10 அரச குடும்ப வழக்கம்
10 அரசு குடும்ப வழக்கம்
தனி அறை ஏற்பாட்டுக்கும் ஹாசினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிந்த போது மனம் நிம்மதி அடைந்தது.
ஆனால் அவள் யாருடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்? அது ஒரு போட்டா போட்டியைபே போல் எனக்கு தெரிந்தது. யாரோ வேண்டுமென்றே தவறாக ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி ஹாசினிக்கும் தெரிந்திருக்கிறது. இது இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடந்த வியாபார ஒப்பந்தம் மட்டுமல்ல. இரண்டு தனி நபர்களுக்கு இடையில் நடந்த ஒப்பந்தம். ஒருத்தி ஹாசினி. இன்னொருவர் யார்? அதை நான் தெரிந்து கொள்ள நினைத்தேன்.
ஹாசினி அங்கிருந்து சென்றதற்குபே பிறகு, நானும் மெல்ல வெளியே வந்து, கீழ்தளம் சென்றேன். என் குடும்பதினர் அங்கிருந்து கிளம்பத் தயாராக இருந்தார்கள். அதை புரிந்து கொண்ட ஹாசினி டாலியைக் கூப்பிடாமல்,
"ஜானகி..." என்று வேறு யாரையோ அழைத்தாள்.
ஒரு பெண் அவளுக்கு முன்னால் வந்து நின்றார்.
" டின்னர் டேபிளை அரேஞ்ச் பண்ணு, " ஹாசினி கட்டளையிட்டாள்.
"எஸ் யுவர் ஹைனஸ்," என்று திரும்பிய ஜானகி, இன்னும் சில பேருக்கு சைகை காட்டினாள். அவர்கள் சமையல் துறையாக இருக்க வேண்டும்.
அந்தப் பெரிய உணவு மேஜையை, எக்கச்சக்கமான உணவு வகைகளோடு அவர்கள் வெகு விரைவாய் நிரப்பினார்கள். உலகத்தில் இருந்த அத்தனை உணவு வகைகளும் அந்த மேஜையின் மீது இருந்தது. நார்த் இந்தியன், சவுத் இந்தியன், சைனீஸ், இட்டாலியன், மலேசியன், கான்டினென்டல், இன்னும் நிறைய... சத்தியமாய் அதில் சிலவற்றின் பெயர் என்னவென்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. எல்லோரும் அவரவர்களுக்குபே பிடித்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். நான் கிட்டத்தட்ட அனைத்தையும் சுவைத்தேன், என்னுடைய விருப்ப உணவான இட்டாலியன் ஆக இருந்தபோதிலும்...!
ஹாசினி இட்டாலியன் உணவை எடுத்த போது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவளுக்கும் இட்டாலியன் தான் பிடிக்குமா? ஒருவேளை அது உண்மையாக இருந்தால், எங்கள் இரண்டு பேருக்கும் ஒத்துப் போகும் ஒரே விஷயம் அதுவாகத்தான் இருக்கும்.
சாப்பிட்ட பிறகு எங்கள் குடும்பம் கிளம்பிச் சென்றது. வரவேற்பறையிலேயே அமர்ந்து, நான் எனது மின்னஞ்சலை பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஹாசினி எங்கள் அறைக்குச் செல்ல நினைத்தபோது, ஒரு பெண் அவளிடம் வந்து,
"இது உங்களோட பெடிக்யூர் டே, யுவர் ஹைனஸ். நீங்க மிஸ் பண்ணிட்டீங்க," என்றாள்.
தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, தலையசைத்தாள் ஹாசினி. அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தாள். ஒரு அகலமான பீங்கான் பாத்திரத்தில் வெந்நீரும், ரோஜா இதழ்களோடு இன்னும் சில பொருட்களும் கொண்டு வந்தார்கள். ஹாசினி தனது கால்களை அதில் வைத்தாள். ஏற்கனவே அவளது கால்கள் ரோஜா பூவைப் போலத் தானே இருக்கிறது? அதற்கு எதற்கு இந்த சவரட்சணை என்று எனக்குத் தோன்றியது.
அனைத்தையுமே தனது அட்டவணையின் படி தான் அவள் செய்து கொண்டிருக்கிறாள் என்று எனக்குப் புரிந்தது. நான் எங்கள் அறைக்குச் செல்லலாம் என்று நினைத்தபோது,
"கௌதம், நீங்களும் பண்ணிக்கிறீங்களா?" என்றாள் ஹாசினி.
எனக்கு ஆச்சரியமாய் போனது.
"பெடிக்யூரா?" என்றேன்.
அவள் ஆம் என தலையசைத்தாள்.
