Truyen3h.Co

காதலுக்குக் கண் உண்டு!

9

NiranjanaNepol


9 மனமகிழ்ச்சி


தன் காதலை வெளிப்படுத்தி விட்ட மகிழ்ச்சியோடு, புன்னகையுடன் அலுவலகம் கிளம்பிச் சென்றான் சுதர்சன். இந்த உலகிலேயே மிகவும் சவாலான விஷயம் இருக்கிறது என்றால், நாம் காதலித்தவரிடம் நம் காதலைச் சொல்வது தான். ஆனால் அவனோ, அதை இழுக்காமல் போட்டு உடைத்து விட்டான். ஹரிதா என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளுக்கு அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும். அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், அவளைச் சமாதானபடுத்தி இருக்கலாம். ஆனால் அவளோ அவளது அம்மாவின் கைபேசியின் மூலம் பேசுகிறாள். அவன் அவளுக்கு ஃபோன் செய்தால், அவளது அம்மா எடுக்க வாய்ப்புண்டு. அதனால் அவளை அழைக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். சென்னையின் மிகப்பெரிய கண் மருத்துவமனையின் மருத்துவரை சந்திப்பதற்கான தேதியை நிச்சயித்தான் சுதர்சன். அதிர்ஷ்டவசமாய் அது அன்றே கிடைத்தது. உமாபதிக்கு ஃபோன் செய்து விஷயத்தைக் கூறினான்.

"இன்னைக்குச் சாயங்காலம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைச்சிருக்கு."

"அப்படியா?"

"ஆமாம், நாலு மணிக்கு ஹரிதாவோட கிளம்பிடு. நம்ம ஹாஸ்பிடல்ல அஞ்சு மணிக்கு இருக்கணும்."

"சரி, நான் வந்துடுறேன்."

"நான் ஆஃபீஸ்ல இருந்து நேரா ஹாஸ்பிடலுக்கு வந்துடுறேன்." என்று அழைப்பைத் துண்டித்தான் சுதர்சன்.

மாலை இரண்டு மணி நேரம் பர்மிஷன் போட இருப்பதால், தனது வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.

மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய விஷயத்தைப் பற்றி ஹரிதாவிடம் கூறினான் உமாபதி. அதைக் கேட்ட அவள் திகைப்புக்கு உள்ளானாள். இவ்வளவு வேகமாக தான் சொன்ன வார்த்தையை நிறைவேற்றத் துவங்கி விட்டானா சுதர்சன்? அவளுக்கு பேரார்வம் மிகுந்தது. சுதர்சனைப் பற்றி எந்த எதிர்பார்ப்பையும் வளர்த்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. ஆனால் இப்பொழுது, அவளால் அதைத் தடுக்க முடியவில்லை. அவளை அவனிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்க வைத்து விட்டான்.

மாலை

மருத்துவமனைக்குச் செல்ல தயாராய் காத்திருந்தாள் ஹரிதா. உமாபதி அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான். அவர்களுக்கு முன்னதாகவே சுதர்சன் அங்கு வந்து காத்திருந்தான்.

"ஹாய், சுதா!" என்று அவனோடு கைகுலுக்கினான் உமாபதி.ஹரிதாவைப் பார்த்தபடி அதைச் செய்தான் சுதர்சன். அவள் முகத்தில் மெல்லிய புன்னகை இழையோடுவதைக் கவனித்தான்.

"ஹாய், ஹரி,"

"ஹாய்..."

"வாங்க, கேண்டின்ல ஏதாவது சாப்பிடலாம்."

"டாக்டரைப் பார்த்துட்டு சாப்பிடலாமே..." என்றான் உமாபதி.

"சரி, வாங்க."

அவர்கள் சந்திக்க வேண்டிய மருத்துவரின் அறைக்கு வெளியில் அமர்ந்தார்கள். வரவேற்பாளரிடம் சென்று தங்களது வருகையைப் பதிவு செய்தான் சுதர்சன். ஹரிதா தன் கைகளைப் பிசைவதைக் கவனித்தான். மருத்துவர் என்ன கூற போகிறாரோ என்று அவள் பதற்றமாக இருப்பது புரிந்தது. அவள் கையை மென்மையாய் பற்றி, அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்று தான் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அது இப்போதைக்கு மிக அதிகப்படியாய் தெரியும்.

அவர்கள் அழைக்கப்பட்டார்கள். ஹரிதாவின் முந்தைய மருத்துவ குறிப்புகளை மருத்துவரிடம் கொடுத்தான் உமாபதி.

"இதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி எடுத்திருக்கீங்க. நமக்கு ரீசன்ட் ரிப்போர்ட் தான் வேணும். அதனால மறுபடியும் எல்லா டெஸ்டும் எடுக்க வேண்டி இருக்கும்."

