Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

5 பளிங்குச் சிலை

NiranjanaNepol

5 பளிங்குச் சிலை

என் குடும்பத்தில் இருந்த எல்லோரும் ஏன் அவ்வளவு பதற்றத்தோடு இருந்தார்கள் என்று முதலில் எனக்குப் புரியவில்லை. அவர்களிடம் இருந்த பதற்றம் எனக்கும் தொற்றிக் கொண்டது. ஹாசினி வீட்டை விட்டு ஓடி விட்டாளோ என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது தான் காரணம். திருமணமான அடுத்த நாளே கட்டிய மனைவி ஓடிப் போனால் அது ஒரு ஆணுக்கு எவ்வளவு பெரிய அவமானம்! ஆனால் அவர்களது பதட்டத்திற்குக் காரணம் என்ன என்று தெரிந்த போது, எனக்கு வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றியது. நான் ஓடி விட்டதாய் எல்லோரும் எண்ணி இருக்கிறார்கள்.

என்னிடம் வந்த அக்கா,

"என்னடா பண்ணி வச்சிருக்க? கல்யாணம் ஆன அடுத்த நாளே யாராவது ஜாக்கிங் போவாங்களா?" என்று கேட்டார்.

"ஏன் கா, அதுல என்ன தப்பு?"

என் அக்கா தலையில் அடித்துக் கொண்டார்.

என்னிடம் வந்த என் அப்பா,

"உன்னோட வெட்டிங் ஸ்டேட்டஸ் பத்தி எல்லாருக்கும் தெரியணுமா?" என்று என்மேல் சீறி விழுந்தார்.

"டாட், இதுல என்னோட வெட்டிங் ஸ்டேட்டஸ் பத்தி யோசிக்க என்ன இருக்கு?"

"இது உனக்கு டூ மச்சா தெரியலையா, கௌதம்? உன்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சதா என்னை நினைக்க வைக்காதே." என்று சொன்ன அவரை, ஒன்றும் கூறாமல் நான் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் அம்மா வந்தார்.

"எல்லாரும் போங்க" என்று கூறிவிட்டு, என் கையைப் பிடித்து சமையலறைக்கு இழுத்துச் சென்றார். ஏதும் கூறாமல் என்னை கையெடுத்து கும்பிட்டு எனக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

"உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சதுக்காக ரொம்ப சாரி. ஆனா தயவு செஞ்சு எங்களை இந்த மாதிரி சங்கடப்படுத்தாத. இது உன் தங்கச்சியோட வாழ்க்கையும், நம்ம குடும்பத்தோட சந்தோஷமும் பத்தின விஷயம். எங்களுக்கு வேற வழி இருக்கல. அதனால தான் உனக்கு இந்தக் கல்யாணம் பண்ணி வச்சோம்." என்றார்.

என் அம்மா இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு பேசும் அளவிற்கு அப்படி நான் என்ன செய்தேன் என்று எனக்குப் புரியவில்லை.

"இப்போ எதுக்காக மாம் இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க?"

"அவ ராயல் ஃபேமிலியைச் சேர்ந்த பொண்ணு. உங்க ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்ச அடுத்த நாள், நீ வீட்ல இல்லனா அவ என்ன நினைப்பா? ஒருவேளை அவங்க அப்பா அவளுக்கு ஃபோன் பண்ணி, நீ கல்யாணமான அடுத்த நாளே வீட்ல இல்லாம காணாம போயிட்டேன்னு சொல்லி இருந்தா என்ன ஆகி இருக்கும்? ஜாக்கிங் போறேன்னு நீ யார்கிட்டயும் சொல்லிட்டு போகல. நீ வீட்ல இல்லனா நாங்க என்னடா நினைப்போம்?"

"மாம், நான் டெய்லி ஜாகிங் போறவன் தானே?"
எரிச்சல் அடைந்த என் அம்மா,

"உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதுவுமே நடக்கலன்னு எல்லாருக்கும் தெரியணுமா?" என்றார்.

எனக்கு சுருக் என்றது.

"ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்ச உடனே எவன்டா ஜாகிங் போவான்?" என்று நேரடியாகவே கேட்டார் என் அம்மா.

"அப்பொழுது தான் எனக்கு விஷயத்தின் ஆழம் புரிந்தது. நான் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!"

"உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு உங்க அப்பா என்னை கேட்டாரு..." என்று அம்மா வருத்தத்தோடு கூறினார்கள்.

பாருடா! இந்தக் கேள்வியை கேட்க வேண்டும் என்று என் அப்பாவுக்கு இப்பொழுது தோன்றியிருக்கிறது...! எனக்குச் சிரிப்பு தான் வந்தது. கல்யாணத்தைச் செய்து வைத்ததற்கு பிறகு, எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இருக்கிறதா என்று என் அப்பா யோசிக்கிறார். உண்மையிலேயே, அந்தக் கேள்விக்கு எனக்கும் கூட பதில் வேண்டும் தான்!

