Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

7 விசித்திர நடவடிக்கை

NiranjanaNepol

7 விசித்திர நடவடிக்கை

மித்ராவையும் நேத்ராவையும் தன்னுடன் அமர வைத்துக் கொண்டு, அவர்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டாள் ஹாசினி. அவள் அணிந்திருந்த நகைகளை எல்லாம் தொட்டுப் பார்த்துக் கொண்டே அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள். என்ன இருந்தாலும் பெண் குழந்தைகள் தானே!

திடீரென்று எங்கள் வீடு சூடேறிப் போனது. சீருடை அணிந்த சில பெண்கள், பெரிய வெள்ளி தட்டுகளை, கோல்டன் ஆர்கண்டி துணிகளால் மூடி கொண்டு வந்தார்கள். அதில் ஏகப்பட்ட பரிசு பொருட்கள் இருந்தன. அது சேதுபதி குடும்பத்தில் இருந்து வந்தது. அது அவர்களது குடும்ப வழக்கமாம்!

அந்தச் சீருடை அணிந்த பெண்கள், மித்ரா நேத்ராவுடன் அமர்ந்திருந்த ஹாசினியைப் பார்த்தார்கள். எல்லோரும் வரிசையாய் அவள் முன் வந்து நின்று, முட்டியை மடக்கி, தலை குனிந்து நின்றார்கள். லேசாய் தலையசைத்து அவர்கள் தந்த மரியாதையை ஏற்றுக் கொண்டாள் ஹாஸினி.

அப்பொழுது, வீட்டிற்குள் நுழைந்த என் தங்கை நந்தினியைப் பார்த்து அனைவரும் திகைத்து நின்றார்கள். ஹாசினி அணிந்திருந்த அதே உடை, நகை, எல்லாவற்றையும் அவளும் அணிந்திருந்தாள். ஹாசினியின் முகம் மாறியதை நான் கவனித்தேன். ஆனால் நிச்சயம் அது பொறாமை அல்ல. வேறு ஏதோ! ஹாசினி வேண்டுமென்றே தன்னை இறுக்கமாகக் காட்டிக் கொள்வதாய் எனக்கு ஏன் தோன்றுகிறது?

என் தங்கைக்கு அவளது மாமியார் வீட்டில் கிடைத்த மரியாதையைப் பார்த்த என் குடும்பம் மகிழ்ச்சி கடலில் மிதந்தது. முக்கியமாய், என் அப்பா! சேதுபதி குடும்பம் அவர்களது பெண்ணைப் போலவே என் தங்கையையும் நடத்துவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் நந்தினியைக் கட்டி அணைத்து உணர்ச்சிவசப்பட்டு வரவேற்றார்கள், என்னவோ, அவள் எங்களிடமிருந்து பிரிந்து சென்று பல வருடம் ஆனது போல! அதையெல்லாம் பெயர் சொல்ல முடியாத ஒரு முகபாவத்தோடு கவனித்துக் கொண்டிருந்தாள் ஹாசினி.

எல்லாம் முடிந்த பிறகு, ஹாசினியிடம் வந்தாள் நந்தினி. மென்மையாய் அவளை அணைத்துக் கொண்டாள் ஹாசினி. அனைவரது பார்வையும் அவர்கள் மீது தான் இருந்தது. எங்கள் திருமணத்திற்கு முன்பு வரை, என் தங்கையை விட ஒருத்தி அழகு என்று நான் ஏற்றுக் கொண்டதே இல்லை. ஆனால் இப்போது, ஹாசினி அணிந்திருந்த அதே உடையை என் தங்கை அணிந்திருந்தாள். ஆனாலும் அவள் ஹாசினிக்கு ஈடாகவில்லை. உண்மையை மறுக்க முடியாதே!

என்னைப் பார்த்து சிரித்த என் தங்கை,

"எப்படி இருக்க, அண்ணா?" என்றாள்.

நன்றாக இருக்கிறேன் என்று தானே சொல்ல முடியும்? அதைத்தான் கூறினேன்.

ஹாசினியைப் பார்த்த நந்தினி,

"சூர்யா உங்க நம்பருக்கு ட்ரை பண்ணாரு. ஆனா உங்க ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது." என்றாள்.

