11 மன உறுதி
11 மன உறுதி
என்னைப் பற்றியும், ஹாசினியைப் பற்றியும், மாறிவிட்ட என் வாழ்க்கையைப் பற்றியும் எண்ணியபடி நான் பேலசைவிட்டு கிளம்பினேன்.
என் திருமணத்திற்கு முன்பு, என் அம்மாவிடம் எல்லாவற்றிற்கும் பிடிவாதம் பிடித்து, சாதித்துக் கொண்டிருந்தேன். அவர் எப்போதும் எனக்குப் பிடித்ததைத் தான் சமைப்பார். உண்மையில் எனக்கு எல்லாமே பிடிக்கும். எல்லா உணவையும் சுவைத்து சாப்பிடுவேன். ஆனால் என் திருமணத்திற்குப் பிறகு, பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிட நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன். காய்கறி, பழங்களைச் சாப்பிட நான் முயலும் இல்லை, முட்டையும் பாலும் சாப்பிட நான் பாம்பும் இல்லை...! ச்சே... இதை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.
ஹாசினிக்குத் தனி அறை முறை பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அவள் தனியாகவே இருக்க விரும்புவாள். நான் அவனிடம் பேசிய போது, அவள் என்னிடம் பேசினாள் தான்... ஆனால், என் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள். வேலைக்காரர்களின் முன்னிலையில் அவள் இயல்பாய் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள். எனக்குத் தெளிவாக புரிந்தது, எங்கள் திருமணத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க அவள் தயாராக இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அவள் மாறக்கூடும் என்று நான் நம்பினேன். ஏனென்றால், ஆரம்பத்தில் நானும் கூட தயங்கினேன் தானே! காலம் செல்ல செல்ல எல்லாம் மாறும்! நான் என்னை மாற்றிக் கொண்டு இந்தப் புதிய வாழ்க்கையைத் தழுவிக்கொண்டேன். எனக்கு வேறு வழி இல்லை. நான் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்ட இந்த வாழ்க்கையை, முன்னெடுத்துச் செல்ல நான் தயாரானேன். நான் வேறு என்ன செய்வது? விவாகரத்தா? நிச்சயம் இல்லை! அது என் மனதில் இல்லவே இல்லை! நான் கௌதம். நான் அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டு விடுபவன் அல்ல. நான் நிச்சயம் ஜெயிப்பேன் எது எப்படி இருந்த போதிலும்!
நான் எங்கள் அலுவலகத்தை வந்தடைந்தேன். எனது நண்பனும் மேலாளருமான சக்தி என்னை அதிர்ச்சியோடு ஏறிட்டான், எனக்கு என் திருமணத்தில் இருந்த விருப்பமின்மை தெரிந்த பிறகும்! அவனைப் பார்த்து குளிர்ச்சியாய் புன்னகைத்து விட்டு என் அறையை நோக்கி நடந்தேன். என்னைப் பின்தொடர்ந்து வந்தான் சக்தி.
"என்ன ஆச்சு, பட்டி? ஒன்னும் பிரச்சனை இல்லயே? "
" ஒரு பிரச்சனையும் இல்ல. எதுக்காக அப்படிக் கேக்குற? " என்று என் இருக்கையில் அமர்ந்தேன்.
"நீ இன்னைக்கு ஆஃபீஸ்க்கு வந்திருக்கியேன்னு கேட்டேன்..."
"தினமும் தானே நான் ஆஃபீசுக்கு வரேன்?"
"ஆனா உனக்கு கல்யாணம் ஆகி இன்னும் மூணு நாள் கூட ஆகலையே..."
"அதனால என்ன?"
"இந்தச் சேஞ்சை அடாப்ட் பண்ண கஷ்டமா இருக்கா?"
"அடாப்ட் பண்ணிடுவேன்,"
"அப்படின்னா நீ இன்னும் அதை செய்யல..."
"நீ என்ன நெனச்ச? ராஜாவா மாறுறது அவ்வளவு ஈஸியா?" என்று சிரித்தேன்
"நீ ஏன் உன் ஒய்ஃப்கிட்ட பேசி அவங்களை உன் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போகக் கூடாது?" என்று எனக்கு யோசனை கூறினான் என் நண்பன்.
