Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

9 ஃபீனிக்ஸ்

NiranjanaNepol

9 ஃபீனிக்ஸ்

என் தங்கை மற்றும் சித்தப்பா பிள்ளைகளோடு நேரம் செலவிடலாம் என்று நான் வீட்டுக்கு வந்தேன் என் மாமியார் வீட்டில் இருந்தவர்களைப் பற்றியும் அவர்களுடைய குழப்பமான நடவடிக்கையைப் பற்றியும் என் மனம் ஓயாமல் யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குழப்பத்திற்கு இடையில், ஹாசினியின் 'விரல் முத்தம்' பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன். அதை நினைக்கும் போதெல்லாம் எனக்குப் புல்லரித்தது. என் உணர்வுகளை நினைத்து எனக்கே விசித்திரமாய் இருந்தது. எனக்குக் கல்யாணத்தில் விருப்பம் இருக்கவில்லை. என் குடும்பத்தை விட்டுச் செல்வதை நினைத்து நான் மிகவும் விரக்தியோடு இருந்தேன். ஆனால், ஹாசினியின் சில வார்த்தைகளைக் கேட்ட பிறகு, எனக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை, அவள் பேசியதெல்லாம் எனக்குச் சாதகமாக இல்லாத போதிலும்! நான் இப்படி இருந்ததில்லை. நான் கோபத்திற்குப் பெயர் போனவன். எனக்கு மரியாதை கிடைக்க வில்லை என்றால், நான் மிகவும் எரிச்சல் அடைவேன். ஆனால் ஹாசினி விஷயத்தில் நான் நேர்மாறாய் நடந்து கொண்டிருந்தேன். அவள் திமிர் பிடித்தவள் என்றோ, தலைக்கனம் பிடித்தவள் என்றோ எனக்குத் தோன்றவில்லை. அவள் ஏதோ ஒரு அழுத்தத்தில் இருப்பது போல் எனக்குத் தோன்றியது.

அப்பொழுது என் அம்மா அங்கு வந்து கேட்டார், "உன் திங்க்ஸ்ஸை எல்லாம் பேக் பண்ணிட்டியா?"

நான் இல்லை எனத் தலையசைத்தேன்.

"முதல்ல அதை போய் செய். இல்லன்னா, இவங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டுப் போய், பேசிக்கிட்டே செய்,"

"வாங்க, நம்ம அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்," அகிலா கூறினாள்.

"இதுல வொரி பண்ணிக்க எதுவுமில்ல. நான் இங்கிருந்து எல்லாத்தையும் அள்ளிக்கிட்டுப் போகப் போறதில்ல. பாதி திங்ஸ்ஸைத் தான் எடுத்துக்கப் போறேன். நான் என்ன நாட்டை விட்டா போறேன்? இங்கிருந்து ஒரு மணி நேரம் தானே? தேவைப்பட்டா, இங்க வந்து எடுத்துக்கிறேன்." நான் எளிமையாய் கூறினேன்.

"பாருங்க, இவன் எவ்வளவு சிம்பிளா எண்டு கார்டு போட்டுட்டான். நீங்க தேவையில்லாம வொரி பண்ணிக்கிறீங்க, பெரியம்மா," என்றான் சீலன்

"வாங்க, என் ரூமுக்குப் போகலாம்." என்று என் அறையை நோக்கி நடந்தேன்.

அனைவரும் என்னுடன் வந்தார்கள். பாதி பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு, மிச்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டேன்.

மாலை

அரண்மனைக்குத் திரும்பிச் செல்ல தயாரானால் நந்தினி. கண்ணீரும் கம்பளையுமாய் மிகப் பெரிய நாடகம் அரங்கேறியது. அவளுக்கு எல்லோரும் பிரியாவிடை கொடுத்தார்கள். என் அப்பா தான் அவளை அழைத்துச் சென்றார்.

