Truyen3h.Co

காதலுக்குக் கண் உண்டு!

3 ஹரிதா

NiranjanaNepol

3 ஹரிதா

"என்னது, ப்ளைன்டா? நீ என்ன பைத்தியமா? அவ பைக் ஓட்டினதை நான் பார்த்தேன்." என்றான் ஹரிதாவைப் பார்த்தபடி.

அவள் தன் தோழி தன்னுடன் இல்லாததை உணர்ந்து, பயத்தோடு தன் கையைக் காற்றில் துழாவியபடி இருந்தாள்.

"அவ பைக்கைத் தனியாவா ஓட்டினா?" என்ற கேள்விக்கு அவனால் பதில் கூற முடியவில்லை. ஏனென்றால் அவள் வண்டி ஓட்டும் போது அவளோடு உமாபதி இருந்தான்.

"அவ கீழ விழ போறா." என்றாள் அந்தப் பெண் பதட்டத்தோடு.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஹரிதாவை நோக்கி ஓடிய அவன், அவள் தரையில் கால் வைக்கும் முன், அவளைப் படிக்கட்டில் இருந்து தூக்கினான். என்ன நடந்தது என்று அவள் புரிந்து கொள்ளும் முன், அவளைத் தரையில் நிறுத்தினான்.

"விஷால்..." என்று தன் தோழியைப் பதற்றத்தோடு கூப்பிட்டாள்.

"ஐ அம் சாரி," என்ற சுதர்சனின் குரலைக் கேட்டு, அவள் சில நொடி திகைத்து நின்றாள்.

"சுதா, நீங்களா?"

"ஆமாம். ஐ அம் சாரி. எனக்குத் தெரியாது... நீங்க..." பிளைன்ட் என்ற வார்த்தையைக் கூறாமல் நிறுத்தினான்.

அப்பொழுது அங்கு வந்த விசாலாட்சி,

"ஐ அம் சாரி, ஹரி, இவரால தான் நான் உன் கூட வர முடியாம போச்சு. இவர் என்னைத் தடுத்து நிறுத்திட்டாரு." என்றாள் விசாலாட்சி.

"நான் உங்களைத் தப்பா நினைச்சுட்டேன், ஹரிதா. நீங்க என்னைப் பார்த்துட்டு பாக்காத மாதிரி போறது இது செகண்ட் டைம். அதனால கொஞ்சம் அப்செட்டா இருந்தேன். நீங்க வேணும்னே என்னை வெறுப்பு ஏத்துறீங்களோன்னு நெனச்சேன். ஆனா நான் சத்தியமா நினைச்சு கூட பாக்கல..." என்று மென்று விழுங்கினான்.

"உங்க மேல எந்தத் தப்பும் இல்ல. எல்லாருமே நீங்க நினைச்ச மாதிரி தான் நினைப்பாங்க. எனக்குக் கண்ணு தெரியாதுன்னு உங்களுக்குத் தெரியாதே..."

"உண்மையிலேயே உங்களுக்குக் கண்ணு தெரியாதா?" என்றான் நம்ப முடியாமல்.

"நான் பிராங்க் பண்றேன்னு நினைக்கிறீங்களா?" என்றாள் புன்னகையோடு.

"இல்ல, நீங்க அன்னைக்குப் பைக் ஒட்டிக்கிட்டு இருந்தீங்க..."

"என்னைப் பார்த்து யாரும் பரிதாபப்படுறது எனக்குப் பிடிக்காது. அதனால தான் எனக்குப் பிடிச்சவங்களோட சேர்ந்து, அந்த மாதிரி ஏதாவது செய்வேன். என் ஃபிரண்ட்ஸைத் தவிர வேற யாருக்கும் நான் பிளைன்டுன்னு தெரியாது... தெரிஞ்சுக்கிறதயும் நான் விரும்பல."

"அதனால தான் உமா என்கிட்ட எதுவும் சொல்லலயா?"

அவள் ஆம் என்று தலையசைக்க, அது அவனை மேலும் கோபப்படுத்தியது. அவன் எப்படிப்பட்ட அண்ணன்? தன் தங்கைக்குக் கண் தெரியவில்லை என்பதற்காகவா அனைவரிடம் இருந்தும் அவளை மறைத்து வைத்தான்? அதை உலகத்திடமிருந்து மறைத்து வைப்பதற்குப் பதிலாக, அவளுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியவன் அல்லவா அவன்?