சில நொடி திகைத்த நான்,
"ஏன் அப்படிச் சொல்ற?" என்றேன்.
"புருஷன் வீட்டில் இருக்கிறது பொண்ணுங்கள பொறுத்த வரைக்கும் ரொம்ப சாதாரணம்."
"குடும்பம், அப்பா, அம்மா, கூட பொறந்தவங்க எல்லாரையும் விட்டுட்டு புது இடத்துக்குக் குடி போறது ஒரு பொண்ணுக்கு ரொம்ப ஈசின்னு நம்ம நினைக்கிறோம். அந்தப் புது சூழ்நிலையை அவங்க ஏத்துக்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு வாழணும்னு நினைக்கிறோம். அது அவ்வளவு ஈஸினு நினைக்கிறியா?"
"அது காமன் தானே?"
"எல்லா பொண்ணுங்களும் குழந்தை பெத்துக்கறாங்க அப்படிங்கறதுக்காக அது ஈஸின்னு சொல்லிடுவியா?"
சக்தி தன் உதடுகளை அழுத்தினான்.
"பொண்ணுங்க எவ்வளவு ஸ்ட்ராங்கானவங்கன்னு நம்ம எப்பயாவது யோசிச்சிருக்கோமா? அவங்களோட வில்பவர் டேம் ஆஸம். நாங்க தான் ரொம்ப ஸ்ட்ராங்கன்னு ஆம்பளைங்க ரொம்பவே அலட்டிகிறோம்... ஆனா எமோஷனல் பான்டிங் வரும்போது நம்ம ரொம்ப வீக். நான் என் ஒய்ஃப் கூட தனியா தான் இருக்கேன் ஆனாலும் அதை ஏத்துக்க திணறிப் போறேன். ஆனா கேர்ள்ஸ் புது சூழ்நிலையையும் புருஷனையும் மட்டும் ஃபேஸ் பண்ணல... புருஷனோட ஃபேமிலி, அவங்களுடைய லைஃப் ஸ்டைல் , அவங்க ரிலேட்டிவ்ஸ், இன்னும் எவ்வளவோ! அவங்க எவ்வளவு ஒன்டர்ஃபுல் இல்ல! அவங்களோட வில் பவருக்கு முன்னாடி நம்மால நிக்கவே முடியாது. நம்ம அதை ஒத்துக்கிட்டு தான் ஆகணும்."
"ஒத்துக்கிறேன்," என்று சிரித்தான் சக்தி.
"பொண்ணுங்களை மாதிரி எல்லாத்தையும் விட்டுட்டு தன் மாமியார் வீட்ல ஆம்பள பசங்களால் செட்டில் ஆகவே முடியாது. ஆனாலும், பொண்ணுங்க நமக்காக அதை செய்யணும்னு எதிர்பார்க்கிறோம்."
யோசனையுடன் தலையசைத்தான் சக்தி.
"கொஞ்சம் யோசிச்சு பாரேன், ஒருவேளை ஹாசினி எங்க வீட்டுக்கு வந்திருந்தா, அவ எவ்வளவு ஸ்ட்ரகில் பண்ணி இருக்கணும்? எங்க குடும்பத்துல மொத்தம் பத்து பேர். எல்லாரும் அவ தன்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு நினைப்பாங்க... என்னையும் சேர்த்து.!"
"கௌதம், நீ எவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்னு புரியுது."
நான் பெருமூச்சு விட்டேன்.
"ராயல் கஸ்டம்சை ஃபாலோ பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னைப் பொறுத்த வரைக்கும் அது காஸ்ட்லி ஜெயில்... கோல்டன் கேஜ்... " என்று கூறிய நான், சில நொடி திகைத்தேன். ஒரு பெண் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பதைப் போன்ற, நான் வரைந்த ஓவியத்தை ஹாசினி எப்படி வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் என்பது என் நினைவுக்கு வந்தது.