ஹாசினி எப்பொழுது வேண்டுமானாலும் திரும்பி வரலாம் என்று நான் எண்ணினேன். நான் நினைத்தது போலவே என் அப்பாவோடு அவள் திரும்பி வந்தாள். நந்தினியை அங்கே விட்டுவிட்டு, அவர் ஹாசினியை அழைத்து வந்தார். அவள் புதிய பட்டு புடவை கட்டி இருந்தாள். அது சாதாரண பட்டுப் புடவை என்று கூறி விட முடியாது. தங்க ஜரிகையால் ஆன புடவையை, அவள் சிங்கிள் ப்ளீட் வைத்து கட்டி இருந்தாள். அதன் முந்தானையில் நானும் ஹாசினியும் இருக்கும் புகைப்படத்தை மிக அழகாகவும், பிரம்மாண்டமாகவும் நெய்திருந்ததைப் பார்த்து நான் அசந்து போனேன்.

அவளது முந்தானையை கையில் பிடித்து பார்த்த அகிலா,

"வாவ், கெளதம்,  வாழ்க்கையிலேயே முதல் தடவையா நீ அழகா தெரியுற," என்று என்னை கிண்டல் செய்தாள்.

"பிரின்சஸ் கூட இருக்கிறவங்க யாரா இருந்தாலும் அழகா தான் இருப்பாங்க," என்றான் மாலன்.

"ஏ...ன்? கௌதம் எப்பவுமே ஹாண்ட்சம் தான்," என்றார் என் அத்தை.

என் முகத்தில் தெரிந்த சலிப்பை கவனித்தாள் ஹாசினி.

"கௌதம், ரெடியாகு. நீ மினி பேலஸ்க்கு போகணும்." என்றார் அப்பா.

சரி என்று கூறிவிட்டு, நான் என் அறைக்குச் சென்றேன். என் மனதில் ஏதோ ஒரு பாரத்தை உணர்ந்ததால், என் கட்டிலில் அமர்ந்தேன். இது தான் நான் வளர்ந்த இடம். என் அறை, என்னுடைய உணர்வுகள் அனைத்தையும் பார்த்திருக்கிறது, என் சந்தோஷம், துக்கம், சென்டிமென்ட் எல்லாம்...! நான் அங்கு அழுதிருக்கிறேன், வாய்விட்டு சத்தமாய் சிரித்திருக்கிறேன், என் சகோதரிகளுடன் சண்டையிட்டு இருக்கிறேன், அவர்கள் அனைவருடனும் இணைந்து கலாட்டா செய்து இருக்கிறேன்.

அப்போது...

"இங்கிருந்து வர உங்களுக்கு கஷ்டமா இருந்தா, நீங்க வர வேண்டிய அவசியம் இல்ல," என்றாள் அங்கு வந்த ஹாசினி.

அவள் கூறியதற்கு என்ன அர்த்தம்? நான் அவளுடன் மினி பேலசுக்கு வருவதை அவள் விரும்பவில்லையா? போகாமல் இருந்தால் அதற்கு நான் என்ன காரணம் சொல்ல முடியும்? அவள் தான் அவளது அம்மா அப்பாவுக்கு என்ன காரணம் கூறுவாள்?

"இதுவும் நீ என்கிட்ட இருந்து எதிர்பார்க்கிற ஒருவித ஹெல்ப்பா?" நான் சாதாரணமாய் இருப்பது போல் காட்டிக் கொண்டு கேட்டேன்.

"நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண ட்ரை பண்றேன்," என்று அவள் தயங்காமல் கூறினாள்.

"உண்மையிலேயே எனக்கு ஹெல்ப் பண்றதுல உனக்கு விருப்பம் இருந்தா, அதை நான் கேட்கும் போது செய்." என்று கூறிவிட்டு, எனது பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்தேன்.

ஹாசினியுடன் என் வீட்டை விட்டு கிளம்பத் தயாரானேன், ஹாசினிக்காக! அவள் ராணி போல் இருக்க வேண்டும் என்பதற்காக! இதில் என்ன ஒரு சோகம் என்றால், நான் ராஜா இல்லை.

