Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

8 குழப்பம்

NiranjanaNepol

8 குழப்பம்

மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்த ராஜேந்திர சேதுபதி, ஹாசினி என் கையைப் பிடித்து, இழுத்துக் கொண்டு வருவதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு நின்றார்.

தன்னைச் சமாளித்துக் கொண்ட அவர்,

"வெல்கம், கௌதம்," என்றார்.

நான் அவரைப் பார்த்து சினேகமாய் புன்னகைத்தேன்.

"இன்னைக்கு இங்க வர மாட்டேன்னு ஏன் சூர்யாகிட்ட சொன்ன?" என்றார் ஹாசினியிடம்.

"நான் கௌதம் கூட மினி பேலஸ்க்குப் போகலாம்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்."

அவள் முதல்முறையாய் என் பெயரைக் கூறினாள். அவள் அதை சாதாரணமாக கூறினாலும், கேட்க இனிமையாய் இருந்தது.

"ஆனா இது நம்ம வழக்கம்." என்றார் சேதுபதி.

"அதனால தானே வந்திருக்கேன்..."

சேதுபதி லேசாய் தலையசைத்தார்.

"நான் கிளம்புறேன். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு." என்றேன்.

"என்ன அவசரம், கௌதம்? என் ரூமை நீங்க பார்க்க வேண்டாமா?" ஹாசினியின் கேள்வி என்னை மேலும் குழப்பியது. இந்தப் பெண் என்னைப் பைத்தியக்காரனாக ஆக்காமல் விடமாட்டாள் போலிருக்கிறது.

"போங்க, கௌதம். நீங்க அவளோட ஹஸ்பண்ட்..." ஹாசினியைப் பார்த்தபடி கூறினார் சேதுபதி.

"பரவால்ல, அங்கிள்!"

"அதெல்லாம் முடியாது. என் கூட வாங்க." என் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றாள் ஹாசினி.

அந்த அகலமான பளிங்கு படிக்கட்டைக் கடந்து ஒரு பெரிய தாழ்வாரத்தைத் தாண்டி, மிக பட்டாடோபமாய் இருந்த ஒரு பெரிய அறைக்குள் நுழைந்தோம். ஹாசினி கதவைச் சாத்தித் தாழிட்டாள். நான் என் கையைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்துக்கொண்டு நின்றேன். அவளும் என்னைப் போலவே அவளுடைய அப்பா அம்மாவின் முன்னால் நடிக்கிறாள் என்று எனக்குத் தெரியும்.

"உங்க ஹெல்ப்புக்குத் தேங்க்ஸ்." என் முகத்தைப் பார்க்காமல் லேசாய் சிரித்தபடி கூறினாள்.

ஹெல்ப்பா? எனக்குச் சங்கடமாக மட்டுமல்ல, குழப்பமாகவும் இருந்தது.

"என்னால உன்னைப் புரிஞ்சுக்க முடியல." என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கூறிவிட்டேன்.

"உங்களால முடியாது. யாராலயுமே முடியாது... நீங்க சொன்ன வார்த்தையை நான் பயன்படுத்திக்கிட்டேன். நீங்க தானே சொன்னீங்க, எனக்கு ஹெல்ப் பண்ண ரெடியா இருக்கேன்னு...? எதுவாயிருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னீங்களே?" அவள் என் கண்களைப் பார்த்தபடி கூறினாள்.

"ஆமாம், சொன்னேன். அதனால?"

"ஒருவேளை நீங்க கொடுத்த வாக்கைத் திருப்பி எடுத்துக்கணும்னு தோணுச்சுன்னா, தாராளமா செய்யலாம்." என்று சமநிலையாய்க் கூறினாள்.

வாக்கைத் திரும்ப பெறுவதா? அவள் எந்த அர்த்தத்தில் கூறினாள் என்று புரியாமல் நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி என்றால், என்னுடைய உதவியைக் கேட்கிறேன் பேர்வழி என்று, அவள் இதே போல் ஏதாவது செய்து கொண்டே இருக்கப் போகிறாளா?

