Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

4 பதற்றம்

NiranjanaNepol

4 பதற்றம்

எங்கள் வீடு சேதுபதியின் அரண்மனை போல் இல்லாவிட்டாலும், பெரிய பங்களா தான். எங்கள் குடும்பத்தில் இருந்தவர்கள் ஹாசினியை சம்பிரதாயத்திற்காக மட்டுமல்லாமல், மனதார வரவேற்றார்கள். அதை ஹாசினி உணர்ந்தாளா என்று தெரியவில்லை. அவள் வேறு மாதிரி கூட யோசித்திருக்கலாம். அவள் தான் கோடீஸ்வரன் விட்டு செல்ல பெண்ணாயிற்றே!

திருமணத்திற்காக வந்திருந்த விருந்தாளிகள் அனைவரும் கிளம்பிவிட்டாலும், எங்கள் வீடு இன்னும் கூட்டமாகத் தான் இருந்தது. பத்து பேர் கொண்ட கூட்டுக் குடும்பம் எங்களுடையது. எங்களுக்கு இடையில் நிறைய முரண்பாடுகள் இருந்தது. ஆனால் நாங்கள் அதையெல்லாம் எப்போதுமே பெரிது படுத்தியதில்லை. எந்தக் குடும்பத்தில் தான் பிரச்சனைகள் இல்லை? இப்போது நான் என் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றாக வேண்டும். அரண்மனை போன்ற ஒரு வீட்டில், என் மனைவியோடு நான் தனியாக வாழ வேண்டும். அது எந்த அளவுக்குச் சரிப்பட்டு வரும் என்று எனக்குப் புரியவில்லை. என் குடும்பத்தில் இருந்த எல்லோருக்கும் அதைப்பற்றி வருத்தம் இருந்தது. ஆனால் யாருமே அதை காட்டிக் கொள்ளவில்லை. இந்தத் திருமணம் எப்படித் தவிர்க்கவே முடியாததோ, அது போலவே நான் என் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்பதும் தவிர்க்க முடியாதது.

"ஹாசினி, வா, வந்து உன் மாமியார் வீட்டைப் பாரு." என்று, என் சித்தப்பா மகள் அகிலா, ஹாசினியை அழைத்தாள்.

ஹாசினி நகரவும் இல்லை. அவள் கூப்பிட்டதைக் கண்டு கொள்ளவும் இல்லை. ஆனால் அகிலா அவளை விடத் தயாராக இல்லை. அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள். அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், நான் என் சித்தப்பா பிள்ளைகளான மாலன் மற்றும் நீலனுடன் அங்கேயே அமர்ந்து விட்டேன். அதை பார்த்த அகிலா, அவர்களுடன் வரச் சொல்லி எனக்குச் சைகை செய்தாள். நான், 'ஓடி விடு' என்பது போல் சைகை செய்ய, கலகலவென சிரித்தபடி ஓடிச் சென்றாள்.

நான் நிம்மதி இழந்து காணப்பட்டேன். எப்போதும் கலகலவென இருக்கும் என் குடும்பத்தில் இருப்பவர்களோடு ஹாசினி எப்படிப் பழகப்போகிறாள்? அவளுடைய வெறுப்பை அவர்களிடம் காட்டுவாளோ? என்னிடம் தொலைபேசியில் உரையாடியது போலவே அவர்களிடமும் பேசுவாளோ? இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், அதை என் குடும்பத்தில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று நான் எண்ணினேன். நான் எவ்வளவு கலகலப்பானவன் என்று அவர்களுக்குத் தெரியும். நான் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டதாய் அவர்கள் நம்பிவிட்டார்கள். எனக்கும் அது தான் வேண்டும். ஆனால் நான் அதையே ஹாசினியிடமும் எதிர்பார்க்க முடியாது.

நான் அவர்களிடமிருந்து சற்று தூரத்தில் இருந்தாலும், அவள் மீது ஒரு கண் வைத்தபடியே இருந்தேன். அவர்கள் பேசுவதைக் கேட்டபடி...

"ஹாசினி, உன் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?" என்று என் தங்கை அகிலா கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வி, 'அவுட் ஆஃப் சிலபஸில்' இருந்து வந்ததைப் போல் அவளை அப்படி ஒரு பார்வை பார்த்தாள் ஹாசினி.