நாங்கள் மினி பேலஸுக்குச் சென்றோம். எங்கள் குடும்பத்தில் இருந்த அணைவரும் எங்களுடன் வந்தார்கள். அந்தப் புது இடத்தில் எங்களை குடியேற்ற நினைத்தார்கள். அந்த இடம் எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் அப்பாவுக்குத் தெரியும். அதனால், நான் அவரது காரை பின்தொடர்ந்தேன். அவருடைய கார், ஒரு விசாலமான வளாகத்திற்குள் நுழைந்தது. அதில் இருந்த கட்டிடத்தைப் பார்க்கும்போது, அது 'மினி' போல் தெரியவில்லை. 'மேக்ஸி' போல் இருந்தது. அதற்கு ஏன் மினி பேலஸ் என்று பெயர் வைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. என் மனதில் இருந்த ஒரே கேள்வி, இரண்டே இரண்டு பேருக்கு இவ்வளவு பெரிய அரண்மனை தேவையா?

சேதுபதியின் அரண்மனையில் இருந்தவர்கள் அணிந்திருந்த அதே சீருடையை அணிந்து கொண்டு, எங்களை வரவேற்க இரண்டு பக்கமும் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைவது போல் இருந்தது. சிவப்பு கம்பள வரவேற்பு என்றால் என்ன என்பதை நான் அப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். அந்தச் சிவப்பு கம்பளம், ஆரம்பிக்கும் இடத்தில் நின்று, ஹாசினி எனக்காகக் காத்திருந்தாள். நான் சென்று அவள் பக்கத்தில் நின்றவுடன், அவள் கையால் என் கையை சுற்றி வளைத்துக்கொண்டு ஒய்யாரமாய் நடந்தாள். தட்டு நிறைய பூக்களோடு நின்றிருந்த வேலைக்காரர்கள், அதை எங்கள் மீது தூவினார்கள். என் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும், அந்த நேரத்தில் தாறுமாறான சந்தோஷம் ஏற்பட்டிருக்கும். ஆனால் இதெல்லாம் அவசியமில்லாதது என்று நான் எண்ணியதால், அது எனக்கு சங்கடத்தைத் தான் கொடுத்தது. இந்தப் பணத்தை எல்லாம் வேறு எதற்காவது உபயோகமாய் செலவு செய்திருக்கலாமே!

சில வேலையாட்கள் என்னுடைய பையையும் பெட்டியையும் எடுத்துக்கொண்டு முதல் மாடியில் இருந்த ஒரு அறைக்குச் சென்றார்கள். அது தான் எங்கள் அறை என்று நான் யூகித்துக் கொண்டேன். ஹாசினியுடைய பொருட்கள் எல்லாம் ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்திருக்கும். ஏனென்றால் எங்கள் வீட்டிற்கு வரும்போது ஒரு சிறிய பெட்டியை தவிர வேறு எதையும் அவள் எடுத்து வரவில்லை.

என் குடும்பத்தில் இருந்தவர்கள் அந்த அரண்மனையை பிரம்மிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அதை சுற்றிப் பார்க்கத் துவங்கினார்கள். என் அப்பாவுடைய பார்வை என் மீதே இருந்ததை நான் உணர்ந்தேன். அவர் ஏன் என்னை அவ்வளவு ஆழமாய் பார்க்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் என்னிடமிருந்து ஏதாவது எதிர்வினையை எதிர்பார்க்கிறாரா? ஆனால் வித்தியாசமாய் எதிர்வினை ஆற்றும் அளவிற்கு அங்கு எதுவும் இல்லையே!

என் அப்பாவும் அம்மாவும் மாடியில் இருந்த எங்கள் அறைக்குச் சென்றார்கள். என் அப்பா எனக்கு ஃபோன் செய்த போது எனக்கு குழப்பமாய் இருந்தது. நான் அந்த அழைப்பை ஏற்றேன்.

"கௌதம், மாடிக்கு வா," என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

நாலு தாவலில் படிக்கட்டில் ஏறி, என் அப்பா அம்மா போன அதே அறைக்குள் நுழைந்தேன்.

"என்ன, டாட்?"

"இனிமே இது தான் உன் வீடு. உன்னோட லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்கும். எந்தக் கம்ப்ளைன்ட் இல்லாமல் சந்தோஷமா இரு," எனக் கூறினார் என் அப்பா.