"நான் அவன்கிட்ட அப்புறம் பேசுறேன்." என்றாள் ஹாசினி.

ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறாளா? ஏன்? அவளது அப்பா, அம்மா, அண்ணனிடம் பேச அவள் விரும்பவில்லையா? அவளைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைத்ததற்காக, அவர்கள் மீது அவள் கோபமாக இருக்கிறாள் போலிருக்கிறது என்று எண்ணினேன்.

"நீங்க இங்க கம்ஃபர்டபிளா இருக்கீங்களா?" என்றாள் நந்தினி.

ஆம் என தலையசைத்து விட்டு,

"நீ எங்க அம்மா மாதிரி இருக்கிறதா சூர்யா சொன்னான். அவன் சொன்னது சரி தான். நீ எங்க அம்மா மாதிரி தான் இருக்க." என்று சொன்னது எனக்குக் குழப்பத்தைத் தந்தது. என் தங்கை அவர்களது அம்மாவைப் போலவா இருக்கிறாள்? நிச்சயம் இல்லை. காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவார்களே... ஒருவேளை அந்த நிலையில் தான் சூர்யா கூறி இருப்பானோ? ஆனால் ஹாசினையும் அதையே தானே சொல்கிறாள்! அவளுக்குக் கூடவா வித்தியாசம் தெரியவில்லை? இந்த அண்ணனுக்கும் தங்கைக்கும் கண் தெரியவில்லையோ?

"இப்போ நீங்க பேலஸ்க்குப் போறீங்க தானே?" என்று நந்தினி கேட்டதை அவசரமாய் மறுத்து,

"இல்ல, நான் அங்க போகல. மினி பேலஸுக்குத் தான் போகப் போறேன்." என்றாள் ஹாசினி.

நந்தினி எதையோ யோசித்தபடி நின்றாள்.

அப்போது தன் அறையில் இருந்து வந்த அகிலா, நந்தினியைப் பார்த்து, ஓடி வந்து, அவளைக் கட்டிக்கொண்டு

"ஐ மிஸ் யூ," என்று கூறி அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"அவ மாமியார் வீட்டுக்குப் போய் ஒரு நாள் தான் ஆச்சு. அதுக்குள்ள நீ மிஸ் பண்றியா?" என்று அவளை கிண்டல் செய்தான் சீலன்.

"உன் மனசைத் தொட்டுச் சொல்லு, நீ அவளை மிஸ் பண்ணலையா?" அவனைத் திருப்பிக் கேட்டாள் அகிலா.

"என்னால என் மனசைத் தொட்டுச் சொல்ல முடியாது. அதை நம்ம நந்தினி கொண்டு போயிட்டா..." என்று தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டு கூறினான் சீலன்.

சிரித்துக் கொண்டே அவனை ஒரு அடி போட்டாள் நந்தினி.

"நம்ம நந்து ரொம்ப அழகா இருக்கா இல்ல?" என்று அகிலா சொல்ல,

"அழகா தான் இருக்கா. ஆனா ஒரிஜினல் அளவுக்கு இல்ல." என்று ஹாசினியை பார்த்தபடி கூறினான் மாலன்.

"அஃப்கோர்ஸ் நான் ஒரிஜினல் இல்ல. இளவரசிக்கு யாரு ஈடாக முடியும்?" என்று உண்மையை ஒப்புக்கொண்டாள் நந்தினி.

அப்பொழுது அங்கு வந்த என் அம்மா, நந்தினியின் கழுத்தைப் பார்த்து, அவள் நெக்லஸைத் தூக்கி,

"எங்கடி உன் தாலி?" என்று பதட்டமாய் கேட்டார்

"அதைப் போட்டிருந்தா, இந்த டிரஸுக்கு சூட்டாகாதுன்னு ஆன்ட்டி தான் கழட்ட சொன்னாங்க, மா." என்றாள் நந்தினி.

அனைவரது பார்வையும் ஹாசினியின் கழுத்தைப் பார்த்தது, அவள் தாலி அணிந்திருக்கிறாளா இல்லையா என்று... என்னையும் சேர்த்து தான். அவள் அதை அணிந்திருந்தாள். எனக்கு என்னவோ அது அவளுக்குப் பொருந்தாததைப் போல் தோன்றவில்லை. மஞ்சள் நிற புது தாலி, அவளுக்கு அழகாய் இருந்தது.