"ஐ அம் சாரி, ஹரிதா! நான் உங்களைப் தப்பா புரிஞ்சுகிட்டேன்."

"பரவாயில்ல விடுங்க. நாங்க கிளம்பறோம்."

"சரி." என்றபடி அவளுக்கு வழி விட்டு பின்னோக்கி நகர்ந்தான் சுதர்சன்.

விசாலாட்சியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து நடந்தாள் ஹரிதா. நம்ப முடியாமல் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான் சுதர்சன். அவள் பார்வையற்றவள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. எவ்வளவு இனிமையாய் அவனோடு பேசினாள். எவ்வளவு அழகாய் புன்னகை புரிந்தாள்! அப்பொழுது தான் வாசுகி கூறியது அவன் நினைவுக்கு வந்தது. 'அவளைப் போன்ற தன்னம்பிக்கைக் கொண்ட பெண்ணை உன்னால் பார்க்க முடியாது' என்றாளே!

உண்மையிலேயே இந்தப் பெண் வியக்கத்தக்கவள். பார்வையற்றவளாய் இருந்து கொண்டு, இருசக்கர வாகனத்தைச் செலுத்த நினைக்க எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும்! அவளுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? அவளது அண்ணன் உடன் இருந்தால் கூட, அதைச் செய்ய துணிச்சல் வேண்டுமே!

சுதர்சன் அவளைப் பற்றிய யோசித்துக் கொண்டிருந்தான். பாவம் அந்தப் பெண், எவ்வளவு அழகாய் இருக்கிறாள். தன்னை எவ்வளவு தைரியமிக்கவளாய் உலகத்திற்குக் காட்டிக் கொள்ள நினைக்கிறாள். ஆனால் அவளது அண்ணனோ, அவளைத் தன் தங்கை என்றே கூறிக்கொள்ள விரும்பவில்லை.

மறுநாள்

தனது பெட்டியோடு தொடர்வண்டியை விட்டு இறங்கினான் உமாபதி. தனக்கு எதிரில் நின்று கொண்டிருந்த சுதர்சனைப் பார்த்த அவனுக்கு, தன்னைச் சமாளித்துக் கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது.

"சுதா, நீ என்ன இங்க?" என்றான் தடுமாற்ற புன்னகையோடு.

சுதர்சன் அவனைப் பார்த்து புன்னகைக்கவில்லை.

"நான் உன்னைப் பார்க்கத் தான் வந்தேன். நீ உலகத்துக்கிட்ட இருந்து மறச்சு வச்சிருக்குற ஒரு விஷயத்தைப் பத்தி உன்கிட்ட பேசணும்."

உமாபதி துணுக்குற்றான். அவன் எதைப்பற்றிப் பேச போகிறான் என்று அவனுக்குத் புரிந்துவிட்டது.

"உன் தங்கச்சி பார்வை இல்லாதவ அப்படிங்கறத்துக்காக அவளை நீ வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தவே விரும்பலங்குறத நான் உன்கிட்ட எதிர்பார்க்கல."

அதைக் கேட்டு உமாபதி திடுக்கிட்டான். ஹரிதாவைப் பற்றிய உண்மை அவனுக்கு எப்படித் தெரிந்தது?

"நேத்து சாயங்காலம் நான் அவங்களை ஷாப்பிங் மால்ல பார்த்தேன்." என்றான், அவன் முகத்தில் இருந்த அதிர்ச்சியைக் கவனித்து.

"நீ என்னைத் தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க, சுதா. நான் அவ கண்ணு தெரியாதவ அப்படிங்கிறதுக்காக மறைக்கல. அவளைப் பத்தி என் ஃபிரெண்ட்ஸ் தெரிஞ்சுக்கிறதை அவ விரும்பல."

"என்ன சொல்ற நீ? அவங்க ஏன் அப்படி நினைக்கணும்? அப்படினா உன் ஃபிரெண்ட்ஸ் யாரும் உன் வீட்டுக்கு வந்ததே இல்லயா?"