"அவர் கேட்டதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?"

"இந்தக் கேள்வியை எப்ப கேக்குறது? இதையெல்லாம் யோசிக்கிற நேரமா இது? நான் அவரைத் தேவையில்லாம பேச வேண்டாம்னு சொன்னேன். நம்ம பொண்ணு அவங்க வீட்ல வாழப் போயிருக்கா. நம்ம பேசுற ஒரு வார்த்தை கூட அவ சந்தோஷத்தைக் கெடுக்கும்." என்று என் அம்மா என் முகத்தைப் பார்க்காமல் கூறினார்.

அவர் பதில் கூறியது என் அப்பாவுக்கு மட்டுமல்ல, எனக்கும் சேர்த்து தான் என்று எனக்குப் புரிந்தது.

"இது உன் வாழ்க்கை, கெளதம். தெரிஞ்சோ தெரியாமலோ நாங்க உன்னை அதுல தள்ளி விட்டுட்டோம். நீ ஏதாவது செஞ்சு எங்களைச் சங்கடப்படுத்தாத. இதை சுமூகமா மாத்தப் பாரு."

சுமுகமாய் மாற்றுவதா? யாருடன்? ஹாசினியுடனா? எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஹாசினிக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று நான் அவர்களிடம் கூறுவதா வேண்டாமா? எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்று ஏற்கனவே என் அம்மா வருத்தத்தில் இருக்கிறார். ஹாசினிக்கும் விருப்பமில்லை என்று அவர்களுக்குத் தெரிந்தால் அவரது நிலைமை என்ன ஆகும்?

"சாரி மாம். நான் இதை வேணும்னு செய்யல. மறுபடியும் இப்படி நடக்காது." என்று அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றேன்.

"ஐ அம் சாரி, கௌதம். பிள்ளைக்குச் சப்போர்ட் பண்ண முடியாத ஒரு யூஸ்லெஸ் அம்மா நான்." என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு அம்மா அழுதார். நான் பலவீனமாய் உணர்ந்தேன்.

"அப்படிச் சொல்லாதீங்க, மாம். உங்க பிள்ளைக்கு பலத்தைக் கொடுக்கிற அம்மா நீங்க. நீங்கதாம்மா என்னோட பலம். வருத்தப்படாதீங்க. உங்க பிள்ளையை நம்புங்க. அவன் எல்லாத்தையும் சரி பண்ணுவான்."

அம்மா புன்னகைத்தார். என் அம்மாவின் கண்ணீரைச் சிரிப்பாக மாற்றிய அந்த நொடி, நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாய் உணர்ந்தேன்.

'நான் என்ன செய்யணும்னு? சொல்லுங்க, " என்று அவர்களை உற்சாகப்படுத்தக் கேட்டேன்.

"நீ ஹாசினி கூட புது வீட்டுக்குக் போகணும்."

"அதை நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க. அப்புறம்?"

"அவ ஒரு பிரின்சஸ். அவ கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பா..." என்று தயக்கத்தோடு நிறுத்தினார்.

அவள் என்னிடம் தொலைபேசியில் பேசியது என் தலையில் எதிரொலித்தது.

"எனக்குத் தெரியும், உனக்குத் தன்மானம் அதிகம். இப்போ நீ அவளோட புருஷன். அவளோட வாழ்க்கை உன்னைத்தான் சார்ந்து இருக்கு. இந்தப் புது வாழ்க்கையில உன்னைப் பொருத்திக்க உனக்கு கஷ்டமா தான் இருக்கும்..." என இழுத்தார்.

"நான் முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்றேன்." என்றேன்.

அம்மா சந்தோஷமாய் என் நெற்றியில் முத்தமிட்டார்.

"போய் குளிச்சிட்டு வா."

நான் சமையலறையை விட்டு வெளியே வந்தேன்.

"நீ வீட்டை விட்டு ஓடிப் போயிட்டேன்னு நினைச்சேன்... மறுபடி வந்துட்டியா?" என்று என் சித்தப்பா மகன் சீலன் என் காலை வாரினான்.

"அப்படியெல்லாம் நீ சந்தோஷமா இருக்க சான்ஸ் கொடுப்பேன்னு நினைக்காத..." என்று கவுண்டர் கொடுத்துக் கொண்டே என் அறைக்குச் சென்றேன்.

அது அனைவரையும் சற்றே நிம்மதி அடையச் செய்தது.

நான் என் அறைக்கு வந்த போது, அது உள்பக்கமாய் பூட்டி இருந்தது. கதவைத் தட்டினேன். ஹாசினி கதவைத் திறந்தாள். ஜாகிங் உடையில் இருந்த என்னைச் சாதாரணமாய் பார்த்தாள்.

