Truyen3h.Co

காதலுக்குக் கண் உண்டு!

10 அக்கறை

NiranjanaNepol


10 அக்கறை

ஹரிதாவை அவள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான் சுதர்சன். அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார் சிவகாமி.

"இது ஹரியோட ரிப்போர்ட், ஆன்ட்டி. நாளைக்கு இரண்டு டெஸ்ட் எடுக்க வேண்டியிருக்கு. நான் காலையில 10 மணிக்கு வந்து அவங்களை ஹாஸ்பிடலுக்குகே கூட்டிகேகிட்டுப் போறேன்"

"சரிங்கப்பா."

"நான் கிளம்புறேன், ஆன்ட்டி."

"இவ்வளவு தூரம் வந்துட்டு காபி சாப்பிடாம போறீங்களே..."

"பரவாயில்ல, ஆன்ட்டி," இப்போது தான் ஹரிதாவுடன் காபி பருகினேன் என்று கூறலாமா வேண்டாமா என்று அவனுக்குப் புரியவில்லை.

"நாங்க இப்ப தான் சாப்பிட்டோம்." என்றாள் ஹரிதா.

அவளையும், பிறகு சுதர்சனையும் ஆச்சரியமாய் பார்த்தார் சிவகாமி.

"நான் தான் சுதாவைக் கேட்டேன்."

"ஓ..."

"நான் கிளம்புறேன், ஆன்ட்டி."

"நீங்க காபி சாப்பிட்டுட்டீங்க... அதுக்காக வாசப்படியோட போகணும்னு அர்த்தமில்ல."

சுதர்சன் தயங்கினான்.

"உள்ள வாங்க, சுதா." என்றாள் ஹரிதா.

தனது காலணிகளைக் கழட்டி விட்டு உள்ளே நடந்தான் சுதர்சன்.

"டாக்டர் என்ன சொன்னாரு?"

"ஐ பாங்குக்கு லெட்டர் அனுப்பி இருக்காங்க. நம்ம டர்ன் வர நம்ம காத்திருக்கணும். எப்படி இருந்தாலும் ரெண்டு மாசம் ஆயிடும்."

"எல்லாம் கடவுள் செயல்..." என்றார் சிவகாமி.

"சுதர்சனோட செயல்." என்றாள் ஹரிதா, சுதர்சனைச் சங்கடத்தில் ஆழ்த்தி.

சிவகாமியும் சங்கடத்துடன் புன்னகைத்தார்.

"அவ சொல்றது சரி. உங்களால தானே இதெல்லாம் நடக்குது?"

சுதர்சனுக்கு என கூறுவதென்று தெரியவில்லை.

"உங்களுக்கு ஏதாவது அவசர வேலை இருக்கா?" என்றார் சிவகாமி.

அவர் ஏன் அப்படி கேட்டார் என்று தெரியாமல், மெல்ல இல்லை என்று தலையசைத்தான்.

"நீங்க ஹரிக்கு கொஞ்சம் படிப்புல ஹெல்ப் பண்ண முடியுமா?"

அதைக் கேட்டு புருவம் உயர்த்திய ஹரிதாவைப் பார்த்தான் சுதர்சன்.

"நானா? எப்படி?"

"ஒன்னும் இல்ல. நீங்க அவ பாடத்தைப் படிச்சா, அவ அதைக் கேட்டுக்குவா"

"அவ்வளவு தானா?"

ஆம் என்று தலையசைத்தாள் ஹரிதா.

"சரி."

"நீங்க ஹரிதாவோட ரூமுக்குப் போங்க."

சரி என்று அவள் அறைக்குச் சென்றான். அங்கு அமர நாற்காலிகள் இல்லை. சிவகாமி அவனிடம் ஹரிதாவின் புத்தகத்தைத் தர, அதைப் பெற்றுக் கொண்டு கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தான்.

"ஸ்டார்ட் பண்ணட்டுமா?"

"பண்ணலாம்."

"உங்களுக்குப் புரியலன்னா, என்கிட்ட சொல்லுங்க. மறுபடி படிக்கிறேன்."

"ஓகே."

போதுமான இடைவெளி விட்டு, மெதுவாய் அந்தப் படத்தைப் படித்தான், அவள் அதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமென்று. அவன் படிக்கும் பாடத்தில் சிக்கலான பகுதி வந்த போது, அதை மெல்ல நிறுத்தி ஒன்றுக்கு இரண்டு முறை படித்தான். அது அவளுக்கு மனநிறைவைத் தந்தது. சிவகாமியைப் படிக்கச் சொன்னால், கடகடவென படித்துவிட்டு முடித்து விடுவார். ஆனால் சுதர்சன் அப்படிச் செய்யவில்லை.

பாடத்தை முடித்த சுதர்சன்,

"ஏதாவது சந்தேகம் இருக்கா?" என்றான்.

"இருக்கு."

"சொல்லுங்க."

"எப்படி நீங்க இவ்வளவு ஸ்வீட்டா இருக்கீங்க?" என்று புன்னகைத்த அவளை நோக்கி புருவம் உயர்த்தினான். அவன் என்ன பதில் கூற முடியும்?