"ஓகே, டாக்டர்." என்றான் சுதர்சன்.

"நான் சில டெஸ்ட் எல்லாம் எழுதி கொடுக்கிறேன். டெஸ்ட் எடுத்து ரிசல்ட் கொண்டு வாங்க."

"சரிங்க, டாக்டர்."

மருத்துவர் எழுதிக் கொடுத்த சீட்டுடன் வந்த சுதர்சன், வரவேற்பாளர் பெண்ணிடம் அதைக் கொடுத்தான்.

"நாங்க இந்த டெஸ்ட் எல்லாம் எடுக்கணும். எப்ப வரணும்?" என்றான்.

அந்தச் சோதனைகள் சம்பந்தப்பட்ட பிரிவுடன் தொடர்பு கொண்டு,

"இதுல ரெண்டு டெஸ்ட் நாளைக்கு எடுக்கலாம். மத்ததை எல்லாம் நாளானைக்கு எடுத்துக்கங்க, சார்." என்றாள் அவள்.

"சரி, ஃபிக்ஸ் பண்ணிடுங்க."

"சரி," என்று ஹரிதாவின் பெயரைக் குறித்துக் கொண்ட அவள்,

"நாளைக்குக் காலையில பத்து மணிக்கு நீங்க இங்க இருக்கணும்." என்றாள்.

"நாளைக்குக் காலையில ஹரியைக் கூட்டிகிட்டு வந்துடு." என்றான் சுதர்சன் உமாபதியிடம்.

தயக்கத்தோடு தலையசைத்தான் உமாபதி.

"ஏதாவது பிரச்சனையா?"

"எனக்கு நாளைக்கு லீவு கிடைக்கும்னு தோணல. இன்னைக்கே ரொம்ப கஷ்டப்பட்டு தான் பர்மிஷன் கிடைச்சது. டேட்டை மாத்தி வைக்க முடியுமா?" என்றான்.

"ஒன்னு பண்ணு, நீ உன் வேலையைக் கவனி. நான் அவங்களை டாக்ஸியில கூட்டிகிட்டு வறேன்." என்றான் சுதர்சன்.

உமாபதி சந்தோஷமாய் தலையசைக்க, ஹரிதா சங்கடத்தில் நெளிந்தாள். அவளுக்காக அவன் இன்னும் என்னவெல்லாம் செய்வானோ!

"சரி, சுதா, நாங்க கிளம்புறோம். நான் ஹரியை வீட்ல விட்டுட்டு வேலைக்குப் போகணும்."

"சரி, நீங்க கிளம்புங்க."

அப்பொழுது உமாபதிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதைப் பார்த்து அவன் முகத்தில் எரிச்சலின் சாயல் தென்பட்டது.

"இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடறேன், சார்," என்றான் கெஞ்சலாக.

"........"

"என் தங்கச்சியை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிகிட்டு வந்தேன், சார். அவளை வீட்டில விட்டுட்டு வந்துடுறேன்."

"......"

"சரிங்க, சார்." என்று முகத்தைத் தொங்க வைத்தபடி அழைப்பைத் துண்டித்தான் உமாபதி.

"என்ன ஆச்சு, உமா?"

"நீ ஹரியை வீட்ல விட்டுடுறியா, சுதா?"

ஹரிதா முகத்தில் சங்கடத்தைப் பார்த்த சுதர்சன்,

"அவங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைனா..." என்றான்.

"ஹரி, நான் ரொம்ப அவசரமா போகணும். என்னோட பாஸ் இப்பவே கத்த ஆரம்பிச்சுட்டாரு." என்றான் கவலையாய்.

"நான் வேணும்னா உங்களுக்குக் கேப் புக் பண்றேன்." என்றார் சுதர்சன்.

"வேண்டாம். நான் உங்கக் கூட வரேன்." என்று கூறி உமாபதி மனதிற்கு நிம்மதியையும், சுதர்சனின் முகத்தில் புன்னகையையும் இட்டு வந்தாள்.

"நான் கிளம்புறேன்." என்று அங்கிருந்து ஓட்டமும் நடையுமாய் சென்றான் உமாபதி.

"போலாமா, ஹரி?"

"போகலாம்."

"கவலைப்படாதீங்க. நான் ரொம்ப சேஃபா வண்டி ஓட்டுவேன்."

"நானும் சேஃபா உட்காருவேன்." என்று அவள் கூற, புன்னகைத்தான்.

"போகலாம்."

தன் கையை அவனை நோக்கி நீட்டினாள். அவள் முகத்தைப் பார்த்தபடி ஆள்காட்டி விரலைப் பற்றினான். சிறு புன்னகை செய்து, அவனையும் புன்னகைக்க வைத்தாள்.

"இங்க மூணு படிக்கட்டு இருக்கு. பார்த்து இறங்குங்க."