"ஒரு தடவை வாக்கு கொடுத்துட்டா அதை திருப்பி எடுத்துக்கிற பழக்கம் எனக்குக் கிடையாது. எந்த ஹெல்பா இருந்தாலும், நான் செய்யத் தயாரா இருக்கேன்... எதுவா இருந்தாலும்...!" நான் சொன்னதையே திருப்பி, ஆனால் அழுத்திக் கூறினேன்.

தன் புருவத்தை உயர்த்தி, உதட்டை அழுத்தி, லேசாய் தலையசைத்தாள். அது என்ன மாதிரியான முகபாவம் என்று எனக்குப் புரியவில்லை. நான் மீண்டும் குழம்பினேன்.

பெரிய பெல்ஜியம் கண்ணாடியுடன் இருந்த, தேக்கு மரத்தால் ஆன, மிகப்பெரிய டிரெஸ்ஸிங் டேபிளுக்குச் சென்று, அதன் இழுப்பறையை இழுத்தாள். அதற்குள் நூற்றுக்கணக்கான லிப்ஸ்டிக்கும், லிப் க்லாஸும் அழகாய் அடுக்கி இருந்தது. அதில் இருந்து இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை எடுத்து, அதை மறுபடியும் தன் உதட்டில் பூசிக் கொண்டாள். அவள் தன் இரண்டு விரல்களை தன் உதடுகளில் அழுத்தும் போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் தன் விரலில் ஒட்டி இருந்த லிப்ஸ்டிக் கரையைப் பார்த்து திருப்தியுடன் புன்னகைத்தாள்.

அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறக்கச் செல்வதற்குப் பதிலாக, ஹாசினி என்னிடம் வந்தாள்.

"ஒன்ஸ் அகைன், தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்!" என்றாள்.

அவள் நன்றி கூறும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று எனக்குப் புரியவில்லை. அவள் விரலை என் கன்னத்தில் அழுத்திவிட்டுச் சென்று கதவைத் திறந்தாள். நான் என் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தேன். உதடு வடிவில் லிப்ஸ்டிக் கரை என் கன்னத்தில் இருந்தது. நான் அதிர்ச்சியோடு ஹாசினியைப் பார்த்தேன். அவள் ஏற்கனவே கதவைத் திறந்து விட்டிருந்தாள், சூர்யாவும் உள்ளே நுழைந்து விட்டான்! என்னைப் பார்த்து அவனது கண்கள் அகல விரிந்தன. என்னைப் பார்த்து அல்ல, என் கன்னத்தில் இருந்த லிப்ஸ்டிக் கரையைப் பார்த்து. நான் அதை அவசரமாய் அழித்ததைப் பார்த்து அவன் வெட்கத்தோடு சிரித்தான். அவன் தங்கை என்னை முத்தமிட்டு விட்டாள் என்று நினைத்து விட்டான். கொய்யால... இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல?

"ஹாய், கௌதம்!" சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் கூறினான் சூர்யா.

"ஹாய்," என்று நான் ஹாசினியைப் பார்த்தபடி கூறினேன்.

"நந்தினி சொன்னா, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸாம்." சூர்யா அழகாய்ச் சிரித்தான்.

"க்ளோசா இருந்தோம்." நான் கூறியவுடன், அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"இருந்தோம்னா என்ன அர்த்தம்?"

"இப்போ தான் அவளுக்கு நீங்க இருக்கீங்களே." என்றேன்.

"அதுக்காக நீங்க அவளுக்கு க்ளோசா இருக்கக்கூடாதுன்னு அர்த்தமில்ல. இன்ஃபாக்ட், இப்ப நம்ம எல்லாரும் குளோசாயிட்டோம்." எங்களது உறவுக்குள் தன்னையும் இணைத்துக் கொண்டான் சூர்யா. அது எனக்குப் பிடித்திருந்தது.

"நான் கிளம்புறேன்." என்றேன்.

அங்கே இருந்து, ஹாசினியின் விசித்திரமான நடவடிக்கையின் மூலம் மேலும் குழம்ப நான் தயாராக இல்லை.