"வந்திருக்காங்க, அவ பார்வை போற வரைக்கும்."

"அப்படின்னா இது அவங்களுக்குப் பிறவி குறைபாடு இல்லையா?"

"இல்ல, அவ டென்த் படிச்சுக்கிட்டு இருக்கும் போது தான் அவளுக்குப் பார்வை போச்சு."

"எப்படி?"

"எங்க அப்பாவும் அவளும் ஒரு ஆக்சிடென்ட்ல மாட்டிக்கிட்டாங்க. அதுல எங்க அப்பா இறந்துட்டாரு. ஹரிக்குத் தலையில அடிபட்டு நரம்பு பாதிச்சதால அவளுக்குப் பார்வை போயிடுச்சு."

"அவங்களுக்குப் பார்வை திரும்ப வர முடியாதா?"

"முடியும். ஆனா அதுக்கு சில லட்சம் செலவாகும். எங்க அப்பாவை இழந்திருந்த எங்களுக்கு, வாழ்வாதாரமே இல்லாம போச்சு. அப்படி இருக்கும் போது, நாங்க எப்படி அவளுக்கு ஆபரேஷன் பண்ண முடியும்? எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சா நிச்சயம் செய்வேன்."

உமாபதியைத் தவறாய் நினைத்ததற்காக வருத்தப்பட்டான் சுதர்சன்.

"தன் பார்வையோட சேத்து நம்பிக்கையையும் ஹரி இழந்துட்டா. அவளோட நிலைமையை நினைச்சு நினைச்சு அழுவா. அப்போ அவ டென்த் தான் படிச்சுக்கிட்டு இருந்தா. எங்க அப்பாவோட இழப்புக்காக அழறதா, இல்ல, அவளுக்காக வருத்தப்படுறதான்னே எங்களுக்குத் தெரியல. அவளுக்கு எப்படி நம்பிக்கை கொடுக்கிறதுன்னு நாங்க தெரியாம இருந்தோம். ஏன்னா நாங்களே நம்பிக்கை இழந்திருந்தோம்."

"எங்ககிட்ட சொல்லியிருந்தா நாங்க உனக்கு ஹெல்ப் பண்ணியிருப்போம்ல?"

"இல்ல, சுதா, தன்னைப் பத்தி யார்கிட்டயும் சொல்லக் கூடாதுன்னும், யாரையும் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரக்கூடாதுன்னும் நிச்சயமா சொல்லிட்டா ஹரி. அவ அப்படி ஒரு முடிவை எடுக்க, என் ஃப்ரண்ட் தான் காரணம்."

"உன் ஃபிரண்டா? யாரு?"

"என் கூட ஸ்கூல்ல படிச்சவன். என்னோட பெஸ்ட் ஃபிரண்டு. எங்க அப்பா இறந்தப்போ அவன் தான் என் கூட இருந்தான். ஹரி அவனை அண்ணான்னு தான் கூப்பிடுவா. ஆனா, அவ வீட்ல தனியா இருந்தப்போ அவகிட்ட அவன் தப்பா நினைக்க முயற்சி பண்ணான். ஹரிதாவால அவனைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சான். ஆனா, அவனோட ஸ்மெல்லை வச்சு அவ கண்டுபிடிச்சிட்டா. அதை எதிர்பார்க்காத அவன், எங்க வீட்டை விட்டு ஓடிப் போயிட்டான். அது தான் மனுஷங்க மேல அவ நம்பிக்கை இழக்க காரணம்."

"நீ அவனை எப்படி விட்ட?"

"அவன் கோயம்புத்தூர்ல இருந்த அவங்க மாமா வீட்டுக்கு ஓடிப் போயிட்டான். அதுக்குப் பிறகு நான் அவனை பார்க்கவே இல்ல. நீயே யோசிச்சு பாரு, இந்தக் காலத்துல நார்மலா இருக்கிற பொண்ணுங்களுக்கே பாதுகாப்பு இல்ல. அப்படி இருக்கும் போது, என் தங்கச்சியோட நிலைமையைச் சொல்லித் தான் புரியணுமா? அதனால தான், எனக்குக் கண்ணு தெரியாத தங்கச்சி இருக்கற விஷயத்தை நான் யார்கிட்டயும் சொன்னதில்ல. ஏன்னா, அவளோட இயலாமையைத் தனக்குச் சாதகமா பயன்படுத்திக்க யாராவது நினைக்கலாம்."