ஆனால், நான் இருந்த நிலைமையே வேறு...!

அவளைப் பார்த்த நான் அசந்து நின்றேன். அவள் நீயான் நீல கல் வேலைபாடு செய்த, டர்கிஷ் நீல ஸ்லீவ்லெஸ் சிண்ட்ரெல்லா கவுனும், அதற்கு ஏற்ற நீல வைர நெக்லஸும், அதற்கு பொருத்தமான காதணிகளையும் அணிந்து கொண்டு இருந்தாள் பாருங்கள்... அப்ப்ப்பா... அவள் தலையில் அணிந்திருந்த கிளிப் கூட நீலக்கல் தான். அதுகூட வைரமாக இருக்குமோ என்று ஆச்சரியமாய் இருந்தது எனக்கு. அவள் கையில் அணிந்திருந்த நீலக்கல் பிரேஸ்லெட்டை விட அவளது கை அதிகமாய் மின்னியது. இடது கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச், அவளைப் போலவே அமர்க்களமாய் இருந்தது. இந்த எல்லா நீளத்துக்கும் இடையில் அவளுடைய வெள்ளை முகம் பளிச்சென்று இருந்தது. அவள் பிரம்ம தேவனின் லைஃப் டைம் ப்ராஜெக்ட்டாக இருப்பாளோ? வேண்டிய நேரம் எடுத்துக்கொண்டு, அவசரமே காட்டாமல், கொஞ்சம் கொஞ்சமாக அவளை பிரம்மன் செதுக்கி இருக்க வேண்டும். பார்ப்பவர் யாராய் இருந்தாலும், நின்று ரசிக்கிற அளவிற்கு, ஒரு பளிங்குச் சிலை போல் இருந்தாள் ஹாசினி.

நான் அவளை அப்படி உறுத்து பார்த்துக் கொண்டிருந்ததை, ப்ளூ ஐ ஷேட் போட்ட அவளது அழகான கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். பிறகு என்ன? விருப்பமில்லை என்று கூறிவிட்டு, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்தது போல் வாயைப் பிளந்து கொண்டு அவளை அப்படிப் பார்த்தால் வேறு என்ன செய்வாள்?

மறுபடியும் டிரெஸ்ஸிங் டேபிளுக்குச் சென்று, நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டாள். சந்தேகம் இல்லாமல் அதுவும் நீல கல் தான்.

இதன் பிறகு அவளை எப்பொழுதும் அப்படி விழுங்குவது போல் பார்க்கக் கூடாது என்று ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன்.

என் கப்போர்டைத் திறந்த நான், சற்று நேரம் ஒன்றும் புரியாமல் நின்றேன். இப்பொழுது நான் என்ன உடை அணிந்து கொள்வது? நான் எதை போட்டாலும் ஹாசினிக்கு ஈடாகப் போவதில்லை. பிறகு என்ன குழப்பம்? எனது உடை நீல நிறத்தில் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். நான் அவளுக்கு மேட்ச் ஆக நினைக்கிறேன் என்று அவள் நினைக்க கூடாது அல்லவா? எனது சாம்பல் நிற கோட்டை எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குச் சென்றேன்.

நான் வெளியே வந்த பொழுது, அவளுடைய கல்யாண புடவை, நகைகள் அனைத்தையும் அவளது சூட்கேசில் அடுக்கிக் கொண்டிருந்தாள். என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

அப்பொழுது அக்காவும் அகிலாவும் வந்து எங்கள் அறையின் கதவைத் தட்டினார்கள். அந்தக் கதவு திறந்தே இருந்த போதிலும்...

"உள்ள வாங்க, அக்கா," என்று சொன்னவுடன் உள்ளே வந்தவர்கள், ஹாசினியைப் பார்த்து திகைத்து நின்றார்கள்.

ஆனால் அவர்கள் என்னைப் போல் இல்லை. மனதில் நினைத்ததை வெளியில் கூறினார்கள்.

"வாவ், ஹாசினி... நீ உண்மையிலேயே இளவரசி மாதிரி இருக்க. "

ஹாசினி அவளது உதட்டை லேசாய் இடது பக்கம் இழுத்தாள். அவள் கொடுத்த அந்த முகபாவத்திற்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. அது நிச்சயம் புன்னகை இல்லை.

"அம்மாகிட்ட சொல்லி உனக்குச் சுத்திப் போட சொல்லணும். யார் கண்ணும் பட்டுடக் கூடாது." என்று அக்கா சொன்ன போது லேசாய் புன்னகைத்தாள்.

"உன்னைப் பார்த்து கௌதம் எப்படி இன்னும் மயங்கி விழாம இருக்கான்னு எனக்குத் தெரியல." என்று சொல்லி அகிலா கெக்கபெக்க என்று சிரித்தாள்.