மெல்ல அந்தப் படிகளில் இறங்கி, அவன் இரு சக்கர வாகனம் நின்ற இடத்திற்கு வந்தார்கள்.

"என்னோட பைக் இங்க தான் இருக்கு." என்று அமர்ந்து கொண்டான். அவள் எப்படி அமரப் போகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. மீண்டும் தன் கையை அவனை நோக்கி நீட்ட, அவள் கரம் பற்றினான். மெல்ல அவன் கரத்தைத் தழுவி, தோள்களைப் பற்றி அமர்ந்தாள்.

"நீங்க கம்ஃபர்ட்டபுளா இருக்கீங்களா?"

"ம்ம்ம்..."

"போலாமா?"

"போலாம்."

மிக எச்சரிக்கையாய் வண்டியைச் செலுத்தினான் சுதர்சன், அவள் தவறாய் நினைக்கக் கூடாது என்பதற்காக.

"சுதா..."

"ம்ம்?" என்று ரியர் வியூ கண்ணாடியின் மூலம் அவளைப் பார்த்தான்.

"காபி சாப்பிடலாமா?"

"ஓ, தாராளமா..."

ஒரு காபி ஷாப்பின் முன்னால் வண்டியை நிறுத்திய அவன்,

"நம்ம வந்துட்டோம்" என்றான்.

அவன் தோளைப் பிடித்தபடி வண்டியை விட்டு இறங்கினாள். சுதர்சன் இறங்கிய பிறகும் அவள் தோளைப் பற்றிக் கொண்டு நின்றாள்.

"போலாம்." என்றதும், அவன் தோளைப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.உள்ளே அழைத்து வந்து, அவளை அமர வைத்து, தானும் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

"என்ன சாப்பிடுறீங்க, ஹரி?"

"எனக்கு ஒன்னும் வேண்டாம்."

"அப்போ எதுக்காக இங்க கூட்டிக்கிட்டு வந்தீங்க?"

"உங்களுக்காகத் தான்."

"எனக்காகவா?"

"நீங்க ஆஃபீஸ்ல இருந்து நேரா ஹாஸ்பிடலுக்கு வந்துட்டீங்க. கேன்டினுக்குப் போலாம்னு சொன்னீங்க. ஆனா உமா வரல. நீங்க பசியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்..."

மென்மையாய் புன்னகைத்தான். நம் மீது அக்கறை கொண்ட துணை அமைவது வரம்!

"ஆமாம், எனக்குப் பசிக்குது."

"முதல்ல ஏதாவது சாப்பிடுங்க."

"நீங்களும் ஏதாவது சாப்பிடுங்க."

அங்கு வந்த ஊழியரிடம்,

"ஒரு காபி, ஒரு ஐஸ்கிரீம்." என்றான்.

அவர் சென்ற பிறகு,

"நம்ம முதல் தடவை வெளியில வந்திருக்கோம். உங்களை எதுவும் சாப்பிடாம என்னால அனுப்ப முடியாது." என்றான். காபியும் ஐஸ்கிரீமும் வந்து சேர்ந்தவுடன், அவளிடம் ஐஸ் கிரீமைக் கொடுத்தான்.

அதைச் சாப்பிட்ட அவள்,

"தேங்க்ஸ்." என்றாள்.

"ஐஸ்கிரீமுக்கு எதுக்கு தேங்க்ஸ்?"

"நான் ஐஸ்கிரீம்க்குத் தேங்க்ஸ் சொல்லல." என்ற அவளை, காபி பருகுவதை 

நிறுத்திவிட்டு அமைதியாய் பார்த்தான்.

"எனக்கு பார்வை திரும்ப வரவே வராதுன்னு நினைச்சேன்." என்றாள் தன் கையில் இருந்த ஐஸ்கிரீமை கிளறியபடி.

"ஹரி, நான் உங்களைக் காதலிக்கிறதால தான் இதையெல்லாம் செய்றேன்."

"எனக்கு இப்படிப்பட்ட காதல் எல்லாம் தெரியாது. இதை நான் கேட்டதும் இல்ல, படிச்சதும் இல்ல,"

"ஹரிதா, ரிலாக்ஸ்..."

"தேங்க்ஸ்..."

"ஆனா..."

அவனைப் பேசவிடாமல் தடுத்து,

"என் வாழ்க்கையில வந்ததுக்குத் தேங்க்ஸ்." என்றாள்.

என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியான சுதர்சன், தன் மனமகிழ்ச்சியை அவளுக்குப் புரிய வைக்க நினைத்தான். மென்மையாய் அவள் கையைத் தொட்டான். அவன் மனதைப் புரிந்து கொண்டவளாய் அவள் புன்னகைத்தாள்.

கண் சிமிட்டும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co