"ஹாசினின்னா சிரிச்சுக்கிட்டே இருக்கிறவள்னு அர்த்தம். அந்தப் பேரை வச்சிக்கிட்டா மட்டும் போதாது. உன் பேருக்கு நீ பிராண்ட் அம்பாசிடரா இருக்கணும். பேருக்கு ஏத்த மாதிரி, கொஞ்சம் சிரி. அட்லீஸ்ட், ஸ்மைலாவது பண்ணு." கலகலவென சிரித்தாள் அகிலா.

அப்பொழுதும் சிரிக்காமல் அவளை அமைதியாய் பார்த்தாள் ஹாசினி.

அப்பொழுது அவர்களிடம் சென்ற என் அக்கா,

"எக்ஸ்கியூஸ் அஸ், அக்கி. ஹாசினி, நீங்க என் கூட வாங்க." ஹாசினியின் கையைப் பிடித்து அவரது அறைக்கு அவளை அழைத்துச் சென்றார்.

"சாரி, ஹாசினி. அகிலாவோட ஜாலியா இருக்க உங்களுக்கு என்னால இப்ப டைம் கொடுக்க முடியல." என்று என் அக்கா சொன்னதைக் கேட்டு, நிச்சயமாக ஹாசினி உள்ளுக்குள் சிரித்திருப்பாள் ஜாலியாகவா?

"போய் ரெடி ஆகுங்க. நான் உங்களை கௌதம் ரூமுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன்."

அக்கா சொன்னதை கேட்டபோது, எனக்குச் சிலிர்த்து போனது. அக்கா அவளை என் அறைக்கு அழைத்துச் செல்லப் போகிறார். அன்று எங்களுக்கு முதலிரவு. இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை. ஹாசினி எனக்கு யார்? உலகத்தைப் பொறுத்தவரை நாங்கள் கணவன் மனைவி. ஆனால் எங்களுக்கு இடையில் எந்த உறவும் இல்லை. எந்த ஒட்டு உறவும் இல்லாத ஒரு பெண்ணுடன் ஒரே அறையில் இருப்பது நரகத்திற்குச் சமமானது. வாழ்நாள் முழுக்க, அவள் எப்படி என் அறையில், என்னுடன் தங்கப் போகிறாள்? எனக்கு கவலையாய் இருந்தது. என் வாழ்க்கையைப் பற்றி நான் எப்படி எல்லாம் கனவு கண்டேன்! இப்பொழுது நான் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழப் போகிறேன் என்று எனக்கே புரியவில்லை. எனக்குக் கடுப்பாய் இருந்தது.

முகத்தைக் கழுவிக்கொண்டு அக்காவின் அறையிலிருந்து, அக்காவுடன் வெளியே வந்தாள் ஹாசினி. அவளை என் அறைக்கு அழைத்துச் செல்ல, அக்கா வெளியே காத்திருந்தார். அவள் வந்தவுடன், அவளை முதல் மாடியில் இருந்த என் அறைக்கு அழைத்துச் சென்று, என் அறையின் கதவைத் திறந்தார். ஹாசினி உள்ளே செல்வதை, நான் கீழே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் அறையை அலங்கரித்து வைத்திருப்பார்கள். என் கட்டில் முழுக்க பூக்களும், அறை முழுக்க வாசனை மெழுகுவத்தியும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். ஒரு கிங் சைஸ் பெட்டும், சோஃபா செட்டும் போட்ட பிறகும், நிறைய இடம் காலியாய் இருக்கும் அளவுக்கு என் அறை பெரியது. ஒரு 55 இன்ச் டிவி மட்டுமல்லாமல், என் அறையின் சுவர் முழுக்க நிறைய ஓவியங்கள் இருக்கிறது. ராயல் பிரின்ஸஸை அந்த ஓவியங்கள் கவருமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆம், அது நான் வரைந்த ஓவியங்கள் தான். என்னுடைய ரசனை, அந்த ஓவியங்களில் தெரியும்.

ஹாசினியிடம், "ஹேவ் எ நைஸ் டே " என்று கூறிவிட்டு, என் அக்கா 'கேக்கபெக்கே' என்று சிரித்திருப்பார்.

