Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

6 ஹாசினியின் மறுப்பு

NiranjanaNepol

6 ஹாசினியின் மறுப்பு

எல்லோரும் அவரவர் இடத்தில் சாப்பிட அமர்ந்தார்கள்.

"ஹாசினி, கௌதம் பக்கத்துல உட்காரு." என் அம்மா அவளை என் பக்கத்தில் அமர வைத்தார். நேற்று வரைக்கும் அது என் தங்கை நந்தினியின் இடம்.

நான் ஒரு ஃபூடி...(foody) சாப்பாட்டு ராமன் என்பதைத்தான் கொஞ்சம் அழகாய் கூறினேன். 'சோறு தான் முக்கியம்' என்று சொல்லும் அளவுக்கு நான் மோசமல்ல. ஆனால், சோறு ரொம்ப முக்கியம் தான். நான் வாழ்வதற்காக சாப்பிடவில்லை, சாப்பிடுவதற்காகவே வாழ்கிறேன் என்று என் அம்மா என்னை கிண்டல் செய்வார். ருசியாய் சாப்பிடுவதை விட வேறு என்ன பெரிய சந்தோஷம் இருந்து விட முடியும்? அந்த விதத்தில் நான் மிக அதிர்ஷ்டசாலி என் அம்மா பிரமாதமாய் சமைப்பார். யூடியூப் எல்லாம் வருவதற்கு முன்பே, தொலைக்காட்சியில் பார்க்கும் அனைத்து ரெசிபியையும் நோட்டில் எழுதி வைப்பதோடு நின்றுவிடாமல், கொஞ்சமாக சமைத்து பார்த்து, எங்கள் ருசிக்கு தகுந்தார் போல் அதை மாற்றி, அருமையாய் சமைத்துக் கொடுப்பார். அதிலும் பாரம்பரிய சமையல் என்றால் என் அம்மா பட்டையைக் கிளப்புவார். அவர் செட்டிநாட்டு கோழி குழம்பு வைத்தால், நான் அப்பீட்டு..! அதன் சுவைக்கு நான் அடிமை. எனக்குப் பிடிக்கும் என்று, அன்றும் அம்மா அதைத்தான் சமைத்திருந்தார், இடியாப்பத்துடன். பிறகு என்ன? ஒரு பிடி பிடிக்க வேண்டியது தானே!

ஹாசினியின் தட்டில் இடியாப்பத்தையும் செட்டிநாடு கோழி குழம்பையும் அம்மா வைத்தார். பெயர் சொல்ல முடியாத ஒரு முகபாவத்தோடு அதை பார்த்தாள் ஹாசினி. அவள் இதை சாப்பிட்டதில்லை போலிருக்கிறது. அவளுக்கு என்ன, இளவரசி...! சைனீஸ், இட்டாலியன், கான்டினென்டல் என்று நட்சத்திர ஹோட்டலின் சிற்றுண்டியைச் சாப்பிட்டிருபாள். அவளை நான் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவள் சாப்பிடத் துவங்கினாள். முதல் வாய் எடுத்து வைத்து, நிதானமாய், நேரம் எடுத்துக்கொண்டு, சுவைத்துப் பார்த்தாள். அவள் முகம் மாறியது. அவள் கண்ணில் ஒரு மின்னல். அவளுக்கு அது மிகப் பிடித்திருந்தது என்பதை அவள் முகபாவமே கூறியது. அதை என்னால் நம்ப முடியவில்லை. அவசரப்படாமல் நிதானமாய் ரசித்து சாப்பிட்டாள். அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை நான் காத்திருந்தேன். டேபிள் மேனர்ஸ் என்பதை எனக்குச் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்களே!

சாப்பிட்டு முடித்த பிறகு, ஹாசினி என் அம்மாவைப் பின்தொடர்ந்து சமையலறைக்குச் செல்வதைப் பார்த்தேன். விருப்பம் இல்லாத என் மனைவி, சமையலறைக்குப் போய் என்ன செய்யப் போகிறாள் என்று பார்க்கும் விருப்பம் எனக்குள் எழுந்தது. என் வீட்டு குரங்கு கூட்டம், என் சித்தப்பா பிள்ளைகளைத் தான் சொல்கிறேன், அவர்களின் கிண்டலான சிரிப்பைப் பொருட்படுத்தாமல், நானும் அவளைப் பின்தொடர்ந்து சென்றேன்.