"அடிக்கடி வாங்க," என்றான் சூர்யா.

"கண்டிப்பா வரேன். நீங்களும் வாங்க." என்றேன்.

"நிச்சயமா,"

நான் வெளியே நடந்தேன். ஹாசினியும் சூர்யாவும் என்னைப் பின்தொடர்ந்தார்கள். "

ஹாசினியைப் பற்றி யோசித்தபடி நடந்தேன். அவளது நடவடிக்கையை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்குப் புரியவில்லை. அவளது அண்ணனைச் சந்தோஷப்படுத்த நினைக்கிறாள். அதனால் தான் உதட்டுச் சாயக் கரையை என் கன்னத்தில் ஒட்டி விட்டாள். ஆனால், நாங்கள் அரண்மனைக்குள் நுழைவதற்கு முன் அவள் என்னிடம் ஏன் அவ்வளவு இனிமையாய் பேசினாள்? யாராவது எங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்களா? எங்கள் உறவுக்கு ஓர் சந்தர்ப்பம் கொடுக்க அவள் விரும்பவில்லை. ஆனால் அவளது அப்பா அம்மா மட்டும், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று நினைக்க வேண்டும் என்று நினைக்கிறாள். இது என்ன கொடுமை? எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாள்? இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.

அண்ணனும் தங்கையும் பேசுவதைக் கேட்டு என் நடையின் வேகம் குறைந்தது

"நீ கௌதமை ஏத்துக்கிட்டேன்னு என்னால நம்பவே முடியல. இது எப்படி நடந்தது?" என்றான் சூர்யா.

"நான் ஏத்துக்கிட்டேன்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது?" என்று அவனையே திருப்பிக் கேள்வி கேட்டாள், அவனை அப்படி நினைக்க வைத்ததே அவள் தான் என்று காட்டிக் கொள்ளாமல்.

"நான் உன்னோட அண்ணன். அதை மறந்துடாத," என்று கூறிய அவனை நினைத்து பரிதாபப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை.

"அண்ணி உன் மனசுல எப்படி இடம் பிடிச்சாங்க?"

"அவ பார்க்க நம்ம அம்மா மாதிரியே இருக்கா..."

"எனக்கு கௌதமை ரொம்ப பிடிச்சிருக்கு, ஏன்னா, அவர் நம்ம அப்பா மாதிரியில்ல," என்று கூறிவிட்டுச் சிரித்தாள்.

அவள் கூறிய பொய்யைக் கேட்டு, 'புளுகு மூட்டை' என்று அவள் கன்னத்தில் இடிக்க வேண்டும் என்று தோன்றியது. அவள் சொன்னது எவ்வளவு பெரிய பொய்... அவளுக்கு என்னை பிடித்திருக்கிறதாம்!

"யூ ஆர் டூ மச்," என்றான் சூர்யா.

"ஆல்வேஸ்..." என்று கூறி, கலகலவென, ஆனால் மெதுவாய் சிரித்தாள்.

நான் இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். ஹாசினி சூர்வையாவை மிகவும் நேசிக்கிறாள். அவளது அப்பாவை வெறுக்கிறாள். சூர்யாவிடம் அவளுக்கு நல்ல பிணைப்பு இருந்தது, எனக்கு என் தங்கையோடு இருந்ததைப் போல!

நான் தரைதளம் வந்த போது திருமதி சேதுபதியும் அங்கே இருந்தார். கால் மீது கால் போட்டு, பந்தாவாய் அமர்ந்திருந்தார்.

"ஹலோ, கௌதம்!" என்றார்.

"ஹலோ, ஆன்ட்டி!" என்று நானும் சம்பிரதாயமாய் கூறினேன்.

"கௌதம், உங்க கன்னத்துல சிகப்பா என்னமோ இருக்கு," என்று சேதுபதி என் கன்னத்தைக் காட்டி கூறினார்.

