" என்ற பதில் வந்தது.
எனக்கு வார்த்தை பஞ்சம் ஏற்பட்டது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் அதே ஹாசினி தான் பேசினாள். அவள் எனக்கு அழைப்பு விடுப்பாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது அவள் எனக்கு எதற்காக ஃபோன் செய்கிறாள்? ஒரு வேலை அரச குடும்பத்தில் இருப்பவர்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய பார்ட்டிக்குப் போகலாம் என்று என்னைக் கூப்பிடப் போகிறார்களோ? என் கற்பனை தேர் வேகமாய் ஓடியது.
"சொல்லு," என்று என் குரலில் முடிந்த அளவிற்கு மென்மை காட்டினேன்.
"உங்கள கல்யாணம் பண்ணிக்க நான் விரும்பல." என்று கூறி என்னைப் பேச்சிழக்க வைத்தாள் ஹாசினி.
அவளுக்கும் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையா?
"ஏன்னு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறதா நான் நினைக்கல. ஸ்டெப் அவே ஃப்ரம் திஸ் மேரேஜ். " என்று சொன்ன அவள் குரல் பணிவாக இல்லை.
அது என் ஈகோவைத் தொட்டுப் பார்த்தது.
"எனக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்ல. அதுக்கு எனக்கும் ரொம்ப முக்கியமான காரணம் இருக்கு. அதை நீ தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல." என்று நானும் பதிலுக்கு விளாசினேன்.
"அப்புறம் எதுக்குத் தேவையில்லாம கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு? ஸ்டெப் பேக், " அவள் குரலில் எரிச்சல் தெரிந்தது.
" இந்தக் கல்யாணம் உனக்குப் பிடிக்கலைன்னா நீயே நிறுத்தி இருக்கலாமே? " நான் அவளை மடக்க முயன்றேன்.
" ஐ அம் ஃபோர்ஸ்டு. " என்று அவள் கூறியது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
அவளும் இந்தக் கல்யாணத்திற்காக நிர்பந்திக்கப்படுகிறாளா? என்னைப் போலவேவா? ஆனால் ஏன்? அவளுக்குப் பிடிக்காத திருமணத்தைச் செய்து கொள்ளச் சொல்லி அவளை ஏன் கட்டாயப்படுத்துகிறார்கள்? ஒருவேளை அவள் வசதி இல்லாத யாரையும் காதலித்து விட்டாளோ? அவனிடமிருந்து அவளைப் பிரித்து வைக்க இந்தத் திருமணத்தைச் செய்து வைக்கிறார்களோ? நிறைய கேள்விகள் எனக்குள் எழுந்தது. என்னைச் சமாளித்துக் கொண்டு,
"நானும் அப்படித்தான்." என்றேன்.
"என்னால இந்த ரிலேஷன்ஷிப்ல சந்தோஷமா இருக்க முடியாது." என்று தயங்காமல் கூறினாள்.
"என்னாலயும், எப்பவும், நிச்சயமா முடியாது. " அவளை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவன் இல்லை என்று காட்ட, நானும் அதைச் சொன்னேன்.
"அப்படின்னா ஏதாவது செஞ்சு இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்க." என்று அவள் கூறியது, நிச்சயம் கட்டளை தான்.
" ட்ரை பண்றேன்" என்று கூறியவுடன்,
"தேங்க்ஸ்" என்று அழைப்பைத் துண்டித்தாள்.
அந்த அழைப்பைப் போலவே எங்கள் திருமண ஏற்பாடும் துண்டிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
ஹாசினிக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று வெட்ட வெளிச்சமாய் தெரிந்துவிட்டது. ஒருவேளை அவள் வேறு யாரையாவது காதலிக்கலாம்... அவள் இந்தியாவின் பாரம்பரியமான அரச குடும்பத்தைச் சேர்ந்தப் பெண். அப்படி இருக்கும்போது, அவள் எப்படி சிங்கிளாக இருப்பாள்?
அவளது அழைப்பை ஏற்கும் வரை அவளைப் பார்க்க வேண்டும் என்று, என் மனதின் ஓரத்தில் ஓர் ஆசை இருந்தது. ஆனால் அவள் பேசிய பிறகு, அந்த எண்ணம் சுத்தமாய் அழிந்து ஒழிந்தது.
அவளிடம் பேசியதற்கு மதிப்பளிக்கும் விதமாய், எங்கள் திருமணத்தை நிறுத்த, என்னால் முடிந்தவரை முயற்சி செய்ய நினைத்தேன். என் அப்பாவிடம் பேச, என்னைத் தயார் படுத்திக் கொண்டு வீட்டிற்குச் சென்றேன்.
நான் வீட்டிற்குச் சென்ற போது, எங்கள் திருமண பத்திரிகையுடன் என் தங்கை என்னிடம் ஓடி வந்தாள்.
"அண்ணா, இங்க பாரு, நம்ம வெட்டிங் இன்விடேஷன் வந்துடுச்சு. எவ்வளவு அழகா இருக்குல்ல?" அவள் பூரிப்புடன் சொல்லும்போது, என்ன சொல்வது என்றே எனக்குப் புரியவில்லை. என் தங்கைக்காக நான் அமைதியானேன்.
எனக்குத் தெரியும், இந்தக் கல்யாணத்தை நடக்க விடுவதற்காக ஹாசினி என் மீது கொலை வெறியில் இருப்பாள். எனக்கும் தான் அவள் மீது கோபம் இருக்கிறது! அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் அவளது செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தத் திருமணத்தை நிறுத்தி விட வேண்டியதுதானே? ஒரு இளவரசியால் அதைச் செய்ய முடியாதா?
.........
நேரம் ஜெட் வேகத்தில் பறந்தது. ஹாசினியுடன் பேசிய வார்த்தைகள் என் தலைக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. விருப்பமில்லாத ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? அவளுடன் என் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது? கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அதனால், கற்பனை செய்வதையே நிறுத்தினேன்!
எவ்வளவு முயற்சி செய்தாலும் என்னால் ஹாசினியைப் பற்றி நினைக்காமல் இருக்கவே முடியவில்லை. ஏனென்றால் நாளை எங்கள் திருமணம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co