"ஆனா, என்கிட்ட அவங்க ரொம்ப நல்லா பேசினாங்களே..."

"உன்னைப் பத்தி நான் அவகிட்ட நிறைய சொல்லியிருக்கேன். உங்களுக்கு அவளைப் பத்தி தெரியாது. ஆனா, அவளுக்கு உங்க எல்லாரையும் தெரியும். நம்ம காலேஜ்ல நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லித் தான் நான் அவளை சந்தோஷப்படுத்துவேன்."

"அவங்க கண்ணு தெரியாதவங்கன்னு என்னால நம்பவே முடியல. அவங்க பைக் ஓட்டுனத்தை நான் பார்த்தேனே..."

"அது ஒரு கண்துடைப்பு. அவளுக்கு எந்தக் குறையும் இல்லைன்னு மத்தவங்களை நம்ப வைக்க அவ பண்றது. அவளுக்குப் பார்வை இருந்தப்போ, ஏதோ ஒரு சினிமாவுல அப்படி ஒரு சீனை பார்த்தாளாம். அதையே தானும் செய்ய நினைச்சா. அவளை வெளியில கொண்டுவர நாங்க பட்ட அவஸ்தை எங்களுக்குத் தான் தெரியும். அவளோட ஃபிரண்ட்ஸ் தான் அவளைக் கொஞ்சம் கொஞ்சமா வெளியில கொண்டு வந்தாங்க. இப்போ அவ டிகிரி பண்ணிகிட்டு இருக்கா. ஸ்கிரைப் வச்சி ரெண்டு வருஷம் எழுதி முடிச்சிட்டா. இது ஃபைனல் இயர்."

"நீங்க எப்படி ஃபேமிலியை ரன் பண்றீங்க?"

"அப்பாவோட எல்ஐசி பணம் வந்தது. அந்தப் பணத்தை வச்சி அம்மா மாடியில மூணு வீடு கட்டி வாடகைக்கு விட்டாங்க. இன்ஜினியரிங் முடிச்சதுக்கு அப்புறம் எனக்கும் சரியான வேலை கிடைக்கல. அதனால டெலிவரி பாய் வேலை பார்த்துகிட்டு இருக்கேன். அப்படித் தான் எங்க குடும்பம் ஓடுது."

"சாரி, உமா, நான் உன்னைத் தப்பா நினைச்சுட்டேன்"

"பரவாயில்ல விடு, நான் பெங்களூர் போகாம இருந்திருந்தா, அடுத்த நாளே உன்னைப் பார்த்திருப்பேன்."

"இன்டர்வியூ எப்படி பண்ண?"

"என்னோட பெஸ்ட்டைக் கொடுத்திருக்கேன்."

எதையோ யோசித்த சுதர்சன்,

"உனக்கு வேலை வேணும்னா நான் மாமாகிட்ட சொல்லி ஃபாரின்ல வேலை வாங்கி தரேன்." என்றான்.

"இல்ல, சுதா, அம்மாவையும் ஹரியையும் விட்டுட்டு என்னால வெளிநாடு போக முடியாது. பெங்களூர்ல வேலை கிடைச்சா கூட, அவங்களையும் என் கூடக் கூட்டிகிட்டுப் போயிடணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன்." என்றான்.

அவன் கூறியதில் இருந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்ட சுதர்சன்,

"சரி, நம்ம அப்புறமா மீட் பண்ணலாம். வீட்டுக்குப் போ. உங்க அம்மாவும் தங்கச்சியும் உனக்காக வெயிட் பண்ணுவாங்க." என்றான்.

தான் தான் இந்த உலகத்திலேயே அதிஷ்டம் கெட்டவன் என்று எண்ணியிருந்தான் சுதர்சன். ஆனால் ஹரிதாவை ஒப்பிட்டு பார்க்கும் போது, அவன் நிலைமை எவ்வளவோ மேல் என்று தோன்றியது அவனுக்கு.

கண் சிமிட்டும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co