என் அம்மா ஒரு பழமைவாதி. இருந்தாலும் அவர் ஒன்றும் கூறவில்லை. ஏனென்றால் அதை கழட்டச் சொன்னது நந்தினியின் மாமியார் ஆயிற்றே!

அப்பொழுது நந்தினியின் கைபேசி மணி அடித்தது. அதை எடுத்துப் பார்த்தாள் நந்தினி.

"வாவ்! புது ஐபோனா?" அகிலா மகிழ்ச்சியோடு கேட்டாள்.

"ஆமாம். லேட்டஸ்ட் மாடல். ஆன்ட்டி கிஃப்டா கொடுத்தாங்க." என்று கூறிக் கொண்டே அந்த அழைப்பை ஏற்றாள்.

"ஹாய், சூர்யா... ஆமாம், இங்க தான் இருக்காங்க." தன் கைபேசியை ஹாசினிடம் கொடுத்தாள் நந்தினி.

"சூர்யா உங்க கிட்ட பேசணுமாம்."

ஒரு நொடி திகைத்து, அவளிடம் இருந்து கைபேசியை வாங்கினாள் ஹாசினி. அவள் உரையாடிக் கொண்டிருந்த பொழுது, அவளது கண்கள் எனது சித்தப்பா பிள்ளைகளின் மீது தான் இருந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டே இருந்தார்கள்.

"சொல்லு, சூர்யா... இல்ல... அப்படி ஒன்னும் இல்ல... நான் வரல... மினி பேலஸ்க்குப் போறேன்... உன்னை இன்னொரு நாள் மீட் பண்றேன்..." கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டு கைபேசியை நந்தினியிடம் கொடுத்தாள்.

அவள் தங்கள் வீட்டுக்குப் போகப் போவதில்லை என்று எனக்குப் புரிந்து போனது.

சற்று நேரத்தில் தன் கைபேசியுடன் தன் அறையில் இருந்து வந்தார் என் அப்பா.

"கௌதம், சேதுபதி சார் ஃபோன் பண்ணாரு. ஹாசினியைக் கூட்டிகிட்டு போய் அவங்க வீட்ல விட்டுடு. அவங்க காத்திருக்காங்க" என்றார்.

ஹாசினியின் முகத்தில் எரிச்சல் படர்ந்ததை நான் கவனித்தேன். இதை தவிர்க்க முடியாது என்று புரிந்து கொண்ட அவள், எழுந்து நின்று,

"வாங்க போகலாம்,' என்றாள்.

"ஒரு நிமிஷம் மா," என் அப்பா அவளைத் தடுத்தார்.

"சகுந்தலா... மணிகிட்ட சொல்லி நம்ம வாங்கி வச்சிருக்க கிஃப்ட்டை எல்லாம் கார்ல வைக்கச் சொல்லு." என்றார் அம்மாவிடம்.

அம்மா சரி என்று கூறிவிட்டு, மணியை அழைத்து, எல்லா பரிசு பொருட்களையும் காரில் வைக்கச் சொன்னார்.

அம்மாவிடம் விடை பெற்ற பிறகு, என் சகோதரர்களைப் பார்த்து லேசாய் கையசைத்தாள் ஹாசினி. நாங்கள் கிளம்பினோம்.

சேதுபதியின் அரண்மனையை நோக்கி நான் காரைச் செலுத்தினேன். முதன்முறையாக நான் அவர்களது அரண்மனைக்குச் செல்கிறேன். ஹாசினி அமைதியாய் வெளியே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

"உன்னைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணி வச்சதுக்காக நீ உங்க அப்பா அம்மா மேல கோவமா இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. அதனால தானே நீ அங்க போக மாட்டேங்குற?" என்றேன்.

"உங்க அப்பா அம்மா மேல நீங்க கோவமா இல்லயா?" என்றாள் ஹாசினி. நானும் இந்தத் திருமணத்திற்குக் கட்டாயம் தானே படுத்தப்பட்டேன்?