அவள் பேசுவதைக் கேட்கும் தூரத்தில் சமையலறைக்கு வெளியிலேயே நின்றேன். தன் மருமகளைச் சமையலறையில் பார்த்த என் அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவளிடம் ஓடிச் சென்று,

"ஹாசினி, உனக்கு ஏதாவது வேணுமா?" என்றார்.

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும், ஆன்ட்டி."

"கேளு..." வழக்கமாய் என் அம்மா பெண் பிள்ளைகளை 'டா' போட்டு பேசுவார். ஆனால் ஹாசினியை அப்படிச் சொல்ல அவர் தயங்கினார். அது ஏன் என்று எனக்குப் புரிந்தது. ஒரு இளவரசியை அப்படிக் கூப்பிட அவருக்குத் தைரியம் இல்லை.

"நீங்க இன்னைக்குச் சமைச்சீங்களே, அது என்னது ஆன்ட்டி?"

அம்மாவின் குழம்பைப் பற்றிக் கேட்டாள் அவள்.

"செட்டிநாடு கோழி குழம்பு."

"ரொம்ப நல்லா இருந்துது, ஆன்ட்டி."

என் அம்மா பளிச்சென்று சிரித்தார். அடுத்தது அவள் என் அம்மாவிடம் கேட்டது, எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

"எனக்கு அந்த ரெசிபியைத் தரீங்களா?"

என் அம்மாவும் திகைத்து தான் போயிருக்க வேண்டும்... என்னைப் போலவே! அம்மாவும் அவளிடம் இருந்து அதை எதிர்பார்க்கவில்லை. அவள் அதையெல்லாம் முயன்று பார்ப்பாள் என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி இருக்கும்போது, எதற்காக அந்த ரெசிபியை அவள் கேட்டாள்? அவள் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறாளோ? எனக்கு நிச்சயமாய் தெரியவில்லை.

"உனக்கு அது பிடிச்சிருந்தா, நான் சமைச்சித் தரேன்." என்று அம்மா தயக்கத்தோடு கூறினார்.

"நீங்க சமைச்சிக் கொடுப்பீங்க தான்..."

மேற்கொண்டு அவளை பேச விடாமல்,

"அதை நீ ஏன் தெரிஞ்சுக்கணும்? நீ ஒரு இளவரசியாச்சே..." என் அம்மா அதை கூறிய போது அவர் குரலில் இருந்த தயக்கத்தை நான் உணர்ந்தேன். ஹாசினி சமைப்பதை அவர் விரும்பவில்லை.

ஹாசினியின் முகம் மாறியது.

"இளவரசியா? நான் உங்க பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு, நான் எப்படி இளவரசியா இருக்க முடியும்? நான் இப்போ இளவரசி இல்ல." அவள் சமநிலையான குரலில் கூறினாள். அவள் குரலை உயர்த்தவும் இல்லை, அவள் குரலில் கோபமும் இல்லை. எல்லா நேரமும் அப்படிச் சமநிலையாய் இருக்க அவளுக்குப் பயிற்சி அளித்திருப்பார்களோ? என் அம்மாவைப் பொறி கலங்க வைத்துவிட்டு அவள் அங்கிருந்து சென்றாள்.

நானும் கூடப் பொறி கலங்கித் தான் போனேன். அவள் சொல்வது சரி தானே? என்னைப் போன்ற ஒரு சாமானியனைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, அவள் எப்படி இளவரசியாய் இருக்க முடியும்? ஏற்கனவே அவள் எங்கள் கல்யாணத்தால் வெறுப்படைந்து இருந்தாள். என்னைப் போன்ற ஒரு சாதாரண நபரைத் திருமணம் செய்து கொண்டதற்காக அவள் அப்படி இருக்கிறாளோ? அவளிடம் பேச வேண்டும் என்று எண்ணினேன். அவளிடமிருந்து எட்டி இருப்பது வேலைக்காகாது.