"நான் அமைதியாய் இருந்தேன்,"

"அதிர்ஷ்டசாலிங்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி ஒரு ராயல் லைஃப் கிடைக்கும்,"

நான் அவருக்குப் பதில் கூற நினைத்தபோது, என் அம்மா கெஞ்சலாய் என்னைப் பார்த்து தலையசைத்தார். எனக்கு எரிச்சலாய் இருந்தது. அப்பொழுது தான் ஒரு விஷயம் என்னை ஈர்த்தது. அந்த அறையின் இரண்டு பக்கமும், தலா ஒரு அறைகள் இருந்தன. நான் குழப்பத்தோடு பார்த்தேன். ஒருவேளை, அது ஸ்டோர் ரூமாக இருக்குமோ? என் மனதில் ஓடியது என் அப்பா புரிந்து கொண்டார்.

"அது உனக்கும் ஹாசினிக்கும் பர்சனல் ரூம்ஸ்,"

"பர்சனல் ரூம்சா?" நான் புருவத்தை நெரித்தேன்.

"ஆமாம், அவளுக்கு ப்ரைவசி தேவை. அதனால..."

என்னடா இது? புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல பிரைவசியா?

"நீங்க ரெண்டு பேரும் இந்த மெயின்ரூம்ல தான் இருப்பீங்க. அவளுக்குத் தேவைப்படும் போது மட்டும் அந்த ரூமுக்குப் போவா. நீயும் உன்னோட பர்சனல் வேலையை செய்ய உன் ரூமுக்குப் போகலாம்..."

"எனக்கு பர்சனல் வேலை எதுவும் இல்ல," என்று என் அப்பாவைப் பார்த்து முறைத்தபடி கூறினேன்.

"ராயல் லைஃப்னா இப்படித் தான் இருக்கும்,"

"ராயல் லைஃப்... மை ஃபுட்..." என்று நான் எரிச்சலோடு கூறினேன்.

இந்தப் பெண் ஏற்கனவே எனக்கு ஒரு புதிராய் இருந்தாள். அவள் தனி அறையில் நேரத்தை செலவு செய்ய துவங்கினால், இதை எப்படி ஒரு குடும்பம் என்று கூற முடியும்? நந்தினியும் சூர்யாவிடம் இருந்து இப்படிப் பிரிந்து தான் இருப்பாளா? என்ன கொடுமை இது!

என் அப்பாவும் அம்மாவும் அங்கிருந்து சென்றார்கள்.

நான் எங்கள் அறையிலிருந்து வெளியே வந்த போது, மித்ரா நேத்ராவுடன் ஹாசினி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். முதல் மாடியில் இருந்து அவர்கள் பேசுவதை என்னால் கேட்க முடிந்தது.

"டாலி..." என்று யாரையோ கூப்பிட்டாள் ஹாசினி.

40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அவளிடம் வந்தார்.

"ரெண்டு பிளாக் கரன்ட் ஐஸ்கிரீம் கொண்டு வா," என்று கட்டளையிட்டாள் ஹாசினி.

"எஸ் யுவர் ஹையனஸ்," என்று கூறிவிட்டு சமையலறைக்குச் சென்று, இரண்டு கப்பில் ஐஸ் கிரீமோடு வந்தார் டாலி.

மித்ராவும் மித்ராவும் ஐஸ்கிரீம் கிடைத்ததில் மிக சந்தோஷம் அடைந்தார்கள். ஆனால் எனக்கு எதுவுமே சரியாக படவில்லை. என் மனைவியுடன் இருக்க முடியாததால் அல்ல. ஏதோ சரியில்லை என்று தோன்றியது. சதி திட்டம் போல் தெரிந்தது. எனக்குத் தெரிந்தவரை, எந்த அப்பா அம்மாவும் தங்கள் பிள்ளைகளைப் பிரித்து வைக்க நினைக்க மாட்டார்கள். சேதுபதி குடும்பம் இதை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

ஏற்கனவே என் மனைவியைப் புரிந்து கொள்வது எனக்கு பெரும்பாடாய் இருந்தது. இதையெல்லாம் நான் எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்று எனக்கே புரியவில்லை. என் தனி அறையைப் பார்க்க உள்ளே சென்றேன். கதவை பூட்டாமல் மூடினேன். அங்கே, ஒரு கிங் சைஸ் மெத்தை, ஒரு அட்டகாசமான சோபா செட், இன்னும் சில அலங்கார பொருட்கள் எல்லாம் இருந்தன. நிச்சயம் அதெல்லாம் மிக விலை உயர்ந்தது தான். சோபாவில் அமர்ந்து கண்ணை மூடினேன்.