"இந்த உலகமே வேகமா சுத்திகிட்டு இருக்கு. பொறுமையில்ல... சென்டிமென்ட்க்கு டைம் இல்ல... எதுவும் இல்ல..."

அவன் எச்சில் விழுங்கினான்.

"நீங்க எப்பவுமே இப்படித் தானா?"

அவள் கேட்கும் உத்திரவாதம் என்ன என்று அவனுக்குப் புரிந்தது.

"இல்ல... நான்... சும்மா..."

"இல்ல, சுதா, இது சும்மான்னு நினைக்கிற விஷயம் இல்ல. என்னைப் பொறுத்த வரைக்கும் இது ரொம்ப பெரிய விஷயம். இப்போ எங்க அம்மா என்ன செஞ்சுகிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறீங்க?"

"சமைச்சுகிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறேன்." என்றான்.

"இல்ல, சீரியல் பார்த்துகிட்டு இருப்பாங்க."

சுதர்சன் அமைதியானான்.

"அவங்களைப் பொறுத்த வரைக்கும் அது தான் முக்கியம்."

"சரி, விடுங்க, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க."

"ஒன்னும் வேணாம். நீங்க நீங்களாவே இருங்க... இப்ப இருக்கிற மாதிரியே... எப்பவும்..."

"ஐ ப்ராமிஸ்..."

"தேங்க்ஸ்." என்றாள் புன்னகையோடு.

"நான் நாளைக்கும் வந்து உங்களுக்குப் படிச்சு காட்டட்டுமா?"

"நீங்க ஃப்ரீயா இருந்தா... உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லன்னா..."

"எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல."

"நீங்க ஃப்ரீயா இருப்பீங்களா?"

"ஃப்ரீ பண்ணிகிட்டா போகுது"

அவள் அழகாய் புன்னகைத்தாள்.

"உங்க புக்ஸ் எங்க இருக்கு?"

"அந்த செல்ஃப்ல," என்று தன் வலது பக்கம் சுட்டிக்காட்டினாள்.

"இன்னைக்கு ஏதாவது படிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்களா?"

"பண்ணி இருந்தேன்... அதை முடிக்க நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணிட்டீங்க."

"சரி, உங்க புக்ஸை நான் வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போறேன். நாளைக்கு உங்களை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக வரும் போது கொண்டு வரேன். பரவாயில்லை தானே?"

"எதுக்கு?"

"படிச்சு பாக்கத்தான்."

"சரி."

"நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நாளைக்குப் பாக்கலாம்"

"ஒரு நிமிஷம்."

"சொல்லுங்க."

"என்னை நீங்க வாங்கன்னு கூப்பிட வேண்டாம். நீ வான்னு கூப்பிடலாம்."

"சரி." என்று புன்னகைத்து விட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.

அங்கு சிவகாமி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்.

"நான் கிளம்புறேன், ஆன்ட்டி."

"ரொம்ப தேங்க்ஸ் பா. இன்னைக்கு ரொம்ப முக்கியமான எபிசோட். அதனால தான் விட முடியல."

"பரவாயில்ல, ஆன்ட்டி."

"ஹரியோட புக்கை எடுத்துக்கிட்டு போறீங்களா?"

"ஆமாம், ஆன்ட்டி."

"சரி, சரி." என்றபடி தன் கவனத்தைத் தொலைக்காட்சியின் பக்கம் திருப்பினார் சிவகாமி.

மறுநாள்

சுதர்சன் ஹரிதாவின் வீட்டுக்கு வந்த போது, வேலைக்குக் கிளம்ப தயாராக இருந்தான் உமாபதி.

"ஹாய், சுதா,"

"கிளம்பிட்டியா?"

"நான் தான் சொன்னேனே, எனக்கு லீவே இல்லன்னு..."

"பரவாயில்ல நீ வேலையைப் பாரு. நான் ஹரியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்."

"அவ ரெடியா இருக்கா."

"சரி."

தன் அறையை விட்டு வெளியே வந்த ஹரிதா, சுதர்சனுடன் அவன் இருசக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றாள்.

"நல்ல வேலை, நம்ம ஹரிக்கு சுதர்சன் கிடைச்சான்." என்றார் சிவகாமி.

"ஆமாம்." என்றான் உமாபதி.

........

மருத்துவமனைக்கு ஹரிதாவை அழைத்து வந்தான் சுதர்சன். தேவைப்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவுகளுக்காக அவர்கள் காத்திருக்க வைக்கப்பட்டார்கள். வரவேற்பில் இருவரும் அமர்ந்தார்கள்.

"ஹரி, வா போய் ஏதாவது சாப்பிட்டு வரலாம்."

"நீங்க காலையில சாப்பிடலயா?"

புன்னகை புரிந்த சுதர்சன்,

"சாப்பிட்டேன். நான் உனக்காகத் தான் சொன்னேன்." என்றான்.

"நிச்சயமா தான் சொல்றீங்களா?"

"ஆமாம்."

அப்பொழுது ஹரிதாவின் பெயர் அழைக்கப்பட்டது.

"இரு, நான் போய் ரிப்போர்ட்டை வாங்கிட்டு வரேன்." என்று சென்றான்.