பதட்டத்துடன் வெளியே வந்த என் அம்மா, என்னைப் பார்த்தார்.

"அவ அப்செட் ஆயிட்டான்னு நினைக்கிறேன்."

"ஏன், மாம்?"

"அவ என்கிட்ட ரெசிபி கேட்டா. ஆனா நான் கொடுக்கல."

"ஏன் மாம் கொடுக்கல? அவ உங்ககிட்ட கேட்டா, நீங்க கொடுக்கணும் தானே?"

"அவங்க பேலஸ்ல நிறைய குக் இருக்காங்க. அவ தான் சமைக்கப் போறதில்லயே..." பரிதாபமாகக் கூறினார் அம்மா.

"அவங்க வீட்டு குக்கிட்ட கொடுத்து கூட அவ சமைக்கச் சொல்லலாம்ல?"

"அப்படின்னா நான் அதை அவளுக்குக் கொடுக்கிறேன். என்னைத் தப்பா நினைச்சுக்க வேண்டாம்னு சொல்லுடா."

எனக்கு சிரிக்கத் தோன்றியது. என்னுடைய வாழ்க்கை எங்கே போகிறது என்றே எனக்குத் தெரியவில்லை. இதில், நான் சென்று ஹாசினியிடம் என் அம்மாவைத் தப்பாய் நினைத்துக் கொள்ளாதே என்று கூற வேண்டுமாம். செம காமெடி!

"சரி மாம். நான் சொல்றேன்." என்று கூறி வைத்தேன்.

"உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்டா." அம்மா என் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.

"சொல்லுங்க, மாம்." என்று என் கையை அவர் கையின் மீது வைத்தேன்.

"பொண்ணுங்கள புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டமா தெரியும். ஆனா அது அப்படி இல்ல. சாதாரண பொண்ணா இருந்தாலும் சரி, இளவரசியா இருந்தாலும் சரி, கொஞ்சம் முயற்சியும் ஆர்வமும் இருந்தா போதும். பாக்குறதுக்கு அவங்க ரொம்ப விரைப்பாவும் ஆர்வம் இல்லாமலும் இருப்பாங்க. ஆனா அவங்க மனசோட அடி ஆழத்துல ரொம்ப எளிமையானவங்க. அவங்களுக்குனு சில அந்தரங்க ஆசைகள் இருக்கும். அதை அவ்வளவு சீக்கிரம் யார்கிட்டயும் கட்டிக்க மாட்டாங்க. ஆனா யாராவது அதை விருப்பப்பட்டு தெரிஞ்சுக்கணும்னு நினைப்பாங்க. மத்தவங்க தன்னைக் கொண்டாடணும்னு ஆசைப்படுவாங்க. அவங்க எதிர்பார்ப்பு எல்லாம் அவ்வளவு தான்."

என் அம்மா நான் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார் என்று நான் புரிந்து கொண்டேன். என் அப்பாவிடம் இருந்து என் அம்மாவுக்குக் கிடைக்காத அந்த விஷயங்களைத் தான் அவர் என்னிடம் விலாவரியாய் கூறிக் கொண்டிருந்தார். அப்பா செய்த அதே தவறை நான் செய்து விடக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால் திடீரென்று அவர் ஏன் அதை என்னிடம் கூறினார் என்று தான் எனக்குப் புரியவில்லை.

"ஹாசினி என்கிட்ட ரெசிபி கேட்டா. அது விசித்திரமா இல்ல?" என்றார்.

எனக்கும் அது விசித்திரமாய் தான் இருந்தது.

"அவ தன்னை எப்படி வெளிக்காட்டிக்கிறாளோ அது அவ இல்லைன்னு எனக்குத் தோணுது." என்று என் அம்மா சொன்னது, எனக்கும் சரி என்று தான் தோன்றியது. அப்படி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறதா?