அவள் வாழும் வாழ்க்கையைக் குறித்து உண்மையிலேயே ஹாசினி சந்தோஷமாக இருக்கிறாளா? அல்லது, என்னைப் போல் அவளும் கூட அதை ஒரு தங்க குண்டு என்று தான் எண்ணுகிறாளா? என்னால் முடிவுக்கு வர முடியவில்லை. அவளிடம் பேச நான் தயாராகத் தான் இருக்கிறேன். ஆனால் நிச்சயம் அவள் மனம் திறக்க மாட்டாள். அது எனக்குத் தெரியும். என்னை அவள் தன்னுடைய உறவாய் எண்ணவில்லை என்று எண்ணிய நான், மீண்டும் திகைத்தேன். நான் அவளை என் உறவாய் நினைக்கிறேனா? அவள் என் மனைவி என்ற உணர்வு எனக்கு இருக்கிறதா? ஆம். அவள் என் மனைவி, எது எப்படி இருந்த போதிலும். நான் அவள் கணவன், அவள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும். அதை எங்களால் மாற்ற முடியாது, என்றால் எங்களுக்குள் இருக்கும் வித்தியாசத்தை நாங்கள் மாற்றியாக வேண்டும். அதை செய்வது என்ற முடிவுக்கு நான் வந்தேன்.
அப்பொழுது என் அறைக்குள் நுழைந்தார் என் அப்பா.
"கௌதம், நீ இங்க இருக்க?"
அவர் எந்த அர்த்தத்தில் அதைக் கேட்டார் என்று எனக்குத் தெரியும். என்னை அலுவலகத்தில் பார்த்து அவர் பதட்டமானார், முதல் நாள் நான் ஜாகிங் சென்று திரும்பிய போது பதட்டமானதைப் போலவே!
"எக்ஸ்கியூஸ் மீ!" என்று என் அறையை விட்டு வெளியேறினான் சக்தி, வரப்போவது என்ன என்பதை அறிந்து.
"ஆமாம். நான் இங்க இருக்கேன். வழக்கம் போலத் தான்," என்றேன் அமைதியாக.
"ஆனா, நீ இப்போ பழைய கௌதம் இல்ல. நீ கல்யாணம் ஆன ரெண்டு நாள்ல ஆஃபீசுக்கு வந்துட்டேன்னு தெரிஞ்சா சேதுபதி என்ன நினைப்பாரு?"
"அவரோட மருமகப்பிள்ளை ரொம்ப சின்சியரா இருக்கான்னு நினைப்பாரு."
"கௌதம்..."
அவரை மேற்கொண்டு பேசவிடாமல் என் கையைக் காட்டித் தடுத்தேன்.
"காலையில என்ன சாப்பிட்டீங்க?" என்றேன்.
என் அப்பா முகம் சுருக்கினார்
"சொல்லுங்க,"
"பொங்கல், வடை, சாம்பார், சட்னி."
"நான் என்ன சாப்பிட்டேன் தெரியுமா?"
"நீ ராயல் ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டு இருப்ப,"
"ஆமா, ஃப்ரூட்ஸ், வெஜிடபிள் சாலட், பாயில்ட் எக்... ரொம்ப ராயலா சாப்பிட்டேன்..."
என் அப்பாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால் நான் எவ்வளவு பெரிய சாப்பாட்டு ராமன் என்று அவருக்குத் தெரியும்.
"அவங்களோட லைஃப் சிஸ்டமேட்டிக்கா இருக்கும்,"
"ப்ளீஸ், மினி பேலஸ்க்கு வந்து, அந்த ராயல் சிஸ்டமேட்டிக் லைஃபை என்கூட ஷேர் பண்ணிக்கோங்க. அதை என்னால தனியா செய்ய முடியல. ரொம்ப ஹெவியா இருக்கு." என் குரலில் எகத்தாளம் தெரியாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்.
என் அப்பா தடுமாறினார். ஏனென்றால் அதற்கு முன் நான் அப்படி எல்லாம் அவரை ஏகத்தாளம் செய்ததில்லை.
"கௌதம்..."
மீண்டும் அவரைத் தடுத்தேன்.