"நான் அவங்க மேல கோவமா இல்ல. ஏன்னா ஐ லவ் மை ஃபேமிலி."

"ஓ... தியாகமா?" என்று அவள் கேட்டது சரியான நையாண்டி.

"என் குடும்பத்துக்காக நான் தியாகம் பண்ணதுல என்ன தப்பு? நமக்குப் பிடிச்சவங்களுக்காகத் தியாகம் பண்ணும் போது கிடைக்கிற சந்தோஷம் என்னன்னு உனக்குத் தெரியாது." என்றேன்.

"எத்தனை தடவை உங்க சந்தோஷத்தை நீங்க மத்தவங்களுக்காகத் தியாகம் பண்ணியிருக்கீங்க?" அவளது கேள்வி அம்பைப் போல் வந்தது. அவள் எந்த அர்த்தத்தில் அதைக் கேட்டாள் என்று எனக்குப் புரியவில்லை.

"மத்தவங்களுக்காக நீ எத்தனை தடவை உன் சந்தோஷத்தைத் தியாகம் பண்ணியிருக்க?" என்றேன்

அவள் அதற்குப் பதில் கூறவில்லை.

"என் தங்கச்சியோட சந்தோஷத்துக்காக இந்தக் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன்." என்று சாலையைப் பார்த்து வண்டியை ஒட்டியபடி கூறினேன்.

"உங்க தங்கச்சியோட சந்தோஷத்துக்காக மட்டும் தானா?" என்று அவள் என்னிடம் கேட்டாள். அவள் கூற வருவது என்ன என்பது எனக்குப் புரிந்தது. எங்கள் வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் தானே நான் அவளைத் திருமணம் செய்து கொண்டேன்!

"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு அவ்வளவு பிரச்சனை இருந்தா, நீ ஏன் இந்தக் கல்யாணத்தை நிறுத்தல?"

"அதே கேள்வியை நானும் கேட்கலாம் தானே?"

"நீ கேட்ட. உன்னை மாதிரி இல்லாம, நான் அதுக்குp பதில் சொல்லிட்டேன்."

"ஆமாம், நீங்க பதில் சொன்னீங்க. ஏன்னா அது உங்க ஃபேமிலி அண்ட் பிசினஸ் பத்தினது..."

"உன்னோட காரணம் எதை பத்தினது?"

அவள் பதில் கூறவில்லை.

"ஆமாம், எங்களுக்கு உங்க ஃபேமிலிகிட்ட இருந்து பிசினஸ் பெனிஃபிட் கிடைச்சது. என் இடத்துல யார் இருந்தாலும் அதைத்தான் செய்வாங்க. நானும் அதுக்கு விதிவிலக்கு இல்ல. நான் எங்க அம்மா அப்பாவையும் தங்கச்சியையும் ரொம்ப நேசிக்கிறேன்."

"நானும் என் அண்ணனை நேசிக்கிறேன்." என்று அவள் கூறிய வார்த்தையைப் புரிந்து கொண்டு நான் அவளைப் பார்த்தேன். அவள், அவளுடைய அண்ணனை மட்டும் தான் நேசிக்கிறாள். அவளது அப்பா அம்மாவை நேசிக்கவில்லை. ஆனால், ஏன்? சூர்யா நந்தினியைக் காதலித்ததால் தான் அவளை இந்தத் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, அவளுக்குச் சூர்யா மீது தானே நியாயமாய் கோபம் வர வேண்டும்? ஆனால் இல்லை. அது தான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

அதன் பிறகு நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. அவள் கையில் இருந்த பிரேஸ்லெட்டை வெகு நேரமாய் உருட்டிக்கொண்டே ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. நான் கேட்டாலும் அவள் கூற மாட்டாள் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. ஏனென்றால், அவளைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. என்னைத் தவிர்க்க அவளுக்கு ஒரு அழுத்தமான காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றியது.

நாங்கள் அவர்களது அரண்மனையை நெருங்கிக் கொண்டிருந்தோம்.