அப்போது மித்ராவும் நேத்ராவும் கலகலவென சிரிக்கும் சத்தம் கேட்டது. அவர்கள் எங்கள் அறையில் இருக்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. நான் வெளியே செல்லவில்லை. ஹாசினியும் அவர்களோடு இருப்பாள் என்று எனக்குத் தெரிந்ததால் எனக்குப் போக விருப்பமில்லை. நான் வெளியே சென்றால், இந்தத் தனி அறை பற்றி அவளிடம் நிச்சயம் கேட்பேன். அது எங்களுக்குள் வாக்குவாதத்தை ஏற்படுத்தும். அது குழந்தைகளுக்கு முன்னால் நடப்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் அறையை விட்டு வெளியே செல்லும் வரை காத்திருக்க முடிவு செய்தேன். ஹாசினி மறுபடியும் அதே ஆளைக் கூப்பிடுவது என் காதில் விழுந்தது.

"டாலி..."

ஒரு காலடி சத்தம் நெருங்குவதை கேட்டேன்.

"என்ன இது?" என்றாள் ஹாசினி.

"இது உங்க பிரைவசிக்காக, யுவர் ஹைனஸ்..." டாலி சொன்னது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

அப்படி என்றால், இந்தத் தனி அறையைப் பற்றி ஹாசினிக்கும் தெரியாது. அது அவர்களது குடும்ப வழக்கம் அல்ல. அப்படி என்றால், எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? நான் லேசாய் கதவைத் திறந்து அவளைக் கவனித்தேன்.

"பேபி, நான் இப்ப வந்துடறேன். நீங்க கீழ போய் வெயிட் பண்றீங்களா?" என்று என் அக்கா மகள்களிடம் கேட்டாள்.

அவர்கள் சரி என்று கூறிவிட்டு, ஓடிப் போனார்கள். தன் கையைக் கட்டிக்கொண்டு டாலியை முறைத்து பார்த்தாள் ஹாசினி.

"பிரைவசினா என்னன்னு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ண முடியுமா?" என்றாள் ஹாசினி.

டாலி அமைதி காத்தார்.

தன் கைபேசியை எடுத்த ஹாசினி, யாருக்கோ ஃபோன் செய்துவிட்டு, டாலியைப் பார்த்து,

"கதவைச் சாத்திட்டு வெளிய போ," என்றாள்.

அவள் கூறியதைச் செய்தார் டாலி.

கைபேசியைக் காதுக்கு கொடுத்த ஹாசினி,

"என் ஹஸ்பண்ட் கிட்ட இருந்து எனக்கு பிரைவசி தேவைப்படும்னு எது உன்னை நினைக்க வச்சது?" என்றாள்.

அந்தப். பக்கம் பேசுவது யார் என்று எனக்குத் தெரியவில்லை.

"ஆனா, நீ உன் புருஷனை விட்டு விலகி இருந்ததை நான் பார்த்ததில்லையே..."

"....."

"ஆரம்பத்துல எனக்கு விருப்பம் இல்லாம தான் இருந்தது. ஆனா இப்போ எனக்கு இந்தக் கல்யாணம் பிடிச்சிருக்கு."

"....."

"நான் ஏன் அதை பத்தி உன்கிட்ட சொல்லணும்?"

"........"

"அப்படியா? என்னைவிட என் புருஷனைப் பத்தி உனக்கு தான் அதிகமா தெரிஞ்சிருக்குப் போலருக்கு..."

"......"

அந்தப் பக்கம் பேசியதைக் கேட்டு ஹாசினி கிண்டலாய் சிரித்தாள்.

"நீ ஒன்னு புரிஞ்சுக்கோ. நீ என்னை எத்தனை முறை நெருப்புல தள்ளினாலும், உன்னால் என்னை எரிக்க முடியாது. நான் சாம்பல்ல இருந்து, ஃபீனிக்ஸ் மாதிரி எழுந்து வருவேன்..." என்று கூறிவிட்டு, ஆத்திரமாய் அந்த அழைப்பைத் துண்டித்தாள் ஹாசினி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co