அவளுக்கு முன்னால் ஒரு சிறிய நாற்காலியில் அவளுக்கு மசாஜ் பண்ண தயாராய் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்து விட்டு, நான் வேண்டாம் என்று அவசரமாய் தலையசைத்தேன். ஒரு பெண்ணிடம் மசாஜ் செய்து கொள்வது சங்கடமாய் இருக்காது?
"எனக்கு இது அவசியம்னு தோணல. ஏன்னா, நான் ஷூஸ் தானே போடுறேன்?" என்று புன்னகைத்தேன்.
அவள் லேசாய் முகத்தைச் சுருக்கினாள். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நான் அதை வேண்டாம் என்று கூறுவேன் என அவள் எதிர்பார்க்கவில்லையோ?
"எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் என்னோட திங்க்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணணும்."
"சர்வன்ட் யாராவது உங்களுக்கு அரேஞ்ச் பண்ணி கொடுப்பாங்க." என்று கூறிவிட்டு,
"நிர்மலா," என அழைத்தாள்.
"இல்ல. தேவையில்ல. நானே செஞ்சிக்குவேன். மத்தவங்க ஹெல்பைக் கேட்கிற அளவுக்கு அது ஒன்னும் அவ்வளவு பெரிய வேலை இல்ல." என்று நான் சொன்ன போது, அவள் ஏன் அப்படி ஒரு முகபாவணையைக் காட்டினாள் என்று எனக்குப் புரியவில்லை.
நான் எங்கள் அறைக்கு வந்து, என்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கத் துவங்கினேன். அந்த அலமாரியில் நிறைய இடம் இருந்தது, நானே படுத்து உறங்கும் அளவுக்கு...! என்னுடைய கோட், ஷர்ட் அனைத்தையும் ஹேங்கரில் போட்டு மாட்டிவிட்டு, மற்ற பொருட்களை எல்லாம் ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது அழகாய் அடுக்கி வைத்தேன். வேலை முடிந்தது.
சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்தியைப் பார்க்க ஆரம்பித்தேன்.
அப்பொழுது ஹாசினி அவசரமாய் உள்ளே ஓடி வந்தாள். நான் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அப்படியே நின்றாள். என்னுடைய பொருட்கள் எல்லாம் அந்த அறையிலேயே அடுக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அவள் முகத்தில் ஒரு அசவுகரியம் தெரிந்தது. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.
அவள் தொலைக்காட்சியையும் என்னையும் பார்த்தபடி தயங்கி நின்றாள். அவள் தொலைக்காட்சியைப் பார்க்க விரும்புகிறாள் என்று எனக்குத் தோன்றியது.
"நீ டிவி பார்க்கப் போறியா?"
ஆமாம் என அவசரமாய் தலையை அசைத்தாள்.
"இந்தா," ரிமோட்டை அவளிடம் கொடுத்தேன்.
"தேங்க்ஸ்," என்னிடமிருந்து ரிமோட்டைப் பெற்றுக் கொண்டாள்.
சோஃபாவில் இருந்து எழுந்து, அவளுக்கு இடம் கொடுத்தேன். என்னுடன் சேர்ந்து தொலைக்காட்சியைப் பார்ப்பது அவளுக்குச் சௌகரியமாய் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை, இதனால் தான் அவள் என்னுடைய பொருட்களை இங்கே பார்த்தவுடன் அசோகரிமாய் உணர்ந்தாள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எங்கள் தனி அறையில் தொலைக்காட்சி இல்லை. பொது அறையில் மட்டும் தான் இருந்தது. நான் இங்கு இருந்தால், அவளால் சௌகரியமாய் டிவி பார்க்க முடியாது.
சேனலை மாற்றி விட்டு, சோபாவில் அமர்ந்தாள். அவள் பார்த்தது ஒரு ஆங்கில சேனல். அதில் ஒரு சமையல் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் பெயர் 'ஹெவன்ஸ் கிச்சன்'.
அவள் சமையல் நிகழ்ச்சியைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவளிடம் அதை பற்றிப் பேச நினைத்தேன்.
"நீ குக்கரி ப்ரோக்ராம் எல்லாம் பாப்பியா?" என்னை பார்த்து ஆமாம் என தலையசைத்தாள்.
"இந்தியன் ப்ரோக்ராம் எல்லாம் பார்க்க மாட்டியா?"
"பாப்பேன்,"
"அம்மா கிட்டத்தட்ட எல்லா ப்ரோக்ராமும் பாப்பாங்க,"
அவள் என்னை பார்த்தபோது, அவள் கண்ணில் மின்னல் வெட்டியது.
"இந்த ப்ரோக்ராம்ல அப்படி என்ன ஸ்பெஷல்?" அது அவளுடைய விருப்பமான நிகழ்ச்சி என்று புரிந்து கொண்டு கேட்டேன். அவள் பெடிக்யூரை முடித்துக் கொண்டு ஓடிவந்த விதம் அதை எனக்குச் சொல்லியது.