"எனக்குத் தெரியும். நந்தினி அவங்க பேலஸ்ல இருக்கா. என்னோட எல்லா செயலும் அவளையும், நம்ம பிசினஸ்சையும் அஃபெக்ட் பண்ணும். நான் இந்தப் புது வாழ்க்கையை அட்ஜஸ்ட் பண்ணி வாழணும். அதைத்தானே சொல்லப் போறீங்க?"
என் அப்பா என்னை வெறித்துப் பார்த்தார்.
"ஹாசினி உன்னோட ஒய்ஃப். அவளோட புருஷனா, அவளுடைய எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டியது உன் பொறுப்பு."
ஒரு முழு நிமிடம் எடுத்து, என் அப்பாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துவிட்டு, பிறகு வெடித்து சிரித்தேன். என்னைக் குழப்பமாய் பார்த்துக் கொண்டு நின்ற என் அப்பா, தன் பொறுமை இழந்து கத்தினார்.
"எதுக்காக டா பைத்தியம் மாதிரி சிரிக்கிற?"
"நான் எப்படிப்பா சிரிக்காம இருக்க முடியும்? புருஷனோட பொறுப்பு என்னன்னு நீங்க( என்பதை அழுத்தி) லக்சர் குடுக்குறீங்களே...?"
என் அப்பா அதிர்ச்சி அடைந்தார். நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
"உங்க ஒய்ஃபோட எக்ஸ்பெக்டேஷன் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? என்னைக்காவது அவங்க விருப்பத்தை நிறைவேத்தி வைக்கணும்னு நீங்க நினைச்சிருக்கீங்களா? அவங்க சாப்பிட்டாங்களா இல்லையானாவது அவங்களைக் கேட்டுருக்கீங்களா? இல்ல, அவங்க திருப்தியான வாழ்க்கை வாழறாங்கலான்னு தெரிஞ்சுக்கவாவது ட்ரை பண்ணி இருக்கீங்களா? கொஞ்சம் கூட தயக்கமே இல்லாம, ஒரு நல்ல புருஷனா இருக்கிறது என்னோட பொறுப்புன்னு நீங்க எப்படி எனக்கு அட்வைஸ் பண்றீங்க?"
என் அப்பா அதிர்ச்சி அடைந்தார். நான் அவரை எதிர்த்துப் பேசினேன் என்பதற்காக அல்ல... என் மனதை அழுத்திய கடினமான ஏதோ ஒன்று தான் என்னை அப்படிப் பேச வைத்திருக்க வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டதால்.
"உனக்கும் ஹாசினிக்கும் நடுவுல எல்லாம் நல்லா தானே இருக்கு?"
"என்னோட ரிலேஷன்ஷிப் பத்தி நீங்க வொரி பண்ணிக்க வேண்டாம், டாட். எனக்கும் என் ஒய்ஃப்க்கும் நடுவுல இருக்குற பிரச்சனையை எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும். நீங்க அட்லீஸ்ட் இப்பவாவது உங்க ஒய்ஃபைப் பத்தி நினைங்க. அவங்க ரொம்ப வருஷமா தன் புருஷனோட கடைக்கண் பார்வைக்காக தவம் கிடக்கிறாங்க..." என்று சற்று கடுமையாகவே கூறினேன்
"கௌதம்..."
அவர் பேச்சை வெட்டி,
"நான் ஏற்கனவே சொல்லிட்டேன். என்னோட வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன். நான் எப்பவும் தோத்துப் போக மாட்டேன்."
அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
நான் என் வேலையைத் தொடர்ந்தேன். என் மனம் முழுமையாய் வேலையில் லயிக்கவில்லை. அது எனக்குப் புதிதாய் தோன்றியது. அனைத்து பிரச்சனைகளையும் மறந்து வேலை செய்ய பழக்கப்பட்டவன் நான். வேலை செய்யத் தொடங்கிவிட்டால், என் புத்தியில் வேறு எதுவும் தோன்றாது. இப்போது நான் சற்று தடுமாறினேன்.
மாலை
சக்தி என அறைக்கு வந்தான்.