நான் அணிச்சையாய் என் கன்னத்தைத் துடைத்தேன்... முதலில் செய்ததை விட இன்னும் வேகமாய்...ஹாசினியைப் பார்த்துக் கொண்டுதான். அவள் என்னைப் பார்க்காமல், அவள் கையில் இருந்த வாட்சைப் பார்த்தாள். சூர்யா பளிச்சென்று சிரித்தான். சேதுபதியும் அவரது மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்

"நான் கிளம்புறேன், அங்கிள்,"

"என்ன அவசரம், கௌதம்? எங்களோட லஞ்ச் சாப்பிடுங்க," என்றார் திருமதி சேதுபதி.

"பரவாயில்ல, ஆன்ட்டி. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு."

"ஆமாம், நீங்க உங்க ஃபேமிலியோட இருக்கணும்னு நினைப்பீங்க. இன்னைக்கு தானே நீங்க உங்க ஃபேமிலியோட இருக்கப் போற கடைசி நாள்..."

நான் அதிர்ச்சி அடைந்தேன். கடைசி நாளா? அவர் அப்படிக் கூறியது எனக்குச் சுத்தமாய் பிடிக்கவில்லை. கடைசி நாள் என்று எதுவுமே கிடையாது, நான் எப்பொழுது நினைத்தாலும் என் வீட்டிற்குச் செல்வேன் என்று கூற நினைத்தேன். நான் அதை செய்வதற்கு முன்,

"மாம், லாஸ்டுன்னு கௌதமுக்கு எதுவும் கிடையாது. அவர் நினைச்சா, அவங்க வீட்டுக்கு எப்ப வேணாலும் போகலாம்." என்று நான் கூற நினைத்ததை சூர்யா கூறினான்.

"யா, யா, யு ஆர் ரைட்," சிரிக்காமல் கூறினார் திருமதி சேதுபதி.

"சீ யூ, அங்கிள், " என்று கூறிவிட்டு நான் ஹாசினியைப் பார்த்தேன்.

சிரித்தபடி அவள் தலையசைத்தாள். அது வலிய சிரித்த சிரிப்பு தான். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அங்கிருந்து கிளம்பினேன். காரிடம் வந்த போது, அவள் என்னை கேட்ட கேள்வி எனக்கு ஞாபகம் வந்தது.

'என்னைக் கூட்டிகிட்டு போக நீங்க வருவீங்களா இல்ல நானே வந்துடவா? "

அவளை அழைத்துச் செல்ல நான் வருவேனா மாட்டேனா என்று அவள் தெரிந்து கொள்ள நினைக்கலாம். மறுபடியும் உள்ளே செல்ல நினைத்தபோது சூர்யா பேசுவதைக் கேட்டு நின்றேன்.

"மாம், எதுக்காக நீங்க அப்படிச் சொன்னீங்க? உங்களுக்கு கௌதமை பத்தி நல்லா தெரியும் தானே? அவருக்கு அவங்க குடும்பம் தான் எல்லாமே. அவங்க ஃபேமிலியை விட்டு பிரியறதை நினைச்சி அவர் எவ்வளவு வருத்தப்படுவாரு?"

"ஆனா, அவர் அவங்க ஃபேமிலியை விட்டுப் போக ரெடியா இருக்காரு. அதை மறந்துடாத," என்று கூறினார் திருமதி சேதுபதி.

"அவருக்கு வேற சாய்ஸ் கொடுக்கப்படல," என்றான் சூர்யா.

"நான் என் குழந்தைகளைத் தவிர வேற எதையும் நினைக்க விரும்புறதில்ல, சூர்யா. எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கணும். உங்க சந்தோஷத்துக்காக நான் என்ன வேணா செய்வேன். அதனால தான், 100 கோடி செலவு பண்ணி, ஹாசினிக்காக மினி பேலசை ரெடி பண்ணி வச்சேன். அவர் ஒரு இளவரசி. அவர் ஹாப்பியா இருக்கணும். அவ்வளவு தான்." என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார் திருமதி சேதுபதி.

"எனக்குத் தெரியும், மாம்."

"உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியும், தேவா. எதுக்காக இவ்வளவு எமோஷனல் ஆகுற?" சேதுபதி கேட்டார்.