"அந்த செஃப்," என்றாள்.
"யார் அவரு?"
"செஃப் ஆலன் ஸ்மித்,"
"ஓ..."
என் கைபேசியை எடுத்து, ஆலன் ஸ்மித்தைப் பற்றி கூகுள் செய்தேன். அவருக்கு 55 வயது. அவருடைய ப்ரொஃபைல் மிகப்பெரியது. உலகம் முழுக்க நிறைய உணவகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். லண்டனில் ஒரு கல்லினரி கல்லூரியும் அவருக்கு இருக்கிறது. நிறைய சேனல்களில் நிறைய நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறார். ஆனால் அவரிடம் அப்படி என்ன சிறப்பம்சம் உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை.
ஒரு தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, நான் வசதியாய் அமர்ந்து கொண்டேன். ஹாசினி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வேறு என்னbதான் செய்வது? அந்த நிகழ்ச்சியில் அவள் அந்த அளவுக்கு ஒன்றிப் போயிருந்தாள். அதில் அப்படி என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
அப்பொழுது அவளுடைய கைபேசி சப்தமிட்டது. அது என்ன என்பதை நிகழ்ச்சியின் இடைவேளை வரை அவள் பார்க்கவில்லை. இடைவேளையில் அவள் அதை பார்த்தபோது, நானும் மெல்ல எட்டிப் பார்த்தேன். அது ஒரு புடவை விளம்பரம். அவள் பார்த்தது, ஒரு ஜூட் சில்க் ஸாரி. விலை வெறும் 3000 ரூபாய் தான். அவள் புன்னகை புரிந்ததை நான் பார்த்தேன். தங்க ஜரிகை போட்ட புடவை அணியும் ஒரு இளவரசி, இவ்வளவு சாதாரண புடவையைப் பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை.
நிகழ்ச்சி துவங்கிய போது, மீண்டும் அவள் அதை கீழே வைத்தாள். நிகழ்ச்சி முடியும் வரை நான் காத்துக் கொண்டிருந்தேன். அவள் என்ன செய்யப் போகிறாள் என்று பார்க்க ஆவலாய் இருந்தேன், அவள் நிச்சயம் அவளது அறையில் தான் உறங்குவாள் என்று எனக்குத் தெரிந்த பிறகும்!
நான் எதிர்பார்த்தபடியே, நிகழ்ச்சி முடிந்த பிறகு, ரிமோட்டை என்னிடம் கொடுத்துவிட்டு, அவள் தனி அறைக்கு சென்று விட்டாள். அவளது அறையின் விளக்கு அணைந்த போது, நான் பெருமூச்சு விட்டேன். நான் பொது அறையிலேயே உறங்கினேன். எனக்கு வேறு வழி இல்லாமல் அல்ல. வேறு வழி எனக்கு வேண்டாம் என்று நினைத்தேன். நான் தனி அறையைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டால், ஹாசினியுடன் கலந்து பழகும் சந்தர்ப்பத்தை நான் மொத்தமாய் இழந்து விடுவேன். அது எனக்குப் புரிந்திருந்தது. இப்பொழுது எனக்கு ஓரளவு நம்பிக்கை இருந்தது. ஒவ்வொரு நாளும், அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்க, அரை மணி நேரமாவது செலவிடுவாள்... என்னுடன்!
எப்பொழுது பார்த்தாலும் என் மீது விசித்திரமான பார்வையை வீசிக் கொண்டிருந்த என் மனைவியை எண்ணியபடி உறங்கினேன்.
அடுத்த நாள்
யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு, என் தூக்கம் கலைந்தது. நான் மெல்ல கண்ணைத் திறந்த போது, ஹாசினி ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.
"ஷ் ஷ்... எதுக்காக சத்தம் போடுற? எனக்கு ஃபோன் பண்ண முடியாதா?" கதவை தட்டிய டாலியைத் திட்டினாள்.
"இது உங்க,"
அவளது பேச்சை வெட்டி,
"எக்சர்சைஸ் டைம். எனக்குத் தெரியும்." என்றாள் ஹாசினி.
அப்பொழுது தான், அவள் உடம்போடு ஒட்டிய ஸ்கின் சூட்டை அணிந்திருந்ததைக் கவனித்தேன் அவளுடைய காலை உடற்பயிற்சிக்கு அவள் தயாராகி விட்டாள் போலிருக்கிறது. அவள் வெளியே சென்றாள். அங்கே ஒரு உடற்பயிற்சி கூடம், சிறிய திரையரங்கம், நீச்சல் குளம், நூலகம் எல்லாம் இருக்கிறதென்று என் சித்தி மகன் கூறியிருந்தான்.