"நான் சொல்றத நீ எப்படி எடுத்துக்குவேன்னு எனக்குத் தெரியல. நீ என்கிட்ட என்ன வேணாலும் கேட்கலாம். உனக்குத் தேவைப்பட்டா, நான் ஹெல்ப் பண்ண ரெடியா இருக்கேன். அது என்னவா இருந்தாலும் சரி... நமக்குக் கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கிறதுக்காக இல்ல... சொல்லணும்னு தோணுச்சு."

அவள் கண்களில் பிரகாசத்தைக் கண்டேன்.

நாங்கள் அவர்களது அரண்மனையைச் சென்றடைந்தோம். எங்கள் காரைப் பார்த்தவுடன், வாசலில் இருந்த பாதுகாவலர் பெரியதாய் சல்யூட் அடித்தார். அந்தப் பிரம்மாண்டமான அரண்மனை வாசலுக்கு முன்னால் என் காரை நிறுத்தி, மரியாதை நிமித்தமாய் நானும் கீழே இறங்கினேன். எனக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாய் என்னிடம் வந்த ஹாசினி, என் தோள்களை மென்மையாய் பிடித்து, என்னை அவள் பக்கம் திருப்பினாள். நான் அவளுடைய கையையும் பிறகு முகத்தையும் ஒன்றும் புரியாமல் பார்த்தேன். அரண்மனை என் முதுகுக்குப் பின்னால் இருந்தது.

"நிஜமாத் தான் சொல்றீங்களா? உங்க கிட்ட இருந்து எனக்கு எந்த ஹெல்ப் வேணாலும் கிடைக்குமா?" என்றாள்.

அவளை அவ்வளவு அருகில் பார்த்ததில், என் வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை. அவள் மீது வீசிய வாசனை, என்னை மந்திரித்துவிட்ட கோழியைப் போல் தலையசைக்க வைத்தது.

"கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஈவினிங் என்னைக் கூட்டிக்கிட்டுப் போக நீங்க வருவீங்களா? இல்ல, நானே வந்துடவா?" அழகாய் சிரித்தபடி கேட்டாள்.

கண்ணிமைக்காமல் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ண, ஈவினிங் மினி பேலஸ் போகலாம். ரெடியா இருங்க." என் தோளைத் தூசி தட்டுவது போல், லேசாய் தட்டினாள்.

நான் குழப்பத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் யாரையோ கூப்பிட்டாள்.

"ஃபிலோமினா..."

அரண்மனைக்குள் இருந்து ஒரு பெண் ஓடி வந்தாள்.

"கார்ல இருக்கிற பேக்சை எல்லாம் எடுத்துக்கிட்டு போ." என்று கட்டளையிட்டாள்.

"எஸ் யுவர் ஹைனஸ்..." என்று கூறிவிட்டு ஹாசினி கூறியதைச் செய்தாள் ஃபிலோமினா.

"உள்ள வாங்க..."
என்று என்னைப் பார்த்து கூறினாள் ஹாசினி.

"நா...னா?" நான் தடுமாறினேன்.

"யா நீங்க தான்..." என் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நடந்தாள்.

அந்த அரண்மனைக்குள் நான் செல்வது அது தான் முதல் முறை. அதன் பிரம்மாண்டத்தை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது. அங்கே இருந்த ஒவ்வொரு பொருளும் அவர்களுடைய வளத்தையும் ஆடம்பரத்தையும் கூறிக் கொண்டிருந்தது. ஆனால் நான் அதை எல்லாம் பார்க்கும் நிலையில் இல்லை. என் கண்கள், என்னை உள்ளே இழுத்துச் சென்று கொண்டிருந்த, :நீங்க நீங்களா இருங்க. என்னை நானா இருக்க விடுங்க.' என்று கூறிய, என்னால் புரிந்து கொள்ள முடியாததைச் செய்து கொண்டிருந்த, என் மனைவியின் மீதே இருந்தது.

நான் மிகவும் புத்திசாலி. அதனால் ஒரு பெண்ணைப் புரிந்து கொள்வது எனக்குக் கடினமாக இருக்காது என்று என் அம்மா கூறினார். என் மனைவியின் விசித்திரமான நடவடிக்கையைப் புரிந்து கொள்ள முடியாமல் நான் திணறிக் கொண்டிருந்தேன். அவள் ஒரு புதிராய் இருந்தாள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co