"அவ நடந்துக்கிறதைப் பார்த்து இரிடேட் ஆகாத. அவளை நல்லா டீப்பா கவனி. நீ ரொம்ப புத்திசாலி. உனக்கு எதுவுமே கஷ்டமில்ல. இது உன் வாழ்க்கை. அதுல ஜெயிச்சு காட்டு."

சிரித்தபடி தலையசைத்தேன். வழக்கம் போலவே அம்மா என் நெற்றியில் முத்தமிட்டார்.

நான் வரவேற்பறைக்கு வந்தபோது, ஹாசினி எங்கள் அறைக்குச் செல்வதைப் பார்த்தேன். அவளைப் பின்தொடர்ந்தேன். என் அறையின் கதவு பாதி மூடி இருந்தது. நான் உள்ளே நுழைந்தபோது, அவள் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு பெண், கூண்டுக்குள் இருப்பது போன்ற ஓவியம் அது. என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் அந்த ஓவியத்தின் பக்கம் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

நான் கதவைச் சாத்தி தாழிட்ட போதும் அவள் அலட்டிக் கொள்ளவில்லை.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்."

"கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்."

"உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு எனக்குத் தெரியும்." என்று கூறியவுடன், திரும்பி என்னைப் பார்த்தாள்.

"எதுக்காக நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பவில்லன்னு எனக்குத் தெரியல."

பதில் கூறாமல் மறுபடியும் அந்த ஓவியத்தின் பக்கம் திரும்பினாள்.

"என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றேன்.

"அதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க?" என்னைதி திருப்பிக் கேள்வி கேட்டாள்.

"நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. இந்த ரிலேஷன்ஷிப்புக்கு என்னால ஆன பெஸ்ட்டைக் கொடுக்க நினைக்கிறேன்." என்றேன்.

"யாருக்காக?" என்று அவளிடமிருந்து அம்பு போல் கேள்வி வந்தது.
நான் சில நொடி ஸ்தம்பித்தேன்

"உங்களுக்கும் தான் இந்தக் கல்யாணத்துல விருப்பமில்ல... அதை நீங்களே என்கிட்ட சொன்னீங்க. அதுக்கு உங்களுக்கு ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருக்கு. ஆனாலும் அதை என்கிட்ட நீங்க சொல்ல விரும்பல. இப்ப மட்டும் என்ன ஆச்சு? காரணத்தைத் தெரிஞ்சுக்க ஏன் நினைக்கிறீங்க? நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கிறதுக்காகவா? இல்ல, அதை உங்க குடும்பத்துக்காகச் செய்ய நினைக்கிறீங்களா?" அதை கேட்ட பொழுது அவள் முகத்தில் எந்தப் பாவமும் இல்லை.

"காரணம் என்னவா இருந்தா என்ன? நான் அதைத் தெரிஞ்சுக்கணும்." என்றேன்.

"உங்க மேல திணிக்கப்பட்ட இந்த ரிலேஷன்ஷிப்பை நான் ஏத்துக்குவேன்னு நினைக்கிறீங்களா?"

நான் அமைதியாய் இருந்தேன்.

"ஆமாம். நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு தான். அதுக்காக விருப்பமில்லாத இதை நம்ம ஏத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. நான் ஒன்னும் ரோபோ இல்ல, எல்லா கமான்டையும் அக்ஸப்ட் பண்ணிக்கிட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்க. எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு... உங்களை மாதிரியே!" சாரமில்லாமல் கூறினாள்.

அவள் தன் உணர்வுகளைப் பற்றிப் பேசும் அளவுக்கு அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்?

"இப்போ நான் என்ன செய்யணும்?" என்றேன்.

"நீங்க நீங்களா இருங்க. என்னையும் நானா இருக்க விடுங்க. அவ்வளவு தான்." என்று கூறிவிட்டு, அந்த அறையை விட்டுச் சென்று விட்டாள்.

அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றேன். என்னை அவள் நேரடியாக நிராகரித்திருக்கிறாள். என்னை நிராகரிப்பது எனக்குப் பிடிக்காது. ஆனாலும் எனக்கு அவள் மீது கோபம் வரவில்லை. ஏன் என்றால் அவள் கூறியது எதுவும் தவறில்லை. நான் தயாராக இருக்கிறேன் என்பதற்காக, அவள் தன் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அது மட்டும் இல்லாமல், அவள் என்னிடம் கோபமாய் பேசவில்லை. அவள் பேச்சில் ஏமாற்றம் தான் தெரிந்தது. நான் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன். அவள் எதையோ மனதில் மறைத்து வைத்திருக்கிறாள். இல்லை என்றால் அவள் உணர்வுகளைப் பற்றிப் பேசியிருக்க மாட்டாள். அவள் வேறு யாரையாவது காதலிக்கிறாளா? எனக்கு அப்படித்தான் தோன்றியது.

அவள் பார்த்துக் கொண்டு இருந்த என் ஓவியத்தின் பக்கம் என் பார்வை திரும்பியது. அதில் ஒரு பெண் கூண்டுக்குள் இருந்தாள். அவள் அதில் என்ன பார்த்துக் கொண்டிருந்தாள்? அந்த ஓவியத்தில் எனக்கு ஏதாவது குறிப்பு இருக்கிறதா? நான் மறுபடியும் வரவேற்புரைக்கு வந்தேன்.

அதே நேரம், என் அக்கா மகள்கள் மித்ராவும் நேத்ராவும் அங்கே வந்தார்கள். தாமதமாய் உறங்கியதால், தாமதமாய் எழுந்தார்கள் போலிருக்கிறது. அவர்களது புது மாமியைப் பார்த்து அவர்கள் வாயைப் பிளந்தார்கள். அவர்கள் என் அக்காவை நச்சரிக்கத் துவங்கினார்கள்.

"என்ன?" என்றார் அக்கா.

அவர்கள் ஹாசினியைக் காட்டினார்கள்.

அக்கா அவர்களைப் பார்த்து கண்ணிமைத்தார்.

அவர்களுக்கு ஹாசினி அணிந்திருப்பது போன்ற உடை வேண்டும். சின்ன குழந்தைகள் அப்படித் தானே இருப்பார்கள்...!

அவர்கள் இருவரும் ஹாசினியிடம் சென்று, வெட்கத்தோடு சிரித்தார்கள். எனக்குப் பதற்றம் அதிகரித்துவிட்டது. அவர்களை அவள் வருத்தமடையச் செய்து விடக்கூடாதே! ஆனால் நான் எதிர்பாராத விதமாய், அவர்களுக்கு கைக்கொடுத்தாள் ஹாசினி. அது அவர்களது தயக்கத்தை விரட்டி அடித்தது. எனக்கு நிம்மதியானது. குறைந்தபட்சம் குழந்தைகளிடமாவது அவள் நல்லபடியாய் நடந்து கொள்கிறாளே.

அவர்கள் இருவரது கையையும் ஒன்றாக பிடித்து குளிக்கினாள்

"ஐ அம் மித்ரா"

"ஐ அம் நேத்ரா" என்று, பெரிய மனுஷிகள் இருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

"ஐ அம்..." என்று ஹாசினி அவள் பெயரைச் சொல்வதற்கு முன்,

" ஹாசினி சேதுபதி," என்று இருவரும் ஒரே குரலில் கூறினார்கள்.

"மிஸஸ் ஹாசினி கௌதம்," என்று ஹாசினி கூறியதைக் கேட்ட அனைவரும் நிசப்தம் ஆனார்கள் என்னையும் சேர்த்து.

அனைவரும் அவளைப் பெருமையாய் பார்த்தார்கள். ஆனால் நான் குழம்பிப் போனேன். சிறிது நேரத்திற்கு முன்பு எங்கள் உறவை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று என்னை நிராகரித்துவிட்டு, இப்போது அவளை மிஸஸ் ஹாசினி கௌதம் என்று கூறுகிறாள். எதற்காக, இந்தக் கல்யாணத்தில் அவளுக்கு விருப்பம் தான் என்று காட்டிக் கொள்கிறாள்? எனக்குச் சத்தியமாய் புரியவில்லை.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co