நான் குளியலறைக்குச் சென்று முகம் கழுவி தயாரானேன். நானும் ஓட்டப் பயிற்சிக்குச் செல்ல வேண்டும். முதல் நாள் ஓட்டப் பயிர்ச்சிக்குச் சென்றதற்காக நான் எப்படி வாங்கி கட்டிக் கொண்டேன் என்று நினைத்து சிரித்தேன். அந்தக் காட்சி இங்கு இல்லை. நல்லதாய் போயிற்று. முதல் மாடியில், படிக்கட்டுக்குப் பக்கத்தில் இருந்தது உடற்பயிற்சி கூடம். ஹாசினி ட்ரெட் மில்லில் வியர்க்க, விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தாள். அவளது வாக்கிங் ஸ்டைல் ஏ க்ளாசாக இருந்தது. நான் ஓட்ட பயிற்சிக்குக் கிளம்பிச் சென்றேன்.
இன்று அலுவலகம் செல்வதா வேண்டாமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் புதிதாய் திருமணம் ஆனவன் ஆயிற்றே! ஆனால் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, யாரிடமும் பேசாமல், எதுவும் செய்யாமல் என்னால் இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால் அலுவலகம் செல்ல முடிவு செய்தேன். ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு வந்து, அலுவலகத்திற்குக் கிளம்பினேன்
மறுபடியும் யாரோ எங்கள் கதவைத் தட்டினார்கள். அந்த நபரோடு பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள நான் தயாராக இல்லை. ஏனென்றால் அது என் வேலை இல்லை. அங்கு எல்லாமே முறைப்படுத்தப்பட்ட அட்டவணையுடன் நடந்தது. அது எனக்கு வேலைக்கு ஆகாது. நான் ஒரு சுதந்திர பறவை. எனக்கு என்ன வேண்டுமோ அதை நான் செய்வேன். எனக்குப் பசித்தால் சாப்பிடுவேன். தூக்கம் வந்தால் தான் உறங்குவேன். ஆனால் இங்கே, ஜெயில் போல் இருந்தது. எனக்கு அது பிடிக்கவில்லை. அப்படி ஒரு கட்டுப்பெட்டிக்குள் மாட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை.
குளித்து முடித்து அழகான டிசைனர் புடவையில் வெளியில் வந்தாள் ஹாசினி. சந்தேகம் இல்லாமல் அவள் வெகு அழகாய் இருந்தாள். ஏன் இருக்க மாட்டாள்? அவள் அழகை பராமரிக்கத் தான் அங்கே நிறைய ஆட்கள் இருக்கிறார்களே!
"யுவர் ஹைனஸ், பிரேக்ஃபஸ்ட் டைம்,"
என்னைப் பார்த்த ஹாசினி,
"கௌதம், நீங்களும் என்னோட வரிங்களா?" என்றாள்.
"யா," அவள் என்னிடம் சகஜமாய் பேசுவது அங்கே இருக்கும் வேலைக்காரர்களுக்காகத் தான் என்று தெரிந்த பிறகும், 'மாட்டேன்' என்று சொல்ல எனக்குத் தோன்றவில்லை.
என்னுடைய மடிக்கணினி பையை எடுத்துக்கொண்டு, ஹாசினியுடன் உணவு மேஜைக்குச் சென்றேன். எனக்குக் கிட்டத்தட்ட இதயமே நின்றுவிடும் போல் இருந்தது, அங்கு வைத்திருந்த காலை சிற்றுண்டியை பார்த்து. பழம் மற்றும் காய்கறி சாலட், வேகவைத்த முட்டை, பால்.
ஹாசினி பழ சாலடை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.
"நீங்க இதைத் தான் தினமும் சாப்பிடுவீங்களா?" என்றேன்.
"ஆமாம். என்னோட டயட் ப்ரோக்ராம், நான் சாப்பிடுற ஃபுட்ல இருக்குற கேலரிஸ்க்குத் தகுந்த மாதிரி இருக்கும்."
எனக்கு எரிச்சலாய் வந்தது. என் அம்மாவின் சாப்பாட்டை நினைத்துப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. வெண்பொங்கல், சாம்பார் வடை, பூரி, மசாலா தோசை, இடியாப்பம், தேங்காய் பால் என அசத்துவார்.
என் அப்பாவைத் தரதரவென இழுத்து வந்து, அவரை இந்த வெஜிடபிள் சாலடை சாப்பிட வைக்க வேண்டும் என்று ஆத்திரமாய் வந்தது எனக்கு. நான் எப்படிப்பட்ட ராஜ உணவை சாப்பிடுகிறேன் என்று அவருக்குத் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். டேமிட்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co