"ஹரிதாவோட ரிப்போர்ட் கொடுங்க."

"நீங்க?"

"அவங்க வுட் பி ஹஸ்பெண்ட்."

அதைக் கேட்ட ஹரிதாவுக்கு பெருமையாய் இருந்தது. அவன் கூறிய விதம் அவளுக்குப் பிடித்திருந்தது. சோதனை முடிவுகளுடன் அவளிடம் வந்தான்.

"போகலாமா, ஹரி?"

சரி என்று எழுந்து நின்றாள். மெல்ல அவள் கையைப் பற்றினான். அவன் விரல்களோடு தன் விரல்களைப் பிணைத்துக் கொண்டாள் ஹரிதா. அவர்களது கரங்களையும், பிறகு புன்னகை தவழும் அவள் முகத்தையும் ஏறிட்டான். அவளது கையை இதமாய் அழுத்தி அவளோடு நடக்கத் தொடங்கினான்.

தன் வாகனத்தை ஸ்டார்ட் செய்த அவன், அந்தப் பயணம் முடியாமல் அப்படியே தொடர்ந்தால் போதுமே என்று எண்ணினான்.

இருவரும் ஹரிதாவின் வீட்டிற்கு வந்தார்கள்.

"நீங்க வந்துட்டீங்களா?"

"ஆமாமா. நாங்க படிக்கப் போறோம். நீங்க டிவி பாருங்க." என்றாள் ஹரிதா.

"சரி, சரி." என்றார் சந்தோஷமாய்.

தன் அறைக்கு வந்த ஹரிதா, தன் புத்தகத்தை எடுக்க நினைத்தபோது, அவளைத் தடுத்தான் சுதர்சன்.

"என்ன ஆச்சு?"

"உட்காரு." என்று அவள் காதில் இயர் ஃபோனை பொருத்தினான். அது ஏன் என்று தெரியாவிட்டாலும், அவள் அமைதி காத்தாள். அவளிடம் ஒரு பட்டன் ஃபோனைக் கொடுத்தான்.

"இது என்ன, சுதா?"

"இது பட்டன் ஃபோன் தான். நீ ஆபரேட் பண்ண முடியும். இதுல ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி அதிகம். 2000 ஃபைல் வரைக்கும் ஸ்டோர் பண்ணலாம். நான் நேத்து ராத்திரி 50 ஃபைல் சேவ் பண்ணேன். இதை நீ திரும்பத் திரும்ப போட்டுக் கேட்டுக்கலாம். இன்னைக்கு ராத்திரி இன்னொரு 50 ஃபைல் ரெகார்ட் பண்ணி கொண்டு வரேன்."

"நேத்து ராத்திரி நீங்க தூங்கவே இல்லையா?" என்றாள் கவலையாக.

"தூங்கினேன்."

"எவ்வளவு நேரம்?"

"நாலு மணி நேரம்."

"இன்னைக்கு ராத்திரியும் நீங்க அதையே தான் செய்யப் போறீங்களா, உங்க தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு?"

"நாலு மணி நேர தூக்கம் போதும் எனக்கு."

"அப்படி எல்லாம் உங்க ஹெல்த்தை கெடுத்துக்க என்னால விட முடியாது."

"கொஞ்ச நாளைக்கு தானேப்பா?"

"அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது. உங்க உடம்பு கெட்டுப் போனா என்ன செய்றது?"

"எனக்கு ஒன்னும் ஆகாது." என்றான் புன்னகையோடு.

"ப்ளீஸ், கேர்லெஸ்ஸா இருக்காதீங்க, சுதா."

"சரி."

"நான் சொன்னா கேக்க மாட்டீங்களா?"

"சரி, கேக்குறேன். இன்னைக்கு பத்து ஃபைல், ஒரு மணி நேரம் மட்டும் முழிச்சிருக்கேன். போதுமா?"

"நீங்க நேத்து கூட ஒழுங்கா தூங்கல. அதனால இன்னைக்கு நிம்மதியா தூங்குங்க. நாளைக்கு ரெக்கார்ட் பண்ணிக்கலாம்"

"அப்படியே ஆகட்டும், மேடம்." என்றான் புன்னகையோடு. அது அவள் முகத்திலும் புன்னகையைத் துளிர்க்கச் செய்தது.

"ஹரி, நான் ஏன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன்னு நீ கேட்டல்ல?"

அவள் மெல்ல கண் இமைத்தாள்.

"இதுக்காகத்தான். இந்த அன்பும் அக்கறையும் வேணும்னு தான்."

அவள் முகத்தில் மென்னகை படர்ந்தது.

"இந்த ரெக்கார்டை எல்லாம் கேளு. நான் கிளம்புறேன்." என்று அவன் அங்கிருந்து கிளம்ப முற்பட்டபோது, அவன் கையைப் பிடித்தாள் ஹரிதா.

"ஏதாவது சொல்லணுமா, ஹரி?"

"ஆமாம்."

"சொல்லு."

"ஐ லவ் யூ." என்று அவன் கையைத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள் ஹரிதா.

கண் சிமிட்டும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co