"நான் உங்களை ஹர்ட் பண்ணி இருந்தா, சாரி, மாம்," சூர்யா கூறினான்.

உள்ளே செல்லும் எண்ணத்தை நான் கை விட்டேன். எனக்கு அங்கு செல்ல பிடிக்கவில்லை. அந்தப் பெண் பேசிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. நிபந்தனையைப் போட்டு என்னை அவர்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்ததே அவர்தான். அவர்களது மகள் ராணி போல் வாழ வேண்டும் என்று, நான் என் குடும்பத்தை விட்டு மினி வேலசுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியதும் அவர்கள் தான். அப்படி இருக்கும்போது, நான் என் குடும்பத்தை விட்டு பிரிய தயாராக இருக்கிறேன் என்று அவர் எதற்காக கூற வேண்டும்? என்னவோ, நான் தான் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செல்வது போல் அல்லவா இருக்கிறது, அவர்கள் பேசியது? இதனால் தான், ஹாசினி, 'என்னை நீ உன் தங்கைக்காக மட்டும் தான் திருமணம் செய்து கொண்டாயா?' என்று கேட்டாள் போலிருக்கிறது... அவளது அப்பாவும் அம்மாவும் என்னைப் பற்றி அப்படிப் பேசினால், அவள் அப்படித் தானே நினைப்பாள்! அவள் என்னை சுயநலவாதி என்று நினைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் அங்கிருந்து கிளம்பி விடலாம் என்று நினைத்தபோது, ஹாசினி, சூர்யாவை அழைப்பது என் காதில் விழுந்தது. லேசாய் உள்ளே எட்டிப் பார்த்தேன். ஹாசினி மாடியில் நின்று கொண்டிருந்தாள். சூர்யா அவளிடம் சென்றான். எனக்கு மனதிற்கு சற்று நிம்மதியாய் இருந்தது. ஏனென்றால், அவர்கள் என்னைப் பற்றிப் பேசியதை அவள் கேட்கவில்லை. நான் கிளம்பியவுடன் அவள் மாடிக்குச் சென்றிருக்க வேண்டும். அது தெரிந்த போது, எனக்குக் கொஞ்சம் நிம்மதியானது. ஹாசினி என்னைப் பற்றித் தவறாய் நினைத்து விடுவாளோ என்று, நான் ஏன் வருத்தப்படுகிறேன் என்று எனக்கே புரியவில்லை.

அது சரி... எதற்காக திருமதி சேதுபதி திடீரென்று உணர்ச்சிவசப்பட்டார்? உணர்ச்சிவசப்படும் அளவிற்கு அதில் என்ன இருந்தது? என்னிடம் அப்படியெல்லாம் பேச வேண்டாம் என்று சூர்யா கூறினான். அதில் என்ன தவறு இருக்கிறது என்று அவன் தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டான்? அவர்கள் அப்படி ஒன்றும் காயப்பட்டதாய் எனக்குத் தெரியவில்லையே!

ஒரு நிமிடம்... என் குடும்பம் தான் எனக்கு எல்லாம் என்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? என் அப்பா அம்மா அவர்களிடம் கூறி இருப்பார்களா? என் குடும்பம் தான் எனக்கு எல்லாம் என்று தெரிந்த பிறகும், நான் என் குடும்பத்தை விட்டு வர வேண்டும் என்று அவர் ஏன் நினைக்கிறார்? அதை தவிர்க்கவே முடியாத ஒரு நிபந்தனையாய் எதற்காக வைத்தார்? அதை ஏன் கட்டாயப்படுத்தி எங்களை ஏற்றுக் கொள்ளச் செய்தார்? நான் ஹாசினியைத் திருமணம் செய்து கொண்டால் தான் சூர்யா நந்தினியைத் திருமணம் செய்து கொள்வான் என்று அவர்கள் கூறவில்லையா? ஏன் அப்படிக் கூறினார்? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கேள்விகளை எல்லாம் யோசித்துக் கொண்டே நான் அங்கிருந்து கிளம்பினேன்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co