"கௌதம், உனக்குப் பிரச்சனை இல்லன்னா, இன்னைக்குக் கான்ஃபரன்ஸை அட்டென்ட் பண்ண முடியுமா?"
என் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தேன்.
"எனக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது?"
"கான்ஃபரன்ஸ் முடிய ரெண்டு மணி நேரம் ஆகும்."
நான் என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன் அது மணி 5 என்றது.
"அப்பா எங்க போனாரு?"
"என்னைக் கான்ஃபிரன்சைக் கவனிச்சுக்கச் சொல்லிட்டு அவர் கிளம்பிட்டாரு."
அவர் கிளம்பி சென்று விட்டாரா? எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.
"சரி, நான் அட்டென்ட் பண்றேன்."
"ஓகே." சக்தி சென்று விட்டான்.
கான்ஃபிரன்ஸ் விட்டு விட்டு என் அப்பா எங்கு சென்றார்? அந்த எண்ணத்தை உதறிவிட்டு கான்ஃபரன்ஸ் ஹாலுக்குச் சென்றேன்.
சக்தி கூறியது போல் அந்தக் கான்ஃபரன்ஸ் நிறைவு பெற 2 மணி நேரம் ஆனது. அதன் பிறகு மினி பேலசை நோக்கிக் கிளம்பினேன். அன்று மாலை வீட்டிற்குச் செல்லலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாய், கான்ஃபிரன்ஸ் என் நேரத்தை எடுத்துக் கொண்டது. அதனால் என் வீட்டிற்கு மறுநாள் செல்வது என்று தீர்மானித்தேன்.
நான் மினி பேலசை நெருங்கிக் கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்யத் துவங்கியது. காரை நிறுத்திவிட்டு உள்ளே நடந்தேன். நான் சரியாய் படிக்கட்டில் கால் வைத்த நேரம், மின்சார வெட்டு ஏற்பட்டது. பேலஸ் இருளில் மூழ்கியது. ஒரு யூகத்துடன் மெல்ல படியேறினேன். சில நிமிடங்களில் ஜெனரேட்டரை இயக்குவார்கள் என்று எனக்குத் தெரியும்.
இருட்டில், என் அறையில் இருந்து ஒருவர் இடது பக்கமாய் ஓடுவதைப் பார்த்து, நான் திடுக்கிட்டேன். நான் கத்தி கூப்பாடு போட எண்ணினேன். ஆனால் செய்யவில்லை. ஏனென்றால், என் அறையில் இருந்து ஓடிய அந்த உருவம், என் மனைவியைப் போல் இருந்தது. ஹாசினியா ஓடுகிறாள்? எங்கே ஓடுகிறாள்? மடிக்கணினியின் பையைக் கடைசி படிக்கட்டின் ஓரத்தில் வைத்துவிட்டு, அவள் சென்ற திசையில் அவளைப் பின்தொடர்ந்தேன். அந்தச் சுற்றுப்பாதை முடிவடைந்த இடத்தில் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டு ஆரம்பமானது. எனக்குக் குழப்பம் ஏற்பட்டது. மழை பெய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவள் மாடியில் என்ன செய்கிறாள்? சத்தம் போடாமல் மெல்ல படி ஏறினேன். அங்கு நான் எதையும் காணவில்லை. எனக்குக் குழப்பம் ஏற்பட்டது. அப்பொழுது மெல்லிய சிரிப்பொலி எனது இடப்பக்கத்தில் இருந்து வந்தது. மழையைப் பற்றிக் கவலைப்படாமல் உள்ளே நடந்தேன்.
அங்கே ஒரு நபர் காலால் மழை நீரை உதைத்துக் கொண்டு, துள்ளி விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து நான் மலைத்து நின்றேன். அது ஹாசினி தானா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இளவரசிக்கு மழையில் நனையும் பழக்கம் இருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அப்பொழுது நான் எதிர்பார்த்தபடியே ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. மாடியில் இருந்த விளக்குகள் எரிந்தன. அது ஹாசினியே தான்... இளவரசி ஹாசினி!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co