ஹாசினியை என் அறையில் விட்டு விட்டு என்னிடம் வந்தார் அக்கா.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல டா. உன் மனசு எனக்குத் தெரியும். இது உன் வாழ்க்கை. அவங்க இங்க உனக்காகத் தான் இருக்காங்க. அதை புரிஞ்சுகிட்டு, இந்த உறவை ஏத்துக்க முயற்சி பண்ணு." அக்கா உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

"மச்சான் புத்திசாலி. நீ அவருக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம். அவருக்கு இதை எப்படி ஹாண்டில் பண்ணணும்னு தெரியும்." என்று என் மாமா சிரித்தபடி கூறினார்.

என் மாமா கூறியது மிகை அல்ல. எல்லா விஷயத்தையும் நான் மிக நேர்த்தியாய் கையாளுவேன்... என் நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும் வரை. நான் தோற்றுப்போன ஒரே விஷயம் அதுதான். அதை சமாளிக்கும் திறமை மட்டும் எனக்கு இருந்திருந்தால், இன்று நான் இருக்கும் சூழ்நிலையில் இருந்திருக்க மாட்டேன். இந்தத் திருமணத்தை என்னால் தவிர்த்திருக்க முடியும். ஆனால் இப்பொழுது அதைப் பற்றி யோசித்து எந்தப் பிரயோஜனமும் இல்லை.

அக்கா என்னை என் அறைக்குப் போகச் சொன்னார். வாழ்க்கையிலேயே முதல் முறையாய், என் அறைக்குச் செல்ல எனக்கு சங்கடமாய் இருந்தது. இப்போதிலிருந்து அது என் அறை மட்டுமல்ல, *எங்கள் அறை*. நான் அதை ஹாசினியுடன் பகிர்ந்தாக வேண்டும், அது அவளுக்குப் பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும்! என்னைத் தயார் படுத்திக் கொண்டு என் அறைக்குள் நுழைந்தேன். என் மனைவி சோஃபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் உறங்கி விட்டாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னிடம் பேச விருப்பமில்லாமல் அவள் உறங்குவது போல் பாசாங்கு செய்கிறாள் என தோன்றியது.. விருப்பமில்லாத ஒரு பெண்ணிடம் நான் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

அவள் கட்டியிருந்த கனமான புடவையையும் நகைகளையும் பற்றிக் கவலைப்படாமல் அவள் உறங்குவதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதை எல்லாம் களைந்து விட்டு அவள் உறங்கி இருக்கலாமே. அவள் சோஃபாவில் படுத்திருந்தது கூட எனக்கு ஆச்சரியம் தான். இளவரசி கட்டிலில் படுத்துக்கொண்டு, என்னை சோஃபாவில் படுக்கச் சொல்லி கட்டளை இட்டிருக்கலாம்...!

என் உடைகளை எடுத்துக்கொண்டு நான் குளியலறைக்குச் சென்றேன். இந்த வேட்டி சட்டையை, 'எப்படா கழட்டிப் போடுவோம்' என்று இருந்தது எனக்கு. ஹாசினியை நினைத்தபோது ஆச்சரியமாய் இருந்தது. எப்படித்தான் இவ்வளவு நகைகளையும் கனமான புடவையையும் கட்டிக்கொண்டு அவள் உறங்குகிறாள் என்று தெரியவில்லை.

நான் குளியலறையில் இருந்து வெளியே வந்த போதும், அவள் அதே நிலையில் படுத்திருந்ததைக் கண்டேன். உண்மையிலேயே அவள் உறங்கி விட்டாள் போலிருக்கிறது. விளக்குகளை அணைத்துவிட்டு நான் கட்டிலில் படுத்துக் கொண்டேன். ஆனால் எனக்குத் தூக்கமே வரவில்லை. என் வாழ்க்கை இந்த லட்சணத்தில் இருந்தால், எனக்கு எப்படித் தூக்கம் வரும்? என் வாழ்க்கை மிக அழகாய் சென்று கொண்டிருந்தது. ஆனால் இப்போது, ஹாசினியிடம் வந்து முட்டிக்கொண்டு நிற்கிறது. கண்ணைத் திறந்து அவளைப் பார்க்க முயன்றேன். ஆனால் இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.