ஹாசினி என்னைப் பார்க்காமல் அவள் கையில் இருந்த பிரேஸ்லெட்டைப் பார்த்தாள். அகிலா ஏன் அப்படிச் சொன்னாள் என்று எனக்குப் புரிந்தது. அவளுக்கு என்னுடைய ரசனை நன்றாக தெரியும். நான் அழகாய் இருக்கும் அனைத்தையும் வெளிப்படையாய் ரசிப்பவன்.

"உனக்குத் தெரியுமா, ஹாசினி? கௌதம் ஒரு ஆர்டிஸ்ட். இங்க இருக்கிற எல்லா பெயிண்டிங்ஸும் அவன் வரைஞ்சது தான்."

ஹாசினி தன் புருவத்தையும் தலையையும் உயர்த்தி, 'அது நீயா?' என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள். அடுத்த நொடி அவள் முகம் சகஜ நிலமைக்கு மாறியது. ஆனால் அவளது கண்கள் என் ஓவியங்களின் மேல் இருந்தது.

"உனக்குப் பசிக்குதா ஹாசினி?" என்றார் அக்கா.

"இல்ல,"

அது தான் எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு அவள் பேசிய முதல் வார்த்தை. அவளது குரல் மிக இனிமையாய் இருந்தாலும், அவள் சொன்ன விதத்தில் ஒரு மிடுக்கு இருந்தது.

"உங்க வீட்ல நீங்க என்ன சாப்பிடுவீங்கன்னு எங்களுக்குத் தெரியாது. உங்க குடும்ப வழக்கம்..." என்று மேலே பேசப்போன அக்காவை தடுத்து,

"அதைப் பத்தி நீங்க கவலைப்படத் தேவையில்ல. உங்களால அதை ஃபாலோ பண்ண முடியாது." என்று அதே மிடுக்கோடு கூறினாள்.

அக்காவும் அகிலாவும் திகைத்துப் போனார்கள். நானும் தான்! அவள் என்ன அர்த்தத்தில் அதைள் கூறினாள் என்று எனக்குப் புரியவில்லை. அக்கா சிரித்தபடி தலையசைத்தார்.

"போகலாமா?" என்று அக்கா கேட்டவுடன், அவள் தலையசைத்து அவர்களோடு சென்றாள். நானும் அவர்களைப் பின்தொடர்ந்தேன்..

நாங்கள் தரைதளம் வந்தபோது, என் குடும்பத்தில் இருந்த அனைவரும் வாயைப் பிளந்து கொண்டு ஹாசினியைப் பார்த்தார்கள். என் அம்மாவின் முகத்தில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது. அவர்களது மருமகள் அவ்வளவு அழகாய் இருந்தால், ஏன் சந்தோஷப்பட மாட்டார்கள்? அம்மாவுக்கு ஹாசினியை ரொம்பவே பிடித்திருந்தது என்பதை என்னால் உணர முடிந்தது. நான் நேராக உணவு மேஜைக்குச் சென்றேன், எனக்கு பசி இல்லை என்றாலும்.

சீலன் என்னை அவன் பக்கம் இழுத்து,

"இவ்வளவு அழகான ஒய்ஃப் கிடைக்க நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும், கௌதம்." என்று கூறிவிட்டு பைத்தியக்காரனைப் போல் பல்லைக் காட்டினான்.

"அவ உன்னோட அண்ணி. ஞாபகம் இருக்குல்ல?" என்று கேட்டபடி நான் அமர்ந்தேன்.

சத்தியமாய் அதை அவனைக் கிண்டல் செய்யத்தான் கூறினேன். ஆனால் அந்த லூசு பயல், அதை என் பக்கம் திருப்பி விட்டான்.

"உன் பொண்டாட்டி மேல பொசசிவ் ஆயாச்சா...?"

என்னுடைய மீயுடமை குணம் தெரிந்து அவன் அதைக் கூறவில்லை. அவன் அதைக் கிண்டலாகத் தான் கூறினான். இதுவரை நான் என் மீயுடமை பக்கத்தை யாருக்கும் காட்டியதில்லை. அதைக் காட்ட எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால் இது மனைவி சம்பந்தப்பட்ட விஷயம்.

என் பார்வை என் மனைவியின் பக்கம் சென்றது. இதுவரைக்கும் என் மனதில் இல்லாத ஏதோ ஒன்று என் புத்தியைத் தட்டிப் பார்த்தது. அவள் என் மனைவி. அவளுக்குக் கணவனாய் இருந்து கொண்டு, அவள் மீது மீயுடமையுடன் இருப்பது இயல்பு தான். ஆனால் விருப்பமில்லாத என் மனைவியின் மீது நான் அப்படி இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

வானம் படத்தில் சிம்பு சொன்னது ஞாபகம் வந்தது.

என்ன வாழ்க்கை டா!

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co