எப்படி அவள் இவ்வளவு சீக்கிரம் உறங்கிப் போனாள்? உண்மையிலேயே அவள் உறங்கித்தான் விட்டாளா? இருக்கலாம். அன்று முழுக்க கனமான புடவை, நகைகள், மாலையைச் சுமந்து கொண்டு இருந்ததால் அவள் களைத்து போயிருக்கலாம்.

அவள் ஏன் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை?அதற்கு என்ன காரணமமாக இருக்கும்? அவள் வேறு யாரையாவது காதலிக்கிறாளா? அல்லது, அவளது தகுதிக்கு ஏற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணினாளா? காரணத்தைத் தெரிந்து கொள்ள என் மனம் தவித்தது. ஆனால் அதை எப்படித் தெரிந்து கொள்வது? நான் இதைப் பற்றி அவளிடம் பேச வேண்டுமா? பேசினால் அவள் என்னிடம் கூறுவாளா? நான் அப்படி நினைக்கவில்லை. அவள் தான் கூறினாளே, காரணத்தை நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று! ஏதாவது ஒரு துப்பறியும் நிறுவனத்தை நியமிக்கலாமா? இல்லை... என் மனைவியை நான் விட்டுக் கொடுக்கும்படி ஆகிவிடும். என் மனம் நிம்மதியாய் இல்லை. ஏன் என்னால் ஹாசினியைப் போல் நிம்மதியாய் இருக்க முடியவில்லை? எனக்குப் பதில் கிடைக்கவில்லை. அதன் பிறகு நான் எப்பொழுது உறங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.

மறுநாள்

வழக்கம்போல் தூக்கத்திலிருந்து கண்விழித்தேன். ஆனால், அந்த நாள் எனக்கு வழக்கமான நாளாக இருக்காது என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஹாசினி உறங்கிக் கொண்டிருந்த சோஃபாவை நோக்கி என் பார்வை திரும்பியது. அவள் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தள், அவள் கட்டியிருந்த புடவையின் முந்தானையைப் போர்த்திக்கொண்டு. அவள் அணிந்திருந்த நகைகள் எல்லாம் அவள் படுத்திருந்த சோஃபாவுக்கு எதிரில் இருந்த டீப்பாயின் மீது இருந்தது. அவை அவள் தூக்கத்தைத் தொந்தரவு செய்திருக்க வேண்டும். அதனால் அவள் நடு இரவில் அவற்றையெல்லாம் அகற்றி இருக்க வேண்டும். அவள் இவ்வளவு நகைகளை அணிந்திருந்தாள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவை குறைந்தது முக்கால் கிலோ இருக்கும். எல்லாம், மிக விலை உயர்ந்த, விதவிதமான நவரத்தினக் கல் பதித்தவை.

அவள் எனக்கு எதிர்ப்புறமாக படுத்திருந்ததால், அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. சத்தம் போடாமல் என் அறை கதவின் தாழ்ப்பாலைத் திறந்து விட்டு, குளியல் அறைக்குச் சென்றேன். என் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது வந்து கதவைத் தட்டினாள் ஹாசனியின் தூக்கம் கலைய வேண்டாம் என்றுதான் கதவை திறந்தேன்.

எனது ஜாகிங் ஷூவை எடுத்துக்கொண்டு, கிளம்பிச் சென்றேன்.

ஒன்றரை மணி நேரம் கழித்து நான் என் வீட்டிற்கு வந்த போது, என் வீடு பயங்கர பதட்டமாகவும் பரபரப்பாகவும் இருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் வரவேற்பறையில் இருந்தார்கள். எல்லோரும் கைபேசியை வைத்துக்கொண்டு, ஏதோ ஒரு எண்ணை தொடர்பு கொள்ள முயன்று கொண்டு இருந்தார்கள். என்னை ஜாகிங் உடையில் பார்த்தவுடன், எல்லோரும் முகத்திலும் எரிச்சல் தென்பட்டது. அதற்குக் காரணம், என்னை வீட்டில் காணாமல், எல்லோரும் பீதி அடைந்து விட்டிருந்தார்கள். நான் வீட்டை விட்டு ஓடிவிட்டேன் என்று நினைத்து விட்டார்கள்...!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co